ஆணைக்குழுவில் நடந்தது என்ன?

கையடக்கத் தொலைபேசியில் ஒலிப்பதிவு ; வட்டிலப்பம் கொண்டு சென்ற விவகாரங்கள்

0 593

ஆணைக்குழு செய்திகளை நேரடியாக அறிக்கையிட்ட ஊடகவியலாளரின் வாக்குமூலம்

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடனும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடனும் தொடர்புபடும் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வரும் முன்னுக்கு பின் முரணான, ஆதாரமற்ற கருத்துக்கள் தொடர்பில் குறித்த இரண்டு சம்பவங்களையும் நேரடியாக அறிக்கையிட்ட ஊடகவியலாளர் என்ற வகையில் உண்மைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த கட்டுரையை வரைகிறேன்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், முஸ்லிம் சமூகத்தின் பிரதான ஆன்மிக தலைமை நிறுவனமாக கருதப்படும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர், அதன் உதவிப் பொதுச் செயலாளர் ஆகியோர் சாட்சியம் பதிவு செய்யப்படும் விசாரணை அறையில் நடந்துகொன்ட முறைமைகளை மையப்படுத்தியே சமூகத்தில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உருவாகியுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பான எல்லா உண்மைகளும் எமக்குத் தெரிந்திருந்த போதிலும் உலமா சபை மீதான மதிப்பிலும் மரியாதையிலும் இதுவரை அடக்கிவாசித்து வந்த நிலையில், இப்போது விடயம் எல்லை மீறிப் போயிருப்பதால், எமது பத்திரிகையையே குறைபிடிக்க முற்பட்டுள்ளதால் அவற்றை பகிரங்க வெளியில் எழுதுகிறோம்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, சாட்சி விசாரணைகளை ஆரம்பித்த நாள் முதல், அவ்வாணைக் குழுவின் நடவடிக்கைகளை அங்கு சென்று அறிக்கையிட்டுவரும் ஒரே ஒரு தமிழ் பேசும் ஊடகவியலாளன் என்ற ரீதியிலும், இச்சம்பவங்கள் தொடர்பில் நேரடியாக, சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை அறிக்கையிட்டவன் என்ற ரீதியிலும் இந்த தெளிவுபடுத்தலை விடிவெள்ளி ஊடாக முன்வைப்பது எனது பொறுப்பு எனக் கருதுகிறேன்.

ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்று கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது.

ஆணைக் குழுவின் தலைவராக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியும் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராக செயற்படும் ஜனக் டி சில்வா கடமையாற்றுகின்றார். மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ச, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜம்இய்யதுல் உலமா சபையினர் ஏன் சாட்சியத்துக்காக அழைக்கப்பட்டனர்?

உண்மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் மிக பரந்துபட்டது. அந் நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்த செயற்பாடாகும். இதனை அனைவரும் அறிவர்.

இந் நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினர் எதற்காக ஆணைக் குழுவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர் என்ற கேள்வி எழலாம். ஆம், ஆணைக் குழுவில், முஸ்லிம் சமூகத்தை சார்ந்த மற்றும் மாற்று மதத்தினர் முன்வைத்த சாட்சியங்கள் பலவற்றில் முஸ்லிம்களின் ஆன்மிக நடவடிக்கைகள் தொடர்பிலான விடயங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது. அத்துடன், புனித அல் குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியங்கள் ஊடாக எழுப்பப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகத்தினரிடையே உள்ள ஆன்மிக குழுக்கள் தொடர்பிலான பல்வேறு சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் ஆணைக்குழு முன்னிலையில் பல சாட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

காத்தான்குடியில் அப்துல் ரவூப் என்பவரின் நம்பிக்கைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கொடுத்த பத்வா, மிகப் பெரும் பேசு பொருளாக ஆணைக் குழுவில் உருவெடுத்திருந்தது. அந்த பத்வாவில் கூறப்பட்டிருந்த இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோருக்கான தண்டனை தொடர்பிலான குறிப்பு தொடர்பில் அடிக்கடி பேசப்பட்டது. குறிப்பாக ஜம் இய்யதுல் உலமா சபைக்கு எதிராகவும் பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஹலால் விவகாரம் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. மத்ரஸா, மக்தப் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவான சாட்சிகள் தேவைப்பட்டன.

