32 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு 75 பேர் தடுப்புக் காவலில்; 211 பேர் விளக்கமறியலில்

பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி : அமைச்சர் சரத்

0 567

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் தொடர்­பு­டைய 32 சந்­தேக நபர்கள் மீது பயங்­க­ர­வாதம் மற்றும் அத­னுடன் இணைந்த குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்க அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது என பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.

அத்­தோடு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி நெளபர் மெள­லவி என்­ப­வ­ராவார். இந்த சந்­தேக நபர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். நெளபர் மெள­லவி ஒரு குறிப்­பிட்ட காலம் கட்­டாரை தள­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார். அவர் சஹ்­ரா­னுக்கு தீவி­ர­வாத்தை போதித்­துள்­ள­துடன் அவரைப் பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கு தீவி­ர­வாத கருத்­துக்­களை போதிப்­ப­தற்கு உத­வியும் செய்­துள்ளார். அடுத்த சந்­தேக நபர் ஹஜ்ஜுல் அக்பர் என்­ப­வ­ராவார். இவரும் அடிப்­ப­டை­வாத போத­னை­க­ளுக்கு உத­வி­யாக இருந்­துள்ளார்.

அர­சாங்கம் வெளி­நா­டு­க­ளி­லுள்ள 54 சந்­தேக நபர்­களை அங்­கி­ருந்தும் இலங்­கைக்கு நாடு கடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்கொண்டது. இவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளாவர். இவர்­களில் இது­வரை 50 பேர் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய 75 சந்­தேக நபர்கள் பொலி­ஸாரின் உத்­த­ரவின் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இதே­வேளை 211 பேர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் சரத் வீர­சே­கர இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘தற்­கொலைக் குண்டு தாக்­குதல் தொடர்பில் ஆராய்ந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு என்­ப­ன­வற்றின் அறிக்­கைகள் மற்றும் தாக்­குதல் தொடர்­பான ஆவ­ணங்கள் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த கொடிய செயலைப் புரிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டி­யது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பொறுப்­பாகும் எனவும் அவர் கூறினார்.

குற்றச் செயலைப் புரிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­வதில் தாமதம் ஏற்­பட்டு வரு­வ­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வது தொடர்பில் அவர் விளக்­க­ம­ளிக்­கையில், குற்றம் புரிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்­து­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு கால அவ­காசம் தேவைப்­ப­டு­கி­றது. கிடைக்­கப்­பெற்­றுள்ள சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டை­யிலே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.

வழக்­குகள் பல­மா­ன­தா­கவும், சட்­டத்தில் குறை­பா­டுகள் இன்­றியும் இருக்­க­வேண்டும். தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நீதி­மன்­றுக்­கு­ரிய கணக்­காய்வு அறிக்கை பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். கணக்­காய்வு அறிக்­கையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வெளி­நாட்டு அர­சுகள், வங்­கிகள் மற்றும் சட்­டத்­து­றை­யுடன் தொடர்­பு­கொள்ள வேண்­டி­யுள்­ளது. எவ்­வாறு பணப் பரி­மாற்றம் இடம்­பெற்­றுள்­ள­தென்­பதை கண்­ட­றிய வேண்­டி­யுள்­ளது. இதற்கு கால அவ­காசம் தேவைப்­ப­டு­கி­றது.

சில சந்­தேக நபர்கள் இந்­நாட்­டி­லுள்ள பிர­சித்தி பெற்ற சட்­டத்­த­ர­ணி­களின் சேவையைப் பெற்­றுக்­கொள்ள முடியும். எனவே வழக்­குகள் மிகவும் உறு­தி­யா­ன­தாக சட்­டத்தில் குறை­பா­டுகள் அற்­ற­தாக இருக்­க­வேண்­டு­மென்பதில் சட்­டமா அதிபர் திணைக்­களம் உறு­தி­யாக உள்­ளது என்றும் அமைச்சர் சரத்­வீ­ர­சே­கர தெரி­வித்தார்.
அமெ­ரிக்­காவில் 2001 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சில சந்­தேக நபர்கள் இன்னும் எது­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மின்றி காவலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணைக் குழுவின் சிபா­ரி­சு­களை ஆராய்­வ­தற்கு 6 பேர் கொண்ட அமைச்­ச­ரவை குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அந்தக் குழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊடக மாநாட்டில் அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரி­வித்தார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களை ஆராய்­வ­தற்­காக 6 பேர­டங்­கிய அமைச்­ச­ரவை உப குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருந்தார். இக்­குழு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் அறிக்கை மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை என்­ப­வற்­றினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது.

