19 ஆம் திருத்தத்தின் பயன்­பா­டுகள்

0 947

19 ஆம் திருத்தம் மூலம் சுயா­தீன நிறு­வ­னங்கள் பல­ம­டைந்­த­தாக இம்­முறை ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார். தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லா­தொ­ழித்து அதை முழு­தாகப் பாரா­ளு­மன்­றத்­துக்குப் பார­ம­ளித்தால் மட்­டும் சுயா­தீன நிறு­வ­னங்­களின் இருப்பு அர்த்­த­முள்­ள­தா­கவும் நிலைத்­த­தா­கவும் இருந்­தி­ருக்கும்.

தனி­நபர் நிறை­வேற்று அதி­காரம் ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பகி­ரப்­பட்­ட­தா­லேயே சுயா­தீன நிறு­வ­னங்கள் சுயா­தீ­னத்தை இழந்­தி­ருக்­கின்­றன. இரு கட்­சி­க­ளிடம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­புகள் இருந்­தாலும் அதே நிலை தான். ஒரே கட்­சி­யிடம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­புகள் இருந்­தாலும் அதே நிலைதான். மொத்­தத்தில் தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட்டு முழு­தாக அதைப் பாரா­ளு­மன்­றத்­திடம் வழங்­கி­விட்டுக் கட்சி ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­விப்பை வழங்­கி­விட்டே சுயா­தீன நிறு­வ­னங்­களை அமைக்க வேண்டும்.

19 ஆம் திருத்தம் மூலம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்கி நிர்­வாக சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யதன் மறு­வி­ளைவே அதில் சுயா­தீன நிறு­வ­னங்­களை உட்­ப­டுத்­தி­ய­து­மாகும். ஒரே அதி­காரக் கட்­ட­மைப்­பாக உருவாக்கி பாரா­ளு­மன்றம் கட்சி ஆளு­மை­யி­லி­ருந்து விடு­பட்டு அமைய வேண்டும்.

தற்­போது 19 ஆம் திருத்த நிறை­வேற்று அதி­கா­ரத்­தாலும் பிர­த­ம­ராலும் குறை­யீட்டு நிதியைப் பாரா­ளு­மன்­றத்தின் மூலம் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது. இது அந்த ஷரத்­தினால் ஏற்­பட்ட விளைவும் அல்ல. பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்­களைக் கொண்­ட­வரே பிர­தமர் என்று தான் அந்த ஷரத்தில் உள்­ளது. இரு கட்­சி­களின் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களால் நிர்­வாகப் பாதிப்பு ஏற்­ப­டா­தி­ருக்­கவே பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை கொண்ட கட்சி ஆச­னங்கள் குறைந்த கட்­சி­யிடம் நிர்­வா­கத்தைக் கைய­ளிக்க நேர்ந்­தது.

எனினும் கூட இதுவும் 19 ஆம் ஷரத்­துக்கு முர­ணா­ன­தே­யாகும். ஆக குறைந்த ஆச­னங்­களைக் கொண்ட இன்றைய பாரா­ளு­மன்­றத்தால் எந்த தீர்­மா­னத்­தையும் நிறை­வேற்ற முடி­யா­தி­ருக்­கி­றது.

எனினும் கூட 19 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் எனத்­தற்­போது குர­லெ­ழுப்­பு­வோரின் நோக்கம் ஒரே அதி­காரக் கட்­ட­மைப்பை உரு­வாக்கி நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்கி விட வேண்டும் என்­ப­தல்ல.

ஒரே அதி­காரக் கட்­ட­மைப்­பாக இத்­தனி நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கு­வ­தே­யாகும். அதன் பின் மக்­களின் ஜன­நா­யக உரி­மைக்கு முர­ணான 18 ஆம் திருத்தம் போன்ற விதி­மு­றை­களும் நடை­மு­றை­யா­கலாம். எனவே 19 ஆம் திருத்தத்தில் சில குறை­பா­டுகள் இருக்­கின்ற போதும் அதன் மூலம் கிடைக்கும் நிறைவு அளப்­ப­ரி­ய­தாகும்.

