கரையோர மாவட்டம் கரையுமா?

0 808
  • ஏ.ஜே.எம்.நிழாம்

1984 ஆம் ஆண்டு திம்­புவில் நிகழ்ந்த இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தையில் அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு மட்­டுமே பேசி­யது. ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை அழைக்­க­வில்லை. முன்பு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றிய அரசு, தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேசி­யது காலத்தின் கோலம்தான். ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­க­ளையே தவிர்த்த அரசு முஸ்­லிம்­களை தவிர்த்­ததில் வியப்பு இல்லை. அரசு தானாக முஸ்­லிம்­க­ளோடு பேசாமல் 1985 ஆம் ஆண்டு பெங்­க­ளூரில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு முஸ்­லிம்­களைப் பேச­வைத்­தது ஏன்? அரசு முஸ்­லிம்­களைத் தவிர்த்­து­விட்டு முஸ்­லிம்­களின் விட­யங்­களைத் தாரை­வார்த்து இந்­தி­யா­வுடன் 1987 ஆம் ஆண்டு ஒப்­பந்தம் செய்­தது ஏன்?

முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வரே எனும் கணிப்பா? உரிமை இல்­லா­ததால் உரிமை கோர மாட்­டார்கள் எனும் நினைப்பா? பூர்­வீ­க­மற்றோர் எனும் நினைப்பா? கொடுக்­கா­விட்­டாலும் சமா­ளிக்­கலாம் எனும் இளக்­கா­ரமா? பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரிமை கோராதோர் எனும் மதிப்­பீடா? இலங்கை முஸ்­லிம்கள் அரபுத் தந்­தை­களும் சிங்­களத் தாய்­மாரும் இணைந்த கலப்பு எனும் பழங்­க­தையால் உரு­வான மனப்­ப­திவா?

சிங்­கள மற்றும் தமிழ் மக்­க­ளுக்குப் பல மாகா­ணங்­களும் பல மாவட்­டங்­களும் இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­டமும் இல்லை. முஸ்­லிம்கள் தனித்­துவச் செறி­வோடு வாழும் சிறு பிர­தே­சமும் இல்லை. இது ஏன்? முஸ்­லிம்கள் பூர்­வீக சுதே­சிகள் இல்­லையா? அத­னால்தான் இன ரீதி­யி­லான அதி­காரப் பர­வலில் பிர­தேசப் பகிர்வும் முஸ்­லிம்­க­ளுக்கு அமைய வேண்டும் என்­பதை அஷ்ரப் வலி­யு­றுத்திக் கரை­யோர மாவட்டக் கோரிக்­கை­யையும், முஸ்லிம் அதி­கார அல­கையும் முன்­வைத்தார். இவற்றின் மூலமே இலங்கை முஸ்­லிம்­களின் பூர்­வீக வர­லாற்­று­ரி­மை­யையும், வாழ்­வா­தா­ரமும், சம உரி­மையும், சுய நிர்­ண­யமும், இறை­மையும், அடிப்­படை உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­படும். இன்றேல் முஸ்­லிம்கள் தேசிய உரி­மைக்­கான அங்­கீ­கா­ரத்தை இழந்து சொந்­த­மில்லா நாட்டில் அண்டி வாழும் ஒரு சிறு­கு­ழு­வி­ன­ரா­கவே வாழும் நிலை ஏற்­பட்டு விடும்.

அஷ்ரப் முதலில் வடக்கு – கிழக்கு – முஸ்லிம் பகு­தி­களை உள்­ள­டக்­கிய நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு தேவை என்றார். பிறகு கிழக்கில் மட்­டுமே நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அதி­கார அலகு தேவை என்றார். அதற்கு தென்­னிந்­திய புதுச்­சேரி மாகா­ணத்தை உவமை காட்­டினார். தமிழ்ப் பகு­தி­களை வடகிழக்கு எனவும் முஸ்லிம் பகு­தி­களை தென் கிழக்கு எனவும் அடை­யா­ளப்­ப­டுத்­தினார். பின்னர் தமிழ்த் தரப்­பி­ன­ரோடு எப்­ப­டியும் இணக்கம் கண்­டே­யாக வேண்டும் எனும் நோக்­கோடு சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­முனை ஆகிய தேர்தல் தொகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக முஸ்லிம் அதி­கார அலகைக் கோரினார். 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்­டு­வ­ரை­யிலும் அதா­வது அவர் மர­ணிக்­கும்­வரை முதற்­கோ­ரிக்­கை­யான கரை­யோர மாவட்டம் கிடைக்­க­வே­யில்லை. இறந்தும் தற்­போது 18 ஆண்­டுகள் கழி­கின்­றன. எனினும் அது கிடைக்­க­வே­யில்லை.

