கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்

அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி), திஹாரிய

0 1,208

“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.

“நான் திருமணம் முடித்து இரண்டு வாரங்கள் கழியவும் இல்லை நானும் எனது கணவரும் சீனாவிற்கு சுற்றுலா மேற்கொண்டோம். நாம் இருவரும் இன்பமாக சுற்றித் திரிந்தோம். அன்று இரவு நேரம் என்னிடம் சற்று தடிமனாக இருக்கின்றது என எனது கணவர் கூறினார். நான் சில மாத்திரைகளை வழங்கினேன். மூன்றாவது நாள் அவரது உடம்பில் பல மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்தேன். உடனே ஷாங்காய் நகரத்தில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் பயனளிக்காமல் எனது வாழ்க்கை துணைவர் உயிரிழந்தார். நான் தற்போது விதவையாக இருக்கின்றேன்‘‘ என இத்தாலி நாட்டு பெண்மணி ஒருவர்.

“எனது குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா வைரஸ் தாக்கம் என கண்டறியப்பட்டு வடகொரியாவின் பாலைவனப் பிரதேசத்தில் ஒரு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனது 25 வயது மகனின் 10 மாத குழந்தையை விட்டும் எனது மகள் பிரிக்கப்பட்டுள்ளார். குழந்தையை நான்தான் பராமரிக்கின்றேன்‘‘ என வடகொரியாவின் வயது முதிர்ந்த தாய் ஒருவர் கூறுகிறார்.

“சீனாவிலிருந்து வரும் இரண்டு கண்டனர்கள் கொண்ட பொருட்கள் ஒரு மாதமாக தாமதித்ததால் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது‘‘ என பிரபல வியாபாரி ஒருவர் கூறுகிறார்.

இவ்வாறு உலக அரங்கில் பல அவலங்கள் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.
21ஆம் நூற்றாண்டில் நாம் தடம் பதித்து விட்டோம் என எள்ளி நகையாடும் உலக அரங்கே ஸ்தம்பிதமாகி மௌனக் காற்றையும் பயந்து பயந்து சுவாசிக்கின்றது.

முழு உலகமுமே செய்வதறியாது தட்டுத் தடுமாறிக் கொண்டு தவிக்கின்றது. கல்விக்கூடங்கள் மதஸ்தலங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் ஏனைய மனித நடமாட்டம், ஒன்றுகூடல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது கொரோனா.
சுனாமி என்ற சொல்லை 2004.12.24 க்கு முன்பு அறிந்திருக்கவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை மாலையாகும் போது சுனாமி என்ற வாசகத்தின் பொருளை ஐந்து வயது சிறுவனும் அறியத் தொடங்கிவிட்டான். பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி, கோடிக்கணக்கான சொத்துக்கள் முகவரி இல்லாமல் மறைந்து விட்டது மட்டுமன்றி இன்றுவரை உலகிற்கே அது ஒரு அழியாத சுவடாக மாறிவிட்டது.
இக்கோர ஆபத்துக்கள் அனைத்திற்கும் விடை சொன்னது தண்ணீர் என்ற அல்லாஹ்வின் படைப்புதான்.

அதேபோல் கொரோனா என்ற இலத்தீன் வாசகத்திற்கு அர்த்தம் அறியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று மனித உள்ளங்களில் அழியாத சுவடாக படிந்துவிட்டது. கொரோனா வைரஸ், வெளியில் நடமாடுவதையும் உரையாடுவதையும் மனம் தளர்ந்த நிலையில் மனித இனத்தையே தள்ளாடச் செய்துள்ளது.

அண்மைக் காலமாக உலகம் எதிர்நோக்கியுள்ள மிகவும் பாரிய அச்சுறுத்தலாகவே இந்த வைரஸ் காணப்படுகின்றது.

