நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்

0 789

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும்.

1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆனால் இதுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில் தான், இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய வேண்டும் எனும் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 18 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தப் பிரேரணையை முன்வைத்திருந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அபாயத்தை கடந்த 50 நாட்களில் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளதாக  அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் ”மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரிடம் சென்றால் என்ன நடக்கும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள்” என அன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ம.வி.முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கேள்வியெழுப்பியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

அந்த வகையில் ம.வி.முன்னணியின் இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் ஆதரவு தெரிவித்திருந்தன. இப் பிரேரணையின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் மீண்டும் அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போதே தீர்மானிக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக அன்று இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தார். ‘பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மட்டுமே தன்னால் மாற்ற முடியாது எனவும், ஏனைய அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் எனவும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன அன்று கூறிய வாசகம் இன்றும் பேசப்படுகிறது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரமுறைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்த கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களும், நிறைவேற்று அதிகாரத்தினால் ஏற்படும் பாதகங்களை சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நிறைவேற்றினார்.

இதன்பின்னர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என 1994ஆம் ஆண்டு முதல் இதுவரை பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வாக்குறுதியளித்தனர். சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச இருவரும் இரண்டு முறைகள் நீடித்த தமது பதவிக்காலங்களின்போதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோன்றுதான் 2015 இல் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவும் தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டு, 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அது ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக ரத்துச் செய்யவில்லை.

இறுதியாக அவர் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த காரியங்கள், இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் செய்யத் துணியாதவையாக இருந்தன. அதனால்தான் ”என்.எம். பெரேரா அன்று எழுப்பிய கேள்விக்கு இன்று மைத்திரிபால சிறசேன பதில் தந்துள்ளார்” என பலரும் கிண்டலடித்தனர். ஜனாதிபதியின் இந்த குளறுபடியான நிர்வாகம் மற்றும் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாத தீர்மானங்கள் என அனைத்திற்கும் காரணம் இந்த நிறைவேற்று அதிகார மமதையே ஆகும்.

எனவேதான் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் 2019 இல் பிரதான இடத்தை வகிக்க வேண்டும். இதற்கு சகல அரசியல் கட்சிகளும் தமது ஆதரவை வழங்க முன்வர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.