அமைச்­ச­ரவைக் குழுவின் தலை­வ­ராக சமல் ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக அமைச்­சர்கள் ஜோன்ஸ்டன் பர்­ணாந்து, உதய கம்ம­ன்­பில, ரமேஷ் பத்­தி­ரன, பிர­சன்ன ரண­துங்க, ரோஹித அபேகுண­வர்­தன ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இக்­குழு தனது பரிந்­து­ரை­களை கடந்த மார்ச் 15 ஆம் திக­திக்கு முன்பு சமர்­ப்பிக்க வேண்­டு­மென கோரப்­பட்­டி­ருந்­தது. இக்­கு­ழுவின் செய­லா­ள­ராக ஜனா­தி­பதி செய­ல­கத்தின் பணிப்­பாளர் நாயகம் (சட்டம்) ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹரி­குப்த ரோக­னா­தீர நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்தத் தாக்­கு­தலைத் தடுத்­தி­ருக்க முடியும் என அமைச்சர் சமல் ராஜ­ப­கஷ ஊடக மாநாட்டில் தெரி­வித்தார். கடந்­த­கால அர­சாங்கம் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நடை­மு­றைப்­ப­டுத்தி தீவி­ர­வா­தத்­தி­னையும் கல­வ­ரத்­தி­னையும் ஆரம்­பத்­திலேயே கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடியும்.

சமல் ராஜபக் ஷ பொலிஸ் திணைக்­க­ளத்தின் மீதும் குற்றம் சுமத்­தினார். பொலிஸார் தற்­கொலைத் தாக்­குதல் இடம்­பெறும் வரை இருக்­காது அதற்கு முன்பே தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். அர­சாங்கம் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய எவ­ரையும் பாது­காக்க வேண்­டிய தேவைப்­பாடு இல்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் விஜேதாச ராஜபக்ச எம்.பி. பாரா­ளு­மன்­றத்தில் 2016 இல் தீவி­ர­வாத குழுக்கள் தொடர்­பாக உரை­யாற்­றினார். தீவி­ர­வாத குழுக்கள் தொடர்பில் எச்­ச­ரித்தார். ஏன் அப்­போது நல்­லாட்சி அர­சாங்கம் அவரை விமர்­சித்­தது.

நாங்கள் விரைவில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். பொலிஸார் தங்­க­ளது கட­மையில் அக்­க­றை­யின்றி இருக்­கி­றார்கள். அமைச்­ச­ரவை உப­குழு பொலிஸ்மா அதி­ப­ருக்கு, பொலிஸ் அதி­கா­ரிகள் கண்டுபிடிக்கும் ஆரம்ப அறி­கு­றிகள் மீது நட­வ­டிக்கை எடுக்க தவறினால் ஒழுக்காற்று நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அமைச்­ச­ரவை உப­குழு தெரி­வித்­துள்­ளது என்றும் அமைச்சர் சமல் ராஜபக் ஷ தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், குறிப்­பிட்ட சிபா­ரி­சுகள் பொலிஸ் திணைக்­களம், குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­களம் மற்றும் கல்வி அமைச்சு மூலம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

மேலும் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்கு சிபா­ரி­சுகள் சமர்ப்­பிக்­கப்­படும். எதிர்­கா­லத்தில் இது­போன்ற கொடு­மை­யான சம்­ப­வங்கள் நிக­ழா­தி­ருப்­ப­தற்கு சட்­டத்தில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென அமைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர மற்றும் சமல் ராஜ­பக்ஷ ஆகியோர் தெரி­வித்­தனர்.

மத்­ரஸா பாட­சாலை விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­ய­போது அவர்கள் இரு­வரும் பதி­ல­ளிக்­கையில், மத்­ரஸா பாட­சா­லை­க­ளுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன. அது தொடர்பான சிபாரிசுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றனர்.

ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், எந்த ஒரு தனி நபர் மீதும் சட்டமாஅதிபர் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அரசாங்கம் தலையீடு செய்யாது. எதிர்க்கவும் மாட்டாது. ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் விடயத்திலும் அரசு எந்த தலையீடுகளையும் செய்யாது என்றார்.

அமைச்சர் சமல் ராஜபக் ஷ கருத்துத் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பையும் தெளஹீத் ஜமாஅத் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள சிபாரிசுகளுக்கு அமைச்சரவைக்குழு எதிர்ப்பு வெளியிடவில்லை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.