அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்கும் வேலை நிறுத்த போராட்­டங்கள்

0 310

நாட­ளா­விய ரீதியில் ஒரே காலப் பகு­தியில் பல்­வேறு தரப்­பி­னர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­புகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்கள் என்­பன பொது மக்­களை மிகுந்த சிர­மத்தில் ஆழ்த்­தி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

நேற்­றைய தினம் அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் முன்­னெ­டுத்த 24 மணி நேர அடை­யாள வேலை­நி­றுத்தம் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் வைத்­திய சேவைகள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டன. அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் அவ­சர சிகிச்சைப் பிரி­வு­களைத் தவிர ஏனைய சேவைகள் இடம்­பெ­ற­வில்லை. இதனால் நோயா­ளிகள் பலரும் ஏமாற்­றத்­துடன் திரும்பிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அதே­போன்­றுதான் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் ஊழி­யர்­களும் நேற்று மூன்­றா­வது நாளாக வேலை­நி­றுத்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தனர். இதன் கார­ண­மாக பொதுப் போக்­கு­வ­ரத்தை நம்­பி­யி­ருக்கும் மில்­லியன் கணக்­கான மக்கள் பாதிப்­பு­களைச் சந்­தித்­தனர். அதி­க­ரித்த கேள்வி கார­ண­மாக தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர் பொது மக்­க­ளி­ட­மி­ருந்து வழ­மையை விட கூடுதல் கட்­ட­ணத்தை அற­விட்­ட­தா­கவும் தக­வல்கள் வந்­தன.
இதற்­கப்பால் பல்­க­லைக்­க­ழக கல்­விசார் மற்றும் கல்­வி­சாரா ஊழி­யர்கள் கடந்த 9 நாட்­க­ளாக வேலை­நி­றுத்­தத்தில் குதித்­துள்­ளனர். இதன் கார­ண­மாக சகல தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் இலட்சக் கணக்­கான மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும் அர­சாங்க நிர்­வாக சேவை அதி­கா­ரி­களும் அடை­யாள பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்தை இத்­தி­னங்­க­ளி­லேயே முன்­னெ­டுத்­தனர்.

இவற்­றுக்கு மேலாக கொழும்பில் கடந்த சில நாட்­க­ளாக தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. வேலை­யில்லாப் பட்­ட­தா­ரிகள் வழ­மை­போன்று கொழும்பின் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

நேற்­றைய தினம் பல்­க­லைக்­க­ழக கல்­வி­சாரா ஊழி­யர்கள் கொழும்பில் நடாத்­திய ஆர்ப்­பாட்­டத்­தினால் நகர மண்­டப பகு­தியில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. மேலும் அங்­க­வீ­ன­முற்ற படை­வீ­ரர்கள் நேற்று கொழும்பில் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்­தினால் காலி முகத்­திடல் சுற்­று­வட்­டா­ரத்தில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. அங்­க­வீ­ன­முற்ற படை­யி­னரின் ஆர்ப்­பாட்டம் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் பிர­தமர் அலு­வ­ல­கத்தைச் சென்­ற­டை­வ­தற்கு தடை விதித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலை­யி­லேயே இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரு­வதே இவ்­வா­றான பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பு­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாகும். தமது பிரச்­சி­னைகள் குறித்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்­க­ளி­னதும் கவ­னத்தை ஈர்க்கும் நோக்­கி­லேயே இவை இடம்­பெ­று­கின்­றன.

வைத்­தி­யர்கள், போக்­கு­வ­ரத்துச் சபை ஊழி­யர்கள், நிர்­வாக சேவை அதி­கா­ரிகள், பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்கள் என சக­லரும் சம்­பள உயர்வு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றனர் என்­பது உண்­மையே. இருப்­பினும் அது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­களை முன்­வைப்­ப­தற்கு பொது மக்­களை பாதிக்கும் வகை­யி­லான போராட்­டங்­க­ளையே தொடர்ந்தும் கைக்­கொள்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

இலங்­கையைப் பொறுத்­த­வரை நினைத்த நினைத்த நேரங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் இவ்­வா­றான போராட்­டங்கள் அப்­பாவிப் பொது மக்­க­ளையே பாதிக்­கின்­றன. பொது மக்­களின் அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்கு பாதிப்­பில்­லாத வகை­யி­லான போராட்­டங்­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் மேற்­படி சங்­கங்கள் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அடிக்­கடி விரி­வு­ரை­யா­ளர்கள், கல்­வி­சாரா ஊழி­யர்கள் மற்றும் மாண­வர்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்கள் மாண­வர்­களின் எதிர்­கா­லத்­தையே பாதிக்­கின்­றன. எனினும் இதனைத் தடுத்து நிறுத்தி இறுக்­க­மான விதி­களை கடைப்­பி­டிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அதற்கான ஆரம்பப் புள்ளியாக அமையுமா அல்லது சிக்கல்களை மேலும் தீவிரமாக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.