நாட்டினை பலப்படுத்த பொதுத்தேர்தலே  வழி

விசேட அறிக்கையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

0 821

எந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில்  பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டுமே அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரும் கையில் எடுப்பார்கள். அதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.  பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டினை மீண்டும் பலப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறை பொதுத் தேர்தல்  மட்டுமேயாகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்கள், ஆட்சியை தெரிவுசெய்ய  பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டாம் என கூறும் அரசியல் கட்சிகள் உள்ள ஒரே நாடு இலங்கையாகும். அரசியலமைப்பின் பிரகாரம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யவும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்தி  ஜனவரி மாதம் 17 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் ஒன்றினை அமைக்க  ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருந்தார். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறுகிய காலத்தில் நாடு மீண்டும் பலமடைந்திருக்கும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடாதென சிலர் நீதிமன்றம் சென்று மனுத் தாக்கல் செய்தனர். எனினும் தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறிய நிலையில் அப்போதைய அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும் மாகாணசபை தேர்தல் விடயத்திலும் இன்றுவரை 9 மாகான சபைகளில் 6 சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. நாம் யுத்தத்தை முடித்தவுடன் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தி நாட்டில் சகல மாகாணங்களுக்கான தேர்தலை நடத்தினோம். இன்று நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. ஏனைய மூன்று மாகாணசபைகளும் கலைய சில நாட்களே உள்ளன. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி மக்களை ஏமாற்றும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதே இதில் வெளிப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்று வரவுள்ளது. ஆகவே, அது குறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. எனினும் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சூழ்ச்சிக் கூட்டணி, 19 ஆம் திருத்தத்தின்படி 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70(1) சரத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக 70(1) இல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சரத்துக்கமைய ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகள் கலைக்க முடியாது என தெரிவிக்கின்றனர். அவ்வாறு இடையில் கலைக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவ்வாறு கலைக்க முடியும் என கூறுகின்றனர்.

உலகில் பல நாடுகளில் நாட்டு நிருவாகியாகத்தான் அரச தலைவர் உள்ளார். அவ்வாறு இருந்தும்கூட அவரது கணிப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று ஜனாதிபதியாகும். உலகத்தில் இவ்வாறு நெருக்கடியான நிலைகளில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. 1975 ஆம் ஆண்டு அவஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அதேபோல் இந்திய அரசியலமைப்பினை வரைந்த கலாநிதி ஆர்.அம்பேத்கார், பாராளுமன்றம் கலைக்கப்படுவதும் தொடர்வதும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமையவே முடிவெடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

1970 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி பெரும்பான்மை இருந்தும் அவற்றை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதியாக இருந்த வி.வி.ஹரி இந்திய பாராளுமன்றத்தை கலைத்தார். 1979ஆம் ஆண்டிலும் அவ்வாறு இடம்பெற்றுள்ளது.

19 ஆம் திருத்தத்துக்கு முன்னர் அரசியலமைப்பில் இருந்த  70(1) திருத்தம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாலும் கூட உண்மையில் அவ்வாறு இடம்பெறவில்லை. 70(1) திருத்தப்படி பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் அரசியலமைப்பில் வேறிடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  பழைய 70(1) திருத்தப்படும் நிலையில் 19 ஆம் திருத்தத்தின்படி 33ஆவது சரத்துக்கு புதிதாக 2(ஆ) என உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் என்ன கூறப்படுகின்றது என்றால் அரசியலமைப்பினாலோ அல்லது வேறு சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு மேலாக பாராளுமன்றத்தை கூட்டவும் கலைக்கவும் ஒத்திவைக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறப்படுகின்றது.  19ஆம் திருத்தத்தில் ஒரு இடத்தில் இருந்த அதிகாரத்தை இன்னொரு இடத்துக்கு கொண்டுவந்துள்ளனர். அதை ஏன் செய்தார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்ற ஒழுக்கம், அதிகாரம் 33(ஆ) திருத்தத்தில் தான் தங்கியுள்ளது. இந்த திருத்தத்தை கருத்தில் கொள்ளாது பழைய 70(1) திருத்தப்படி ஏற்றுகொள்ள முயன்றால் ஜனாதிபதியின் கொள்கை உரை, வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அல்லது  அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றால் எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற வரையறைக்கு வரவேண்டி வரும்.

பாராளுமன்ற அதிகாரம் கொண்ட நாடுகளில் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டு நிருவாகியான ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்றால் இலங்கையில் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு நாட்டில் எந்த நிலைமையிலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை சிந்திக்க வேண்டும். அதிகார காலம் முடிவடைய முன்னர் எந்தக் காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறும் ஒரே நாடு நோர்வே. அங்கு மிகக் குறுகிய எண்ணிக்கை கொண்ட மக்களே  உள்ளனர். எந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில் பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டும்தான் அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரும் கையில் எடுப்பார்கள்.  பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டினை மீண்டும் பலப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறைதான் பொதுத்தேர்தல் . எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் பாராளுமன்றத்தை விடவும் மக்களிடமே உள்ளது. அந்த அதிகாரம் செயன்முறைக்கு வருவது தேர்தல் மூலமாக மட்டுமே. ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.