இவை அனைத்தும், அடிப்படைவாதத்தை விதைக்கும் செயற்பாடுகளாக ஆணைக் குழுவுக்கு சாட்சியங்கள் அளிக்கப்பட்ட நிலையிலேயே, அவ்வாறு முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்களின் சமய நம்பிக்கைகள், உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சரியான பதில்களை அளிக்க, முஸ்லிம்களின் ஆன்மிக உயர் பீடமாக கருதப்பட்ட ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. இதனைவிட, அங்கு சென்று தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த முஸ்லிம் அமைப்புக்கள் பலவும் எழுத்து மூலம் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தன. அதில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையும் ஒன்றாகும். அவ்வாறான பின்னணியிலேயே உலமா சபைக்கும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

கையடக்கத் தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்த சம்பவம் : செப்டம்பர் 9 ஆம் திகதி நடந்தது என்ன?

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்குள் தனது தொலைபேசியை, திட்டமிட்டு எடுத்துச் சென்று, பொது பல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சாட்சியத்தை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி செயலாளர்களில் ஒருவரான மௌலவி முர்சித் முளப்பர் பதிவு செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய குறித்த மௌலவிக்கு எதிராகவும், தொலைபேசியை ஆணைக் குழுவுக்குள் எடுத்துச் செல்ல உதவியதாக கூறப்படும் சட்டத்தரணிக்கு எதிராகவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வா, ஆணைக் குழுவின் செயலாளருக்கு இதன்போது ஆலோசனையும் வழங்கியிருந்தார்.

அத்துடன் தொலைபேசியை ஆணைக் குழுவுக்குள் கொண்டு செல்ல உதவிய சட்டத்தரணிக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒழுக்காற்று பிரிவில் முறையிடுமாறும் அவர் செயலாளருக்கு உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

அவ்வாணைக்குழுவில், பொது பலசேனாவின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்திருந்தார். அவரது சாட்சியத்தில் கூறப்பட்ட விடயங்களை சவாலுக்கு உட்படுத்தி, அதனால் தமது தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தன.

அதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி செவ்வாய் முதல், பொது பல சேனாவின் செயலர் கலகொட அத்தே ஞானசாரவிடம் குறுக்குக் கேள்வி எழுப்ப, அந்த 10 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டன. அதன்படி செப்டம்பர் 9 ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

இந்தக் குறுக்கு விசாரணையின்போது ஞானசார தேரர் முஸ்லிம் சமூகம் மீது தான் கடந்த காலங்களில் முன்வைத்த பல குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்பதை ஒத்துக் கொண்டார். இது ஆணைக்குழுவில் இடம்பெற்ற குறுக்கு விசாரணைகளிலேயே மிகவும் முக்கிய அமர்வாக பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி செயலாளர்களில் ஒருவரான முர்சித் முளப்பர் மௌலவி ஆணைக் குழுவில் பொது மக்கள் இருக்க முடியுமான பகுதியில் இருந்தார்.

எனினும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் அவரை, ஆணைக் குழுவின் சாட்சி விசாரணை அறைக்கு வெளியே அழைத்துச் சென்று பரிசீலித்த போதே, அவர் தனது கையில் வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் நடுவே கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மறைத்து வைத்து, ஞானசார தேரர் வழங்கும் சாட்சியத்தை ஒலிப் பதிவு செய்துள்ளமை தெரியவந்தது.

குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகளை ஒளி, ஒலிப் பதிவு செய்வதை அவ்வாணைக் குழு தடை செய்துள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை உள்ளே கொண்டு செல்வதையும் தடை செய்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் மிகத் தெளிவாக ஆணைக்குழுவின் நுழைவாயில் கதவுகளில் ஒட்டப்பட்டுமுள்ளன.

