ஹஜ் யாத்திரை – 2019 கோட்டா 3500 ஆக அதிகரிப்பு

உடன்படிக்கை கைச்சாத்து; மேலும் அதிகரித்து வழங்கவும் உறுதியளிப்பு

0 685

 

 

ஏ.ஆர்.ஏ.பரீல்

 

இலங்கைக்கான இவ்வருட ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரித்து வழங்க சவூதி ஹஜ் அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கும், சவூதி ஹஜ் அமைச்சருக்கும் இடையில்   இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதுதொடர்பில் சவூதி அரோபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும்  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அங்கிருந்து ‘விடிவெள்ளிக்கு’ தெரிவிக்கையில், இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப் பட்டிருந்தாலும் இலங்கைக்கு மேலும் அதிகமான கோட்டா வழங்கப்பட வேண்டுமென சவூதி ஹஜ் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இதற்கிணங்க சவூதி அரேபிய மன்னரின் அனுமதியை பெற்று ஹஜ் கோட்டாவை அதிகரித்து வழங்குவதாக உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முஸ்லிம் சனத்தொகைக்கு அமைவாக அண்மைக் காலத்தில் 2240 ஹஜ் கோட்டாவே வழங்கப்பட்டது. பின்பு அது  2800 ஆக அதிகரிக்கப்பட்டது. இதேவேளை இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா ஆரம்பத்தில் சவூதி அரேபியாவினால் 3000 ஆகவே உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று (நேற்று) நடைபெற்ற சவூதி ஹஜ் அமைச்சருடனான கலந்துரையாடலினை அடுத்தே ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரித்து வழங்கியமை தொடர்பில் சவூதி மன்னர் சல்மான்  மற்றும் இளவரசர் மெஹம்மட் பின் சல்மான் ஆகிய இருவருக்கும் இலங்கை அரசின் சார்பிலும், முஸ்லிம்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துள்ளேன் என்றார். சவூதி அரேபியா, ஜித்தாவில் இலங்கைக்கான ஹஜ் கோட்டா மற்றும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில்  சவூதி ஹஜ் அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம் மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதி ஜெஸீம் ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.