பொதுத் தேர்தலில் பேசுபெருளாக்க முஸ்லிம் தலைமைகளே இலக்கு

வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பில் ரிஷாட் பதியுதீன்

0 1,335

இன்றை ஆட்சியாளர்கள் பயங்கரவாதத் தலைவன் சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான பீதியுணர்வை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் கிளப்பி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சஹ்ரானை அரசியல் ரீதியில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்குப் புதிய இலக்குகள் தேவைப்படுவதாகவும், அதற்கு தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இலக்கு வைப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் தங்களை ஆட்சியாளர்கள் இலக்கு வைப்பது மிகவும் தவறானது என்றும். தாங்கள் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்தவகையில் சஹ்ரானைப் போன்றவர்களல்ல என்றும் குறிப்பிட்டார்.

‘ஆட்சியாளர்கள் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றார்கள். அவர்கள் விரும்பியபடி அமைச்சரவையை அமைக்கலாம். அது அவர்களின் உரிமை. அவர்கள் எங்களையும் இலங்கையர்களாகக் கருதி சமத்துவமாக நடத்தினால் அதுவே எங்களுக்குப்போதும்’ என்று புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் எவருமே இல்லாதது குறித்துக் குறிப்பிடுகையில் அவர் கூறினார்.
ரிஷாட் பதியுதீன் வெளிநாட்டுச் செய்தியாளர் மத்தியில் மேலும் கூறியதாவது:
வில்பத்து வனத்தை நிர்மூலம் செய்த ஒரு நபராக என்னைக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். எனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வில்பத்து சரணாலயத்தின் எந்தவொரு பகுதியையும் நான் நிர்மூலம் செய்யவில்லை. 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகள் தங்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேறுவதற்கு 2009 இல் வாய்ப்பொன்றைப் பெற்றார்கள்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்துத் தோன்றிய சூழ்நிலைகளில் முஸ்லிம் அமைச்சர்களான நாம் பதவிகளை இராஜினாமா செய்தோம். பொலிஸாரும், இரகசியப் பொலிஸாரும் எனக்கும் அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்டறிய விசாரணைகளை நடத்தினார்கள். சஹ்ரானுடன் எனக்குத் தொடர்பிருக்கிறது என்று அதிகாரிகள் சந்தேகித்தால் என்மீது விசாரணை நடத்துங்கள் என்று வெளிப்படையாகவே நான் அறிவித்தேன். எனக்கெதிராக முறைப்பாடுகளைச் செய்வதற்கு இரகசியப் பொலிஸார் ஒருவார காலஅவகாசமும் வழங்கினர். இது சகல ஊடகங்களிலும் வெளிவந்தது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமையிலான மூன்று விசாரணைக்குழுக்களை பொலிஸ்மா அதிபர் நியமித்தார். உத்தியோகபூர்வ விசாரணைகளின் இறுதியில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகளுக்கும், எனக்குமிடையில் எந்தத் தொடர்புகளும் இருந்திருக்கவில்லை என்று நிரூபித்தன. இதுபற்றி சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டது.

புத்தளத்தில் வசிக்கும் அகதிகள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு மன்னாருக்கு பஸ்களில் பயணம் செய்தது குறித்து என்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் புத்தளத்தில் வாழ்ந்தாலும் அவர்களின் வாக்குப்பதிவு மன்னாரிலேயே இருக்கிறது. தாங்கள் வாக்களிப்பதற்கு வசதியாக உகந்த முறையில் வாக்காளர் இடாப்பில் தங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடமும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். இலங்கைப் போக்குவரத்துச்சபை பஸ்களில் அந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு கொண்டுசெல்ல என்னால் ஏற்பாடு செய்யமுடியுமா என்று நான் நிதியமைச்சரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வடமாகாண இடம்பெயர்ந்த அகதிகள் அமைப்பும், அதேபோன்ற போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்வதற்கு அனுமதி கேட்டு எமது அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்தது. அந்த அமைப்பு பஸ் கட்டணங்களைச் சேகரித்து எமது அமைச்சு கொடுத்திருந்த பணத்தை உகந்த முறையில் மீளச்செலுத்தியது. அதற்குரிய முழுச்செலவுமே செலுத்தப்பட்டுவிட்டதால் எமது அரசாங்கத்திற்கோ அல்லது அமைச்சிற்கோ செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்று நிலுவையாக எதுவுமில்லை. இந்தப் போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்திருக்காவிட்டால் 12 ஆயிரம் வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்ய இயலாமல் போயிருக்கும்.

தனது பிரஜைகள் அவர்களின் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு எப்போதுமே உதவவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். புத்தளம் அகதிகள் விடயத்தில் இலங்கை மக்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எந்தச்சுமையும் இல்லாமல் வாக்காளர்களைப் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு கொண்டுசெல்வதற்கான முழுச்செலவையும் வடமாகாண இடம்பெயர்ந்த அகதிகள் அமைப்புடன் இணைந்து நாம் பொறுப்பேற்றோம்.

நானொரு சிறுபான்மையினத்தின் அரசியல் தலைவராக இருக்கின்ற காரணத்தினால் தான் என்னை இலக்குவைத்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு என்னையும், எனது சமூகத்தையும் பகிரங்கமாக தொல்லைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள். நாட்டிலொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கே அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது.

நாட்டில் புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருக்கும்போது அவர்கள் இவ்வாறு செயற்படுவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். புதிய ஜனாதிபதிக்கும், அவரது உயர்ந்த அந்தப் பதவிக்கும் அவர்கள் எந்தவொரு மதிப்பையும் கொடுக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். எனவே இந்த ஆபத்தான போக்கு குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கவனத்திலெடுக்க வேண்டும் என்று அவசரமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.