கொவிட் 19 பொருளாதார அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

எம்.எச்.எம்.ஹனான், MBS, B.Com (Spcl)

0 1,416

கொரோனா அச்சுறுத்தல் சர்வதேச சமூகத்தை ஆட்டம் காணச்செய்துள்ளது. வல்லரசு ஜாம்பவான்கள்  என கூறிக்கொள்ளும் நாடுகள் இன்று அச்சத்தில் உறைந்து போயுள்ளன. உலக வரலாற்றில் சர்வதேச அரசியல், பொருளாதார கேந்திரங்கள், இத்தகைய பேரழிவுக்குப் பின் நிலைகுலைந்து இடம் மாறிச் சென்றுள்ளன. கொரோனா உருவாக்கும், சுகாதார நெருக்கடி காலத்தால் கடந்து செல்லும். ஏனெனில் வரலாற்று ஓட்டத்தில் இவ்வாறு பல நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இதனால் உருவாகப்போகும் சமூக, அரசியல், பொருளாதார தாக்கங்கள், மாற்றங்கள் பல எதிர்பாராத விளைவுகளை கொண்டு வரும். உலகம் தனது முன்னைய நிலையை அடைய பல வருடங்கள் செல்லலாம். சில வேளை தசாப்தங்கள் கூட தேவைப்படும். இந்நிலையில்  இலங்கை இத்தகைய பாரிய நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது  எமக்கு முன்னால் உள்ள மிக முக்கியமான சவாலாகும்.

பண்டைய இலங்கை பொருளாதாரம் உணவு உற்பத்தியில் தங்கி நிற்காத பொருளாதாரமாகக் காணப்பட்டது. ஆனால் காலவோட்டத்தில் எமது பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறியுள்ளது. மேலும், எமது நாடு பல்வேறு  பொருட்கள் சேவைகளில் பல நாடுகளில் தங்கியிருக்கக் கூடிய நிலையைக் காணலாம். உலகமயமாதல், தாராள பொருளாதார கொள்கைகள் எமது பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்கு வடிவமைத்துள்ளன. தற்போதுள்ள சுகாதார அச்சுறுத்தல் (Covid -19 threat) இதுவும் கடந்து போகும். ஆனால் பொருளாதார ரீதியாக நாம் எதிர் நோக்கவுள்ள அச்சுறுத்தல் பாரியது. இச் சவாலை எதிர் கொள்ள நாம் தயார் நிலையில் உள்ளோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அது பற்றி தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம். மிஸ்ர் தேசத்தை (எகிப்து) ஏழு வருட பஞ்சத்திலிருந்து விடுவித்த யூசுப் நபி போன்று மூலோபாய ரீதியாக அணுக வேண்டி உள்ளது.

உலக பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன, சர்வதேச வரைபடத்தில் இலங்கை என்ற நாடு அரசியல், பொருளாதார ரீதியாக எந்த வகிபாகத்தை, பெறுமானத்தை கொண்டுள்ளது  என்பதை முதன்மையாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச பொருளாதார ஆய்வு அறிக்கைகளும் மற்றும் இலங்கை பற்றி குறிப்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளும் எமக்கு பெரும் அபாய சமிக்ஞைகளை தந்து கொண்டிருக்கின்றன. இலங்கை குறித்து நாம் பார்க்கும் முன் சர்வதேச பூகோள பொருளாதார அரசியல் எவ்வாறு மாற்றத்துக்குள்ளாகப் போகிறது என்பதை விளங்குவது மிக முக்கியமாகும். ஏனெனில் எமது பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
பூகோளமயமாதல், இன்றுள்ள பொருளாதாரத்தின் அச்சாணியாகும். இந்த அடித்தளம் இன்று ஆட்டம் கண்டு விட்டது. இதனை சர்வதேச ரீதியாக கொண்டு சென்ற சக்திகள் தங்களது எல்லைகளை மூடியுள்ளதோடு, ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டு  மில்லியன் கணக்கானோர்களின் பயணங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தனித்து செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு அத்தியாவசிய பொருட்கள் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்கள் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆகவே ஏற்றுமதி இறக்குமதி எனும் துறையே பாரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. இது இவ்வாறு இருக்க உலக உணவு ஏற்றுமதியில் பங்கு வகிக்கும் நாடுகள் தமது உணவு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அனுப்புவதை நிறுத்தி வருகின்றன. இதனால் உணவுக்காக இறக்குமதிப் பண்டங்களில் தங்கியிருக்கும் பல நாடுகள் பெரும் உணவுத்தட்டுப்பாட்டை எதிர் நோக்க வேண்டி ஏற்படும். இதற்கு இலங்கை போன்ற நாடுகளும் விதி விலக்கல்ல.

