மௌட்டீகக் கொள்கைகளால் இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து

0 896

மலே­சியப் பிர­தமர் கலா­நிதி மஹதிர் முகம்மத் சர்­வ­தேச இஸ்­லா­மிய கருத்­த­ரங்­கொன்றில் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார். “இஸ்­லாத்தின் எதிரி முஸ்­லிம்­க­ளுக்குள் தான் இருக்­கிறான்”. எதி­ரிகள் பலர் இருக்­கலாம். அவர்­களுள் அண்­மைக்­கா­லங்­களில் இலங்­கையில் இஸ்­லாத்தின் பெயரால் மெளட்டீகக் கொள்­கை­களை முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பரப்­பி­வரும் ஒரு சில மெள­ல­விகள் குறிப்­பி­டத்­தக்­க­வர்கள். இவர்கள் இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள பாலர் கல்வி முறை, பாட­சாலை கல்வி முறை, உயர்­கல்வி முறை என்­ப­வற்றை மேலைத்­தேய கல்­வி­முறை எனவும் யூதர்­களின் கல்வி முறை எனவும் கூறி கல்­வியில் முன்­னேறி  வரும் முஸ்லிம் சமூ­கத்தை அதை­ரி­யப்­ப­டுத்தும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். அத்­துடன் இலங்கை முஸ்­லிம்­களை கல்­வியில் பிற்­போக்­கு­டைய சமூ­க­மாகப் பின் தள்­ளவும் முயல்­கின்­றனர். அதேபோல் வைத்­தியம், சுகா­தா­ரம்­போன்ற சேவை­களைப் பயன்­ப­டுத்தி ஏனைய சமூ­கங்கள் அனு­ப­விக்கும் நலன்­க­ளுக்கு தடை­போட்டு முஸ்லிம் சமூ­கத்தை நோயா­ளி­க­ளாக மாற்றும் முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். மற்­றொரு குழு­வினர் குர்ஆன், ஹதீஸ் என்­ப­வற்­றுக்கு மொழி ரீதி­யாக நேர­டி­யாகப் பொருள் கொடுத்து பிழை­யான “ஷரீஆ” கொள்­கை­களை முன்­வைத்து புதிய கலா­சா­ரங்­களை அறி­முகம் செய்து பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் வெறுப்­பையும் இன­வெ­றி­யையும் தூண்டி வரு­கின்­றனர்.

பிறி­தொரு குழு­வினர் முஸ்­லிம்­க­ளது தனித்­துவம் என்­பதை  ஊதிப்­பெ­ருப்­பித்து  முஸ்­லிம்­களை ஏனைய சமூ­கங்­க­ளி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்தும் முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் தஃவா என்ற பெயரில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் இருப்­புக்கு சவால் விடு­க்கின்­றனர். உண்­மையில் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமு­தா­யத்தை புதை குழியை நோக்­கியே அழைத்துச் செல்­கின்­றனர்.

1945ஆம் ஆண்டு சோல்­பரி ஆணைக்­குழு தனது அறிக்­கையில் இலங்­கையில் கல்­வியில் பின்­தங்­கிய இரு இனங்­க­ளாக கண்டிச் சிங்­க­ளவர், இலங்கை முஸ்­லிம்கள் என அடை­யாளம் காட்­டி­யது. ஆங்­கி­லே­யரின் ஆட்­சிக்­கா­லத்தில் சுமார் 200 வரு­டங்­க­ளாக முஸ்­லிம்கள் மேலைத்­தேய ஆங்­கிலக் கல்­வியை புறக்­க­ணித்­தனர். அக்­கல்­வி­முறை கிறிஸ்­தவ சம­யத்­துக்கு மத மாற்றம் செய்யும் நோக்­கு­டை­ய­தாக  அமைந்­ததால் அப்­போ­தைய சூழ்­நி­லையில் இப்­பு­றக்­க­ணிப்பு நியா­ய­மா­னது. ஆனால் பிற்­கா­லங்­களில் மனச்­சாட்சி சட்­டகம் (Conscience law) மூலம் அரச பாட­சா­லை­களில் ஒவ்­வொரு சம­யத்தை சேர்ந்த பிள்­ளை­களும் தமது சம­யத்தை கற்க அனு­மதி வழங்­கப்­பட்­ட­துடன் பெற்­றோர்­களின் விருப்­ப­மின்றி கிறிஸ்­தவ சம­யத்தை கற்­பிப்­பதும் தவிர்க்­கப்­பட்­டது.

