அவனிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை

0 947

04.12.2020 விடிவெள்ளி வார இதழின் ஆசிரியர் தலையங்கம்

ஜனாஸா எரிப்பு தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 11 வழக்குகளும் கடந்த செவ்வாய்க்கிழமை மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் முடிவின்றித் தொடர்கின்றது. இது முஸ்லிம் சமூகத்தை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இதுவிடயத்தில் நீதிமன்றம் சாதகமானதொரு தீர்ப்பைத் தரும் என வழக்குத் தொடர்ந்த முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க தரப்புகள் நம்பியிருந்தன. இருந்தபோதிலும் அது நடக்கவில்லை.
வழக்குத் தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பலமான வாதங்களை தமது தரப்பில் முன்வைத்த போதிலும் இவ்வழக்குகள் விசாரணைக்குக் கூட ஏற்கப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவுள்ளது. இருப்பினும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பதால் சட்ட ரீதியாக இதுவிடயத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையுள்ளது.

அப்படியானால் இதற்கு தீர்வே இல்லையா? தொடர்ந்தும் எரிக்கின்ற  தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்கத்தான் போகிறதா? சுகாதார அமைச்சர் கூறுகின்ற நிபுணர்கள் குழுவின் அறிக்கை எப்போது வரும்? அமைச்சரவையில் எடுக்கப்பட்ட அடக்கலாம் என்ற தீர்மானத்திற்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

இதனிடையே கொவிட் 19 இனால் நேற்று வரை 124 பேர் இலங்கையில் மரணித்துள்ளனர். இவர்களில் 50 இற்கும் அதிகமானோர் முஸ்லிம்களாவர். இந்நிலையில் இவ்வாறு மரணித்தவர்களின் சில குடும்பங்கள் தற்போது ஜனாஸா எரிப்பு விடயத்தில் தமது உரிமைக்காக போராடி வருகின்றனர். தமது குடும்பத்தவரின் ஜனாஸாவை எரிப்பதற்கு எங்களது கைகளாலேயே ஒப்பமிட்டு சம்மதம் தரமாட்டோம் என்றும் அதற்குத் தேவையான சுமார் 60 ஆயிரம் பணத்தை தரமாட்டோம் என்றும் அழுத்தமாக கூறி வருகின்றனர். இது அரசாங்கத்திற்கு புதிய தலையிடியைக் கொடுத்திருக்கிறது. இதனால் அரசாங்க செலவிலேயே இச் சடலங்களை எரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது முஸ்லிம் சிவில் மற்றும் சட்டத் துறையினர் இந்த விவகாரத்தில் கைக்கொள்ளக் கூடிய அடுத்த கட்ட போராட்ட வழிமுறைகள் குறித்து சிந்தித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச பொறிமுறைகளிடம் நீதியைக் கோருவது குறித்தும் சில தரப்புகள் ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது. எனினும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை கவனத்தில் கொள்ளும் என நம்புவதற்கில்லை.

இந் நிலையில் நீதியமைச்சர் அலி சப்ரி கூட ஜனாஸா எரிப்பு விடயத்தில் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான, அவராலேயே தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு, மிகவும் உயர்ந்த நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்ட அலி சப்ரியே இன்று நீதிக்காக சமூக வலைத்தளங்களில் ஏங்குகின்ற நிலைமை இந்த நாட்டில் தோற்றம் பெற்றுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

இவ்வாறு நாட்டில் அரசியல், நிர்வாகம் என சகல இடங்களிலும் இனவாதம் தலைவிரித்தாடுவது இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த கவலையை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குக் காரணம் உயர்மட்டத்திலும் அடிமட்டத்திலும் வேரூன்றியுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான இனவாத சிந்தனையே அன்றி வேறில்லை எனலாம். இதனால் நாடு சந்தித்த பேரிழப்புகளை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இதிலிருந்து பாடம்படிக்காத இந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதன் பின்னரும் பாடம்படிப்பார்கள் என நம்புவதற்கில்லை.

இந்த கடினமான சூழ்நிலையில் நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்பதையும் அவனது சந்நிதானத்தில் முறையிடுவதையும் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.