ஐ.நா. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காலதாமதப்படுத்தப்படக் கூடாது

0 309

ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 40 ஆவது கூட்­டத்­தொடர் தற்­போது ஜெனிவாவில் நடை­பெற்று வரு­கி­றது. அங்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்­பாக தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­துள்ளார்.

இலங்­கையில் இறு­தி­யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரி­மை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்­ற­மொன்­றினை அமைத்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார். அத்­தோடு இலங்கை மனித உரி­மைகள் நிலை­மையைக் கண்­கா­ணிப்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையின் அலு­வ­லகம் ஒன்­றினை கொழும்பில் நிறு­வ­வேண்டும். இதற்­கான அழைப்­பினை இலங்கை அர­சாங்கம் விடு­விக்க வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இந்த அலு­வ­லகம் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த ஆலோ­சனை வழங்­கு­வ­துடன் தொழி­நுட்ப உத­வி­க­ளையும் வழங்கும் எனவும் மனித உரி­மைகள் ஆணை­யாளர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

மனித உரி­மைகள் ஆணை­யாளர் விடுத்­துள்ள அறிக்­கையை அர­சாங்கம் ஒரு சாதா­ரண அறிக்­கை­யாக மதிப்­பிட்டு விமர்­ச­னங்­களை முன்­வைத்­துக்­கொண்­டி­ருக்கக் கூடாது. இலங்­கையில் இறு­தி­யுத்­தத்­தின்­போது இடம் பெற்ற மனித உரி­மைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டு மென்று ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் கடந்த 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டு­வந்­துள்­ளது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு இலங்­கையின் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை நடை­முறைப் படுத்­து­மாறு கோரப்­பட்­டது. 2013 இலும் இதே கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அன்­றைய அர­சாங்கம் இக்­கோ­ரிக்­கையில் கரி­சனை செலுத்­தா­ததன் கார­ண­மா­கவே சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான அழுத்­தங்கள் முன் எழுந்­தன. அப்­போ­தைய ஆணை­யாளர் அல் ஹுசைன் இலங்கை விவ­காரம் கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது அத்­தோடு சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளகப் பொறி­மு­றையின் அடிப்­ப­டையில் விசா­ரணை நடத்­து­மாறு கோரும் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணைக்கு நல்­லாட்சி அரசு இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­ட­தை­ய­டுத்து இவ்­வி­டயம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்டு கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­டது. ஆனால் நல்­லாட்சி அரசு இதில் அக்­கறை செலுத்­தா­ததால் மீண்டும் கலப்பு நீதி­மன்றம் மூலம் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை வலுப்­பெற்­றி­ருக்­கி­றது.

அர­சாங்­கங்கள் பொறுப்­புக்­கூறும் விட­யத்தை அலட்­சியம் செய்து வந்­த­தி­னா­லேயே இந்­நி­லைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மெனக் காத்­தி­ருக்­கி­றார்கள். தமிழ் மக்கள் மாத்­தி­ர­மல்ல முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இறுதி யுத்­தத்தின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் மாத்­தி­ர­மல்ல 1990 களில் வடக்­கி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் மனித உரி­மை­ மீறல்க­ளுக்கு தீர்வு காணப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளது மீள்­கு­டி­யேற்­றங்­க­ளுக்­கான பொறி­மு­றை­யையும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­குழு வடி­வ­மைக்க வேண்டும். இதற்­காக வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் சுமார் 3 தசாப்­தங்­க­ளாகக் காத்­தி­ருக்­கின்­றார்கள்.

பத­வி­யி­லி­ருந்த, பத­வி­யி­லி­ருக்கும் அர­சாங்­கங்கள் பொறுப்புக் கூறும் விட­யத்தில் அக்­கறை செலுத்தத் தவ­றி­ய­மையே மீண்டும் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணைக்­கான கோரிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. எனவே அர­சாங்கம் தனது உறு­தி­மொ­ழியை தொடர்ந்தும் அலட்­சியம் செய்தால் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை எதிர்­நோக்க வேண்டி ஏற்­படும்.

இதேவேளை இலங்­கையின் பிரச்­சி­னை­களை இலங்­கையே தீர்த்துக் கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு ஐ.நா மனித உரி­மைப்­பே­ர­வை­யிடம் கோர­வுள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். ஜெனி­வா­வுக்கு மூன்­றுபேர் கொண்ட குழு­வொன்­றி­னையும் ஜனா­தி­பதி அனுப்பிவைக்கவுள்ளார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மாரப்பன தலைமையில் மற்றுமொரு குழுவும் ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

2015 இல் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை மேலும் காலஅவகாசம் கோரவுள்ளது. அரசாங்கம்  தொடர்ந்தும் காலஅவகாசம் கோரிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து பரிந்துரைகளை உடன் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.