ஆக 19 ஆம் திருத்தத்தை முதற்­ப­டி­யாக வைத்­துக்­கொண்டு எதிர்­வரும் காலத்தில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை முற்­றா­கவே நீக்கி நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்க வேண்­டுமே தவிர 19 ஆம் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு மூலம் அகற்றி மீண்டும் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஏற்­பட இட­ம­ளித்து விடக்­கூ­டாது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­ாபய ராஜபக் ஷ வென்­றி­ருப்­பது எதிர்­பார்க்­கப்­பட்­டது தான். 74% சிங்­க­ளவர் வாழு­கையில் இலங்கை அத்­தேர்­தலில் ஒரே தொகு­தி­யாக இருக்­கையில் பெளத்த சிங்­களப் பேரி­ன­வா­தத்தை துரு­வப்­ப­டுத்­தியே அவர் 14 இலட்சம் மேல­திக வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். பல்­லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை பொருத்­த­மற்­றது என்­ப­தையே இது எடுத்­துக்­காட்­டு­கி­றது. பெரும்­பான்மைச் சமூக வேட்­பாளர் 74% பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் பேரி­ன­வா­தத்தைத் துரு­வப்­ப­டுத்தி பெரு வெற்றி பெற்­றி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

1978 ஆம் ஆண்­டி­லி­ருந்தே தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை அமுலில் இருப்­பினும் இம்­முறை நிகழ்ந்த தேர்­தலில் தான் அது சிறு­பான்­மை­க­ளுக்கு எதி­ரான கொடூர நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு 19 ஆம் திருத்தம் ஏக­மாக பாரா­ளு­மன்­றத்தில் இயற்­றப்­பட்டு ஜனா­தி­ப­தியின் முக்­கிய அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­தோடு பகி­ரப்­ப­டா­தி­ருப்பின் சிறு­பான்­மை­களின் நிலை என்ன?

அந்த ஷரத்தால் தான் கோத்­தா­பய ராஜபக் ஷ தற்­போது எந்த அமைச்­சையும் வகிக்க முடி­யா­தி­ருக்­கிறார். பாது­காப்பு அமைச்சும் கூட 19 ஆம் திருத்தத்தின்­படி அவ­ருக்கு இல்லை. ஆக பல்­லினம் வாழும் நாட்டில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஓரின ஜனா­தி­பதி கூடாது. ஒரே தொகுதி என்னும் ரீதியில் ஒரே இனத்­தவர் வெல்லும் தேர்­தலும் தேவை­யில்லை. பேரி­ன­வா­தத்தைத் தூண்டி பெரும்­பான்மை சமூ­கத்தைத் துரு­வப்­ப­டுத்தும் முறையும் கூடாது.

2015 ஆம் ஆண்டு நிகழ்ந்­தது என்ன? நிறை­வேற்று ஜனா­தி­பதி எதிர்ப்பு அந்த மக்­க­ளா­ணைக்கு மைத்­தி­ரியும்– ரணிலும் மாறு செய்­தி­ருக்­கக்­கூ­டாது. 100 நாள் வேலைத்­திட்­டத்­தின்­போது அதற்கே முக்­கி­யத்­துவம் வழங்­கி­யி­ருக்க வேண்டும். அப்­போது இரு பெருங்­கட்­சி­களும் இணைந்­தி­ருந்­ததால் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வ­தற்கு யாப்பில் விதிக்­கப்­பட்­டி­ருந்த இரு நிபந்­த­னை­க­ளையும் நிறை­வேற்­றி­யி­ருக்­கலாம். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அனு­ம­தியும் கிடைத்­தி­ருக்கும். எனினும் மைத்­தி­ரியும்– ரணிலும் தமக்­கி­டையே தனி­ந­ப­ருக்­கெ­னவும் பாரா­ளு­மன்­றத்­துக்­கெ­னவும் 19 ஆம் ஷரத்­தாக நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொண்டு ஒரு­வ­ருக்­கொ­ருவர் சிக்கிக் கொண்­டார்கள்.

