ஈர­மிலா நெஞ்­சங்­களும் வீர­மிலாத் தலை­வர்­களும்

0 51

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

ஜனா­தி­பதி நந்­த­சேன கோத்­தா­பய ராஜ­பக்ச அவர்கள், கொரோ­னாவால் மாண்ட முஸ்­லிம்­களின் உடல்­களை மண்­ணுக்குள் அடக்­கலாம் என்று ஒரு வாரத்­திற்கு முன் வர்த்­த­மா­னி­மூலம் அனு­மதி வழங்­கி­யதும், அவ­ரது நெஞ்சம் காலம் தாழ்த்­தி­யா­வது கரைந்­து­விட்­டதே என்று யோசித்­த­வர்­க­ளுக்கு, புதைப்­ப­தற்குப் பொருத்­த­மான இடந்­தேடி பத்து நாட்களாக நடாத்திய நாடகம் சர்வ அதி­கா­ரங்­க­ளையும் கொண்ட ஜனா­தி­பதி உண்­மை­யி­லேயே முஸ்­லிம்­கள்பால் இரங்­கித்தான் அந்த வர்த்­த­மா­னியை வெளி­யிட்­டாரா அல்­லது வேறு ஒரு தேவையை நிறை­வேற்ற முஸ்­லிம்­களை ஏமாற்­றி­னாரா என்று எண்ணத் தோன்­றினும் ஆச்­ச­ரி­யப்­படத் தேவை­யில்லை.

ஐ.நாவின் மனித உரிமை ஆணை­யாளர் வெரே­ணிக்கா மிச்சேல் பெச்­சலெற் இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளைப்­பற்­றிய தனது விரி­வா­னதும் துணி­வா­ன­து­மான அறிக்­கையின் மூலம் ராஜ­பக்ச அர­சுக்கு ஜெனி­வாவில் வைத்த ஆப்பைக் கழற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி நந்­த­சேன எடுத்த முதல் முயற்­சியே அந்த வர்த்­த­மானி அறிக்கை. அதைத் தவிர, சில முஸ்லிம் தலை­வர்கள் காணொ­ளி­க­ளிலும் வானொ­லி­க­ளிலும் புகழ்­பா­டு­வ­து­போன்று முஸ்லிம் சமூ­கத்­தின்மேல் அவ­ருக்கு ஏற்­பட்ட இரக்­கத்தால் அல்ல. அவ்­வாறு இரக்கம் இருந்­தி­ருந்தால் அவ­ரது மன­மாற்றம் எப்­போதோ ஏற்­பட்­டி­ருக்கும்.

