தேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம்

சி.எம்.ஈ.வி. யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க

0 922

பாராளுமன்றத் தேர்தலுக்கு ஓரிரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சு என்பன முன்னெப்போதுமில்லாதவாறு அதிகரித்துள்ளன.  இந்நிலையில் தேர்தல் காலங்களில் பரவும் போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப்பேச்சு தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு :
 
கேள்வி : வெறுப்புப்பேச்சு என்பது எல்லா தேர்தல்களிலும் பிரதான பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.  இதை  தடுப்பதற்கான வழிமுறைகள் எவை?

இந்த உலகத்தின் கடைசி மனிதன் வாழும் வரை போலிச்செய்தி என்ற ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். எங்களாலும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்களாலும் இந்த விடயத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர இல்லாமல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. மிக மிக நவீனமயப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றிதான் நாங்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். இதிலிருந்து சட்டத்தால் மாத்திரம் அனைத்தையும் கட்டுப்படுத்தி விட முடியாது என்பது புலனாகின்றது. எனவே சமயத் தலைவர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் இணைந்து இவற்றின் தீமையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

கேள்வி :  போலிச்செய்திகளுக்கும் வெறுப்புப்பேச்சுக்கும் எதிராக சி.எம்.ஈ.வி.யினால் மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகள் என்ன?

போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் வெளிப்படும்போது தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சி.எம்.ஈ.வி  செய்ய முடியுமான பிரதான விடயங்கள் இருக்கின்றன. போலிச்செய்தி மற்றும் வெறுப்புப் பேச்சு பரவும்போது முதலாவதாக பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு விடயத்தை உடனடியாக தெரியப்படுத்தி அதனை தடுப்பதற்கான முழு ஒத்துழைப்பை சி.எம்.ஈ.வி வழங்கும்.

அடுத்ததாக இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரின் சேவையையும் எங்களால் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் துரித நடவடிக்கை எடுப்பதற்கு சி.எம்.ஈ.வி எப்போதும் இந்த விடயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. சர்வதேச ரீதியாக பாரிய சவால்கள் ஏற்படும்போது இன்டர்போலின் உதவியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகளும் எங்கள் வசம் உள்ளன. ஆனாலும் அந்தளவு பிரச்சினைகள் இம்முறை ஏற்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் பரவும் வெறுப்புப்பேச்சுக்கள் பெரும்பாலும் வெளிநாட்டு முகவரிகளில் இருந்து நவீனமயப்படுத்தப்பட்ட மென்பொருள்கள் ஊடாக பகிரப்படுகின்றன. ஆனாலும் இவற்றை முடக்;குவதற்கும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் எங்களிடம் இருக்கின்றன. அத்துடன் சைபர் தாக்குதல், புதிய ஊடகங்கள் பற்றிய விடயங்கள் மீதும் சி.எம்.ஈ.வி அதிக கரிசனை காட்டுகி;றது.
     
கேள்வி :  பெண் வேட்பாளர்களுக்கு எதிரான அவதூறுகள் குறித்து  நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையில் தேர்தலின் போது யாரையும் ஆண் பெண் என்ற பிரிவினையில் சி.எம்.ஈ.வி பார்ப்பதில்லை. எல்லோரையும் சம அளவில்தான் பார்த்துக்கொள்கின்றோம். ஒரு சில காரணங்களுக்காக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதில் விசேட கவனம் செலுத்துகின்றோம். பெண்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுகளில் சமூகத்தில் வேரூன்றிப்போயுள்ள சமூக எண்ணக்கருக்கள் மற்றும் சமய நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு தேர்தல் காலமோ பெண் வேட்பாளர்களோ விதிவிலக்கு கிடையாது. காலங்காலமாக பெண்களுக்கு எதிராக வெறுப்புப்பேச்சுக்கள் தூண்டப்படுகின்றன. பெண்களை மதிக்கும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்பாத வரையில் தேர்தல் காலத்தில் பெண்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சுக்களை இல்லாமல் செய்ய முடியாது.

கேள்வி : தேர்தலுக்கு பின்னர் வெறுப்புப்பேச்சு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

தேர்தலுக்குப் பின்னர் வெறுப்புப்பேச்சுக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. எங்களுக்குத் தெரியும் தோல்வி என்பது ஏற்றுக்கொள்ள சிரமமான ஒன்று. பெறுபேறுகளுக்குப் பின்னர் வெற்றியாளரின் பக்கம்தான் அனைத்து மக்களும் இருப்பார்கள். ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் வெற்றியை கொண்டாட அனைவரும் ஒன்று சேரும்போது குறித்த கட்சிக்கு வாக்களித்தவர்கள் யார் வாக்களிக்காதவர்கள் யார் என்பதை எங்களால் அடையாளம் காண முடியாது.

இந்த நேரத்தில் சமூகத்துக்கு ஒவ்வாத நபர்கள் நல்ல தண்ணீருள்ள குட்டையை குழப்பி விடுவதைப்போல இதையும் குழப்பி அதில் ஆனந்தம் காணத்தான் முனைவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அரசியல், தர்மம், நீதி, நியாயம், சமயம் என சகல விடயங்களும் மறந்து போகும் நிலைமை ஒரு சில கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்படும்போது வெறுப்புப்பேச்சு அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய வெறுப்புப்பேச்சுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய கோவையை தேர்தல் ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கேள்வி : வெறுப்புப்பேச்சு மற்றும் போலிச் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் அறிவுரை என்ன?

தேர்தல் காலங்களில் ஒரு நபரை ஒரு குழுவை அல்லது ஒரு கட்சியை உற்சாகப்படுத்துவதற்காக அல்லது இன்னொரு கட்சியை இழிவு படுத்துவதற்காக வெறுப்புப்பேச்சுக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் பொய்யான விடயங்கள் பரப்பப்படும் நிலையும் ஒரு சில சந்தர்;ப்பங்களில் பொய்கள் அம்பலமாகும் நிலையும் காணப்படுகின்றது. என்னவாக இருந்தாலும் வெறுப்புப்பேச்சை ஆதரிக்க முடியாது. ஒவ்வொரு வெறுப்புப்பேச்சின் பின்னணியிலும் இனம் மதம் சமயம் கட்சி பால் என மனிதர்கள் பிரிந்திருக்கும் நிலை இதனைப் பரப்புவோர்களுக்கு சாதகமாக உள்ளது.

வெறுப்புப்பேச்சினை பரப்புவோர்களின் முதல்நோக்கம் பாதிக்கப்படும் நபருக்கு எதிராக மக்களை துண்டுவதாகும். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக செயற்படுபவர்களே நாட்டின் நல்ல குடிமக்களாவர். நாட்டை துண்டு போடவோ சர்வதேச பார்வையில் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தவோ நாட்டின் நல்ல குடிமகன்கள் முன்வரமாட்டார்கள். எனவே ஒரு விடயத்தை சமூகத்துக்கு சொல்லுவதன் நோக்கத்தை ஆராய்ந்து அதன் பின்னர் சொல்லுங்கள். உறுதிப்படுத்தப்படாத, ஆதாரம் இல்லாத செய்திகளை பகிரவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டாம். இதை செய்தால் வன்முறை யுத்தம் என பல விளைவுகளை இலங்கை சந்திக்கும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.