சிறுபான்மையினருக்கான பாதுகாப்பே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம்

0 789

இலங்கை அந்­நிய ஏகா­தி­பத்­தி­யத்தின் பிடி­யி­லி­ருந்து விடு­தலை பெற்று 2020 பெப்­ர­வரி 04 ஆம் திக­தி­யுடன் 72 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்­பட்ட புதிய அர­சியல் மாற்­றத்­துடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரைக் கொண்ட ஒரு புது யுகத்தில் 72 ஆவது சுதந்­திர தினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. முரண்­பா­டான அர­சியல் சூழ­லொன்று நிலவி வரு­கின்ற நிலையில் இம்­முறை சுதந்­திர தினம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­கின்­றது. இன அடிப்­ப­டை­யி­லான ஒற்­றுமை, சக­வாழ்வு நல்­லி­ணக்கம் என்ற கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் இலங்கை திரு­நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அடி­யெ­டுத்து வைத்­துள்ள நிலையில் 72 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்கை சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொள்ள இந்­நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் ஏனைய இனங்­க­ளோடு இணைந்து எத்­த­கைய தியா­கங்­க­ளையும் பங்­க­ளிப்­பையும் செய்­தது என்­பது பேசப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

இலங்­கையின் கரை­யோர பிர­தே­சங்­களை 1505 – 1658 ஆம் ஆண்டு வரையில் போர்த்­துக்­கே­யரும் 1658 – 1796 ஆம் ஆண்டு வரையில் ஒல்­லாந்­தரும் 1796 – 1948 ஆம் ஆண்டு வரையில் ஆங்­கி­லே­யர்­களும் இலங்­கையை கைப்­பற்றி ஆதிக்கம் செலுத்­தி­யுள்­ளனர். ஆங்­கி­லேயர் 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்­சி­யத்தை கைப்­பற்­றி­ய­தோடு இலங்கை முழு­வ­தையும் ஆண்ட ஐரோப்­பியர் என்ற பெருமையை பெறு­கின்­றனர்.

சுதந்­தி­ரத்­திற்கு முன்­னைய அர­சியல் வர­லாற்றை சற்றுப் பின்­னோக்கி பார்த்தால் பிரித்­தா­னியர் இலங்­கையை ஆட்சி செய்த 150 வரு­டங்­க­ளுக்குள் 1833 ஆம் ஆண்டு கோல்­புரூக், 1920 ஆம் ஆண்டு மெனிங், 1924 ஆம் ஆண்டு மக்­கலம், 1931 ஆம் ஆண்டு டொனமூர், 1947 ஆம் ஆண்டு சோல்­பரி என்ற அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்­களை இலங்­கைக்கு முன்­வைத்து நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றாக இலங்கை சுமார் 450 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஐரோப்­பி­யரின் ஆதிக்­கத்தின் கீழி­ருந்து விடு­தலை பெற்று சுதந்­திர நாடாக 1948 ஆம் ஆண்டு இலங்கை வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே இலங்­கைக்கும் அரே­பிய தேசங்­க­ளுக்கும் இடையில் நீண்ட உறவு இருந்­துள்­ள­தையும் இலங்கை வர­லாற்றுப் பதி­வு­களில் நாம் காணலாம். அது­மட்­டு­மல்­லாது இலங்­கையை ஐரோப்­பா­வுக்கு அறி­முகம் செய்து இலங்கைத் தேசத்தின் புகழை உல­கிற்குப் பரவச் செய்­த­வர்­க­வர்­க­ளா­கவே வர­லாற்றுக் குறிப்­புக்­களில் அரே­பி­யர்கள் பற்­றிய தக­வல்கள் கூறு­கின்­றன.

