ஐந்தாவது தடவையாகவும் பிரதமரானார் ரணில்

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

0 997

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க ஐந்தாவது தடவையாகவும்  இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். அத்துடன் தேசிய அரசாங்கத்தின்  புதிய அமைச்சரவை இன்றைய தினம்  பதவியேற்கும் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 58 நாட்கள் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதாக கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை புதிய பிரதமராக நியமித்ததுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சரவையை அமைத்தார். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாகவும் வர்த்தமானி  மூலமாக ஜனாதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைக்கும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய பாராளுமன்ற கலைப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீது நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.  இந்நிலையில் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி ம.விமு.னரால் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும்  அவரது அமைச்சரவையும் பெரும்பான்மை இழப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து நவம்பர் 15 ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நிலையில் அவரது உரை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல கொண்டுவந்து அதன் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் அரசாங்கம் மீதான அழுத்தங்கள் அதிகரித்த நிலையில்  டிசம்பர்  மாதம்  12ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணையை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவந்து அந்தப் பிரேரணை தமிழ் தேசியக் கூட்டமைபின் ஆதரவுடன் 117 வாக்குகளால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென கடந்த வியாழக்கிழமை 13ஆம் திகதி நீதிமன்றம் அதன் தீர்ப்பினையும் அறிவித்தது.  இந்நிலையில் 48 நாட்கள் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிகளுக்கு நேற்றைய தினம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதற்கு அமைய நேற்று காலை 10.45 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார். அதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை 11.16 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். இந்த பதவியேற்பு நிகழ்விற்கு சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, மனோ கணேசன், மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்தும பண்டார, ரவி கருணாநாயக்க, தலதா அத்துகோரள, அஜித் பி.பெரேரா உள்ளிட்ட ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் மட்டுமே நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டிருந்தனர். ஏனைய எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதவாளர்களும் அலரிமாளிகையில் திரண்டிருந்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள்  தமது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிபடுத்தினர். இந்நிலையில் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு சர்வமத  நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன்  நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது தாம் விட்ட இடத்திலிருந்தே  புதிய அமைச்சரவையை நியமித்து நாட்டினை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்த 48 மணித்தியாலங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மங்கள சமரவீர நேற்றைய தினம் அலரிமாளிகையில் தெரிவித்திருந்தார். எனினும் இன்றைய  தினமே புதிய அமைச்சரவை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கமைய புதிய அமைச்சரவையில் 30 உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற யோசைனையும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.