பல்லின மக்களின் மனதை வென்ற தலைவர்

0 348

மபாஸ் ஸனூன்
(விரிவுரையாளர்)
கிழக்குப் பல்கலைக்கழகம்

கடந்த நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் முன்னாள் சபா­நா­யகர் மர்ஹூம் எம். ஏ பாக்கீர் மார்க்­காரின் நினைவு தின விழா­வுக்குச் சென்ற ஓர் இளம் பத்­தி­ரி­கை­யாளர், முன்னாள் சபா­நா­யகர் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்­துக்கு சிங்­கள சமூ­கத்தின் மத்­தியில் கிடைக்­கின்ற கௌர­வத்தைப் பார்க்­கின்ற போது தனக்குப் புதுமை ஏற்­ப­டு­வ­தாகச் சொன்னார். நான் அவ­ரிடம், “ஏன் உமக்குப் புதுமை ஏற்­ப­டு­கின்­றது?” என்று வின­வினேன். “பெரும்­பான்மைச் சமூகம் சிறு­பான்மைச் சமூ­க­மான முஸ்­லிம்­களை தாறும் மாறு­மாக விமர்­சனம் செய்­கின்ற இந்தக் காலத்தில் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்தின் மீது சிங்­கள சமூகம் கொண்­டுள்ள கௌரவம் புது­மை­யா­னது” என்று அவர் பதில் வழங்­கினார். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் புத்­தி­ர­ரான முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மார்க்­காரைப் பற்றிப் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாலி மற்றும் பௌத்தக் கற்­கைகள் துறையின் பேரா­சி­ரியர் முவெ­ட­கம ஞானா­நந்த தேரர் ஒரு முறை குறிப்­பி­டு­கின்ற போது “முன்னாள் சபா­நா­யகர் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் புத்­திரர் முன்­மா­தி­ரி­யான ஓர் அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கின்றார். அவர்­களின் குடும்பம் முஸ்லிம் சமூ­கத்­துக்கே முன்­மா­தி­ரி­யாக இருக்­கின்­றது.” என்று குறிப்­பிட்டார். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் பேர­ரான ஆதில் பாக்கீர் மார்க்கார் இறந்த செய்­தியை ஒரு தனியார் சிங்­கள இணை­யத்­தளம் வெளி­யிட்­டி­ருந்­தது. அந்த செய்­திக்குக் கீழாக பல சிங்­கள வாச­கர்கள் தமது கருத்­துக்­களைப் பதிவு செய்­தி­ருந்­தனர். அதில் மர்ஹூம் பாக்கீர் மார்க்­காரின் பேரர் பல்­லின சமூ­கத்­துக்கு மத்­தியில் முன்­மா­தி­ரி­யான ஒரு முஸ்லிம் இளை­ஞ­ராக வாழ்ந்­த­தாகப் பல சிங்­கள சகோ­த­ரர்கள் கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தனர். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்­துக்கு சிங்­கள சமூ­கத்தின் மத்­தியில் இவ்­வா­றான ஒரு தனி கௌரவம் கிடைப்­ப­தற்­கான காரணம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் என்ற தனி மனித ஆளு­மை­யாகும். இந்த கௌரவம் அந்தத் தனி­ம­னி­தனை மைய­மாகக் கொண்டே அவரின் குடும்­பத்தைச் சுற்றி வியா­பித்­தது.