இவ்வாறான பின்னணியில், குறித்த மௌலவியின் செயற்பாடு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அவர் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் இரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

இதன்போதே தனது தொலைபேசியை ஜம்இய்யதுல் உலமா சபை சார்பில் ஆஜராக வந்த சட்டத்தரணிகள் குழுவில் அடங்கிய ஒரு கனிஷ்ட சட்டத்தரணியிடம் கொடுத்து, ஆணைக் குழுவுக்குள் எடுத்துச் சென்றுள்ளமையும், ஆணைக் குழுவுக்குள் வைத்து அதனைப் பெற்று, இவ்வாறு ஒலிப்பதிவு செய்துள்ளமையும் தெரியவந்தது. ( ஆணைக்குழுவுக்குள் சட்டத்தரணிகள் தொலைபேசி கொண்டு செல்ல அனுமதியுள்ளது)

எனவே, உள்ளே தொலைபேசி கொண்டு சென்று ஒலிப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிந்துகொண்டே, அவர், இவ்வாறு செயற்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரிய வந்திருந்தது.

இதனையடுத்து ஊடகங்கள் ஞானசார தேரரின் சாட்சியத்தைவிடுத்து இந்த சம்பவத்தையே பரபரப்பாக அறிக்கையிட்டன. (எனினும் நாம் குறித்த சாட்சியத்தை 25.09.2020 விடிவெள்ளி இதழில் முழுமையாக பிரசுரித்திருந்தோம்.)

ஆணைக்குழுவுக்கு வட்டிலப்பம் எடுத்துச் சென்ற சம்பவம் : டிசம்பர் 10 ஆம் திகதி நடந்தது என்ன?

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு வந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பொதிகளை எடுத்து வந்ததை அவதானிக்க முடிந்தது. சுமார் 20 பொதிகள் இவ்வாறு எடுத்து வரப்பட்டதுடன் அதில் 12 பொதிகள் ஆணைக் குழுவின் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்துக்குள் ( லோடஸ் அறை ) எடுத்துச் செல்லப்பட்டதுடன் ஏனையவை, ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.

அந்த பொதிகளில் பலவற்றை ஆணைக் குழுவின் சேவையாளர்கள் சிலரும் இணைந்து ஆணைக் குழுவுக்குள் எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

அந்த பொதிகளில் இருந்தது என்ன?

நீதிமன்றத்துக்கு சமமான கௌரவத்துடன் சாட்சி விசாரணை இடம்பெறும் இடத்துக்குள் சாட்சியாளர் ஒருவர் இவ்வாறு பொதிகளை எடுத்துச் சென்றமை அங்கிருந்தோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வழமையாக ஆணைக் குழுவுக்குள் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக கொவிட் நிலைமை காரணமாக சோதனை நடவடிக்கைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த பொதிகளை எடுத்துச் செல்லும் போது ஆணைக் குழுவின் சேவையாளர்களும் தொடர்புபட்டிருந்ததால் எவரும் தீவிரமாக பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த பொதிகளின் உண்மையை அறிய நாம், குறிப்பாக விசாரணை அறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை அணுகி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டோம்.

குறித்த பொதிகளை தாம் சோதனை செய்ததாகவும், அதில் வட்டிலப்பம் இருந்தமை உறுதியான நிலையில், ஏனைய நாட்களிலும் ஆணைக் குழுவில் கடமையாற்றுவோர் உணவுகளை உள்ளே எடுத்துச் செல்வதால், இப் பொதிகளை உள்ளே எடுத்துச் செல்வதை தாம் தடுக்கவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

மறுக்கப்பட்ட வட்டிலப்பம்:

எவ்வாறாயினும் இந்த வட்டிலப்ப பொதிகள், ஆணைக் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்படாது உடனடியாகவே திருப்பியனுப்பப்பட்டன. அதனையடுத்து அவை கொண்டு வந்தவர்களாலேயே தமது வாகனங்களுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற தினம் ஆணைக்குழு இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை. எனினும் மறு நாள் அதாவது டிசம்பர் 11 ஆம் திகதி காலை, இது தொடர்பில் ஆணைக் குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா , உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றினை சாட்சி அறையில் விடுத்துள்ளார். எனினும் இதன்போது ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே இருக்கவில்லை. இது தொடர்பில் அறிந்து கொண்ட நாம் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பின் எழுத்து மூல பிரதியைப் பெற்றுக் கொண்டோம். குறித்த அறிவிப்பு எழுத்து மூலம், ஆணைக் குழுவின் செயலளரின் உறுதிப்படுத்தலுடன் எமக்கு (ஊடகவியலாளர்களுக்கு) கிடைத்தது.

ஆணைக் குழு கூறியதென்ன?

டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10.55 இற்கு ஆணைக் குழு இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“நேற்று ( டிசம்பர் 10 ஆம் திகதி) அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியின் மேலதிக சாட்சி விசாரணைகள் இடம்பெறவிருந்தன. அவர் ஆணைக் குழுவுக்குள் வரும் போது பொதிகள் சிலவற்றை எடுத்து வந்துள்ளார். அவ்வாறான பொதிகளை அவர் எடுத்து வருவதாக இந்த ஆணைக் குழுவுக்கு அவர் முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை. அவர் அவ்வாறான பொதிகளை எடுத்து வந்துள்ளதாக ஆணைக் குழு அறிந்து கொண்ட மறுகணம், அவற்றை வெளியே எடுத்துச் செல்லுமாறு அவருக்கு ஆணைக் குழு தெரிவித்திருந்தது. அதன்படி அந்த பொதிகள் குறுகிய நேரத்துக்குள் ஆணைக் குழுவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. இதனை இவ்வாணைக்குழு அவதானித்தது. அவ்வாறான பொதிகளை ஆணைக் குழுவுக்குள் எடுத்து வருவதையும், சிறிது நேரத்தில் அங்கிருந்து எடுத்துச் செல்வதையும், ஆணைக் குழுவுக்கு வெளியே, அருகே இருந்த அனைவரும் மிக சுலபமாக அவதானித்திருப்பர் என்பதையும் பதிவு செய்து வைக்கின்றேன்.’ என ஆணைக் குழுவின் சாட்சிப் பதிவினிடையே ஆணைக் குழுவின் தலைவரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

உலமா சபை தலைவரின் மௌனம்:

எனினும் குறித்த பொதிகள் என்ன நோக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டன என்பன உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்தாமல் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றார். இது தொடர்பில் விடிவெள்ளி பல தடவைகள் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர், பதில் செயலாளர், சிரேஷ்ட உறுப்பினர்களையும் உலமா சபையின் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு கருத்து கேட்க முனைந்த போதும் அவர்கள் எவரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

நீதிமன்ற செயற்பாடை ஒத்த இடத்தில் நடந்துகொள்வது எப்படி?

ஜம் இய்யதுல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி அன்றைய தினம்தான் முதல் தடவையாக ஆணைக் குழுவுக்கு விசாரணைக்கு வந்தவர் அல்ல. அவரிடம் ஏற்கனவே சாட்சிப் பதிவின் போது, நீதிமன்றில் நீங்கள் இதற்கு முன்னர் சாட்சியமளித்துள்ளீர்களா என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்ததையும் அவர் மறந்திருக்கமாட்டார். அத்துடன், அவருக்கு நீதிமன்ற முறைமையின் அடிப்படையிலேயே சாட்சிப் பதிவு இடம்பெறுவதாக முதல் நாளன்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்படியாயின், மூன்றாவது நாள் சாட்சியமளிக்கும் போது, ஆணைக் குழுவின் நிலைப்பாட்டின் படி, அவர்களுக்கு எந்த முன் அறிவித்தலும் கொடுக்காது, இவ்வாறு பொதிகளை எடுத்துச் சென்று அவர்களுக்கு கொடுக்க முற்பட்டது ஏன்? இதனூடாக றிஸ்வி முப்தி உள்ளிட்ட தரப்பினர் என்ன எதிர்பார்த்தனர்? இதற்கான பதில்களை றிஸ்வி முப்தியோ உலமா சபையோ வெளிப்படுத்த வேண்டும்.

பிற சமூகங்களின் முன் ஏற்பட்ட தலை குனிவு

செப்டம்பர் 9, டிசம்பர் 10 சம்பவங்களின் போதும் சரி, ஏனைய நாட்களிலும் சரி ஆணைக் குழு நடவடிக்கைகளை அங்கிருந்து, அறிக்கையிடும் ஒரே ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் பேசும் ஊடகவியலாளன் என்ற ரீதியில், ஆணைக் குழுவுக்கு வெளியே அச்சம்பவங்களை மையப்படுத்தி, என்னிடம் எழுப்பப்பட்ட கேள்விகளின் போது ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனக்கு ஏற்பட்ட தலைகுனிவை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் ஏற்பட்ட தலைகுனிவாகவே நான் பார்க்கிறேன்.