நாம் உணவுப்பதுக்கல் செய்யும் நிறுவனங்கள் பற்றி முறையிடுகிறோம். ஆனால் இன்று நாடுகளே உணவுப் பதுக்கலை ஆரம்பித்துள்ளன. கோதுமை மா ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றான கசகஸ்தான் தற்காலிகமாக தனது ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. வியட்நாம் அரிசி ஏற்றுமதிக்கான புதிய ஒப்பந்தங்களை  நிறுத்தியுள்ளது. அதேபோன்று செர்பியா தனது சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. இதையும் தாண்டி இடம் பெற்றாலும் அவைகளை இறக்குமதி நாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய விநியோக பாதைகளும் முற்றாக முடங்கிய நிலையிலேயே உள்ளது. குறிப்பாக கப்பல் சேவைகளும், அது சார்ந்த தொடர்பாடல் துறையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நாடுகளுக்கிடையிலான பொருளாதார கட்டுப்பாடுகள் அதிகரித்து உணவு விநியோகப் பாதைகளும் கட்டுப்படுத்தப்பட்டால் சர்வதேச உணவுத்தட்டுப்பாடு தோன்றுவதை தடுக்க முடியாது போகும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சுட்டிகள் எவற்றை சொல்லுகின்றன என்பதைப்  பார்த்தால், அதுவும் மிக அபாய எச்சரிக்கையையே எமக்கு புலப்படுத்துகிறது.

Ø இலங்கையின் நாணயப் பெறுமதி டொலர் ஒன்றுக்கு ரூபா 199/= வரை வீழ்ச்சியடைந்துள்ளது. (2020.04.06)
Ø சுற்றுலாத்துறை முழுமையாக மூடப்பட்ட நிலைக்கு வந்துள்ளது.
Ø எமது ஏற்றுமதிகளும் முடிந்த காலாண்டில் ஸ்தம்பித்த நிலையை நோக்கி நகர்ந்து செல்கிறது.
Ø நாட்டில் ஏற்பட்டுள்ள் விநியோக சிக்கல்களினால் செயற்கையான விலைவாசி அதிகரிப்பை காண முடிகிறது. எனவேதான் அரசாங்கம் கடுமையான விலைக்கட்டுப்பாடுகளை கொண்டு வர நேர்ந்துள்ளது.
Ø முக்கிய பொருளாதார நிவாரண செயற்பாடுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அவற்றில் மத்திய வங்கியால் ரூபா 50பில்லியன் பெறுமதியான மீள் நிதியீட்டும் திட்டம் உள்நாட்டு வர்த்தக துறையை எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது
Ø எமது நாணயப் பெறுமதியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் மக்களிடமிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் நாட்டிற்கு வெளிநாட்டு செலாவணிகளை அனுப்புமாறு வேண்டியுள்ளதோடு அதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.
மேற்கூறிய விடயங்கள் சில உதாரணங்களே. இவை நாம் எதனை நோக்கி நகர்ந்து வருகிறோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு விடயத்தை குறிப்பாக அவதானிக்க வேண்டும். இலங்கையின் ஊழியப்படை பின்வருமாறு உள்ளது.
· 4.6   மில்லியன் –  மாதாந்தம் சம்பளம் பெறும் ஊழியர்கள்.
· 200,000 பேர் –        தொழில் வழங்குனர்கள்.
· 586,000 பேர்-          குடும்ப தொழில்களில் ஈடுபடுவோர்.
· 2.7  மில்லியன் – சுய தொழில் செய்வோர்.
குறிப்பாக சுய தொழில் செய்வோரில் அதிகமானவார்கள் (1.7மில்லியன்) ஒரு நாள் வருமானத்தை நம்பியுள்ளோர்கள்.
மாதாந்த சம்பளம் பெறும் ஊழியர்களில்,
1.2 மில்லியன் அரச தொழில் செய்வோர்.
3.4 மில்லியன் ஊழியர்கள் தனியார் துறையில் உள்ளவர்கள்.
மேற்குறிப்பிட்ட புள்ளி விபரத்தை நோக்கும் போது அரச ஊழியர்கள், உயர் வருமானத்தை பெறும் தொழில் வழங்குனர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் தொழில் அதிபர்கள் தவிர்ந்த எல்லாத் துறைகளிலும் உள்ளோர் கடுமையான பொருளாதார பாதிப்பை எதிர் நோக்க வேண்டி வரும். குறிப்பாக நாள் சம்பளத்தையும், நாள் வருமானத்தையும் நம்பியிருக்கும் பல இலட்சக்கணக்கானோர் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி வரும். இந்த நேரத்தில் நாம் எவ்வாறு எமது எதிர் காலத்தை திட்டமிடுவது என்பது மிக முக்கிய சவாலாகும். இந்த சவாலை எதிர் கொள்ள குறைந்தது ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை செயற்பட வேண்டும்.