ஓர் உண்­மையை மட்டும் முதலில் உணர்த்த வேண்­டி­யுள்­ளது. அதா­வது, இது­வரை உல­கத்தில் எங்­கே­யா­வது (இலங்கை உட்­பட), கொரோ­னாவால் மர­ணித்த மனித உடல்­களை மண்­ணுக்குள் புதைத்­த­தனால் அந்தத் தொற்று வாழும் மற்ற ஜீவன்­க­ளுக்குப் பர­வி­ய­தாக எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் பூமியின் அடியில் உள்ள நீர் அந்த உட­லுடன் கலக்­கு­மானால் அதனால் தொற்று பரவும் என்ற ஒரு நிரூ­பிக்­கப்­ப­டாத போலி வாதம் இலங்­கை­யிலே மட்­டும்தான் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதை முன்­வைத்­தவர் தொற்­றுநோய் நிபுணர் அல்லர். மாறாக ஒரு மண்­ணியல் பேரா­சி­ரியர். பேரா­சி­ரி­யரின் இந்தப் போலி வாதமே பௌத்த பேரி­ன­வாத ஈர­மிலா நெஞ்­சங்­க­ளுக்கு முஸ்­லிம்­கள்மேல் வஞ்சம் தீர்க்கக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம். இதிலே ஒரு வேடிக்கை என்­ன­வெனில் ஜனா­தி­ப­தியின் மன­மாற்­றத்தின் அந்­த­ரங்­கத்தை அறியும் முன்­னரே அந்தப் பேரா­சி­ரியர் சடு­தி­யாக நிபு­ணர்கள் குழு­வி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்­த­மை­யாகும். அவ­ருக்கு அது ஒரு கௌரவப் பிரச்­சி­னை­யா­கி­விட்­டது போல் தெரி­கி­றது. எனினும் இப்­போது (ஓட்டமாவடி தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில்) பொருத்­த­மான புதை­விடம் தேடி நடத்­தப்­படும் நாடகம் அப் பேரா­சி­ரி­யரின் வாதம் தொடர்ந்தும் இந்­நாட்டில் செல்­லு­ப­டி­யாகும் என்­ப­தையே காட்­டு­கி­றது. அந்த வாதத்தில் எந்த அர்த்­தமும் இல்லை என்­பதை ஏற்­றுக்­கொண்டால் உடல்­களை எங்கு வேண்­டு­மா­னாலும் அடக்­கலாம் அல்­லவா? ஆனால் அதனைத் தாங்­கிப்­பி­டித்துக் கொண்­டி­ருப்­ப­த­னா­லேதான் இந்த மயான பூமி வேட்டை. முஸ்­லிம்­களின் பூத உடல்­களை மாதக்­க­ணக்கில் குளிர் அறைக்குள் பூட்டி வைத்­தி­ருந்து வர்த்தமானி வெளிவந்த பின்னரும் அடக்­கு­வ­தற்குப் பொருத்­த­மான இடந்­தேடி இழுத்­த­டித்ததில் அந்த ஈர­மிலா நெஞ்­சங்­களின் உண்மை முகம் தென்­ப­டு­வதை மறுக்க முடி­யாது.

எந்த அள­வுக்கு முஸ்­லிம்­கள்மேல் கஷ்­ட­நஷ்­டங்­களை ஏற்­ப­டுத்த முடி­யுமோ அந்த அள­வுக்கு அவற்றை ஏற்­ப­டுத்தத் தயா­ராக இருக்­கின்­றனர் ராஜ­பக்ச அரசை ஆட்­டு­விக்­கின்ற பௌத்த பேரி­ன­வா­திகள். இந்தக் கும்­ப­லுக்­குள்ளே அர­சியல் அதி­கார ஆசை­கொண்ட பௌத்த துற­வி­களும் இடம்­பெற்­றி­ருப்­பது பௌத்தம் செய்த பாவம். இந்தப் பேரி­ன­வாதக் கொள்­கையே அர­சாங்­கத்தை ஆட்­கொண்­டுள்­ளது. அந்தக் கொள்­கையை ஆத­ரிக்­காத எவரும் ராஜ­பக்ச ஆட்­சியில் உயர்­ப­தவி வகிக்க முடி­யாது. அதைத்தான் அர­சாங்­கத்தின் பொதுச் சுகா­தா­ரத்­துறை நிர்­வா­கத்­திலும் காண்­கிறோம். இந்தப் பேரி­ன­வா­தி­களே கொரோனா பலி­யாக்­கிய முஸ்­லிம்­க­ளையும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விதிப்­படி தகனம் செய்­ய­வேண்­டு­மென விடாப்­பி­டி­யாக நிற்­கின்­றனர். ஆனால் சர்­வ­தேச அழுத்­தங்­களை அவர்­களால் முற்­றாக உதா­சீனம் செய்­ய­மு­டி­யாது. இத­னா­லேதான் மண்­ணுக்குள் அடக்­கலாம் என்­பதை ஏற்­றுக்­கொண்டு அதற்குப் பல தடை­களை ஏற்­ப­டுத்­திய வண்ணம் செயற்­ப­டு­கின்­றனர். இர­ணை­தீவில் தொடங்கி ஓட்­ட­மா­வடி வரை பொருத்­த­மான அடக்­கஸ்­தலம் தேடு­கின்­றனர். அவர்கள் கைப்­பி­டித்­துள்ள போலி வாதத்தைக் கைவிட்டால் எந்த ஊரிலும் எந்த மைய­வா­டி­யிலும் கொரோனா ஜனா­ஸாக்­களை அடக்­கலாம். எல்லா நாடு­க­ளிலும் அதுதான் நடை­பெ­று­கின்­றது. ஜெனி­வாவில் ஐ. நா. மனித உரிமை பேரவை அமர்வு முடி­வ­டைந்­ததன் பின்னர் இந்தப் பேரி­ன­வா­தி­களின் மனோ­நிலை மாறி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி­ய­து­போன்று மீண்டும் தகனம் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