இந்த சம்பவங்கள் குறித்த கதைகள், கிண்டல்கள் ஆணைக் குழு விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள், அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளிடையே பல நாட்கள் பேசு பொருளாக இருந்தது. இவற்றுக்கு நானே முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

ஏற்கனவே முஸ்லிம் குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 300 அப்பாவிப் பொது மக்களைப் பலியெடுத்த தீவிரவாதச் செயல் குறித்து விசாரகைளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில், அது தொடர்பில் சாட்சியமளிக்க வந்த அதே முஸ்லிம் சமூகத்தின் தலைமைப்பீடத்தில் உள்ளவர்கள் நடந்து கொண்ட பொறுப்பற்றவிதமானது என்னை வெகுவாகப் பாதித்தது.

எமது முஸ்லிம்களின் ஆன்மிக நடவடிக்கைகள் தொடர்பிலான உயர் பீடமாக ஜம் இய்யதுல் உலமா சபையினை பிற சமூகத்தவரும் கருதும் நிலையில், அதன் தலைவரும், பிரதிச் செயலாளர்களில் ஒருவரும், நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரும் கொடூர சம்பவம் ஒன்று குறித்தான விசாரணைகளின் போது, அதனை மலினப்படுத்தும் விதமாக இவ்வாறு நடந்துகொண்டமை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தற்போது றிஸ்வி முப்தி கொண்டுவந்த பொதிகளை நாம் திருப்பியனுப்பினோம் என ஆணைக்குழு தலைவரே எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில், இந்த வட்டிலப்பக் கதையிலுள்ள தனது பக்க நியாயங்கள் அல்லது தகவல்களை சமூக நன்மை கருதி வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன்.

குறிப்பாக, றிஸ்வி முப்தி எதற்காக ஆணைக் குழுவுக்கு வட்டிலப்பம் எடுத்து சென்றார் என்ற கேள்வி இன்னும் ஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. “ஆணைக் குழுவின் செயற்பாடுகள் மீது பொது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யவே அவர் இவ்வாறு நடந்துகொண்டாரா என்பது கூட ஒரு சந்தேகமே” என சகோதர ஊடகவியலாளர் ஒருவர் என்னுடன் உரையாடும் போது ஆணைக் குழு வளாகத்தில் வைத்து கேள்வி எழுப்பியதையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஓரிரு மாதங்களில் ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் அதன் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கள ஊடகங்களால் இந்த வட்டிலப்ப விவகாரம் மீண்டும் கிளறப்படும் வாய்ப்புகளும் இல்லாமலில்லை.

மேலும் பல இரகசியங்கள் வெளிவரலாம்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் பலர், இதற்கு முன்னரும் இவ்வாறான பொதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவா என ஆராய்ந்து வருகின்றனர். இதன்போது, சில தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த தகவல்கள் உறுதி செய்யப்படும் வரை அவற்றை நாம் வெளிப்படுத்த விரும்பவில்லை.

எமது சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த நிலைகளில் உள்ளவர்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட முழு சமூகம் தொடர்பிலும் தப்பபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கலாம். அது ஏற்கனவே தாராளமாகத் தோற்றுவிக்கப்பட்டும்விட்டது.

எனவே பொறுப்பு வாய்ந்த நிலைகளில் உள்ளவர்கள் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில், அவ்வாறான பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்பற்று செயற்படும் போது, அல்லது சமூகத்துக்கு தலை குனிவை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளும் போது, அது சார்ந்த அறிக்கையிடல்களை முன்னெடுத்து சமூக மட்டத்தில் அறிவூட்ட, மாற்றங்களை கொண்டுவர நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை. அத்துடன் அவர்கள் சமூக மேம்பாட்டுக்காக முன்னெடுக்கும் ஒவ்வொரு நல்ல விடயங்களுக்கும் கைகொடுக்கவும் தயங்கப் போவதில்லை.

இறுதியாக முஸ்லிம் சமூக, சமய தலைமைத்துவங்களில் இருப்போர் முஸ்லிம் சமூகத்திற்கு பெருமையையும் கௌரவத்தையும் தேடித்தராவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தலைகுனிவுகளை ஏற்படுத்தாதீர்கள் என வினயமாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.