ஜனாஸாக்களை அடக்குவதற்கான தீர்மானம் தாமதம்

உலமா சபை தலைவர் மற்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர அறிக்கை குறித்து முஸ்லிம் சமூகம் அதிருப்தி

0 290

 எழுந்துள்ள சர்ச்சைகளே காரணம் என நிபுணர் குழு தெரிவிப்பு
• உலமா சபை தலைவர் மற்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர அறிக்கை குறித்து முஸ்லிம் சமூகம் அதிருப்தி
• காணியை தெரிவு செய்யும் பணிகளும் இடைநிறுத்தம்

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டியிருந்த போதிலும், இத் தீர்மானம் குறித்து தற்போது எழுந்துள்ள மாறுபட்ட கருத்துக்களால் இதனை அமுல்படுத்துவதில் சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழு நேற்று முன்தினம் கூடிய போதிலும் இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

குறிப்பாக பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதன் காரணமாக, தற்சமயம் இதற்கான அனுமதியை வழங்குவது தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என குறித்த குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் தற்போதைக்கு அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறிய முடிகிறது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் அதிகாரிகள் சிலரும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக உள்ளதாக அறிய முடிகிறது.

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழ பேராசிரியர் மெத்திகா விதானகே, கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்வதன் மூலம், நீரின் ஊடாக தொற்றுப் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மீண்டும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். எனினும் இதற்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.

உலமா சபை தலைவர் மற்றும் சி.டி.ஜே. அமைப்பு குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி

இதனிடையே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக தன்னிடம் நீதியமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியதாக கடந்த திங்கட் கிழமை இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி வெளியிட்ட ஒலிப்பதிவு, அதிகம் பகிரப்பட்டதையடுத்து பலரும் உடனடியாகவே மகிழ்ச்சி வெளியிட்டதுடன் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் உட்பட அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர்.

இந் நிலையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி  மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி, சிங்கள மொழியில் வெளியிட்ட கடிதமானது சிங்கள ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனையடுத்து பொது பல சேனா உட்டப பல பௌத்த அமைப்புகளும் பிக்குகளும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிக்கை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இந் நிலையிலேயே இவ்விவகாரம் குறித்து ஏலவே அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சுமுகமாக நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த விவகாரம் பகிரங்கப்படுத்தப்பட்டதன் மூலம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வவதற்கான அனுமதியைப் பெறுவதில் நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உலமா சபைத் தலைவர் இத் தீர்மானம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை பொறுத்திருக்காது, இதனைப் பகிரங்கப்படுத்தியதும் அதனைத் தொடர்ந்து சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இவ் விவகாரத்தை சிங்கள மொழியில் அறிக்கையிட்டு பௌத்த கடும்போக்கு சக்திகளின் எதிர்ப்புக்கு வழிகோலியதும் முஸ்லிம் சமூகத்தில் பலத்த அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கண்டனங்களைப் பதிவிட்டுள்ளனர்.

உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் தற்போது வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

காணியை தெரிவு செய்யும் பணிகளும் இடைநிறுத்தம்

இதனிடையே, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார், முசலி பிரதேசத்தில் காணி ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அது தொடர்பான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் முசலி பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. எனினும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் காரணமாக காணியை அடையாளப்படுத்தும் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இப் பணியில் ஈடுபட்ட முக்கியஸ்தர் ஒருவர் ‘விடிவெள்ளி‘க்குத் தெரிவித்தார்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.