பிரேரணையை ஏற்கமாட்டோம்

எஸ்.பி. திஸாநாயக்க 

0 559

நாட்டில் அரசாங்கமாகக் கருதப்படும் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போது, ஆளுங்கட்சி இன்றி சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்றத்தை கூட்டியுள்ளமை சட்டவிரோதமாகும். அதன் காரணமாகவே நாம்  பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

நாளை (இன்று) அல்லது, நாளை மறுதினம் (நாளை) உயர் நீதிமன்றத்தினால் சிறந்ததொரு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். இன்றும் (நேற்று) சபாநாயகர் கருஜய சூரிய சட்டவிரோதமாகவே பாராளுமன்றத்தைக் கூட்டியுள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பவற்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் அமைச்சரவையே அரசாங்கமாகக் கருதப்படும்.  அவ்வாறிருக்கையில் ஆளுங்கட்சி இன்றி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. அதனாலேயே நாம் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்து வருகின்றோம். பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதாகும்.

2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார  ஆலோசனை   குழுவொன்றினை அமைத்து அதன்மூலம் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் தம்வசப்படுத்திக்கொள்ள ஆரம்பித்த போது பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய எதிர்ப்பையும் மீறி சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். இலங்கையிலேயே மிகப்பாரிய ஊழல் மோசடியாக கருதப்படும் மத்திய வங்கி கொள்ளையின் பிரதான சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க ஆவார். அர்ஜுன மகேந்திரன் அவருக்கு துணையாக செயற்பட்டார்.

ரணில் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஊழல் மோசடி வெளிக்கொண்டுவரப்பட்டது. எனினும் சிறிகொத்தாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மூன்று சட்டத்தரணிகள் அவ்வாறு ஒரு சம்பவமே இடம்பெறவில்லை என்றவாறு தீர்ப்பு வழங்கினர். அத்தோடு விசாரணைகள் இடம்பெற்று சிலர் கைது செய்யப்படவிருந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாரின் நடவடிக்கைகளில் தலையிட்டு அதனை தடுத்தார். ஏதாவதொரு வழியிலேனும் மத்திய வங்கி விசாரணைகளை முடக்கும் முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடைய இவ்வாறான செயற்பாடுகளையும் தலைமைத்துவத்தினையும் விரும்பாத நூற்றுக்கு இருபது வீதமானவர்கள் இன்றும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளனர். இதன் காரணமாகவே கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுமார் 3 இலட்சம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவளித்திருந்தனர். ரணில் விக்கிமரசிங்க  மீதான நம்பிக்கை பிரேரரணயை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்  என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.