மாவட்ட ரீதியில் அரச செயற்­பா­டு­களை அமு­லாக்­கவே மாவட்ட சபைகள் இயங்­கு­கின்­றன. அதி­லும் கூட ஒரு முஸ்லிம் மாவட்ட சபை இன்னும் கிடைத்த பாடில்லை. திகா­ம­டுல்ல எனும் சிங்­கள மாவட்டம் முன்பு முஸ்­லிம்கள் மட்­டுமே செறி­வாக வாழ்ந்த பிர­தேசம் இது. திட்­ட­மிட்டு பெரும்­பான்மைச் சமூ­கத்தைக் குடி­ய­மர்த்தி அப­க­ரித்துக் கொண்­ட­தே­யாகும். இக்­கு­டி­யேற்­றங்கள் மேலும் தொடர்­வதால் தற்­போது கிழக்கில் மூன்றில் ஒரு பங்­கி­ன­ராகப் பெரு­கி­யி­ருக்கும் அவர்கள் எதிர்­கா­லத்தில் தமிழர் பூர்­வீக பிர­தே­சங்­களை இழப்­ப­தோடு முஸ்­லிம்கள் தேசிய அடை­யா­ளத்தை இழப்­பார்கள்.

இந்­நி­லையில் முஸ்லிம் தலை­வர்கள் செய­லற்­றி­ருந்­தார்கள். அத­னால்தான் ஜே. ஆரின் நிறை­வேற்று அதி­கா­ரத்­தாலும் வடக்கு கிழக்கு தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளாலும் முடக்­கப்­பட்ட கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்­கா­கவே அஷ்ரப் தனித்­துவ முஸ்­லிம் அர­சியல் கட்­சியை உரு­வாக்­கினார். கிழக்கு முஸ்­லிம்­களால் தனித்து நின்றும் மட்­டுமே போதிய வலி­மையைப் பெற்­று­விட முடி­யாது எனக்­க­ரு­தியே முழு நாட்­டுக்­கு­மாக அதை விஸ்­த­ரித்தார். அம்­பாறை மாவட்­டத்தில் மட்­டுமே முஸ்­லிம்கள் திர­ளாக வாழ்­வதால் அதை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கான சுய­நிர்­ணய உரி­மை­யையும் இறை­மை­யையும் வகுத்தார். இத­னால்தான் கிழக்கு, இலங்கை முஸ்­லிம்­களின் நெஞ்சு என்றால் அம்­பாறை மாவட்டம் இதயம் எனவும் உவ­மித்­தி­ருந்தார்.

இவற்றின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரது கரை­யோர மாவட்டக் கோரிக்­கையும் முஸ்லிம் அதி­கார அலகுக் கோரிக்­கையும் அமைந்­தி­ருந்­தன. நாடு முழுக்க வாழ்ந்த முஸ்­லிம்கள் இவற்றை அங்­கீ­க­ரித்­தி­ருந்­தனர். சிங்­க­ள­வ­ருக்கு 7 மாகா­ணங்­களும் தமி­ழ­ருக்கு 2 மாகா­ணங்­களும் இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு சிறு பிர­தே­சமும் இல்­லா­தி­ருந்­தது அநீதம். சிங்­க­ள­வ­ருக்கு 18 மாவட்­டங்­களும் தமி­ழ­ருக்கு 7 மாவட்­டங்­களும் இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­ட­மேனும் இல்­லா­ததும் அநீதம் என்­றெல்லாம் அஷ்ரப் கூறி­யதை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்­டது. முன்பு முஸ்­லிம்­க­ளுக்கு அமைய வேண்­டி­யி­ருந்த ஒரே­யொரு மாவட்­டம்தான் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களால் அப­க­ரிக்­கப்­பட்டு திகா­ம­டுல்ல எனப் பெய­ரி­டப்­பட்­டது எனவும் அவர் கூறி கரை­யோர மாவட்­டத்­துக்­கான அங்­கீ­கா­ரத்­தையும் கோரினார்.

