20க்கு ஆதரவளித்தவர்கள் முன்னுள்ள சமூகப் பொறுப்பு

0 708

நாட்டில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை வரையான தரவுகளுக்கமைய இதுவரை நாட்டில் 9619 பேர் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளால் மாத்திரம் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 6145 ஆகும். நாட்டில் மொத்தமாக இதுவரை 4142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5458 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு மீண்டும் ஒருமுறை முழுமையான முடக்க நிலைக்குச் செல்லாதுவிடினும் கூட பெரும்பாலான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கப்பால் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பல பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட தொற்று இன்று நாட்டின் பல மாவட்டங்களை அடைந்துள்ளது. மீன் வியாபாரத்தில் ஈடுபடுவோர் இச் சந்தைக்குச் சென்றுவந்ததே இதற்குக் காரணம். எனினும் இவர்களது தொடர்பு வலையமைப்பைக் கண்டறிந்து மேலும் பரவுவதை தடுப்பதில் சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப் பரவலயைடுத்து மீண்டும் பொது மக்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் பல ஊர்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவ் வைரஸ் பரவலால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இறுதியாக மரணித்த இரு முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் வழமைபோன்றே எரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே இன்றுவரை பின்பற்றப்படுகிறது. அதனைத் திருத்துவதற்கான எந்தவித சமிக்ஞைகளையும் காண முடியவில்லை. நீதியமைச்சர் கூட இதுவிடயத்தில் தான் தலையிடவில்லை என ஒதுங்கிவிட்டார். இந் நிலையில்தான் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பி.க்களாவது இந்த விடயத்தில் தலையிட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.

இத்திருத்தத்திற்கு ஆதரவளித்த பல எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தாம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சு நடாத்தி தீர்வு காணவே இதனை ஆதரித்ததாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறாயின் அவர்கள் அரசுடன் பேசித் தீர்க்க வேண்டிய தற்போதைய முதன்மைப் பிரச்சினையாக இந்த ஜனாஸா எரிப்பு விவகாரமே முன்வைக்கப்படுகிறது.

அந்த வகையில் 20 ஆம் திருத்தத்திற்கு தாம் வழங்கிய ஆதரவிற்கு கைம்மாறாக ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்த இந்த எம்.பி.க்கள் முன்வர வேண்டும். தாம் 20 இற்கு ஆதரவளிப்பதற்காக எந்தவித கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடவில்லை என்பதையும் சமூக நலனுக்காகவே இதனை ஆதரித்தோம் என்பதையும் நிரூபிக்க இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்றேல் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே திருத்தத்திற்கு ஆதரவளித்தார்கள் என அரசியல்வாதிகள் முதல் புத்திஜீவிகள் வரை இன்று இந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பிதாக அமைந்துவிடும்.

30.10.2020 விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்

Leave A Reply

Your email address will not be published.