இதனால் பெளத்த, ஹிந்து மக்­களைப் போலவே முஸ்­லிம்­களும் கல்­வியில் சிறிது அக்­கறை காட்­டத்­து­வங்­கினர். அக்­கா­லத்தில் நாடு முழு­வதும் தேசி­யக்­கல்வி முறை ஒன்று தோற்றம் பெற்­றது. அநகா­ரிக தர்­ம­பால போன்றோர் பெளத்த பாட­சா­லை­க­ளையும் ஆறு­மு­க­நா­வலர் போன்றோர் ஹிந்து பாட­சா­லை­க­ளையும் சித்தி லெப்பை முகம்­ம­திய பாட­சா­லை­களை (முஸ்லிம் பாட­சா­லைகள்) அமைப்­ப­தற்கும் முன்­வந்­தனர்.

இருப்­பினும் முஸ்­லிம்கள் கல்­வியில் காட்­டிய அக்­க­றை­போ­த­வில்லை. ஆகவே எம்.டி அப்­துல்­காதர், அப்துல் ரஹ்மான், T.B ஜாயா போன்றோர் முஸ்­லிம்­க­ளுக்­கென பாட­சா­லை­களை ஆரம்­பித்­தனர். அதனைத் தொடர்ந்து சேர் ராசிக் பரித், பதி­யுதீன் மஹ்மூத், ஏ.எம்.ஏ அசீஸ், சாபி மரிக்கார் போன்ற தலை­வர்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் கல்­வியில் விழிப்­பு­ணர்ச்­சியை எற்­ப­டுத்­து­வ­தற்கு பெரிதும் உழைத்­தனர்.

இப்­பெ­ரி­யார்­களின் தியா­கத்தால் நாம் இன்று கல்­வியில் முன்­னேறி வரு­கின்றோம். ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒப்­பீடு செய்­யும்­போது  இது திருப்தி தரு­வ­தாக இல்லை. க.பொ.த. சாதா­ரண / உயர் தர­ப­ரீட்­சை­களில் சில முஸ்லிம் பிள்­ளைகள் நல்ல பெறு­பே­று­களைப்  பெற்­றுள்­ள­போதும் க.பொ.த சாதா­ரணப் பரீட்­சையில் கணிதம், விஞ்­ஞானம், தொழி­நுட்பம், ஆங்­கில மொழி, முதல் மொழி என்­ப­வற்றில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­களில் முஸ்லிம் மாண­வர்­களின் விகி­தா­சாரம் அதி­க­மாகக் காணப்­ப­டு­கி­றது.

அதேபோல் மருத்­துவம், பொறி­யியல், தொழி­நுட்பம், விஞ்­ஞா­னத்­து­றை­க­ளுக்கு  பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறும் முஸ்லிம் மாண­வர்கள் குறை­வா­கவே உள்­ளனர். உதா­ர­ண­மாக 1946 ஆம் ஆண்டு மருத்­து­வத்­து­றையில் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்ற முஸ்லிம் மாணவர் 3.1% மாகும். எழு­பது வரு­டங்­க­ளுக்கு பின்பும் மருத்­துவ பீட அனு­மதி இன்னும் 3% க்கு சற்று அதி­க­மா­கவே இருக்­கின்­றது. மாவட்ட கோட்டா முறை கார­ண­மா­கவே இந்த அதி­க­ரிப்பு ஏற்­பட்­டது. பொறி­யியல்,  விஞ்­ஞானம், தொழிநுட்பம், கட்­ட­டக்­கலை போன்ற துறை­க­ளுக்கு முஸ்லிம் மாணவர் அனு­மதி இன்னும் சனத்­தொகை விகி­தா­சா­ரத்தை (7.8%) எட்­ட­வில்லை. தொழி­நுட்பக் கல்­லூ­ரி­க­ளுக்கு அனு­ம­தி­பெறும் முஸ்லிம் மாணவர் தொகை கிட்­டத்­தட்ட 2% கீழ் காணப்­ப­டு­கி­றது.

