உக்ரேன் உல்லாச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்றால் கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாதது ஏன்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்

0 662

உக்ரேன் நாட்டிலிருந்து அடுத்தடுத்து விமானங்கள் மூலம் உல்லாசப் பயணிகளை நாட்டுக்குள் அழைத்து வந்து இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று வர அவர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை வைத்தியத்துறை அதிகாரிகளால் முடியும் என்றால், அதுவும் இவர்கள் மூலம் கொவிட்-19 பரவல் பாதிப்பு அதிகம் உள்ளது எனத் தெரிந்து கொண்டே இந்த அனுமதிகளை வழங்க முடியும் என்றால், கொவிட்-19 ஆல் மரணம்  அடைபவர்களுக்கு கௌரவமான ஒரு அடக்கத்தை வழங்குவதற்கான தெரிவை வழங்காமல் இருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் இன்று சுமார் 190 நாடுகளில் அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அடக்கத்தின் மூலம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஆபத்துக்களும் இல்லை என்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையிலும் இலங்கையில் மட்டும் அடக்கம் செய்யும் முறை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

தற்போது நலிவடைந்துள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாமலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு கொவிட் கொத்தணி ஒன்று உருவாகும் ஆபத்தைக் கருத்தில் கொண்டும் கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது. அடக்கம் செய்வதன் மூலம் கொரோனா பரவல் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று மருத்துவ மற்றும் விஞ்ஞான சமூகத்தின் பெரும்பாலான பிரிவினர் ஏற்றுக்கொண்டு, அதற்கான அனுமதியையும் உலகளாவிய ரீதியில் அளித்துள்ள நிலையில் இலங்கை மருத்துவதுறை அதிகாரிகள் சிலர் மட்டும் இவ்விடயத்தில் நம்பிக்கை கொள்ளாது அதை ஏற்றுக்கொள்ள விடாமல் அவர்களை தடுத்துவரும் காரணங்கள் என்ன?

கொவிட்-19 பரவல் ஆபத்து கண்ணெதிரே தெரிகின்ற போதிலும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஆபத்தின் மத்தியில் அலுவலகங்களும் மீண்டும் செயற்படுகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றது. பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்குகின்றன. வைரஸ் பரவும் ஆபத்தும் அச்சமும் இருக்கின்ற நிலையிலும் இவை எல்லாம் இடம்பெற வேண்டியுள்ளது. ஆனால் இவற்றைவிட ஒரு வீதம் கூட வைரஸ் பரவல் ஆபத்து இல்லாத அடக்கம் செய்யும் விடயத்தில் மட்டும் ஏன் அடம்பிடிக்க வேண்டும்? இலங்கை பெரும்பான்மை தீவிரவாதத்துக்கு, விஞ்ஞானத்தைக் கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என உலகுக்கு காட்ட நினைக்கும் தேவை ஒரு சிலருக்கு இருந்தால் மட்டுமே இவ்வாறு அடம்பிடிக்க வேண்டும். இச்செயற்பாட்டின் முலம் ஏன் சிறுபான்மையினர் மத்தியில் தீவிரவாதத்தைத் திணிக்க வேண்டும்?

கொவிட்-19 தடுப்பு மருந்து விடயத்திலும் ஏனைய சுகாதார விடயங்களிலும் நாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம். ஆனால் அடக்கம் செய்யும் விடயத்தில் மாத்திரம் அதைப் புறக்கணிக்கின்றோம். அவ்விடயத்தில் மட்டும் எம்மிடம் பழங்குடிவாதம் மேலோங்கி உள்ளதாக காட்டிக் கொள்கின்றோம். நுண்கிருமியியல் துறையில் சிரேஷ்டப் பேராசிரியரான பேராசியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான கிருமியியல், நுண்ணுயிரியல், தொற்றுநோயியல் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய நிபுணத்துவ குழு அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று தெளிவாக சிபார்சு செய்துள்ளது. இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) கொவிட்-19 ஆல் மரணம் அடைபவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக அடக்கம் செய்வதைப் பின்பற்றலாம் என அறிவித்துள்ளது. இலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் (CCPSL), நரம்பியல் நிபுணர் பத்மா குணரத்ன தலைமையிலான இலங்கை மருத்துவ சபை உட்பட பல வைரஸ் நுண்ணுயிரியல் நிபுணர்களும் கூட இலங்கையில் கொவிட்-19 ஆல் மரணம் அடைபவர்களை அடக்கம் செய்யும் முறையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையிலான குழு ஏனைய துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையில் இதயசுத்தியுடன் கவனம் செலுத்த வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். பெருமளவான நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட இன்னும் பலர் அடக்கம்,தகனம் என இரு தெரிவுகளுக்கும் வழியமைக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.
இலங்கையின் சட்டமும் இவ்விரு தெரிவுகளுக்கும் அனுமதி அளிக்கின்றது. ஆனால் இவற்றை மீறும் வகையில் சுகாதார அமைச்சின் விதிமுறைகள் அமைந்துள்ளன.

இதனால் இதுவரை உலகளாவிய ரீதியில் பாராட்டைப் பெற்று வந்த இலங்கை மருத்துவ மற்றும் சுகாதார சேவைப் பணிகள் சர்வதேச ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதனால் தமது உறவினர்களைத் தகனம் செய்ய சம்மதம் தெரிவிக்காத மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நட்டஈடுகளைக் கோரி நடவடிக்கை எடுத்தால் அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஆபத்தான நிலைக்கு சுகாதாரத்துறையினரும் வைத்தியத் துறையினரும் தள்ளப்படுவர்.
இதனிடையே சில பிரிட்டிஷ் சட்டத்தரணிகள் இது தொடர்பான சட்ட நடவடிக்கை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கனடா பாராளுமன்றத்திலும் இவ்விடயம் எடுக்கப்படவிருப்பதாக தெரிகின்றது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.