நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நெருக்கடிக்கு தீர்வாகது

தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்கிறார் ஜி. எல்.பீரிஸ்

0 720

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல்  நெருக்கடிக்குத் தீர்வாக அமையாது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க  வேண்டுமாயின் பொதுத்தேர்தலை நடத்தி பெரும்பாலான  கருத்திற்கு  இடமளிக்க   வேண்டுமெனத் தெரிவித்த  பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர்  பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ்,

மேன்முறையீட்டு  நீதிமன்றம்  வழங்கிய தற்காலிக தடையுத்தரவு தொடர்பில்  மக்கள் மத்தியில்  தவறான  நிலைப்பாடே   காணப்படுகின்றது. அரசாங்கத்தின்   நிர்வாகத்திற்கு  மாத்திரமே  தற்காலிக தடையேற்பட்டுள்ளது   என்பதை  தெளிவாக அனைவரும்  விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன முன்னணியின்  அலுவலகத்தில் நேற்று  திங்கட்கிழமை  இடம் பெற்ற ஊடகவியளாலர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

பாராளுமன்றம்  கலைக்கப்பட்டமைக்கும்,  இடைக்கால அரசாங்கத்தின்   நிர்வாகத்திற்கு  எதிராக  மாத்திரம்  எதிர்த்தரப்பினர்  நீதிமன்றத்தை  நாடினார்கள். ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன அரசியல்  நெருக்கடிகளுக்கு  தீர்வு   காண  மக்கள்  கருத்தினை கோரவே முயற்சித்தார். ஆனால் அதற்கும்  எதிர்த்தரப்பினர்  தடையாக செயற்பட்டனர்.

நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கள் ஒருபோதும்  தற்போதைய அரசியல்  நெருக்கடிகளுக்கு  எவ்விதத்திலும்  தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது. மக்களே அனைத்து  பிரச்சினைகளுக்கும் வாக்குரிமையின் ஊடாக தீர்வை   வழங்க வேண்டும்.  ஐக்கிய தேசியக்  கட்சியினர்   மக்கள்  மத்தியில் சென்று  பிரச்சினைகளுக்கு தீர்வு  காண பயப்படுகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவர் தலைமையிலான   இடைக்கால  அரசாங்கத்தின்  நிர்வாக செயற்பாடுகளுக்கு மாத்திரமே  மேன்முறையீட்டு  நீதிமன்றம்  தற்காலிக  தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.   இத்தீர்ப்பினை நாங்கள் மதிக்கின்றோம் ஆனால் ஒருபோதும்   ஏற்றுக்கொள்ளமுடியாது.   இத்தீர்ப்பினை  தொடர்ந்து நாட்டில் பிரதமர், அமைச்சரவை கிடையாது என்று மாறுப்பட்ட  கருத்துக்கள்  மக்கள் மத்தியில்   காணப்படுகின்றன.  இது  முற்றிலும் தவறான  நிலைப்பாடாகும்.

தற்போதை அரசியல் நெருக்கடியின்   காரணமாக அடுத்த வருடத்தில் அரச நிர்வாகத்தின் முன்னெடுப்புக்களுக்கு   பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு    ஜனவரியில் பொதுத்தேர்தலை நடத்த   வேண்டும் அல்லது    நாட்டு  நலனை கருத்திற்கொண்டு  இடைக்கால வரவு செலவுத்  திட்டத்தினை  முதல் காலாண்டிற்கு  அமுல்படுத்த வேண்டும்  என்றார்.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.