தற்­போ­தைய அரசு பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை இரண்டு மடங்­காக அதி­க­ரிக்கத் திட்­ட­மிட்­டுள்­ளது. அதேபோல் விஞ்­ஞானம், தொழி­நுட்பம், தன்­னி­யக்க பொறி­யியல் என்­ப­வற்­றுக்கு கூடிய முக்­கி­ய­ம­ளிக்­க­வுள்­ளது. இவ்­வா­றான சூழலில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் தொழிநுட்பக் கல்­லூ­ரி­க­ளுக்கும் அனு­மதி பெறும் முஸ்லிம் மாணவர் தொகையை இரட்­டிப்­பாக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு முஸ்லிம் சமூகம் ஆயத்­த­மா­க­வுள்­ளதா? அதற்கு எவ்­வா­றான திட்­டங்­க­ளளை வகுக்க வேண்டும் என்ற  இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு நாம் தள்­ளப்­பட்­டுள்ள நிலையில் உலகக் கல்­வியை மேலைத்­தேய கல்வி, யூதர்­களின் கல்வி முறை என மெளட்டீக மெள­ல­விகள் பிர­சாரம்  செய்­வது வேதனை தரும் ஒரு செயற்­பா­டா­க­வுள்­ளது. இந்த பிற்­போக்கு சக்­தி­களை இனம் கண்டு தண்­டிப்­பது அல்­லது தடுப்­பது எப்­படி என்­பது பற்றி முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் ஆழ­மாக சிந்­திக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

மலை­நாட்டை சேர்ந்த மெளட்டீகக் கொள்­கை­யு­டைய ஒரு மெள­லவி ‘‘பாட­சாலைக் கல்வி சைத்­தா­னு­டைய கல்வி, அதன் கலைத் திட்டம் யூதர்­களால் தயா­ரிக்­கப்­பட்­டது. ஆகவே பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்ப வேண்டாம்’’ என குத்­பாக்­களில் பகி­ரங்­க­மாகக் கூறு­கின்றார். ஒளிப்­ப­திவு நாடாக்கள்  மூலம் பிர­சாரம் செய்­கின்­றனர். எமது பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலைக் கல்வி அவ­சி­ய­மில்லை. மத்­ர­ஸாக்­க­ளுக்கு பிள்­ளை­களை அனுப்­புங்கள் எனவும் பாமர முஸ்லிம் பெற்­றோர்­களை திசை திருப்ப முனை­கின்­றனர்.

இஸ்லாம் மார்க்க கல்­வியை கற்­கு­மாறே வலி­யு­றுத்­து­கி­றது என பிழை­யான விளக்கம் கொடுக்­கின்­றனர். கிராமப் புறங்­களில் வாழும் முஸ்லிம் பெற்றோர் இதனால் அதை­ரி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். மூதூரில் செங்கல் தொழிற்­சா­லையில் வேலை செய்யும் ஒரு தகப்பன் இவ்­வாண்டு தனது மகளை மருத்­துவ பீடத்­துக்கு அனுப்ப முயல்­கிறார். இந்த அள­வுக்கு கல்­வியில் விழிப்­பு­ணர்ச்சி முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்டு வரும் சூழலில் தான் இந்த மெளட்டீக மெள­ல­வி­களின் பிர­சாரம் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது.