இது ஒரு புற­மி­ருக்க, முஸ்லிம் தலை­வர்கள் இவ்­வி­ட­யத்தில் வீரம்­குன்றி நிற்­ப­தைப்­பார்த்து அழு­வதா சிரிப்­பதா என்று தெரி­ய­வில்லை. அவர்­களுட் சிலர் ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கு நன்­றி­கூறி அவரின் புகழ் பாட ஆரம்­பித்­து­விட்­டனர். அவர்­களுள் சிலர் ஜனா­தி­ப­தி­யுடன் ஜனா­ஸாக்­களை அடக்­கு­வ­து­பற்­றிய ஒரு உடன்­பாட்­டுக்கு வந்­த­பின்­னர்தான் இரு­பதாம் திருத்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தா­கவும் ஒரு புதுக்­க­தையை இப்­போது வளர்க்கத் தொடங்­கி­யுள்­ளனர். அப்­ப­டி­யொரு உடன்­பாடு எழுத்தில் உண்டா? இருந்தால் காட்­டட்­டுமே. அல்­லது மக்­க­ளுக்கு அர­சி­யல்­வா­திகள் மேடை­களில் நின்று வாரி­வ­ழங்கும் உறு­தி­மொ­ழிபோல் இவர்­க­ளுக்கும் ராஜ­பக்­சாக்கள் வெறும் வார்த்­தை­களால் உறுதி கூறி­னார்­களா? வெரே­ணிக்கா மிச்சேல் பெச்­செலற் இல்­லை­யென்றால் இந்த மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­காது என்­பதை ஏன் வாய்­தி­றந்து கூறத் தயங்­கு­கி­றார்கள் இந்தத் தலை­வர்கள்? துதி­பா­டியே பழக்­கப்­பட்ட தலை­வர்­க­ளுக்கு பழக்க தோஷம் விட­வில்லை போலும்.

போராட வேண்­டி­யது புதைப்­ப­தற்கு இடம் கேட்­டல்ல, புதைப்­பதை எதிர்த்து தக­னத்தை ஆமோ­தித்த போலி விஞ்­ஞா­னத்தைக் கைவி­டு­மாறு. அதனை கைவிட்டு உல­கோடு ஒத்­துப்­போனால் இலங்­கையின் சகல மைய­வா­டி­க­ளிலும் கொரோனா ஜனா­ஸாக்­களை அடக்­கலாம். இதனை வலி­யு­றுத்­திப்­போ­ராட முஸ்லிம் தலை­வர்­க­ளுக்குத் துணி­வில்லை.

இன்­னு­மொரு தலைவர் இந்த அர­சாங்­கத்­துடன் சேர்ந்­துதான் முஸ்­லிம்கள் எத­னையும் சாதிக்­கலாம், சண்­டித்­த­னத்­தினால் அல்ல என்றும் கூறு­கிறார். இது எட்டி உதைத்த காலையே தொட்டு நக்கும் மனப்­பான்மை. இப்­ப­டிப்­பட்ட பச்­சோந்­திகள் தலை­வர்­க­ளானால் முஸ்லிம் சமூகம் சுய கௌரவம் இழந்த ஒரு சமூ­க­மா­கவே கரு­தப்­படும். அநீ­தியை அநீதி என்­று­கூறி நீதிக்­காகப் போரா­டு­வ­தையே இஸ்லாம் வலி­யு­றுத்­து­கி­றது. அதனைச் சாதித்துக் காட்­டி­ய­வரே நபி பெரு­மானார். எனவே இந்த நாட்டின் பிர­ஜைகள் என்ற முறையில் மற்­றைய இனப் பிர­ஜை­க­ளுடன் கைகோர்த்து உரி­மை­க­ளுக்­கா­கவும் நீதிக்­கா­கவும் போராடத் தைரி­ய­மில்­லாத தலை­வர்கள் இருந்­தென்ன இல்­லா­விட்­டால்தான் என்ன?

