கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க முனையும் சக்திகளை தோற்கடிப்போம்

0 779

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்­கு­லைக்கும் வகையில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கிரான் பிர­தேச சபைக்­குட்­பட்ட கொம்­மா­துறை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனது காணியைப் பார்­வை­யிடச் சென்ற ஏறா­வூரைச் சேர்ந்த முஸ்லிம் வயோ­திபர் ஒரு­வரை, கிரான் பகு­தியைச் சேர்ந்த அரச காணி அதி­காரி ஒரு­வரும் அவ­ரோ­டி­ருந்த குழு­வி­னரும் கடு­மை­யாகத் தாக்­கி­யுள்­ளனர். அத­னோடு நிற்­காது அவ­ரது ஆடை­களைக் களைந்து நிர்­வா­ணப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இந்த சம்­ப­வத்தை வீடி­யோ­வாக பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­விட்­டுள்­ளனர்.

உண்­மையில் இது மிகவும் வெட்கித் தலை­கு­னிய வேண்­டிய சம்­ப­வ­மாகும். மாத்­தி­ர­மன்றி அப்­பட்­ட­மான மனித உரிமை மீற­லு­மாகும். அதுவும் அரச அதி­காரி ஒருவர் இதனை முன்­னின்று செயற்­ப­டுத்­தி­யி­ருப்­பது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும். இவ்­வா­றான சம்­ப­வங்கள் அண்­மைக்­கா­லங்­களில் இந்­தி­யாவில் பதி­வா­கி­யி­ருந்­தன. இன்று அதே­போன்ற மனித குலத்­துக்கு எதி­ரான வன்­மு­றைகள் இலங்­கை­யிலும் இடம்­பெ­று­வது வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­க­தாகும். என­வேதான் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சக­லரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.  இதேபோன்று மேலும் சில சம்பவங்கள் இப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.

இந்த சம்­ப­வங்­க­ளுக்­கி­டையே கிழக்கு மாகாண ஆளு­ந­ராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதைப் பயன்­ப­டுத்தி சில சக்­திகள் கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே முரண்­பாட்டைத் தோற்­று­விக்க முனை­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஹிஸ்­புல்­லாஹ்வின் நிய­ம­னத்­திற்கு எதி­ராக தமிழ் அர­சி­யல்­வா­திகள் சிலர் முன்­வைத்­துள்ள கருத்­துக்கள் இன­வா­தத்தை விதைப்­ப­தாக உள்­ளன. மாத்­தி­ர­மன்றி ஹிஸ்­புல்­லாஹ்வின் நிய­ம­னத்­திற்கு எதிர்ப்பு வெளி­யிடும் வகையில் இன்­றைய தினம் கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கு­மாறு அநா­ம­தேய துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் மூலம் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த செயற்­பா­டுகள் கிழக்கில் நிரந்­தர தமிழ் முஸ்லிம் இன முறு­க­லுக்கு இட்டுச் சென்று விடுமோ எனும் அச்­சத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது. வடக்கில் தமிழ் பிர­முகர் ஒரு­வரும் கிழக்கில் முஸ்லிம் பிர­முகர் ஒரு­வரும் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது இதுவே முதல் தட­வை­யாகும். அந்­த­வ­கையில் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தாகும். இதனை ஏற்றுக் கொண்டு இவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்து பய­ணிப்­பதே வெற்றி தரும். மாறாக இந்த நிய­ம­னங்­களை இன,மத ரீதி­யான கண்­ணோட்­டத்தில் பார்ப்­பது ஆராக்­கி­ய­மா­ன­தல்ல.

அந்­த­வ­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­கு­மி­டையே நேற்­றைய தினம் சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது. இதன்­போது கிழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னை­களை எவ்­வாறு ஒற்­று­மை­யாக தீர்ப்­பது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.இவ்­வா­றான சந்­திப்­புகள் தொடர்ந்தும் நிகழ்­வதன் மூல­மாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே நிலவும் வீணான சந்­தே­கங்­களைத் தீர்க்க முடியும். இன­வாத சக்­தி­களின் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை முறி­ய­டிக்க முடியும்.

என­வேதான் ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வை எதிர்த்து நிற்­ப­தையும் இன­வாதப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­தையும் விடுத்து, அவ­ருடன் இணைந்து கிழக்கு வாழ் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வர வேண்­டி­யதே தமிழ் அர­சியல் தலை­மை­களின் கடப்­பா­டாகும். மாறாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்­கு­லைக்க விரும்­பு­கின்ற உள்ளூர் மற்றும் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு துணைபோவது யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிழக்கை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.

அதேபோன்றுதான் இனவாத சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காது கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பாரும் சண்டைபிடிப்பது ஆரோக்கியமானதல்ல. இது விடயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது. மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.