இஸ்­லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரி­வுகள் கிடை­யாது. இஸ்லாம் முழு­மை­யான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழு­மை­யான ஒரு கல்வி முறையின் பெரு­மை­யையும் அவ­சி­யத்­தையும் பேசு­கி­றது. இஸ்­லாத்தின் ஆரம்ப காலம் முதல் 13 ஆம் நூற்­றாண்டின் இறுதி வரை மார்க்கக் கல்வி கற்ற முஸ்­லிம்கள் விஞ்­ஞானம், வானியல், புவி­யியல், கணிதம், தொழில்­நுட்பம், வைத்­தியம், கட்­டி­டக்­கலை, பொறி­யியல் போன்ற துறை­க­ளுக்கு பெரும் பங்­க­ளிப்­பு­களைச் செய்­துள்­ளனர். இன்றுகூட ‘அபீ­சினா’ என்ற முஸ்லிம் அறிஞர் எழு­திய வைத்­தியம் தொடர்­பான நூல் ஆங்­கிலம், ஹீப்ரு ஆகிய மொழி­க­ளுக்கு பெயர்க்­கப்­பட்டு மூல­நூ­லாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

14 ஆம் நூற்­றாண்­டுக்குப் பின் முஸ்­லிம்கள் மேலைத்­தேய ஆட்­சிக்­குட்­பட்­டதால் மத­மாற்­றத்­துக்கு அஞ்சி மேலைத்­தேயக் கல்­வியை அவர்கள் புறக்­க­ணித்து  மார்க்கக் கல்­வியை மட்டும் வழங்கும் மத்­ர­ஸாக்­களை அமைத்­தனர். இப்­போது இச்­சூழ்­நிலை மாறி கல்­வியில் தாரா­ளத்­தன்­மையும் சுதந்­தி­ரத்­தன்­மையும் ஏற்­பட்­டுள்­ளன. ஆகவே, மத்­ர­ஸாக்கள் பழைய அமைப்­பிலே இயங்க வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. மலே­சியா, இந்­தோ­னே­சியா, புரூணை மற்றும் மத்­திய கிழக்கு நாடுகள் இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கங்­களை அமைத்து வரு­கின்­றன.

காலி மாவட்­டத்தில் பெளத்த பிரி­வே­னாவில் கற்கும் ஒரு மாணவன் விஞ்­ஞான கண்­டு­பி­டிப்பு ஒன்றை செய்­துள்ளார். அதபோல் பாகிஸ்­தானில் தக்­சிலா பல்­க­லைக்­க­ழகம் நடத்­திய தானி­யங்கும் விஞ்­ஞானம்/ இயந்­திர மனிதன் தொடர்­பான போட்­டியில் ஜாமியா பைத்துஸ் ஸலாம் என்ற மத்­ர­ஸாவைச் சேர்ந்த மாணவர் இவ்­வாண்டு முத­லிடம் பெற்­றுள்ளார். மலே­சி­யாவில் இஸ்­லா­மியக் கல்வி பெற்ற விஞ்­ஞா­னிகள் 1000 க்கு அதி­க­மான கண்­டு­பி­டிப்­புக்­களைச் செய்­துள்­ளனர். நமது மத்­ரஸா மாணவர் விஞ்­ஞானம் கற்க முடி­யா­த­வர்­களோ, மந்த புத்­தி­யுள்­ள­வர்­களோ அல்­லது சிந்­திக்கத் தெரி­யா­த­வர்­களோ அல்லர். அவர்­க­ளுக்கு மத்­ர­சாக்­களில் கொடுக்கும் கல்வி தான் இந்த நிலைக்கு அவர்­களை மாற்­றி­யுள்­ளது. ஆகவே மெளட்டீக மெள­ல­விகள் ஒரு சில­ரைப்­பற்­றிய கலந்­து­ரை­யா­டலில் இவர்கள் எங்­கி­ருந்து வெளி­யே­று­கின்­றனர் என்­ப­தையும் சேர்த்துக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

