எமது புத்திஜீவிகள் முன்வரமாட்டார்களா?

1 1,303

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றின் ஒரு மிக சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளனர். அடுத்த சமூகங்களுடனான உறவாடல் ஒரு கொதிப்பு நிலை நோக்கி தள்ளப்படும் கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது எம்மை நாம் எவ்வாறு இந்த நாட்டு சமூக யதார்த்த நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்து எமது எதிர்கால வாழ்நிலை அமையப் போகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.

எமது வாழ்வின் சீர்நிலைக்கான செயற்பாடு என்பது இரு பகுதிகளாக உள்ளது. ஒன்று எமது மார்க்க அனுஷ்டானங்கள் சம்பந்தப்பட்டது. அது கீழ்வரும் பகுதிகளை உரிமைக்கான தீவிர உழைப்பாக மாற்றும் நிலையை எய்த முடியும்:

பெண்களின் ஹிஜாப்,
தாடி, ஜுப்பா,
ஜும்மா தொழுகையின் நடைமுறைப் பிரயோகம்
பள்ளி கட்டுதலின் தாக்கங்கள்
பாங்கு சொல்லல்
நோன்பு கால நடவடிக்கைகள்
உணவுப் பகுதியில் ஹலால், ஹராம்
தேசிய கீதம், சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள், நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
உழ்ஹிய்யா, மாடறுத்தல்
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லல், அவர்களது சுகதுக்கங்களில் கலந்து கொள்ளல் போன்ற அவர்களுடனான உறவாடல் நிகழ்வுகள்
முஸ்லிம் அல்லாதவர்களின் நம்பிக்கைகள், அவர்களது வணக்கங்கள், அவர்களது வணக்கஸ்த்தலங்கள் என்பவற்றோடு சம்பந்தப்படும் எமது நடத்தைகள்.
முஸ்லிம் விவாக, விகாரத்து பிரச்சினைகள்

இரண்டாவது பகுதி எமது சமூக வாழ்வோடு சம்பந்தப்படும் விவகாரங்களாகும். அதனைக் கீழ்வருமாறு சுருக்கித் தரலாம்.

பொருளாதார வாழ்வோடு சம்பந்தப்படும் எமது உரிமைகள், எம்மை அப்பகுதியில் பலப்படுத்திக் கொள்வதற்கான உபாயங்கள்.
கல்விப் பகுதியில் எமது உரிமைகள், எமக்குக் கிடைக்க வேண்டிய வளங்கள், அப்பகுதியில் எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான வழி வகைகள்.
எமது நிலங்கள், இருப்பிடங்கள் போன்றவற்றை காத்து, வளர்ப்பதற்கான உரிமைகள்.
இந்த நாட்டை கீழ் மட்டத்திலிருந்து உயர் நிலை வரையில் ஆள்வதில் பங்கு கொள்வதற்கான எமது நியாயமான உரிமைகள்.
அரச, தனியார் துறைகளி்ல் எமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தொழில் வசதிகள்.

இந்த இரண்டு பகுதிகளுக்கான செயற்பாட்டை ஒரு பாரிய அரசியல் வடிவெடுத்த உரிமைப் போராட்டமாக நாம் கொண்டு செல்வதா? அது எந்தளவு தூரம் சாத்தியமானது? முதலாம் பகுதிக்கான செயற்பாடுகள் சாத்வீகப் போராட்ட வடிவெடுத்தால் கூட அது இரண்டாம் பகுதிக்கான செயற்பாட்டை மறக்கடிக்கச் செய்துவிடுமா? முதல் பகுதியை ஓர் அரசியல் தந்திரோபாயமாகப் பாவிக்கும் சந்தர்ப்பம் முஸ்லிம் அரசியலவாதிகளிடமும் அடுத்த அரசியல் கட்சிகளிடமும் காணப்பட முடியுமா? முதலாம் பகுதிக்கான செயற்பாடுகளும், உழைப்பும் மதத் தீவிரவாதம் எனக் காணப்பட்டு ஓர் எதிர்ப்பிரச்சாரமாக உருவெடுக்குமா? அத்தோடு முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை விட்டு மேலும் அந்நியப்பட அது காரணமாகுமா?

