சுக்ரா என்ற ஆளுமையின் வெற்றியும் சமூகத்திற்கான படிப்பினைகளும்

0 626

வரக்காமுறையூர் ராசிக்

இன்று இலங்கை முழுவதிலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர்தான் சுக்ரா முனவ்வர். யார் இந்த சுக்ரா? இவரை சகல இன மக்களும் புகழ்ந்து கொண்டாடுவதற்கும், இந்தளவு அவர் பிரபல்யம் அடைவதற்குமான காரணம் என்ன? இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவுக்கு சுக்ரா பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறார்.

காலி மாவட்டத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த சுக்ரா. சிங்கள மொழிப் பாடசாலையொன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இவருக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். தந்தை நோய்வாய்ப்பட்டுள்ளார். தாயின் முயற்சியில்தான் இந்த குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் தனது இணைய வழி கற்றலுக்காக மடிக் கணனியொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சுக்ராவுக்கு ஏற்பட்டிருக்கிறது. வறுமையில் வாழும் தாய், தந்தையரிடம் இதை வாங்கிக்கேட்க முடியவில்லை. எனவே சுயமாக தனது முயற்சியால் இதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அவருள் தளிர்விட்டிருக்கிறது. அப்போதுதான் சிரச தொலைக்காட்சியால் நடாத்தப்படும் லட்சாதிபதி (லக்ஸபதி) நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டு மில்லியன் ரூபா பரிசைப் பெற வேண்டும், அதன் மூலம் தனது மடிக் கணனி வாங்கும் கனவை நனவாக்க வேண்டும் என எண்ணி இருக்கிறார். அவருடைய நம்பிக்கை, தைரியம் வீண் போகவில்லை. அந்த போட்டியை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்தையும், நாடளாவிய ரீதியிலான மங்காப் புகழையும் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். இவரின் இந்த சாதனைக்கு மூன்று விடயங்கள் பிரதானமாக அமைந்தன.

1. தளராத நம்பிக்கையும், தெளிவான இலக்கும்
சந்தர்ப்பங்கள் தன்னைத்தேடி வரும் என காத்திருக்காமல் தானே ஒரு வாய்ப்பை உருவாக்கி அதில் முழு மூச்சாக ஈடுபட்டு ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை சுக்ராவுக்கு இருந்திருக்கிறது. அவர் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கின்ற போது இந்த மனவுறுதி வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அத்தோடு இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றார்களின் கஷ்டங்களை உணர்வதில்லை. தாம் விரும்பிய பொருளை வாங்கிக்கேட்டு அடம் பிடிப்பதை பார்த்திருக்கின்றோம். கற்றலுக்காகவன்றி பொழுது போக்கிற்காக ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கேட்கும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தரம் எட்டில் படிக்கும் மாணவர்களுக்குக் கூட இன்று பெற்றோர் கையடக்கத் தொலைபேசி  வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் சுக்ராவிடம் இதுவரை எந்த கையடக்க தொலைபேசியும் இல்லை. தேவைப்படின் தனது சகோதரியின் தொலைபேசியையே பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார். தான் சமூக வலைத்தளங்களைக் கூட பயன்படுத்துவதில்லை என அவர் கூறுகிறார். சராசரி மாணவர்களைப்போல் அவரில் அவ்வாறான ஆசைகள் பிறக்கவில்லை. மாறாக இன்றைய அசாதாரண சூழ்நிலையில் இணையம் மூலம் கற்பதற்காக ஒரு மடிக்கணனியை பெற வேண்டும் என்ற ஆவல்தான் அவருக்கு எற்பட்டிருக்கிறது. இதுவே அசைக்க முடியாத இலக்காக மாறி அவரை உற்சாகப்படுத்த தைரியத்துடன் களமிறங்கியிருக்கிறார். அவருடைய மனவலிமை, இலட்சிய வெறி என்பனவே இன்று அவரை பல மடிக் கணனிகளுக்கு சொந்தக்காரியாக மாற்றியதுடன், பிறருக்கும் உதவுகின்ற நிலைக்கு அவரை உயர்த்தியுள்ளது.