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் அர­சியல் ஆதர்ச குரு­வாகப் பல இடங்­க­ளிலும் ரீ. பி. ஜாயா சொல்­லப்­ப­டு­கின்றார். என்­றாலும் அவரின் வாழ்க்­கையை ஆய்வு செய்­கின்ற போது அவரின் அர­சி­யலில் மட்­டு­மல்ல அவரின் முழு ஆளுமைக் கட்­ட­மைப்­பிலும் ரீ. பீ. ஜாயாவின் தாக்­கத்தை அவ­தா­னிக்­கலாம். ரீ. பீ. ஜாயா கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் அதி­ப­ராக இருந்த போது பெரும்­பான்­மை­யாக முஸ்லிம் மாண­வர்­களைக் கொண்ட ஒரு கல்­லூ­ரியில் ஒரு சிங்­கள மாண­வனை பிர­தான மாணவர் தலைவர் பத­விக்கு நிய­மனம் செய்தார். ரீ. பீ. ஜாயா மந்­திரி சபையின் உறுப்­பி­ன­ராக இருந்த போது இலங்­கைக்கு சுதந்­திரம் வழங்­கு­வது தொடர்­பான விவாதம் மந்­திரி சபையில் நடை­பெற்­றது. அவர் இந்த விவா­தத்தில் உரை­யாற்­று­கின்ற போது, சுதந்­தி­ரத்­துக்­காக எந்­த­வொரு கோரிக்­கை­யையும் முஸ்லிம் சமூகம் முன்­வைப்­ப­தில்லை என்றும் முஸ்­லிம்­களின் உரி­மை­களை அவர்­க­ளது மூத்த சகோ­த­ரர்­க­ளான சிங்­கள மக்கள் பாது­காத்து தரு­வார்கள் என்ற நம்­பிக்கை இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். “பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மீது வைக்­கின்ற நம்­பிக்­கையும் பரஸ்­பர விட்டுக் கொடுப்பும் சிறு­பான்மைச் சமூ­கத்தின் உரி­மை­களைப் பாது­காத்துத் தரும்” என்ற திட­மான நம்­பிக்கை அவ­ரிடம் இருந்­தது. சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்­ளு­வ­தற்கும் பாது­காத்துக் கொள்­ளு­வ­தற்கும் புதிய ஒரு வழியை ரீ. பீ. ஜாயா காட்­டினார். அவர் சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களைப் பெற்றுக் கொள்­ளு­வ­தற்கு பெரிய போராட்­டங்­களை செய்­ய­வில்லை. ஜாயாவின் வழியை நடை­மு­றையில் செயற்­ப­டுத்திக் காட்­டி­ய­வ­ராக மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் இருக்­கின்றார். அவரின் குடும்­பமும் அந்த வழியில் தான் பய­ணிக்­கின்­றது.

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் பேரு­வளை நகரை சபைத் தலை­வ­ராக இருந்த போது, 1953ஆம் ஆண்டு நடை­பெற்ற ஒரு நகர சபை மாதாந்தப் பொதுக் கூட்­டத்தில் சிங்­க­ளத்தை அரச கரும மொழி­யாக்க வேண்டும் என்ற பிரே­ர­ணையை முன்­வைத்தார். அந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அகில இலங்கை முஸ்லிம் லீக் கூட்­டத்தில் சிங்­க­ளத்தை அரச கரும மொழி­யாக்­கு­வதன் அவ­சி­யத்தை அவர் வலி­யு­றுத்திப் பேசினார். இதனால் முஸ்­லிம்கள் பெரும்­பான்மைச் சிங்­கள சமூ­கத்தின் கௌர­வத்­துக்கும் மதிப்­புக்கும் பாத்­தி­ர­மா­னார்கள். அந்த கௌர­வமும் மதிப்பும் இன்று வரையும் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்தில் நிலை கொண்­டுள்­ளது. அதி­க­மான தேரர்கள் இன்று வரையும் பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்தை ஆத­ரிக்­கின்­றனர். அதி­க­மான சிங்­கள மக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்தில் தோன்­றிய அர­சி­யல்­வா­தி­களைப் பற்றி நல்ல கருத்­துக்­க­ளையே பதிவு செய்­கின்­றனர்.

மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் நடை, உடை, பாவனை என்ற அனைத்து விட­யங்­களும் இலங்­கையின் தேசிய கலா­சா­ரத்­துக்குப் பொருத்­த­மா­ன­தாக இருந்­தது. அவர் அர­சியல் கூட்­டங்­களில் உரை­யாற்­று­கின்ற போது புத்­தரின் தர்மப் பதங்­களை மேற்கோள் காட்டிப் பேசினார். சிங்­கள மக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒரு­வ­ராக நோக்­க­வில்லை. அவர்கள் அவரை அவர்­களில் ஒரு­வ­ரா­கவே நோக்­கி­னார்கள். மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் சிங்­கள மக்­க­ளுடன் ஒன்­றித்து வாழ்ந்­தாலும் அவர் தான் ஒரு முஸ்லிம் என்ற தனித்­து­வத்தை இழக்­க­வில்லை. இதனை எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்­திலும் காணலாம். தனது சமய அடை­யா­ளத்­தையும் பாது­காத்துக் கொண்டு சிங்­கள மக்­களில் ஒரு­வ­ராக இருந்து கொண்டு அவர்­களின் மதிப்­பையும் கௌர­வத்­தையும் பெற்றுக் கொண்­டதில் தான் அவரை ஒரு விஷேட தனி­ம­னித ஆளு­மை­யாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு இனங்­காட்­டு­கின்­றது. இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் பத்­தொன்­ப­தா­வது சபா­நா­ய­க­ராக இருந்த கரு ஜய­சூ­ரிய முன்னாள் சபா­நா­ய­க­ரான மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரைப் பற்றிச் சொன்ன ஒரு கூற்றை இந்த இடத்தில் மேற்கோள் காட்ட விரும்­பு­கின்றேன். அதுவே எம். ஏ. பாக்கீர் மார்க்­கரைப் பற்­றிய சிறந்த வரை­வி­லக்­க­ண­மாக இருக்­கின்­றது. இதனை அவர் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் 21ஆவது வருட நினைவு தின விழாவில் சொன்னார். அவர் பின்­வ­ரு­மாறு சொன்னார். “இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் முன்னாள் சபா­நா­ய­க­ரான எம். ஏ. பாக்கீர் மார்க்கார் ஓர் இன­வா­தி­யாக இருக்­க­வில்லை. ஒரு மத­வா­தி­யா­கவும் இருக்­க­வில்லை. அவர் இனங்­க­ளுக்கு இடையில் நெருப்பை மூட்­ட­வில்லை. அவர் அர­சி­ய­லுக்கு முன்­மா­தி­ரி­யாக இருந்தார். அவர் இந்த நாட்டின் சிறந்த குடி­ம­க­னாக இருந்தார். அவர் ஒரு சிறந்த முஸ்லிம் பக்­த­னாக இருந்தார். இவற்றை நாம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரின் குடும்­பத்­திலும் காண்­கிறோம்.” இந்த வரை­வி­லக்­கணம் இன்­றைய காலத்தில் நடை­மு­றையில் இருக்­கின்ற அதி­க­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வாக இருக்­கின்­றது.

இன்­றைய காலத்தில் பெரும்­பான்­மை­யான சிங்­கள சமூ­கத்தால் தாங்கள் பாதிப்­புக்கு உட்­ப­டு­வ­தாக முஸ்­லிம்கள் கரு­து­கின்ற நிலை உரு­வாகி இருக்­கின்­றது. இந்த நிலையில் சில பிரச்­சி­னை­களின் போது முஸ்லிம் அமைப்­புக்­களும் முஸ்­லிம்­களும் அதனைக் கையா­ளு­கின்ற விதம் ஒரு­வ­கை­யான போராட்­டத்தை ஒத்த தோற்­றத்தைக் கொடுக்­கின்­றது. ஒரு போராட்­டத்தின் முடிவு ஒரு பெரிய அழி­வாகத் தான் இருக்கும். அதற்கு வர­லாற்றில் நிறையப் பாடங்கள் இருக்­கின்­றன. போராட்டம் எமது முன்­னோரின் முன்­மா­திரி அல்ல. இனங்­க­ளுக்கு இடையில் உரு­வா­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­யலில் தீர்வு இல்லை. மாறாக அதற்­கான தீர்வு நம்­பிக்­கை­யிலும் பரஸ்­பர விட்டுக் கொடுப்­பி­லுமே இருக்­கின்­றது. இந்த இடத்­திலே தான் இலங்கை முஸ்லிம் சமூகம் முன்னாள் சபா­நா­ய­க­ரான மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்­காரை முன்­மா­தி­ரி­யாகக் கொள்ள வேண்டி இருக்­கின்­றது. ஓர் இலங்கை முஸ்லிம் குடி­ம­க­னாக அவர் விட்டுச் சென்ற முன்­மா­தி­ரிகள் தற்­போது இலங்கை முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளாக இருக்கின்றன. அவரின் முன்மாதிகளை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற பட்சத்தில் மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்கு சிங்கள சமூகத்தின் மத்தியில் கிடைக்கின்ற கௌரவமும் மதிப்பும் இயல்பாகவே முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைக்கும். அதனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு கிடைத்து, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தைப் போல் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழுவார்கள். எம். ஏ. பாக்கீர் மார்க்காரை நினைவுபடுத்துகின்ற இந்தக் காலத்தில் இந்தக் கட்டுரையினூடாக சொல்லக்கூடிய சிறந்த செய்தியாக அதுவே இருக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.