ஜெனி­வா­விலே இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைச் சபை கொண்­டு­வ­ரப்­போகும் பிரே­ர­ணையில் கட்­டாய தக­னத்தைப் பற்­றியும் ஓர் அம்சம் உண்டு. வர்த்­த­மா­னியை ஆதா­ர­மாகக் காட்டி அந்த அம்­சத்தை பிரே­ர­ணை­யி­லி­ருந்து நீக்­கு­மாறு இலங்­கையின் பிர­தி­நி­திகள் வேண்­டு­கின்­றனர். அந்த வேண்­டு­த­லுக்கு முஸ்லிம் நாடு­களை ஆத­ரவு வழங்­கு­மாறு கோர முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்தே சிலர் முயற்­சித்து வரு­வ­தாக செய்­திகள் கசி­கின்­றன. அது உண்­மை­யானால் இவ்­வா­றா­ன­வர்­களை இனங்­கண்டு முஸ்­லிம்கள் அவர்­களை ஒதுக்க வேண்­டி­யது கடமை. சர்­வ­தேச அழுத்­தங்கள் ஒன்­றுதான் இன்று முஸ்­லிம்­களை இந்த நாட்டில் ஓர­ள­வுக்­கா­வது தன்­மா­னத்­து­டனும் கலாச்­சாரத் தனித்­து­வத்­து­டனும் வாழச் செய்­துள்­ளது. அந்த அழுத்­தங்­க­ளுக்குப் பயந்­துதான் இன்று ஜனா­ஸாக்­களை பல இடைஞ்­சல்­க­ளுடன் அடக்­கு­வ­தற்கு அர­சாங்கம் இணங்­கி­யுள்­ளது. அந்த அழுத்தம் இல்­லை­யென்றால் முஸ்­லிம்கள் குற்­றேவல் புரியும் ஒரு சமூ­க­மாக மாறு­வதை யாராலும் தடுக்க முடி­யாது. ஆகவே ஐ. நா. மனித உரிமைச் சபையின் அழுத்­தங்கள் இலங்கை ஆட்­சி­யாளர் மேல் தொடரவேண்டும். அதனைத் தடுக்க எந்த முஸ்லிம் தலைமைத்துவமும் முனைந்தால் அந்தத் தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் களைந்தெறிய வேண்டும். ஈரமிலா நெஞ்சங்களுக்குப் பாடம் படிப்பிக்க வீரமிலாத் தலைவர்களால் என்றுமே முடியாது.

ஜனாஸாப் பிரச்­சி­னையால் பட்ட துயரம் ஆறு­வ­தற்கு முன்னர் இன்­னு­மொரு பிரச்­சி­னைக்கு முஸ்­லிம்கள் முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. முஸ்­லிம்கள் இஸ்­லாத்தைப் பற்றி எவ்­வ­கை­யான புத்­த­கங்­களை வாசிக்க வேண்டும் என்­பதை பாது­காப்பு அமைச்சே இனிமேல் தீர்­மா­னிக்­குமாம். இறக்­கு­ம­தி­யாகும் இஸ்­லாத்தைப் பற்­றிய எல்லா நூல்­களும் முதலில் பாது­காப்பு அமைச்­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டுமாம். சீனா­விலே எப்­படி சீன அரசு உய்கர் முஸ்­லிம்­களை மூளைச்­ச­லவை செய்­கின்­றதோ அதன் முத­லா­வது பாடம் ஜனா­தி­ப­தியால் இங்கே ஆரம்­ப­மா­கின்­றது. இதனை எதிர்த்துப் போரா­டக்­கூ­டிய தலைவர்கள் முஸ்லிம்களிடையே உள்ளனரா? காலம்தான் பதில் சொல்லும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.