ஆக, நிறை­வேற்று அதி­கா­ரத்­தாலும், ஆயுத முனைப்­பாலும், நிரா­யுத இலங்கை முஸ்­லிம்கள் மேலும் சித­றுண்டு போகா­தி­ருக்­கவே கிழக்கில் ஒரே பகு­தியில் பாது­காப்­போடு திர­ளாக வாழ்ந்து கொண்டு பூர்­வீ­கத்­தையும், வாழ்­வா­தா­ரத்­தையும், சுய நிர்­ண­யத்­தையும், இறை­மை­யையும் பாது­காத்­துக்­கொள்ள அஷ்ரப் முஸ்லிம் அதி­கார அலகுக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார்.

கிழக்கு வடக்­கோடு இணைக்­கப்­பட்டால் மட்­டுமே கிழக்கில் முஸ்லிம் அதி­கார அலகு எனவும் அவர் நிபந்­தனை விதித்­தி­ருந்தார். சிங்­களத் தரப்பு பிரித்­து­வைப்­ப­தையே வலி­யு­றுத்­து­கி­றது. கிழக்கு தனி­யாக இருந்தால் மத்­திய அரசின் ஆதிக்­கத்தை வலுப்­ப­டுத்­தலாம் எனவும் பேரினக் குடி­யேற்­றங்­களை முழு­மை­யாக நிறைவு படுத்­தலாம் எனவும் தமி­ழரின் வலுவைக் கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கலாம் எனவும் அது கரு­து­கி­றது.

தமிழ்த் தரப்பு இணைப்­பையே விரும்­பு­கி­றது. கிழக்கைத் தனி­யா­க­விட்டால் காலப் போக்கில் பேரி­ன­வாதம் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களின் மூலம் அதைக் கப­ளீ­கரம் செய்­து­விடும். பின்பு அங்­கி­ருந்து பெரு­வ­லிமை பெற்று வடக்கு கிழக்கில் ஆதிக்க இருப்பை ஆழ­மாக விதைக்கும். அதன் மூலம் தமி­ழரின் வாழ்­வா­தா­ரங்­க­ளையும் சுய நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் முடக்கும் என்­றெல்லாம் தமிழ்த் தரப்பு கரு­து­கி­றது.

இது “பூனைக்கு விளை­யாட்டு எலிக்கு சாவு” எனும் நிலை­யாகும். இரண்டு தரப்­பு­க­ளுமே முஸ்­லிம்­களைப் பற்றி நினைப்­ப­தாக இல்லை. ஒரு­வ­கையில் தமிழ்த் தரப்­புக்கே அஷ்­ரபின் கோரிக்கை வாய்ப்­பாக இருக்­கி­றது. கிழக்கில் சிறு பகு­தியை முஸ்லிம் அதி­கார அல­காக ஏற்று மற்ற பகுதி முழு­வ­தையும் வடக்­கோடு இணைத்துக் கொள்­ளலாம் அல்­லவா?

அதனால் பேரின திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை விட்டும், பேரின ஆதிக்­கத்தை விட்டும், சுய நிர்­ணய இறை­மைக்­கு­ரிய முட்­டுக்­கட்­டையை விட்டும் தமிழ்த் தரப்பு தன்னைக் காத்­துக்­கொள்ள முடியும். 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த திரு­ம­லையின் தமி­ழ­ரசுக் கட்சி மாநாட்­டிலும், அதே ஆண்டு நிகழ்ந்த பண்டா –செல்வா ஒப்­பந்­தத்­திலும் முஸ்லிம் அலகு குறிக்­கப்­பட்டே இருக்­கி­றது. இவை சமஷ்­டியை தமிழ்த் தரப்பு முன்­னெ­டுத்த கால கட்­ட­மாகும். சுய நிர்­ண­யத்­தையும் தனி இறை­மை­யையும் முன்­வைத்த 1976 ஆம் ஆண்டின் வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் பிறகே கிழக்கை முழு­மை­யா­கவே வடக்­கோடு இணைக்கும் முடிவு காணப்­பட்­டி­ருந்­தது.