இலங்கை 1948 ஆம் ஆண்டு டொமி­னியன் அந்­தஸ்­து­ட­னான சுதந்­தி­ரத்தைப் பெறுக் கொண்­ட­தா­யினும் 1972 ஆம் ஆண்டு வரையில் இந்­நாட்டை ஆட்சி செய்­வ­தற்­கான அர­சியல் யாப்­பொன்றை வரைந்­து­ கொள்ள முடி­யாத நிலை இருந்­து­வந்­தது. 1970 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­காவின் ஸ்ரீல.சு.க. தலை­மை­யி­லான கூட்டு முன்­னணி அர­சாங்கம் தேர்­தலில் பெற்­றுக்­கொண்ட மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தால் பிரித்­தா­னி­ய­ரது நிர்­வா­கத்தின் கீழான டொமி­னியன் அந்­தஸ்தை முற்­றாக ஒழித்­துக்­கட்டி 1972 ஆம் ஆண்டு புதிய அர­சியல் யாப்­பொன்றை வரைந்து கொண்­டதன் மூலம் முத­லா­வது குடி­ய­ரசு என்ற பெயரில் இறை­மையும் தன்­னா­திக்­கமும் கொண்ட நாடாக இலங்கைத் தேசம் மலர்ந்­தது. 1972 ஆம் ஆண்டு புதிய அர­சியல் யாப்பு அறி­முகம் செய்­யப்­பட்­ட­தோடு இலங்­கையை இலங்­கை­ய­ராலே முழு­மை­யாக ஆட்சி செய்யும் நிலை உரு­வா­கி­யது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பத­விக்கு வந்த ஐ.தே.க. அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியின் பிர­தி­ப­ல­னாக 1978 ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு வரை­யப்­பட்டு 1972 ஆம் ஆண்டின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பை முற்­றாக மாற்­றம்­செய்து இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு நடை­மு­றைக்கு வந்­தது.

சுதந்­திரப் போராட்­டமும் முஸ்­லிம்­களும்

இலங்­கையில் பிரித்­தா­னிய ஆதிக்­கத்­திற்கு எதி­ரான போராட்டம் 1817 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஊவா – வெல்­லஸ்ஸ கல­கத்­துடன் ஆரம்­ப­மா­கி­யது எனலாம். அதன் பின்னர் 1848 ஆம் அண்டு மாத்­தளை கலகம் பிரித்­தா­னி­ய­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராகப் போராடும் இலங்கை தேசிய காங்­கிரஸ், 1919 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­டது.

இந்த தேசிய காங்­கி­ரசின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­க­ளாக காசிம் உமர், மக்தான் இஸ்­மாயில், எஸ்.என். இஸ்­மாயில், ரி.பி. ஜாயா, எல்.எம். சபர், எம்.கே. சால்தீன் ஆகியோர் 1922 ஆம் ஆண்டு இணைந்து கொண்­டனர். அதன்­மூலம் சுதந்­திரப் போராட்­டத்­திற்­கான இலங்கை முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்பு ஆரம்­ப­மா­கி­யது. அன்­றைய கால­கட்­டத்தில் இந்த முஸ்லிம் தலை­வர்கள் மிகவும் பிர­பல்­ய­மிக்க தலை­வர்­க­ளாகக் கரு­தப்­பட்­ட­வர்­க­ளாவர். 1925 ஆம் ஆண்டு அக்­டோபர் 14 ஆம் திகதி இந்த தேசிய காங்­கி­ரஸின் உதவித் தலை­வ­ராக ரி.பி. ஜாயா தெரிவு செய்­யப்­பட்டார். ரியால் முஹம்மத் என்ற முஸ்லிம் தலைவர் இலங்கை தேசிய காங்­கி­ரஸின் செய­லா­ளர்­களுள் ஒரு­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். 1924 ஆம் ஆண்டு மனிங் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தை ஆட்­சே­பித்­த­போது சிங்­களத் தலை­வர்­க­ளுக்கு முஸ்லிம் தலை­வர்கள் பூர­ண­மான ஒத்­து­ழைப்பை வழங்­கினர்.