2. பெற்றார்களின் வழிகாட்டலும், அரவணைப்பும்

சுக்ராவின் முயற்சிகளில் படிக்கற்களைவிட தடைக்கற்களே அதிகமாக இருந்திருக்கின்றன. இருந்தாலும் இவை அனைத்தையும் அவர் வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார். தன்னை நோக்கி வந்த விமர்சனங்களையும், கேலிப் பேச்சுக்களையும் தூக்கி எறிந்துவிட்டு சாதனை வெறியோடு  பயணித்திருக்கிறார். இத்தனைச் சின்ன வயதில் அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இலக்கை அடைந்திருக்கிறாரென்றால் அவருக்குப் பின்னால் ஒரு மாபெரும் சக்தி இருந்திருக்க வேண்டும். அந்த சக்திதான் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக அவருடைய பெற்றோர்கள். சமூகம் என்ன சொன்னாலும் தன் மகள் மீது நம்பிக்கை வைத்து, தைரியம் கொடுத்து, வழிகாட்டல்களை வழங்கி, அன்புடன் அரணைத்து சுக்ராவை நாடறியச் செய்திருக்கிறார்கள். அவர்களால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை மிக கண்ணியமாக பயன்படுத்தி தற்கால பெண் பிள்ளைகளுக்கு ஒரு மகத்தான முன்மாதிரியை வழங்கியுள்ளார் சுக்ரா. எனவே அவருடைய பெற்றோர்களின் அர்ப்பணிப்புதான் இந்த வெற்றிக்கான அடிப்படை என்றால் அதில் மிகையில்லை.
3. மொழிப் புலமையும் ஆழமான அறிவும் ஆளுமையும்
மொழிப் புலமை என்பது ஒரு இனம் மற்றொரு இனத்தை புரிந்து கொள்ளவும், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை விளங்கிக் கொள்ளவும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், தன் ஆளுமைகளை வெளிப்படுத்தவும் உதவி புரிகிறது. அந்த வகையில் சுக்ராவிடம் காணப்படும் சிங்கள மொழி ஆற்றல் அதிகமானோரை பிரமிக்க வைத்திருக்கிறது. சமய ரீதியில் இஸ்லாமியராக இருந்தாலும் சகோதர மொழி மீது அவர் கொண்டுள்ள பற்றும், அதில் அவருக்குள்ள ஆழமான அறிவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பௌத்த மதம் பற்றியும், சிங்கள இலக்கியம் பற்றியும், சிங்கள இராச்சியங்களின் வரலாறு பற்றியும் சரளமாக பேசும் திறமையைக் கண்டு சிங்கள மக்களே திகைத்துப் போயிருக்கிறார்கள். சிங்கள கவிதைகளை பாடுகின்ற விதமும், அதற்கு அவர் விளக்கம் அளிக்கின்ற விதமும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அவர், கேட்கப்படும் வினாவுக்கான விடையை மட்டும் சொல்லவில்லை. திரையில் காட்டப்படுகின்ற நான்கு விடைகளையும் தெளிவான மொழி நடையில் விளக்குகிறார். இந்த மொழி ரீதியான அறிவும், ஆற்றலும், சிங்கள இலக்கியம் மற்றும் வரலாறு பற்றிய தெளிவும்தான் அவரை ஒரே இரவில் இலட்சாதிபதியாக மாற்றி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பொதுவாகவே பெண்கள் கூச்ச சுபாவமுடையவர்கள். இருவருக்கு மத்தியில் கூட அவ்வளவு சரளமாக கதைக்கமாட்டார்கள்.
 இருந்தாலும் சுக்ரா என்ற இந்த பதினேழு வயது மாணவி எந்தவிதமான அச்சமும், சலனமுமில்லாமல் மேடைக் கூச்சமின்றி உரையாடுகிறார். தனது கருத்துக்களை தைரியமாக முன்வைக்கிறார். முஸ்லிம் பெண்களென்றாலே இப்படித்தான் என இதுவரை சிங்கள மக்கள் மனதில் குடியிருந்த தப்பபிப்பிராயத்தை அவர் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். அவருடைய ஆளுமைக்கு முன்னால் நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்தன சூரியபண்டார கூட மிரண்டு போகிறார். அவர் சுக்ராவின் ஆற்றலை உலகறியச் செய்வதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
இவ்வாறான பெண் ஆளுமைகள்தான் இனங்களை இணைப்பதற்கான ஒரே வழி என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. சுக்ராவின் வெற்றிக்கும், அவர் தேசத்தின் சொத்தாக கருதப்படுவதற்கும் அவரிடமுள்ள ஆளுமைதான் வழிவகுத்திருக்கிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
சுக்ரா என்ற ஏழை மாணவி ஓரே இரவில் பணக்காரியானது சரித்திரமல்ல. இந்த நிகழ்வுக்குப் பின்னால் அவர் விட்டுச் சென்றுள்ள தடயங்கள்தான் பெரிய வரலாறு. இன்று இன மத பேதங்களுக்கு அப்பால் சகல இலங்கையரும் ஒன்றிணைந்து சுக்ராவை பாராட்டுகிறார்கள்,பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவப் படுத்துகிறார்கள். இவரை ஒரு மகளாக, சகோதரியாக கருதி கொண்டாடுகிறார்கள். இனவாதம் முற்றிப் போயிருக்கும் இந்த கால கட்டத்தில் சுக்ரா இனங்களுக்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி, நாளைய சந்ததியினரிடையே ஒரு நம்பிக்கையை, கனவை தோற்றிவித்திருக்கிறார். எனவே சுக்ராவின் வெற்றியானது அவருக்கு மாத்திரமான வெற்றியல்ல. முஸ்லிம் சமூகத்திற்குமான வெற்றியாகும். அந்த வகையில் சுக்ராவின் வெற்றி நமக்கு பல செய்திகளைச் சொல்கிறது. படிப்பினைகளைத் தருகிறது. அவை என்ன என்பது பற்றி அடுத்த வாரம் விரிவாக அலசுவோம். இன்ஷா அல்லாஹ். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.