1957 ஆம் ஆண்டின் திரு­மலை மாநாட்டில் கிழக்கை வடக்­கோடு இணைத்து முஸ்லிம் அலகு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­போதும் பண்டா – செல்வா ஒப்­பந்­தத்தில் வடக்கை வேறாக்கி கிழக்கில் தமிழ் அலகு, முஸ்லிம் அலகு சிங்­கள அலகு எனக் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் மூலம் சமஷ்டித் தீர்வில் முஸ்லிம் அலகு எனும் உறு­திப்­பாடு இருந்­தி­ருப்­பது புல­னா­கி­றது. இதே நிலைப்­பாடு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோட்­பாட்­டிலும் இருக்கும் எனக் கரு­தித்தான் அஷ்ரப் 1976 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மாநாட்­டிலும் கலந்­து­கொண்டு ஆத­ரவைத் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆரம்­பத்தில் அந்த நிலைப்­பாடு காணப்­பட்­ட­போதும் ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்­களை முடக்கி தமிழ் ஆயுதப் போரா­ளிக்­கு­ழுக்கள் தலை­தூக்­கி­யதும், வடக்கு கிழக்கு இணைப்பு வலி­யு­றுத்­தப்­பட்டு முஸ்லிம் அதி­கார அலகுக் கோரிக்கை மறுக்­கப்­பட்­டது. தமிழ் ஆயுதப் போரா­ளிகள் முஸ்­லிம்­களின் அர­சியல் முன்­னெ­டுப்­பு­க­ளையும் முடக்­கி­னார்கள். தடை­செய்­தார்கள். சிங்­களத் தரப்­புக்கு அரசு பூரண பாது­காப்பை வழங்­கி­யது. முஸ்­லிம்­க­ளுக்கு ஊர்­காவல் படையை மட்­டுமே வழங்­கி­யி­ருந்­தது.

அஷ்ரப் கரை­யோர மாவட்டக் கோரிக்­கையை முன்­வைத்து இற்­றைக்கு 30 வரு­டங்­க­ளா­கின்­றன. அதா­வது கால்­நூற்­றாண்டும் கழிந்­து­விட்­டது. எங்கே அது? அதை மீட்­டெ­டுக்க அஷ்­ரபின் அடிச்­சு­வட்டில் வந்­த­வர்­களால் ஏன் முடி­யாமற் போனது? யார் இதற்குத் தடை? யாழ். மாவட்­டத்­தி­லி­ருந்து கிளி­நொச்சி மாவட்­டமும் முல்­லைத்­தீவு மாவட்­டமும் அமைய முடி­யு­மாயின் ஏன் கிழக்கில் கரை­யோர மாவட்டம் அமைய முடி­யாது? முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் தனி மாவட்டம் இருக்­கக்­கூ­டாது என்­பது தானே இதற்­கான அர்த்தம்? சிங்­களப் பேரி­ன­வா­தமும் தமிழ்ப் பேரி­ன­வாத முமே இதற்­குக்­கா­ர­ண­மாயின் அதற்கு அடி­ப­ணி­யாது முஸ்­லிம்கள் தமது அடிப்­படை உரி­மை­களை முன்­னெ­டுத்­தாக வேண்டும்.

அண்­மையில் நிகழ்ந்த தொகுதி நிர்­ண­யத்­தின்­போது அப்­ப­கு­தி­யி­லுள்ள மூன்று முஸ்லிம் தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்தும் பல பகு­தி­களைப் பிரித்­தெ­டுத்து மூன்று சிங்­கள தேர்தல் தொகு­தி­களை உரு­வாக்க முயன்­றார்கள். இவர்­களின் திட்டம்? இலங்­கை­யி­லேயே முஸ்­லிம்கள் திர­ளாக வாழும் அப்­ப­கு­தியில் முஸ்­லிம்­களின் வலுவைக் குறைத்­து­வி­டு­வ­தே­யாகும். இது சாத்­தி­யப்­பட்­டி­ருக்­கு­மாயின் முழு இலங்­கை­யிலும் முஸ்­லிம்கள் ஒரே பிர­தே­சத்தில் திர­ளாக எங்கும் வாழாது சிதறும் நிலையே ஏற்­பட்­டி­ருக்கும். இலங்கை முஸ்­லிம்­களின் தொன்­மையும், சுய­நிர்ண இறை­மையும், வாழ்­வ­தா­ரமும் பாது­காப்பும் கேள்­விக்­கு­றி­யா­கவே ஆகி­யி­ருக்கும். அஷ்­ரபின் அடிச்­சு­வட்டில் வந்­த­வர்கள் இதை எதிர்க்­க­வில்லை என்­பதே பெரும் சோகம்.