1927 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்­குழு இலங்கை வந்­த­போது இலங்­கைக்­காக மற்­று­மொரு அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான கருத்­துக்­களை வழங்­கி­ய­வர்­களில் என்.எச்.அப்துல் காதர், சேர் மாக்கான் மாக்கார், ரி.பி .ஜாயா ஆகியோர் இடம்­பெற்­றனர். அதனைத் தொடர்ந்து இலங்கை தேசிய காங்­கி­ரஸால் 1930 ஜன­வரி 23 ஆம் திகதி இங்­கி­லாந்து மகா­ரா­ணியை சந்­தித்து இலங்­கையின் நிலை­வரம் மற்றும் சுதந்­திரம் தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அனுப்­பப்­பட்ட தூதுக்­கு­ழுவில் காசிம் இஸ்­மாயில் என்­ப­வரும் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தமை இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்குப் பெருமை சேர்ப்­ப­தாக இருந்­தது. அன்­றைய கால­கட்­டத்தில் சுதந்­திர வேட்­கையில் பாடு­பட்ட ஏ.ஈ.குண­சிங்க, டபிள்யு.ஏ.டி.சில்வா, டி.எஸ். சேனா­நா­யக்கா, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­நா­யக்கா, சி.டபிள்.டபிள்யு. கன்­னங்­கர, பொன்­னம்­பலம் இரா­ம­நாதன், ஜீ.ஜீ. பொன்­னம்­பலம், சேர் அரு­ணா­சலம், டி.பி. ஜய­தி­லக போன்ற சிங்­கள பௌத்த மற்றும் தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த தலை­வர்­க­ளுடன் இணைந்து முஸ்லிம் தலை­வர்­களும் இந்­நாட்டின் முஸ்லிம் சமூகம் சார்­பான ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் சுதந்­தி­ரத்­திற்­காக வழங்­கினர்.

அதே­நேரம், தமிழ் சமூகம் சார்ந்த தலை­வர்­க­ளான இரா­ம­நாதன் மற்றும் ஜீ.ஜீ பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள் அவர்­க­ளது சமூகம் சார்­பாக முக்­கி­ய­மான உரி­மை­க­ளுக்­கான கோரிக்­கையை நிபந்­த­னை­யாக முன்­வைத்து அன்­றைய கால­கட்­டத்தில் சுதந்­திர கோரிக்­கைக்­கான ஆத­ரவை வழங்­கினர். தமிழ்த் தலை­வர்­களால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னை­களில் தமி­ழர்­க­ளது சுய­நிர்­ணய உரி­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கோரிக்கை பிர­தா­ன­மா­ன­தாக அமை­கின்­றது. அந்தக் கோரிக்­கைகள் சுதந்­தி­ரத்தின் பின்னர் நிறை­வே­றா­ததன் கார­ண­மா­கவே 1956 ஆம் ஆண்டு முதல் தமி­ழர்­க­ளது சுய நிர்­ணய உரி­மைக்­கான போராட்­டமும் ஆரம்­பிக்­கப்­பட்­டது எனலாம்.

முஸ்லிம் தலை­வர்­களைப் பொறுத்­த­வ­ரையில் எந்­த­வி­த­மான நிபந்­த­னை­க­ளு­மின்றி இந்­நாட்டில் விடு­தலை, இறைமை, தன்­னா­திக்கம், ஐக்­கியம், சமா­தானம் என்ற ஒரே குறிக்­கோளில் ஒத்­து­ழைப்பை வழங்­கினர் என்­பது பிர­தா­ன­மாகும். அன்­றைய நிலையில் எந்­த­வி­த­மான உரிமைக் கோரிக்­கை­யையும் முன்­வைத்து சிங்­களத் தலை­வர்­களை இறுக்கிப் பிடிக்கும் சந்­தர்ப்­ப­வாத தலை­வர்­க­ளாக முஸ்­லிம்கள் இருக்­க­வில்லை. உதா­ர­ண­மாக 1935 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இலங்கை முஸ்லிம் சங்­கத்தால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பிரித்­தா­னிய ஆட்­சிக்கு எதி­ராகப் போர­ாடிய சிங்­கள மற்றும் தமிழ் தலை­வர்­களும் கலந்­து­கொண்ட விசேட வைப­வ­மொன்றில் சேக் அல்–­பாஸி என்ற இஸ்­லா­மிய அறிஞர், “சமா­தானம் பற்­றிய இஸ்­லா­மிய கண்­ணோட்டம்” என்ற தலைப்பில் ஆழ­மான உரை­யொன்றை நிகழ்த்தி முஸ்­லிம்­க­ளது சுதந்­திர வேட்­கையை தூண்­டி­ய­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