இத்தகைய கேள்விகளின் பின்னணியில் முதற்பகுதியைப் பொறுத்தவரையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்டப் பகுதியை நோக்கி முஸ்லிம்கள் நகர வேண்டும் என்ற சிந்தனை பொருத்தமாக அமைய முடியும் எனக் கருதலாம். அவ்வாறு செய்தல் என்பது நான்கு மத்ஹபுகளுக்கு வெளியே ஸஹாபாக்கள், தாபியீன்கள், பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஏனைய இஸ்லாமிய சட்ட நிபுணர்களது தீர்ப்புக்கள் என்பவற்றையே குறிக்கிறது. இந்நிலையில் நாம் அப்பகுதியிலான உரிமைப் போராட்டங்களையும் அவற்றால் உருவாகும் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். மத இறுக்கம் கொண்ட சமூகம் என்ற நிலையை விட்டு தாராளப் போக்கு கொண்ட சிவில் சமூகமாக எம்மைப் பார்க்கும் நிலை அப்போது தோன்ற முடியும். அது எமது வாழ்வுக்கு மிகவும் சாதகமானது. இந்த சிந்தனையையே நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் சில இஸ்லாமிய சட்ட மன்றங்களும் “இஸ்லாமிய உலகுக்கு வெளியிலான சட்ட ஒழுங்கு” எனக் கூறுகின்றனர். “பிக்ஹ் அல் அகல்லிய்யாத்” என்ற பிரயோகத்தையும் இதனைக் குறிக்க அறிஞர்கள் பாவிப்பர்.

சமூக வாழ்வு சார் இரண்டாம் வகை உழைப்பே மிகவும் அடிப்படையானதும் எமது பலமான இருப்பை நிர்ணயிப்பதும் ஆகும். அப் பகுதியே அழுத்தம் கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டும். மார்க்க அனுஷ்டானங்களோடு சம்பந்தப்படும் முதலாம் வகைப்பிரச்சினைகள் அவற்றை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் கிளைப் பிரச்சினைகள் மட்டுமேயாகும்.

எமது பலம், எமது மக்கள் மனோ நிலை, களத்திற்கு வரும் புத்திஜீவிகளது தொகையும், அவர்களது அர்ப்பணமும், எமது அரசியல்வாதிகளது நிலை என்பவற்றை எல்லாம் கவனத்திற் கொண்டு இப்பகுதி பற்றிய தீர்மானத்திற்கு நாம் வர வேண்டும்.

இவற்றை மையப்படுத்தியதொரு பரந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாறல், கலந்துரையாடல் முதலில் புத்திஜீவிகளுக்கு மத்தியில் நடக்க வேண்டும்.

மக்களை வழிநடாத்தலும் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டலும் எக் காலத்தையும் விட இன்று அதிகமதிகம் தேவைப்படும் விடயமாகும். இப் பணியைக் கிராமம், கிராமமாக மேற்கொள்ள வேண்டிய தேவை மிக அடிப்படையானதாகும். இங்கு தவறுவோமாயின் அடுத்து வரும் எமது சந்ததியினருக்கு ஓர் அபாயகரமான இலங்கை நாட்டையே நாம் விட்டுச் செல்வோம்.

இப்பின்னணியிலிருந்து நோக்கும் போது சிவில் தலைமையே எம் போன்ற சமூகங்களை வழிநடாத்தப் பொருத்தமானது என்பது உணரப்பட வேண்டும். ஒரு தீர்வு அல்லது முடிவு என்பது எப்போதும் சூழமைவோடு தொடர்புபட்டதாகும். வெறுமனே வஹீயின் வசனங்களோடு மட்டும் தொடர்புபட்டதல்ல அது. வஹீயின் வசனங்களைப் பொறுத்தவரையில் அதனை விளங்குதல், பிரயோகித்தல் என இரு பகுதிகள் உள்ளன. விளங்குதலும் சூழமைவோடு ஓரளவு தொடர்புபட்டதேயாகும். ஆனால் பிரயோகித்தல் அல்லது நடைமுறைப்படுத்தல் என்பது மிகப் பெரும்பாலும் சூழமைவுடனேயே முழுக்க முழுக்க தொடர்புபட்டதாகும். ஒரு சிறுபான்மை சமூகத்தில் சூழமைவு சாதாரண நிலையை விட ஒரு படிமேல் முக்கியத்துவம் பெறுகிறது. சூழமைவைப் புரிந்தவர்கள் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஞானமிக்கவர்களாவர். இவர்களே சமூகத்தை மிகக் கவனமாக வழி நடாத்திச் செல்பவர்களாவர்.

ஆலிம்கள் -இஸ்லாம் படித்தவர்களுக்கு- இங்கு எந்த இடமும் கிடையாது என்பது இதன் பொருளல்ல. அவர்களது தீர்வுகள், முடிவுகள் நேரடியாகக் களத்திற்கு வரக் கூடாது என்றே சொல்ல வருகிறோம். எமது நாட்டில் பல வகையான இஸ்லாமிய சிந்தனைப் போக்குக் கொண்டவர்கள் உள்ளனர். பிரச்சினைகளின் போது அவர்கள் அனைவரதும் தீர்வுகள் பெறப்படலாம். அவற்றில் எந்தத் தீர்வை நடைமுறையில் பிரயோகிப்பது என்பதனை சிவில் தலைமைத்துவமே தீர்மானிக்க வேண்டும். அதாவது புத்திஜீவிகள் குழுவொன்றே தீர்மானிக்க வேண்டும்.