யுத்தம் முடி­வுற்ற பிறகு பிரி­வினை கோர­மாட்டேன் என தமிழ்த் தரப்பு சார்­பாக சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்­றத்தில் சபதம் செய்­தி­ருந்தார். அவர் ஜன­நா­ய­கத்தை ஏற்றுக் கொண்டு தீவி­ர­வா­தத்தை எதிர்த்து ஒரே நாட்­டுக்குள் சமஷ்டித் தீர்வைப் பெற்று வாழவும் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கிறார். சமஷ்டி முறை யாப்­புக்கு முர­ணல்ல எனவும் உயர்­நீ­தி­மன்றம் பொருட்­கோடல் செய்­தி­ருக்­கி­றது. எனவே சமஷ்டி முறையில் தந்தை செல்வா உத்­த­ர­வா­தப்­ப­டுத்­திய முஸ்லிம் அலகை தமிழ்த் தரப்பு ஏற்றுக் கொள்­வதில் தடை­யில்லை.

*தம்மை விடவும் பெரிய சமூ­கத்­தி­ட­மி­ருந்து உரிமை கோரும் சமூகம் தம்மை விடவும் சிறிய சமூ­கத்­துக்கு அதை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தா­தி­ருப்­பது மனு­நீ­தி­யல்ல.

*ஓர் இனத்தை அதன் விருப்­புக்கு மாறாக வலுக்­கட்­டா­ய­மாக மறு இனம் ஆள முடி­யாது.

*சிறு­பான்­மைகள் தமக்குள் முரண்­பட்டு நின்றால் பேரி­ன­வா­தி­க­ளுக்கே அது வாய்ப்­பா­கி­விடும்.

*சிறு­பான்­மைகள் இணைந்து செயற்­பட்டால் பேரி­ன­வா­தத்தை முறி­ய­டிக்கும் வலி­மையை அதி­க­மாகப் பெறலாம்.

*சிறு­பான்­மைகள் முரண்­பட்டால் பேரி­ன­வாதம் பிரித்­தாளும் கொள்­கையைக் கையாண்டு தனது இலக்கைச் சுல­ப­மாக அடைந்து கொள்ளும்.

*ஒரே சம­யத்தில் இரு தரப்­பி­னரை எதி­ரி­க­ளாக்கிக் கொள்­ளாமல் இரு தரப்­பி­னரும் இணைந்து ஒரு தரப்­பாகத் தனித்து வைத்து எதிர்­கொள்ள வேண்டும்.

*ஒரு தரப்பை மறு­த­ரப்­போடு சேர்த்­து­வி­டாமல், இணக்­க­மாகும் தரப்பை இணைத்துக் கொண்டு மறு­த­ரப்பை எதிர்­கொள்ள வேண்டும்.

இன்றேல் தமி­ழரும் முஸ்­லிம்­களும் தமது அடிப்­படைத் தள­மான கிழக்கைப் பறிகொடுத்­து­ வி­டு­வார்கள். தற்­போ­தும்­கூட தமி­ழரும் முஸ்­லிம்­களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்­கி­ன­ராக அங்கு வாழ்ந்து வரு­கையில் மாவட்ட செய­லா­ள­ராக ஒரு பெரும்­பான்மைச் சமூ­கத்­த­வரே செயற்­ப­டு­கிறார். மாவட்ட ரீதியில் இரு பங்­கினர் தமிழ் மொழியைப் பேசு­கையில் சிங்­களம் பேசும் ஒரு பங்­கி­ன­ருக்­காக சிங்­கள மொழி பேசு­ப­வரே நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். தமிழ் பேசும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இரு பங்­கி­ன­ராக இருக்­கையில் ஏன் இந்த பார­பட்சம்? இது முழு கிழக்­கையும் சுல­ப­மாகப் பேரின மயப்­ப­டுத்தும் முனைப்போ?