COVID 19 என்ற வைரஸ் தாக்கத்தால் முழு உலகமுமே பீதியாலும் பயத்தாலும் உறைந்து போய் இருக்கின்றது. இந்நிலையில் முழு உலகமுமே செய்வதறியாது திக்குமுக்காடியுள்ளது. சீனாவில் ஆரம்பமான இப்பரவல் மத்தியகிழக்கு என படர்ந்து தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் என முழு உலகத்தையே தழுவியுள்ளது.
கிட்டத்தட்ட 151 நாடுகளில் இதன் தாக்கம் பரவி இருக்கின்றது. மேலும் 8969 பேர் பலியாகியுள்ளனர். 219,360 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் வரும்பொழுது ஒரு முஃமின் அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொண்ட மனிதன் எவ்வாறு நோக்க வேண்டும் அவனுடைய நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என பார்ப்பது மிக அவசியமாகும்.
இக் கொள்ளை நோய் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சோதனை, அல்லாஹ்வின் ஒரு தண்டனை, உயிர்களை கொலை செய்வதற்கான ஒரு திட்டமிடல் மற்றும் இயற்கை அனர்த்தம் என பல்வேறு கண்ணோட்டங்களில் பலர் கருத்துக்களை அலசுகிறார்கள்;ஆராய்கிறார்கள். ஒரு சமூகத்திற்கு தண்டனை என்று கூறுவதற்கு நாம் அருகதையற்றவர்கள். அத்தோடு இயற்கை அனர்த்தம், உயிர்களை கொல்வதற்கான திட்டமிடல் என்று கூறுவதற்கு துறை சார்ந்தவர்களாகவும் இல்லை. எனவே யார் எதைச் சொன்னாலும் பலர் பலவிதங்களில் கருத்துக்களை முன்வைத்தாலும் இந்த கொரோனா வைரஸின் மூலமாக அல்லாஹ் பல பாடங்களையும் படிப்பினைகளையும் முழு உலகத்திற்கும் உணர்த்துகின்றான் என்ற உண்மையை மறுதலிக்க முடியாது.

நாம் ஒவ்வொரு நிகழ்வுகளின் ஊடாகவும் பல பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வுடைய உயர்ந்த நோக்கமாக இருக்கின்றதே தவிர நாம் தீர்ப்பு வழங்க கூடியவர்களாக இருக்கக்கூடாது.
அந்தவகையில் உலகையே ஆட்டம் காணச் செய்துள்ள கொரோனா வைரஸ் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்தும் பாடங்களை விலாவாரியாகப் பார்ப்போம்.

1. அல்லாஹ் அவனது சக்தியை இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்கின்றான்.

கண்களுக்கே புலப்படாத அற்பமான இச்சிறிய வைரஸ் முழு உலகத்தையே அடக்கி, தங்களை ஜாம்பவான்களாக சித்தரித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், மேதைகள், துறை சார்ந்தவர்கள் என அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கின்றது.
நாம் இருக்கின்ற இந்த யுகம் அறிவியல், விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றது. அதுமட்டுமல்லாமல் வானியலில் விண்ணையே தொட்டிருக்கின்றது. முழு உலகமே ஒரு பூகோள கிராமமாக மாறி எங்களால் எதைத்தான் செய்ய முடியாது என்று ஒவ்வொரு நாடும் தங்களை பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் ஒரு அற்பமான, கண்களுக்கே புலப்படாத சிறிய வைரஸின் முன்னால் அனைவரும் வீழ்ந்திருக்கின்றனர்.

இத்தருணத்தில் அல்லாஹ் அவனுடைய வல்லமை, ஆற்றல், சக்தி போன்றவற்றை வெளிப்படுத்துகின்றான். அவனுடைய நாட்டமில்லாமல் இவ்வுலகத்தில் ஒரு அணுவும் அசையாது. மரத்திலிருந்து விழும் இலையும் அல்லாஹ்வுடைய அறிவுக்கு உட்பட்ட விடயமாகும். எனவே முழு உலகத்தினதும் சக்தி, வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுடைய கரங்களில் தான் இருக்கின்றது என்ற உண்மையை அல்லாஹ் விளங்கப்படுத்துகின்றான். மேலும் அல்லாஹ்வுடைய வல்லமை, சக்தி போன்றவற்றை அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாகப் பேசுகின்றது.

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”

“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.”

“அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.”

“உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான்.”

“மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.”

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

2. மரணம் பற்றிய செய்தியை உணர வைக்கின்றது

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் மரணம் என்ற பானத்தை அருந்தித் தான் ஆகவேண்டும். பிறக்கும் குழந்தை முதல் வாழும் வயோதிபர் வரை உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை அடைந்துதான் ஆக வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்திற்கிடமில்லை. மரணம் எங்கிருந்த போதிலும் ஒருநாள் எம்மை வந்துதான் ஆக இருக்கின்றது. மாடமாளிகைகளுக்குள் இருந்தாலும் வானத்திலோ பூமியிலோ எங்கிருந்த போதிலும் அந்த மரணம் வந்தே தீரும். உலகத்தில் சக்தி படைத்தவர்களாகவும் ஜாம்பவான்களாக இருந்தவர்களும் அந்த மரணத்தை அடைந்தார்கள். ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மரணம் என்ற கோட்டைக்குள் நுழையத்தான் வேண்டும்.

தற்பொழுது உலகத்தையே ஆட் கொண்டிருக்கக்கூடிய கொரோனா கொள்ளை நோய் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டிருக்கின்றது. இதுவரை மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மரணித்திருக்கின்றன.

எனவே இந்த கொரோனா கொள்ளைநோய் மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக சமீபத்தில் இருக்கின்றது என்ற உயர்ந்த செய்தியை உரத்துச் சொல்கின்றது. இது பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.

“உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.”