முதலாவது கட்டம்

v முதல் மாத செயற்பாடுகள் (March-April)
ü இது அவசர கால நிலைமையின் கீழ் வாழ்தல். குறிப்பாக அனைவரும் தங்களின் கையில் உள்ளவற்றை கொண்டு செலவழிக்கும் காலம்.
ü அதே நேரம் விளிம்பு நிலையில்(Vulnerable) உள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் காலம்.
ü ஏற்கனவே எல்லா ஊர்களிலும் இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுகின்றன.மேலதிகமாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கான எமது செயற்பாடுகள் என்ன?

இரண்டாவது கட்டம்

v அடுத்த மூன்று மாத கால திட்டமிடல்(May-July)
ü Covid-19 நோயாளர்கள்  குறைய ஆரம்பிக்கும்.
ü அரசாங்கம் தற்போதுள்ள அவசர கால கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பிக்கும்.
ü ஆனால் மாதாந்த செலவுகள், வாடகை மற்றும் இதர சேவைகளுக்கான கொடுப்பனவுகள் எம்முன்னால் பாரமான விடயங்களாக இருக்கும்.
ü இந்த இடத்திலும் மாதாந்த சம்பளம் பெறுவோர் குறிப்பாக அரச துறையில் உள்ளோர் தங்களது செலவுகளை சமாளிக்க முடியும். ஆனால் நாள் வருமானத்தை நம்பியுள்ளோர்களும், பொருளாதார நடவடிக்கைகள் ஊடாக வருமானத்தை பெற நினைப்போரும் பாரிய சங்கடங்களை எதிர் நோக்க வேண்டி வரும்.
இந்த இடத்தில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கான எமது இடர் தீர்க்கும் திட்டம் என்ன?

v உள்ளூர் புதிய தொழில்களை உருவாக்குத வேண்டும். இப்போது மக்கள் வீடுகளுக்கு கொண்டு வரும் சேவைகளுக்கு பழகியுள்ளனர். எனவே பொருட்களையும் சேவைகளையும் வீடுகளுக்கு வழங்க கூடிய புதிய விநியோக முறைகளை உருவாக்கலாம். இதனால் நிறுவனங்கள், கடைகள் தொழிற்படும் அதே நேரம் முச்சக்கர வண்டி வைத்துள்ள பலரும் ஏனைய துறைகளில் தொழில் இழக்கும் பலரும் புதிய விநியோக சேவைகளில் இணைத்து தொழில்களை உருவாக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளும், ஏனைய துறைகளும் இயங்கும் போது அது சார்ந்த தொழில்களும், வருமானங்களும் வழமைக்கு திருப்பும். அப்போது இன்னும் கணிசமான மக்கள் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மீளத் தொடர முடியும். எனவே, இந்த இடத்தில் அதிகூடிய பாதிப்புக்குள்ளான மக்கள் தொகையை அடையாளம் கண்டு நிவாரணம் வழங்க வேண்டும். மொத்தமாக இந்த இடத்தில் மூன்று வகையான நிவாரணங்களை கருத்திற் கொள்ள வேண்டும்.

1. ஏற்கனவே சுய தொழிலில் இருப்போருக்கு வருமானம் வரும் வகையில் புதிய ஒழுங்குகளை உருவாக்கல், புதிய வகை வாய்ப்புக்களை கொண்டு வருதல், மளிகைக்கடைகள், மருந்தகங்கள்(Pharmacy),  தொடர்பாடல் நிலையங்கள், எரிவாயு மற்றும் நாளாந்த சேவைகளை பலப்படுத்தல், புதிய விநியோக முறைகள் ஊடாக தொழில்களை கொண்டு வரல்.

2. கௌரவமான தொழில்களில் மாதாந்த சம்பளத்தில் உள்ளோர்களுக்கான குறுகிய கால கடன்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தல். இதில் பள்ளி வாயல்கள், ஸகாத் குழுக்கள் களத்தில் பணியாற்ற முடியும்.

3. தொழில்களில் ஈடுபட முடியாத தங்கி நிற்கும் மக்கள் தொகையை (விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏனையோர்) அடையாளம் கண்டு அவர்களுக்கு  உதவித்தொகைகள் அல்லது நிவாரணப் பொதிகளை வழங்குவது முக்கியமாகும். இதற்கு ஊரிலுள்ள தலைவர்கள், தொண்டு நிறுவனகள், இளைஞர்கள் முன் வர வேண்டும்.

மூன்றாவது கட்டம்

v எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து ஒரு வருட அல்லது ஒன்றரை வருட மீள் கட்டியெழுப்புவதற்கான Recovery Plan ஒன்று தேவைப்படுகிறது. இதனை உருவாக்கும் போது சர்வதேச மற்றும் தேசிய பொருளாதார சுட்டிகளை கருத்திற்கொள்வது இன்றியமையாததாகும். முக்கியமாக,

1. உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டி உள்ளது.