சென்ற வாரம், தெஹி­வ­ளையில் உள்ள ஒரு பள்­ளிக்கு ஜும்ஆவுக்கு சென்­றி­ருந்தேன். அங்கு உரை­யாற்­றிய மெள­லவி பின்­வ­ரு­மாறு கூறினார். பாலர் கல்­வியின் முன்­னோடி ‘மரியா மொண்­டி­சூரி அம்­மையார்’ ஒரு யூதப்­பெண்­மணி எனக்­கூறி, நடை­மு­றை­யி­லுள்ள பாலர் கல்வி முறை­பற்றி கடு­மை­யான விமர்­ச­னத்தை முன்­வைத்தார். ஒரு மனிதன் தனது அறி­யாமை பற்றி அறி­யாமல் இருப்­பது தான் உலகில் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் கார­ண­மாகும். இன்று உலகில் முஸ்­லிம்கள் வாழ்க்­கைக்கு உப­யோ­கிக்கும் அத்­தனை கரு­வி­களும், துணைச்­சா­த­னங்­களும் வாக­னங்­களும் யூதர்­க­ளதும் முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் கண்­டு­பி­டிப்­பு­களே. நமது மெள­ல­வி­க­ளுக்­குள்ள தனிச்­சி­றப்பு, யாரா­வது ஒரு விஞ்­ஞானி ஒன்றை கண்­டு­பி­டித்த பின் இது ஆயி­ரத்து ஐநூறு வரு­டங்­க­ளுக்கு முன் குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதே என வெட்கம் இன்றி பெருமை பேசு­கின்­றனர். சென்ற ஐநூறு வரு­டங்­க­ளாக முஸ்­லிம்­களோ, முஸ்லிம் நாடு­களோ எதையும் கண்­டு­பி­டித்­தார்­களா என்­ப­தற்கு ஆதா­ரங்கள் மிகக்­கு­றை­வாக உள்­ளன. அல்­குர்ஆன் 500 க்கு சற்று கூடிய இடங்­க­ளிலே ஏவல் விலக்கல் பற்றி குறிப்­பி­டு­கி­றது. 1000 க்கும் மேற்­பட்ட இடங்­களில் உல­கையும், உலகில் வாழும் ஜீவ­ரா­சி­களைப் பற்­றியும் சிந்­திக்­கு­மாறு அறை கூவல் விடுக்­கி­றது. இது எப்­போது எமது காது­களில் விழப்­போ­கி­றதோ எப்­போது நாம் சிந்­திக்கப் போகி­றோமோ தெரி­யாது.

கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த ஒரு மெள­லவி, பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு கட்­டாய கருத்­தடை செய்­யப்­ப­டு­கி­றது எனவும், உங்கள் பிள்­ளை­களை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வேண்­டுகோள் விடுத்தார். இந்த செய்தி அறிந்­ததும் நான் பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர்கள் பல­ருடன் தொடர்பு கொண்டு விசா­ரித்தேன். அது ஒரு கட்­டுக்­கதை என்­பது தெரிய வந்த பின் அந்த மெள­லவி மெள­ன­மா­கி­விட்டார். திரும்­பவும் ஒரு சில மாதங்­க­ளுக்கு பின் புத்­த­ளத்தைச் சேர்ந்த மற்­றொரு மெள­லவி இதே கதையைக் கூறி வரு­கிறார். கருத்­தடை, கருச்­சி­தைவு என்­பன இலங்­கையில் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் ஏனைய சமூ­கங்கள் மத்­தி­யிலும் நடை­பெற்று வரு­கின்­றன. அதற்கு தனிப்­பட்ட கார­ணங்கள், சமூகக் கார­ணங்கள் இருக்­கலாம். இதை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி முஸ்லிம் பெண் பிள்­ளைகள் பல்­க­லைக்­க­ழகம் செல்­வதை ஏன் இவர்கள் தடுக்க வேண்டும். இவர்­க­ளது உள்­நோக்­கங்­களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில மெளட்டீக மெள­ல­விகள் மற்­றொரு புர­ளி­யையும் கிளப்­பி­விட்­டுள்­ளனர். நோய்த் தடுப்பு ஊசி­களில் ஹரா­மான திர­வங்கள்/ இர­சா­யனப் பொருட்கள் கலக்­கப்­ப­டு­வதால் தடுப்­பூசி ஏற்­று­வது மார்க்­கத்­துக்கு முர­ணான செயல் எனக் கூறி­வ­ரு­கின்­றனர். இதனால் பல முஸ்லிம் பெற்றோர் தமது குழந்­தை­க­ளுக்கு முக்­கூட்டு தடுப்­பூசி ஏற்­று­வ­தையும் போலியோ மருந்து கொடுப்­ப­தையும் தவிர்த்து வரு­கின்­றனர். இதனால் அதி­க­மான முஸ்லிம் சிறு­வர்கள் நோய்­க­ளுக்கு உட்­பட்டு வரு­வ­தாக அண்­மைக்­கால தர­வுகள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. இது தொடர்­பான ஒரு பகுப்­பாய்வை ஒரு முஸ்லிம் நிறு­வனம் நடத்­தினால் இதனை உறு­திப்­ப­டுத்த முடியும். மேலை நாடு­க­ளி­லி­ருந்து/ வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் மருந்து வகை­களை நாம் கண்­மூ­டித்­த­ன­மாக உப­யோ­கிக்­கக்­கூ­டாது. ஹரா­மான திர­வங்கள் அவற்றில் சேர்க்­கப்­பட்­டுள்­ளதா என்­பதில் நாம் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். இதனை அரை­கு­றை­யாக மார்க்கம் கற்­ற­வர்­களால் தீர்­மா­னிக்க முடி­யாது. முஸ்லிம் நாடு­க­ளி­லுள்ள பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடங்கள் இது பற்றி  பரி­சீ­லனை செய்து பத்­வாக்­களை வழங்­கி­யுள்­ளன. இடையில் உள்ளோர் நுனிப்புல் மேய வேண்­டிய அவ­சியம் இல்லை.

பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த மகப்­பேற்று வைத்­தியர் ஒருவர் மற்­றொரு திடுக்­கிடும் தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார். மகப்­பேற்­றுக்­காக கொழும்பு காசல், சொய்சா வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சில முஸ்லிம் கர்ப்­பி­ணிகள் இறுதிக் கட்­டத்­திலே அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாயும் மிகுந்த சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே தாயி­னதும் பிள்­ளை­யி­னதும் உயி­ரைக்­காப்­பாற்ற வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். நீங்கள் ஏன் உரிய காலத்­துக்கு முன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திப்­ப­தில்லை எனக் கேட்­ட­போது எங்­க­ளது மார்க்­கத்­தின்­படி மனை­வியின் மகப்­பேற்றை கண­வனே கவ­னிக்க வேண்டும். முடி­யாத கட்­டத்­தில்தான் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்க வேண்டும் என சில கண­வன்கள் குறிப்­பிட்­ட­தாக அவர் தகவல் வெளி­யிட்­டி­ருந்தார். இவர்­க­ளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுத்­த­வர்கள் யார்?

அனு­ரா­த­பு­ரத்தில் முஸ்லிம் குடும்­ப­மொன்றில் வீட்டில் பிர­சவம் நடந்­த­போது உயிர் இழந்த பிள்ளை பற்­றிய விசா­ர­ணைகள் நடை­பெ­று­கி­ன்றன. சென்ற வாரம் பத்­தி­ரி­கை­க­ளிலும் பதிவு நாடாக்கள் மூலமும் செய்­திகள் வெளி­வந்­தன. வீட்டில் பிர­சவம் நடை­பெ­று­வது புதிய விட­ய­மல்ல. சென்ற 50 வரு­டங்­க­ளுக்கு முன் என­துதாய் கூட எல்லா பிள்­ளை­க­ளையும் மருத்­துவ தாதியின் உத­வி­யுடன் வீட்­டி­லேதான் பிர­ச­வித்தார். இன்னும் சில கிரா­மப்­பு­றங்­களில்  இது நடை­பெ­று­கி­றது. தற்­போது வைத்­திய வச­திகள் பெரு­கி­யுள்­ளன. வைத்­தி­யர்கள் அதி­க­மாக உள்­ளனர். மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே ஏனைய சமூ­கத்தைச் சேர்ந்தோர் அனை­வரும் இந்த இல­வச வச­தி­களைப் பயன்­ப­டுத்தி வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கே குழந்தை பிர­ச­வத்­துக்­காக செல்­கின்­றனர். ஆனால் இன்னும் சில முஸ்­லிம்கள் அந்­நிய ஆட­வ­ருக்கு வைத்­தி­ய­ருக்கு தமது உடலை காட்­டு­வது பாவ­மான செயல் எனக் கூறி வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு செல்­வ­தில்லை. இதனால் பல தாய், சேய் மர­ணங்கள் நிகழ்ந்­துள்­ளன. இது எண்ணிச் செய்­யாத கொலை­யாக இருந்­தாலும் சட்ட ரீதியில் தண்­டிக்­கப்­பட வேண்­டிய குற்­ற­மாகும்.