அத்­துடன், தேசிய காங்­கி­ர­ஸுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அகில இலங்கை முஸ்லிம் லீக், இலங்கை முஸ்லிம் சங்கம், இலங்கை சோனகர் சங்கம் (சிலோன் மூவர்ஸ் அசோ­சி­யேசன்) போன்ற சங்­கங்­களை உரு­வாக்கி அவற்றின் ஊடாக முஸ்­லிம்­களை ஒருங்­கி­ணைத்து சுதந்­திரப் போராட்­டத்­திற்கு சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளனர். இந்தப் பங்­க­ளிப்பும் ஒத்­து­ழைப்பும் இன்று வரையில் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. சுதந்­தி­ரத்தின் பின்னர் நாட்டை ஆட்­சி­செய்த சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து ஐக்­கிய இலங்கை என்ற ஒரே தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றனர். இலங்­கைவாழ் முஸ்லிம் சமூகம் பெரும்­பான்மை இன­மான சிங்­கள மற்றும் தமி­ழர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ்­வதை குறிக்­கோ­ளாகக் கொண்­டுள்ள அதே நேரம், தேசிய அர­சி­யலில் செய்­கின்ற பங்­க­ளிப்­பி­னூ­டாக அர­சியல் உரி­மை­களை அனு­ப­விப்­பதை இலட்­சி­ய­மாகக் கொண்ட ஒரு சமூ­க­மாகும். ஒரு­போதும் நாட்டை பிள­வு­ப­டுத்த அல்­லது இந்­நாட்டின் பௌத்த மதத்­திற்கு அச்­சு­றுத்­த­லான சமூ­க­மாக வாழ்ந்­த­வர்கள் அல்ல.

சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலங்­க­ளிலும் முஸ்­லிம்­களின் இவ்­வா­றான அணு­கு­முறை கார­ண­மா­கவே 1833 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை­யி­லான அர­சாங்க சபையில் பல முஸ்­லிம்கள் அங்கம் வகித்து நாட்­டிற்­கா­கவும் முஸ்­லிம்­க­ளுக்­கா­கவும் குரல் எழுப்­பி­யதை குறிப்­பி­டலாம். அவர்­களுள் எம்.சி. அப்­துர்­ரஹ்மான், வாப்­பிச்சி மரிக்கார், என்.எச்.எம். அப்துல் காதர், முஹம்மத் சுல்தான், எம்.ரி. அக்பர், ரி.பி.ஜாயா, மாக்கான் மாக்கார், எம்.சீ.எம். கலீல், சேர் ராசிக் பரீட் போன்­ற­வர்­களைக் குறிப்­பி­டலாம். 1833 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1931 ஆம் ஆண்டு வரையில் பிரித்­தா­னி­யரால் முன்­வைக்­கப்­பட்ட ஆறு அர­சியல் சீர்­தி­ருத்­தங்­களின் கீழும் நிறு­வப்­பட்ட அர­சாங்க சபையில் நிய­மன மற்றும் தெரிவு அங்­கத்­த­வர்­க­ளாக இருந்து இலங்­கையின் இறை­மைக்­காக முஸ்லிம் தலை­வர்­களும் தொடர்ச்­சி­யாகக் குரல் எழுப்­பினர்.