உண்மையில் சித்திலெப்பையும் அவரைத் தொடர்ந்து வந்த புத்திஜீவிகள் குழுவொன்றும் முஸ்லிம்களை வழிநடாத்தும் பகுதியில் ஓரளவு செல்வாக்குப் பெற்று வந்தது. ஆனால் அது எண்பதுகளின் பிறகு முழுமையாக மார்க்கத் தலைமைகளிடம் சென்றது. முஸ்லிம் கிராமங்களில் மார்க்கத் தலைமைகளும் அறிவுஜீவித்துவப் பின்னணியற்ற பணக்காரர்களுமே பெரும்பாலும் வழிநடாத்தும் பொறுப்பை ஏற்றனர்.

இங்கு எண்ணங்களையோ, பணிகளையோ குறை சொல்லும் நோக்கம் எமக்கில்லை. உண்மையில் நிறைய பணக்காரர்கள் பாரிய சமூகப் பணிகளை ஆற்றியுள்ளனர், ஆற்றி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குமாறு பிரார்த்திப்போம்.

எமது மார்க்கத்துறை சார்ந்தோர் உயர்ந்த பணிகளை செய்தார்கள், செய்து வருகிறார்கள் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அவர்களது அர்ப்பணமும், தியாகமும் போற்றி மதிக்கத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நாம் இங்கே சமூக யதார்த்தங்களைப் பேசுகிறோம். அப்போது காய்தல், உவத்தலின்றி உண்மைகளையே பேச வேண்டும். பொதுவாக இந்த மிகச் சிக்கலான காலப்பிரிவிலும், குறிப்பாக சிறுபான்மையாக வாழல் என்ற யதார்த்தத்திலும் புத்திஜீவிகளது பங்களிப்பு மறுக்கப்படக் கூடாததாகும். குறிப்பாக நாம் எமது வரலாற்றின் நாற் சந்தியில் அல்லது பிரிகோட்டில் நிற்கிறோம். மிகச் சிக்கலான இந்தக் காலகட்டம் முக்கியமாக இத்தகைய தலைமைத்துவத்தை வேண்டி நிற்கிறது என்பது புரியப்பட வேண்டும்.

இந்நாட்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் முஸ்லிம்கள் அவற்றின் போது எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். குறிப்பாக முஸ்லிம், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. இதனை ஒரு போதும் உணர்ச்சிகரமான உரைகள், செயற்பாடுகள் ஊடே தீர்க்க முடியாது. அத்தோடு வெறும் அரசியல் வடிவம் கொடுத்து மட்டும் இப்பிரச்சினையை நோக்காதிருப்பது மிக அவசியமானதாகும். இதன் சமூகப் பரிமாணத்தை நாம் நன்கு கவனத்திற் கொள்ள வேண்டும். உண்மையில் இப்பகுதி ஒரு மீள் புனரமைப்பையே வேண்டி நிற்கிறது. திடீர் திடீரென நிகழ்ச்சிகளின் ஓட்டத்திற்கேற்ப எதிர்வினையாற்றுவது பாரிய பாதகங்களையே இப்பகுதியில் ஏற்படுத்தக் கூடும். அது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய சிக்கலான நிலைமைகளின் போது கூட தலைமைத்துவமின்றி “வாட்சப்பில்” இடப்படும் பல்வேறு கருத்துக்களால் வழி நடாத்தப்படும் சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிப் போயுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் தனக்கு வரும் கருத்தை அங்கே பதிவிடுகிறார். ஸூரா ஷூறாவிலும், ஆல இம்ரானிலும் கட்டளையிடப்படும் “அவர்களது விவகாரங்கள் கலந்தாலோசனையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.” என்ற அல்குர்ஆனின் வழிகாட்டல் எந்த நடைமுறைப் பிரயோகமுமின்றி கைவிடப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான, பாரதூரமான விடயங்களைக் கூட தனிநபர்கள் கையாளுகின்ற நிலையே தோன்றியுள்ளது.

