இராணுவம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே போராடியது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

0 626

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே எமது இராணுவம் போராடியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு தங்காலை ஹேனகடுவ விகாரையில் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, இராணுவத்தினருக்கும் எனக்கும் பாவங்களை மூடிமறைக்க வேண்டிய எவ்வித தேவைகளும் இல்லை. இராணுவத்தினர் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே நடவடிக்கை எடுத்தார்கள். இராணுவத்தினர் தொடர்பாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கருத்து தொடர்பாக நான் கவலையடைகிறேன்.  வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கு அமைய இராணுவத்திற்கோ எனக்கோ எந்த செயற்பாடுகளையும் மூடி மறைத்துக்கொள்ள வேண்டிய எவ்வித தேவைகளும் இல்லை. இதனை நான் மிகவும் தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைத்தையும் நாட்டிற்காகவும் இனத்திற்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவுமே பயங்கரவாதிகளுடன் போராடினோம். எமது போராட்டம் தமிழ் மக்களுக்கானது அல்ல. பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்த ஒரு சிலருக்கு இன்று சகல இராணுவத்தினரும் தவறு செய்தோராகக் காட்ட முயற்சிக்கிறார்கள். இவ்வாறான கருத்துக்கள் தெரிவிப்பதையிட்டு கவலையடைகின்றேன். நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மக்கள் சரியான தீர்மானம் எடுப்பார்கள். மக்களுக்கு தெரியும் தற்பொழுது இந்த அரசாங்கத்திற்கு எதனையும் செய்ய முடியாது என்று. இதனால் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.