உலமா சபை தலைவர் கொண்டு வந்த பொதிகளை உடன் திருப்பியனுப்பினோம்

0 246

ஆணைக்குழு தலைவர் உறுதிப்படுத்தினார் ; எழுத்து மூல ஆவணமும் வெளிவந்தது ;  அதனுள்ளிருந்தவை வட்டிலப்பமே என்பதை பொலிசார் உறுதிப்படுத்தினர்

எம்.எப்.எம்.பஸீர்

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க,   ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்குச் சென்ற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர்,  ஆணைக் குழுவுக்கு பல பொதிகளை எடுத்து வந்த விவகாரம் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய ரிஸ்வி முப்தி கொண்டுவந்த குறித்த பொதிகளை தாம் உடனடியாகவே ஆணைக்குழுவின் வளாகத்திலிருந்து வெளியேற்றிவிட்டதாக ஆணைக்குழுவின் தலைவரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான ஜனக் டி சில்வா அறிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தல் எழுத்து மூலமாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பி. ஹேரத்தின் ஒப்பத்துடன் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவ்வாறே தமிழல் தருகிறோம் :

டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10.55 இற்கு ஆணைக் குழு  இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தது.

அதன்படி, ‘நேற்று (டிசம்பர் 10 ஆம் திகதி) அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியின் மேலதிக சாட்சி விசாரணைகள்  இடம்பெறவிருந்தன.
அவர் ஆணைக் குழுவுக்குள் வரும் போது பொதிகள் சிலவற்றை எடுத்து வந்துள்ளார்.

அவ்வாறான பொதிகளை அவர் எடுத்து வருவதாக இந்த ஆணைக் குழுவுக்கு அவர் முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை.

அவர் அவ்வாறான பொதிகளை எடுத்து வந்துள்ளதாக ஆணைக் குழு அறிந்து கொண்ட மறுகணம், அவற்றை வெளியே எடுத்துச் செல்லுமாறு அவருக்கு ஆணைக் குழு தெரிவித்திருந்தது.  அதன்படி அந்த பொதிகள் குறுகிய நேரத்துக்குள் ஆணைக் குழுவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டன.  இதனை இவ்வாணைக் குழு அவதானித்தது.

அவ்வாறான பொதிகளை ஆணைக் குழுவுக்குள் எடுத்து வருவதையும்,  சிறிது நேரத்தில் அங்கிருந்து எடுத்துச் செல்வதையும், ஆணைக் குழுவுக்கு வெளியே, அருகே இருந்த அனைவரும் மிக சுலபமாக அவதானித்திருப்பர் என்பதையும் பதிவு செய்து வைக்கின்றேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலானது மேற்குறிப்பிட்ட திகதியிலும் நேரத்திலும், அதாவது சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலை வேளையில் ஆணைக்குழு அமர்வினிடையே ஆணைக்குழு தலைவரால் வாசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறிவித்தலின் பிரதிகளே தற்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பொதிகளின் உண்மையை அறிய நாம், குறிப்பாக விசாரணை அறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை அணுகி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டோம். குறித்த பொதிகளை தாம் சோதனை செய்ததாகவும், அதில் வட்டிலப்பம் இருந்தமை உறுதியான நிலையில், ஏனைய நாட்களிலும் ஆணைக் குழுவில் கடமையாற்றுவோர் உணவுகளை  உள்ளே எடுத்துச் செல்வதால், இப் பொதிகளை  தடுக்கவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு நடந்த விடயங்களை தற்போது தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்தோ அதன் தலைவரிடமிருந்தோ எந்தவித அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை.

இதுபற்றிய விளக்கங்களைப் பெற்று பிரசுரிப்பதற்காக விடிவெள்ளி பல முறை உலமா சபையை பல வழிகளில் தொடர்பு கொண்டும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.