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.”

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.”

“மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)”

நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் – அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

3. மறுமை பற்றிய சிந்தனையை ஏற்படுத்துகின்றது

மனித கண்களுக்கு புலனாகாத இச்சிறிய வைரஸ் முழு உலகத்தையே அதிர வைத்து பீதியில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்த சிறிய பயமே இவ்வளவு பாரதூரமாக இருக்கும் என்றால் உலகத்திலேயே மிகவும் பாரதூரமான பயம் என்று அல்லாஹ் வர்ணிக்கக்கூடிய மறுமை எவ்வாறு இருக்கும் என்ற செய்தியை இந்த கொரோனா எமக்கு சிந்திக்க வைக்கின்றது. நாளை மறுமை நாள் அமலி துமலி நிறைந்த ஒரு தினமாகும் என அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. இது பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு இயம்புகின்றது.

“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
“மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
“நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
“எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
“கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது”

4. மனம் தளர்ந்து விடக்கூடாது

உலகத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை வைத்து மனிதன் பயந்து போகக்கூடாது. அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட ஒரு முஃமின் உளரீதியாகவும் பலசாலியாகத் திகழ்வான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி உறுதிசெய்கின்றது.

“முஃமினுடைய காரியங்கள் ஆச்சரியமாக இருக்கின்றது. அவனுக்கு ஒரு கஷ்டமான நிலைமை ஏற்படும் பொழுது பொறுமையாக இருக்கின்றான் மேலும் ஒரு சந்தோசமான நிலைமை ஏற்படும் பொழுது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். (புகாரி)
எனவே உலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்தும் அல்லாஹ்வுடைய ஏற்பாடு என்ற தாரக மந்திரத்தை தனது உள்ளத்திலே ஆளப்பதித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

5. அல்லாஹ்வின் பக்கம் முழுமையாகத் திரும்புதல்

நாம் அல்லாஹ்விடம் எமது வணக்கங்களின் மூலம் அவனது உதவிகளைப் பெறக்கூடியவர்களாக மாற வேண்டும். ஐவேளைத் தொழுகைகளை நியமமாக நிறைவேற்றக்கூடிய நல்லவர்களாக மாறுவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும். அதுமட்டுமல்லாமல் பாவமான அசிங்கமான தீய செயல்களை விட்டும் முழுமையாக ஒதுங்கி மீழ்ச்சி பெறவேண்டும். அல்லாஹ்விடம் தான் செய்த பாவங்களுக்காக மன்றாடி பாவக் கறைகளை நீக்கி உத்தமர்களாக மாறுவதற்கு முனைப்புடன் பாடுபடவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். சில நோய்களுக்குரிய காரணத்தை விளக்கும் பொழுது “இந்த சமூகத்தில் அசிங்கமான, விபச்சாரம் போன்ற பாவங்கள் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த மூதாதையர்கள் அறியாத பல நோய்களை அல்லாஹ் பரவச் செய்வான் எனக் கூறினார்கள்.
எனவே பாவங்களிலிருந்து முழுமையாக நாம் ஒவ்வொருவரும் மீளவேண்டும் என்ற ஒரு செய்தியையும் இந்த வைரஸ் நமக்கு உணர்த்துகின்றது.

6. சமூக வாழ்க்கையில் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை பேணுதல்

அன்றாட வாழ்க்கையில் சுத்தம் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பல சுகாதார பழக்கவழக்கங்களை நம் வாழ்வில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும். நாளாந்தம் குளித்தல், அங்க அவயங்களை சுத்தப்படுத்துதல் போன்ற விடயங்களில் கரிசனை செலுத்துதல்.

மேலும் எமது வீட்டுச் சுத்தம், பாடசாலை சுத்தம், பள்ளிவாயல்களில் சுத்தம் என அனைத்து இடங்களின் சுத்தத்தையும் பேணவேண்டும். அவற்றை நாம் அசிங்கப்படுத்தும் பொழுது பல தொற்று நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றோம்.

அதேபோல் எமது உணவுப் பழக்க வழக்கத்திலும் மிகச்சிறந்த, இஸ்லாம் கூறக்கூடிய பரிசுத்தமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது இப்படிப்பட்ட நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற விடயத்தையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
எனவே இந்த வைரஸ் தாக்கம் எமக்கு சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை மிகவும் அவசியத் உடன் பேணவேண்டும் என்ற செய்தியையும் உணர்த்துகின்றது.

எனவே கொரோனா வைரஸ் பல பாடங்களையும் படிப்பினைகளையும் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்துகின்றது. அவற்றை நாம் நம் வாழ்வில் கடைபிடித்து எதிர்காலத்தை மிகச் சிறப்பாக செப்பனிடுவதற்கு முனைப்புடன் செயற்படுவோமாக! – vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.