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிள­வு­பட்ட தேசத்தை முஸ்­லிம்கள் விரும்­பி­ய­தில்லை. அத்­துடன் பத­விக்கு வரும் ஒவ்­வொரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் முஸ்­லிம்கள் சிறு­பான்மை இன­மாக இருந்­தாலும் முஸ்லிம் தலை­வர்­க­ளையும் அர­வ­ணைத்தே ஆட்­சியை முன்­னெ­டுத்து வரு­கின்ற வர­லாற்றை காணலாம்.

அண்­மைக்­கா­ல­மாக அந­கா­ரிக தர்­ம­பா­லவின் சிந்­த­னை­களால் கவ­ரப்­பட்ட ஒரு­சில பெரும்­பான்மை சிங்­களத் தலை­வர்கள் முஸ்­லிம்­களின் 100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட தேசா­பி­மான பங்­க­ளிப்பை மறுத்­த­வர்­க­ளாக, இந்­நாட்டு முஸ்­லிம்­களை இரண்­டாந்­தரப் பிர­சை­க­ளாக நடத்­து­வ­தற்கும் அவர்­களை இந்­நாட்டின் அடி­மை­க­ளாக்கி மேலா­திக்கம் செலுத்­தவும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 30 வரு­டங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்­டி­ருந்த சிவில் யுத்­தத்தை 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு கொண்­டு­வந்­ததன் பின்னர் பௌத்த தேசப்­பற்றின் போக்கில் இந்­நி­லை­மைகள் துரி­த­மாக வளர்ச்சி கண்­டுள்ள பரி­ணாம மாற்றம் எனலாம். முஸ்­லிம்கள் சுதந்­தி­ரத்­திற்­காக வழங்­கிய பங்­க­ளிப்­பு­களை கொச்சைப் படுத்­து­ப­வர்­க­ளா­கவும் இலங்கை முஸ்­லிம்­க­ளது 1200 வரு­ட­கால பழை­மை­வாய்ந்த வர­லாற்­றைக்­கூட மறுக்கும் வகை­யிலும் சில சிங்­கள பௌத்த தீவிர போக்­கு­டைய சிந்­த­னை­வா­திகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதனால் முஸ்­லிம் சமூகம் அச்­சத்­திலும் பீதி­யிலும் வாழும் ஒரு சமூ­க­மாக மாறி­யி­ருக்­கின்­றது. இன ஒதுக்­கல்­களின் அடிப்­ப­டை­யி­லான செயற்­பா­டுகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

அத்­த­கைய தலை­வர்­களே இந்­நாட்டில் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்பை முற்­றாக மறுத்து இந்­நாட்டில் எழுச்­சி­பெறும் முஸ்­லிம்­களின் அர­சியல், பொரு­ளா­தார, வர்த்­தக, வாணிப பலத்தை அழிப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். வெளி­நா­டு­களில் இயங்கும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­க­ளோடு இணைந்து இலங்­கையை அழிக்க திட்­ட­மி­டு­கின்­றனர், இலங்­கையில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை பரப்­பு­கின்­றனர், இலங்­கையை இஸ்­லா­மிய நாடாக மாற்­றி­ய­மைக்க திட்­ட­மிட்­டுள்­ளனர் என்ற அடிப்­ப­டையில் பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து முஸ்­லிம்­களை அடக்­கி­யாள முற்­பட்டு வரு­கின்­றனர்.

இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பொரு­ளா­தார ரீதி­யாக பலம்­பெ­று­வதை முடக்கி அர­சியல் உரி­மை­களை அனு­ப­விப்­பதை தடுப்­பதும் முஸ்­லிம்­களை அச்­சு­றுத்தி அடி­மை­க­ளாக நடத்­து­வதும் இவர்­க­ளது திட்­டங்­க­ளாகும். 2015 ஆம் ஆண்டு பத­விக்கு வந்த ஐ.தே.மு. அர­சாங்கம் நாட்டை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக இன நல்­லி­ணக்க பொறி­மு­றை­யொன்றை அறி­முகம் செய்­தது. ஆனாலும், முஸ்­லிம்­க­ளுக்கு இந்த நல்­லி­ணக்­கம நட­வ­டிக்கை எந்­த­வி­த­மான பிர­தி­ப­ல­னையும் கொண்டு வரு­வ­தாக இருக்­க­வில்லை.