மிகவும் ஆபத்தான இந் நிலையிலிருந்து அவசரமாக முஸ்லிம் சமூகம் மீள வேண்டும். எங்கிருந்தாவது ஏதோ ஒரு வகையில் ஒரு சின்ன அளவிலாவது இந்தப் புத்திஜீவித்துவ வழிகாட்டல் துவங்கப்பட வேண்டும். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து செல்லலாம். இவ்வளவு சிக்கல் நிறைந்த காலப்பிரிவிலாவது எமது புத்திஜீவிகள் முன்வரமாட்டார்களா என்ற பெரும் எதிர்பார்ப்போடு இதனை முடிப்போம். – Vidivelli

1 Comment
  1. 1980 களில் இருந்தே முஸ்லிம் மக்கள் மத்தியில் வலுவான சிவில்சமூகம் இல்லாத வெறுமை பற்றி எச்சரித்து வந்துள்ளேன். முஸ்லிம் புத்திஜீவிகளின் தொடர் மாநாட்டின் அவசியத்தை கடந்த 25 வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன். அன்பர் உஸ்தாத் மன்சூர் குறிப்பிடும் 1980ன் திருப்பம் இலங்கையில் மட்டுமன்றி முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் சகல நாடுகளிலும் தனிமைப் படுதலுக்கே வழிவகுத்துள்ளது. 1980பதுகளின் மாற்றத்துக்குப் பின்னே இருந்த நாடுகளின் தலைவர்கள் இப்போ இஸ்ரேயேல் நாட்டின் நண்பர்களாக போட்டிபோடுகிறார்கள். இலங்கையில் 1980 பதுகளில் முளைவிட்ட இந்தச் சிக்கலை ஈஸ்ட்டர் தாக்குதல் மேலும் சிக்கலாக்கியுள்ளது. முஸ்லிம் களின் உள்விவகாரங்களை விடுங்கள். என்னைய இனத்தவர் பாதிக்கபடாதவரை மதம் அவரவர் உள் விவகாரம். ஆனால் ஏன்னைய இனங்களோடு உள்ள உறவும் அரசியலும்பற்றிய விவகாரங்கள் பொதுவானவை. ”1980களின் பிறகு” என கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அதற்க்குமுன்னம் எல்லா இனங்களிலும் பாரம்பரிய சிவில் சமூகம் இயங்கியது. 1980களின் பின்னர் ஏனைய சமூகங்கள் மத்தியில் மதம் அரசியல் சாராத உறவாடல்களை கையாள நவீன சிவில் சமூகம் உருவாக்கியபோது முஸ்லிம்கள் மத்தியில் அது சாத்தியப்படவில்லை. அதேசமயம் 1980 பதுகளின் பின் உருவாகி 2019 பின் தீவிரப்பட்ட தனிமைப்படுதல் சிக்கல்களை முஸ்லிம் சமய அரசியல் தலமைகளால் வெற்றிபெற முடியவில்லை. முஸ்லிம் மக்களது அச்சங்களுக்கும் ஏனைய இனங்களது பொது சமூக கலாச்சார சிக்கல்களும் அச்சங்களும் மதம்சாராத கலந்துரையாடல்கள் மூலமே தீர்வுகாண வேண்டும். ஆனால் முஸ்லிம் மத அமைப்பும் பெளத்த இந்து கிறிஸ்துவ அமைப்புகளும் பேசி இச்சிக்கல் மேலும் இடியப்பச் சிக்கலானதுதான் மிச்சம். பாரிய அரசியல் முரண்பாடுகளிடையும் தமிழர் மலையகத் தமிழர் சிங்களவரிடை சமூக கலாச்சார உறவுகள் இன்னும் தொடர்வதற்க்கு சிவிவில்சமூக வளற்ச்சிதான் காரணம். மாறாக சமூக அரசியல் பிரச்சினைகளை பெளத்த இந்து கிறிஸ்துவ அமைப்புகள் கையாண்டிருந்தால் நிலமை அச்சம்தருவதாகவே இருந்திருக்கும். முஸ்லிம் சிவில் சமூகம் வளர்ந்திருந்தால் நிச்சயமாக கோவிட்டில் மரணமானவர்களின் பிரச்சினையில் உடலை அடக்கம் செய்யும் மதக் கடமையுள்ள தமிழ் கிறிஸ்தவர்களையும் சிங்கள கிறிஸ்த்தவர்களையும் அணிதிரட்டி வெற்றி பெற்றிருக்க முடியும். இறைய சூழலில் இலங்கையில் சிவில் சமூகங்கள் சிங்களவர் தமிழர் மலையகத் தமிழர்களிடை அரசியல் கலாச்சார பாலமாக உள்ளது. முஸ்லிம்கள் சற்று இதனை சிந்திக்கவேண்டும். நீண்டகாலமாக என்னை கவலைப்படுத்திய விடயமொன்றில் ஏற்பட்ட முன்னேற்றமாகவே உஸ்தாத் எம்.எ.எம்.மன்சூரின் கட்டுரையை காண்கிறேன். முஸ்லிம் புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் இக்கட்டுரை தொடர்பாக விரிவாகவும் ஆக்கபூர்வமாகவும் விவாதிக்க வேண்டும்.

Cancel Reply

Your email address will not be published.