எனவே தமி­ழரும் முஸ்­லிம்­களும் இணைந்து ஒரு முகப்­பட்டு செயற்­பட்­டா­லன்றி எதிர்­கா­லத்தில் அவர்­க­ளுக்கு கிழக்கில் ஒன்­றுமே எஞ்­சாது. பேரி­ன­வா­தத்தின் கப­ளீ­க­ரத்­தி­லி­ருந்து இரு­த­ரப்­பி­னரும் கிழக்கை மீட்­ப­தெனில் ஒன்­று­பட்­டே­யாக வேண்டும். கிழக்கு முஸ்­லிம்­களின் சுய விருப்­பு­ட­னன்றி ஒரு­போதும் கிழக்கு வடக்­கோடு இணைக்­கப்­படப் போவ­தில்லை.

வலுக்­கட்­டா­ய­மாக முஸ்­லிம்­களைப் பகைத்துக் கொண்டு ஒரு தலைப்­பட்­ச­மாக இணைத்­து­வி­டவும் முடி­யாது. முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களைக் கோராமல் ஆயுத முனையில் தமிழ்ப் போரா­ளிகள் கிழக்கை வடக்­கோடு இணை­ய­விட்­ட­தாலும் இந்­தியா அதற்கு உடந்­தை­யாக இருந்­த­தாலும் தமிழ் ஆயுதப் போரா­ளிகள் தற்­கா­லிக இணைப்பு காலத்தில் முஸ்­லிம்­க­ளோடு நடந்து கொண்ட முறை­க­ளா­லுமே இணைப்பை முஸ்­லிம்கள் வெறுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தமிழ் ­த­ரப்பு ஆயுத மனப் போக்­கிலும் தனி இறைமை நினைப்­பிலும் ஆயுதமற்ற சுயேச்சை மாற்றத்துக்குப் பின் இருப்பார்களாயின் முஸ்லிம்களின் இணக்கப்பாட்டை ஒரு போதும் பெற்றுக்கொள்ள முடியாது. தற்போதும் கூட தமிழ்தரப்பு முஸ்லிம்களைக் கலந்து கொள்ளாமல் தனது கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருக்கிறது. இதன் மூலம் முஸ்லிம் தரப்பும் தனது கோரிக்கைளைத் தனியாக அரசிடம் முன்வைக்கும் நிலைப்பாட்டை ஏற்படுத்திவிட்டது. முஸ்லிம் தரப்பும் கூட தமிழ்த் தரப்பை நம்பாது நேரடியாக அரசுடனேயே பேசிக் கொண்டிருக்கிறது. முத்தரப்பாக அரசுடன் சேர்ந்து இரு தரப்பும் பேசிக் கொள்ள வேண்டும்.

அரசு தமிழ்த் தரப்பினரோடும் முஸ்லிம் தரப்பினரோடும் இணக்கம் காணும் வகையிலும் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் அரசுடன் இணக்கம் காணும் வகையிலும் முடிவு அமையவும் வேண்டும். ஒருவரைத் தவிர முஸ்லிம் தனித்துவக்கட்சிகள் தனிச் சின்னத்தோடு பாராளுமன்றத்தில் இல்லை தமிழ் தனித்துவக் கட்சிகள் தனிச் சின்னதோடு இருக்கிறார்கள். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அமைச்சரவையிலும் இருக்கின்றன. தனித்துவத் தமிழ்க்கட்சி அமைச்சுப் பதவி வேண்டாம் எனக் கூறி  அரசின் இருப்பைத் தக்கவைத்து கோரிக்கைகளையே நிபந்தனைகளாக விதித்திருக்கிறது.

அவற்றில் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் மட்டுமே முஸ்லிம்களோடு இணக்கம் கண்டு முடிவு செய்ய வேண்டிய விடயமாகும். கரையோர மாவட்ட விடயத்தில் எவராலும் முரண்பட முடியாது. அதை மட்டுமாவது இப்போதைக்கு முஸ்லிம் தனித்துவக்கட்சிகள் உடனடியாகவே சாதிக்க வேண்டும். சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.