முஸ்­லிம்கள் 17 ஆம் நூற்­றாண்டு முதல் இந்­நாட்டில் ஒல்­லாந்­தர்­க­ளாலும் ஆங்­கி­லே­யர்­க­ளாலும் வழங்­கப்­பட்ட பல­வி­த­மான உரி­மை­களை இன்றும் அனு­ப­வித்து வரு­கின்­றனர். முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்­லா­மிய மத விட­யங்­க­ளுக்­கான பூரண சுதந்­திரம் என்­பன அவற்றுள் சில­வாகும். 19 ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் இவ்­வாறு வழங்­கப்­பட்ட அர­சியல், பெரு­ளா­தார, மத, கலா­சார உரி­மைகள் உள்­ளன. அவற்றுள் பிர­தா­ன­மான ஒன்றே சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்­க­ளுக்குப் பெரும்­பான்மை இன அர­சி­ய­லோடு கலந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற முடி­யா­ம­லி­ருந்த நிலை­மைக்கு முடி­வு­கட்டும் வகையில் 12.5% என்ற வெட்டுப் புள்ளி முறை 5% வீதம் வரை குறைக்­கப்­பட்­ட­மை­யாகும். இவ்­வாறான முஸ்­லிம்கள் அர­சியல், பொரு­ளா­தார மற்றும் மத அடிப்­ப­டையில் அனு­ப­விக்கும் உரி­மை­களை தேடிப் பூண்­டோடு அழித்து முஸ்லிம் சமூ­கத்தை நசுக்கும் நட­வ­டிக்­கைகள் திரை­ம­றைவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜே­தாச ராஜபக் ஷ மற்றும் அது­ர­லியே ரதன தேரர் போன்ற முஸ்லிம் விரோதிகள் அதற்கான அடித்தளத்தை இடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இலங்கை சுதந்திரமடைந்து 72 வருட நிறைவை பெருமையுடன் நினைவுகூரும் இந்த தருணத்தில் நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகம் இந்நாட்டிற்கு செய்துள்ள தியாகங்களை மறந்துவிடக் கூடாது. சுதந்திரத்தைப் பற்றி பேசுவதற்கு இந்நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு நிகராக முஸ்லிம் சமூகத்தையும் மதிக்க வேண்டும். துர்ப்பாக்கியம், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாத நிலையில் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரசைகள், ஒரே இலங்கையர் என்ற உணர்வோடு சுதந்திர தினத்தை பௌத்த மற்றும் தமிழ் மக்களோடு கைகோர்த்து கொண்டாடுகின்றோம்.

இலங்கைத் திருநாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக முஸ்லிம் தலைவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் வழங்கிய பங்களிப்பின் பெருமையை இன்றைய 72 ஆவது சுதந்திர தினம் நினைவுகூரப்படுகின்ற நிலையில் ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் பெருமையை உணர்ந்தவர்களாக முஸ்லிம்களையும் சமமான அந்தஸ்துள்ள இனமாக மதித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, சில்லறை இனவாத தேசப்பற்றாளர்களுக்கு ஆட்சியாளர்கள் விலைபோகக் கூடாது என்பதே முஸ்லிம் சமூகத்தின் ஒரே எதிர்பார்ப்பாகும். முஸ்லிம் சமூகத்தை சப்பாத்துக் காலால் ஏறி மிதித்து நசுக்கும் நிலை தொடருமானால் அது உண்மையான யதார்த்தமான சுதந்திரத்தின் அடையாளமென்று கூறமுடியாது.

  • எம்.எஸ். அமீர் ஹுசைன்

Leave A Reply

Your email address will not be published.