சிறுபான்மை கட்சிகளின் ஒருமித்த செயற்பாடு: சரியான நேரம் கூடிவந்துள்ளது அடுத்தவாரம் சந்திப்பு ஆரம்பம்

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை

0 547

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சரியான நேரம் தற்போது கூடிவந்துள்ளது. இந்நிலையில் அடுத்தவாரம் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றில் கூடி சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் குறித்து முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த அழைப்பு  சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவரிடம் வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை கட்சிகளின் ஒன்றுபட்ட செயற்பாடு குறித்து முன்வைத்திருக்கும் யோசனை வரவேற்கத்தக்கது. நல்லதொரு விடயமே.

நமது அனைத்து நடவடிக்கைகளையும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து முன்னெடுப்பது சிறந்தது. அத்தோடு தேசிய ரீதியில் ஒற்றுமையான செயற்பாடுகளே வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

நாட்டின் சிறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 40 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுகுறித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கலந்தாலோசித்தோம். எனினும், இப்போதுதான் சரியான நேரம் கூடி வந்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெற இருக்கின்றது. இதன்போது எதிர்கால நமது செயற்பாடுகள் குறித்தும் ஒன்றிணைந்த பயணம் குறித்தும் ஆராயப்படும். பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.