ஆகவே மார்க்கம் சொல்லிக் கொடுக்கும் மெள­ல­விகள், மார்க்­கத்தை மட்டும் சொல்­லாது நாட்­டி­லுள்ள வைத்­திய வச­திகள், இது தொடர்­பான சட்­டங்­க­ளையும் குத்­பாக்­களில் குறிப்­பிட வேண்டும். இவற்­றை­யெல்லாம் மத்­ரசாக் கலைத் திட்­டங்­களில் உள்­ள­டக்க வேண்டும். இல்­லா­விடில் உல­மாக்கள் சமூகப் பிரச்­சி­னைகள், நாட்டின் சட்­டங்கள் பற்றி பரா­மு­க­மாக இருந்து விடுவர். இதனால் பாமர முஸ்­லிம்கள் சட்­டத்தின் பிடியில் அகப்­பட்டு தண்­ட­னைக்­குள்­ளாக வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

சென்ற வாரம் திடுக்­கிடும் தக­வல்­களை தரும் மற்­றொரு காணொலி எனக்குக் கிடைத்­தது. அதில் ஒரு மெள­லவி, பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார் ‘‘டெங்கு நுளம்பு, டெங்கு காய்ச்சல் என இப்­போது அதிகம் பேசு­கின்­றனர். அதற்குப் பயப்­ப­டு­கின்­றனர். அப்­படி ஒரு நுளம்பு இருப்­ப­தாக எனக்குத் தெரி­ய­வில்லை. அல்லாஹ் எந்த உயிரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை’’ எனக் குறிப்பிடுகிறார். தற்போது உள்ளூராட்சி மன்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று ‘டெங்கு நுளம்பு‘ பெருகும் இடங்களைத் தேடி வருகின்றனர். அது கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றனர். இந்த மெளலவியின் விளக்கம் முஸ்லிம்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெறுவதற்கு வழிசெய்யும். இந்த ஒரு சில மெளலவிகளின் மெளட்டீகக் கொள்கைகள் முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மதிப்பதில்லை என்ற வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.

இந்த மெளட்டீகக் கருத்துக்களை வெளியிடும் ஒரு சில மெளலவிகள் பற்றி ஜம்இய்யத்துல் உலமா ஏன் மெளனம் சாதிக்கிறது. மெளட்டீகம் பேசும் மெளலவிகள் எல்லாம் ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்கள் அல்ல என்பதும் அதே நேரம் சிந்திக்கும் புத்திஜீவிகள் எல்லோரும் ஜம்இய்யத்துல் உலமாவில் அங்கம் வகிக்கவில்லை என்பதும் நாமறிந்தது. ஆகவே இந்த மெளட்டீகக் கருத்துக்களை வெளியிடும் மெளலவிகள் ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்கள் அல்ல என அலட்சியம் செய்யாது இதற்கு எதிராக குத்பா மேடைகளை பயன்படுத்துமாறு சகல பள்ளிவாசல் கதீப்மார்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். புத்திஜீவிகள் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.

குறிப்பு : இங்கு நான் ஒரு சில மௌட்டீக மௌலவிகளையே குறிப்பிடுகிறேன். இவர்களைப் பற்றியே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். பெரும்பான்மையான மௌலவிகள், உலமாக்கள் பரந்த பொதுச் சிந்தனையுடனே செயற்படுகின்றனர். மௌடீகம் பேசுபவர்களுடன் நான் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடத் தயாரில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.-Vidivelli

  • பேரா­சி­ரியர் எ.ஜி. ஹுசைன் இஸ்­மாயில்
    (முன்னாள் துணை­வேந்தர், தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம்)

Leave A Reply

Your email address will not be published.