2. பாரம்பரிய இறக்குமதி மற்றும் வாங்கி விற்றல் ஆகிய தொழில் துறைகளில் ஸ்தம்பித நிலை வரலாம். இலங்கை அரசு அத்தியாவசியமற்ற ஏனைய இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை, தடைகளை கொண்டு வரலாம்.

3. விவசாய மற்றும் உள்ளூர் உற்பத்தித் துறைகளில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்கள் அவசியம்.

4. விவசாயமும், தோட்டப் பயிர்ச்செய்கையும் மீன்பிடித் துறைகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

5. வீட்டுத் தோட்டம் மற்றும் விலங்கு வேளாண்மை ஆகியவற்றில் கிராமப்புற பொருளாதாரம் கட்டியெழுப்படல் வேண்டும்.

6. கிட்டிய எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் அரிசி, மா, பருப்பு மற்றும் ஏனைய சில பொருட்களை பெற முடியாது போகும். ஆகவே உள்ளூர் நெற் பயிர்ச்செய்கையும், வெங்காயம் போன்ற பயிர்ச்செய்கைகளுக்கு மிகப் பெரிய வாய்ப்புக்கள் உள்ளது.

7. குறுகிய கால விளைச்சலை கொண்டு வரக்கூடிய பயிர் செய்கைகளுக்கு (Short Crops) முதலீடு செய்வதால் நல்ல விளைவுகளை கொண்டு வர முடியும். இது புதிய முதலீடுகளுக்கும், தொழில் வாய்ப்புக்களுக்கும் வழிவகுக்கும்.

8. தனியார் துறையில் வீழ்ச்சி ஏற்படும் பல லட்சம் பேர்களின் தொழில்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த இடத்தில் மாற்றுத் தொழில்கள் பற்றியும் வேறு துறைகளுக்கு நகர்வது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

9. வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கு பிரச்சினை உருவாகலாம். முழு உலகமே உள்நாட்டு மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இலங்கைக்கு மிகப்பெரிய சவாலாக மாறும். ஆகையால் உள்நாட்டு விவசாயத்திலும், உற்பத்தியிலும் கூடிய கவனம் செலுத்துவது மிக அவசியமாகும்.

10. ஒவ்வொரு துறை குறித்தும் தனித்தனியான SWOT ஆய்வொன்று செய்யப்பட்டு குறுகிய கால, நீண்ட கால திட்டங்களை உருவாக்குவது எமது காலத்தின் கட்டாய தேவையாகும்.

குறிப்பாக இலங்கை மக்களில் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவது,
நகர்ப்புறம்       – 1.4 மில்லியன்
கிராமப்புறம்  – 6.7 மில்லயன்
v பொதுவாக ஆண்கள் 65% உம் 35% உம் பங்களிப்பு செய்கின்றனர்.
v அதே போன்று 80%  மக்கள் கிராமப்புறத்திலும் 20% மக்கள் நகரிலும் வாழ்கின்றனர்.
ஆனால் இந்த புள்ளி விபரம் முஸ்லிம் சமூகத்தில் வித்தியாசமாகவே உள்ளது.
v முஸ்லிம் சமூகத்தில் 80% மனோர் ஏதோ ஒரு நகர் பகுதியிலேயே வாழ்கின்றனர்.
v அரச தொழில்களில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
v தனியார் துறையிலும் குறிப்பாக உயர் பதவிகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே உள்ளனர்.
v பெரும்பான்மையானோர் சுய தொழில்களிலும், நாள் சம்பள வேலைகளிலும், குறிப்பாக முச்சக்கர வண்டி ஓட்டுனர்களாகவும்  காணப்படுகின்றனர்.
v இன்று பலர் நகரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவைகளில் அதிகமானது சிறிய மற்றும் மத்திய தரத்தை உடையது. இவை மிக அவசரமாக பாதிக்கப்படக் கூடியவைகள். எனவே இவைகளின் ஸ்திரத்தன்மைக்கான திட்டமிடல்கள் அவசியம். ஏனெனில் மிக அதிகமான சந்தர்ப்பங்களில் இந்த வியாபாரிகளும், அவர்களின் வியாபார நிலையங்களும் தான் நாம் எதிர் நோக்கிய பல்வேறுபட்ட சோதனைகள், அனர்த்தங்களின் போது கைகோர்க்கும் உதவிக்கரங்கள். பல போது எமது சமூகத்தின் முதுகெழும்பாகவும் காணப்படுகிறது.
ஆகவே முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார சுட்டிகளை அடையாளம் காண வேண்டும். அவைகளை மையமாக வைத்து நீண்ட கால மூலோபாய இலக்குகளுடன் திட்டமிடுவது இன்றைய காலத்தின் அடிப்படை தேவையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.