ஜனாஸாக்களை அடக்க இனியும் தாமதிக்க முடியாது

0 2,257

கொவிட் 19 தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்து, ஒரு வார காலத்தில் அதற்கான வழிகாட்டல் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கிலுள்ள இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது. அதற்கான குழிகளும் அங்கு தோண்டப்பட்டிருந்தன. எனினும் பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக அங்கு அடக்கம் செய்வதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. தாம் முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை ஆதரிப்பதாகவும் ஆனால் இரணைதீவு அதற்குப் பொருத்தமான இடமல்ல என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று முஸ்லிம்கள் தரப்பிலும் இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் இனவாதத்தின் மற்றுமொரு முகத்தைக் காட்டுவதாக பலரும் விமர்சித்துள்ளனர். சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை மோத வைக்கின்ற செயல் இது என பல அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வைரஸ் தொடர்பான நிபுணர்கள் பாதுகாப்பான முறையில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதும் கொவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை மாத்திரம் இதுவிடயத்தில் இன்னுமின்னும் இழுபறிகளில் ஈடுபட்டு வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து, ஜெனீவா தீர்மானத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டது என்பது வெளிப்படையான உண்மையாகும். எனினும் இந்த வர்த்தமானியைக் கூட நடைமுறைப்படுத்தாது ஒரு வார காலத்திற்கும் மேல் இழுத்தடிப்பது முஸ்லிம்களை மேலும் நோகடிப்பதாகவுள்ளது.

தகனம் மாத்திரம் செய்ய வேண்டும் எனும் வர்த்தமானி வருவதற்கு முன்னரே பலவந்தமாக ஜனாஸாக்களை தூக்கிச் சென்று எரித்தவர்களுக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி வெளிவந்தும் அதனை நடைமுறைப்படுத்த மேலும் மேலும் கால அவகாசம் தேவை என்பது அரசாங்கத்தின் மிக மோசமான இனவாத முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

அரசாங்கம் இதுவிடயத்தில் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏலவே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் இதற்கான இடத்தை ஒதுக்குவதற்கு அப் பகுதி மக்கள் முன்வந்துள்ளனர். குறிப்பாக கொழும்பு மருதானை சின்னப் பள்ளிவாசலின் கீழ் வரும் குப்பியாவத்தை மையவாடியில் இதற்கான ஆய்வுகள் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு உரிய அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. மேலும் ஓட்டமாவடி பிரதேசத்திலும் நேற்று மற்றொரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான சகல உதவி ஒத்தாசைகளையும் பிரதேச மக்கள் வழங்க முன்வந்துள்ளனர்.

இந் நிலையில் அரசாங்கம் வேண்டுமென்றே முஸ்லிமல்லாத மக்கள் வாழுகின்ற பகுதிகளில் கொவிட் ஜனாஸாக்களை அடக்க எத்தனிப்பது வேண்டத்தகாத செயலாகும். இந்த தீர்மானத்தை மாற்றி முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான இடங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அடக்கம் செய்து பல வருடங்களின் பின்னரும் முஸ்லிம்கள் தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந் நிலையில் தொலைதூர தீவுகளில் அடக்கம் செய்வதானது தமது நேசத்துக்குரியவர்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதற்கான உரிமையைக் கூட மறுக்கும் செயலாகும். எனவேதான் அரசாங்கம் தனக்கிருக்கும் குறைந்தபட்ச மனிதாபிமானத்தையாவது இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் என நம்புகிறோம். இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களில் முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது என்ற செய்தி இன்றைய தினம் தமக்கு கிட்ட வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அதற்காக பிரார்த்திக்கிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.