இப்­போது தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைப்­பது ஒரு­பு­ற­மி­ருக்க 19 ஆம் திருத்தத்திலி­ருக்கும் இரு­முனை அதி­காரக் கட்­ட­மைப்பை நீக்­கு­வதும் கூட பிரச்­சி­னை­யாகி இருக்­கி­றது. நான் முன்பு கூறி­ய­படி 100 நாள் வேலைத் திட்­டத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை மக்­க­ளா­ணைப்­படி பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்­கி­யி­ருந்தால் இரு அதி­கா­ரக்­கட்­ட­மைப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­காது. அந்த கால­கட்­டத்­தி­லேயே சிறு­பான்­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய பல்­லின யாப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் அன்றே இனப்­பி­ரச்­சி­னையும் தீர்ந்­தி­ருக்கும். அப்­போது தவ­ற­வி­டப்­பட்ட சந்­தர்ப்பம் இனிமேல் வாய்த்தால் தான் உண்டு.

தனி­நபர் நிறை­வேற்று அதி­காரக் கட்­ட­மைப்பு ஒரு கட்சி வசமும் பாரா­ளு­மன்ற அதி­காரக் கட்­ட­மைப்பு மறு­கட்சி வசமும் சிக்கிக் கொள்ளும்போது, தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பெற்­றவர் தனது கட்சி சார்ந்து தனக்கு மட்டும் என வழங்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற சில அதி­கா­ரங்கள் மூலம் முட்­டுக்­கட்­டை­களைப் போட்டார். பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தைப் பெற்ற மறு­கட்சி தனது அதி­கா­ரத்தை கேடயம் போல் பாவித்து சமா­ளித்­தது. ஒரு கட்­டத்தில் மக்­களால் தெரி­வான ரணிலைப் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து மைத்­திரி அகற்றித் தன்­னிடம் தோற்ற மகிந்­தவைப் பிர­த­ம­ராக்­கி­யது மட்­டு­மல்ல, சுய­வி­ருப்­பப்­படி பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்­தி­ருந்தார். அவற்றை உயர்­நீ­தி­மன்றம் இரத்து செய்­தி­ருந்­தது. பின்னர் தனது பத­வி­க் காலம் எப்­போது ஆரம்­பித்து எப்­போது முடி­கி­றது எனவும் மைத்­திரி உயர்­நீ­தி­மன்­றத்­திடம் கேட்­டி­ருந்தார். எல்­லா­வற்­றுக்கும் முன்பு 19 ஆம் திருத்தம் எனக்குத் தெரி­யாதே என இவர் கூறி­யி­ருந்­ததும் வேடிக்­கை­யா­கவே இருந்­தது. அதைத் தெரி­யாமல் தானா தனது கட்சி எம்­பிக்­களின் முழு வாக்­கு­க­ளையும் அதற்குப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்தார். இந்த இரு கட்சி இழு­ப­றியால் 19 ஆம் திருத்தத்­தி­லி­ருந்த சுயா­தீன ஆணைக் குழுக்­களும் கூட சுயா­தீ­ன­மாக செயற்­பட முடி­யா­தி­ருந்­தன.

இப்­போது தம்பி கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­கவும், அண்ணன் மகிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராகவும் இருப்­ப­தாலும் இரு­வரும் ஒரே கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­தாலும் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களில் பாதிப்பு குறை­வா­கவே இருக்கும். குடும்பப் பிணக்கு ஏற்­பட்டால் அல்­லது கட்சி உரசல் ஏற்­பட்டால் இரு அதி­காரக் கட்­ட­மைப்பின் பாதிப்பு வெளிப்­ப­டவே செய்யும்.

ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யுடன் 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆரால் வலிந்து திணிக்­கப்­பட்ட தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஏறத்­தாழ 50 ஆண்­டு­க­ளா­கியும் கூட நீக்­கிக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது. பல்­வேறு அழி­வு­களை அதன் மூலம் அனு­ப­வித்த பிறகும் கூட 1994 ஆம் ஆண்டு முதல் அதற்­கெ­தி­ராக மக்­க­ளாணை வழங்­கப்­பட்ட பின்பும் கூட இறு­தி­யாக உறு­தி­யாக மைத்­தி­ரியும் – ரணிலும் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளித்து விட்டு மாறு செய்­தி­ருக்­கக்­கூ­டாது. 2008 ஆம் ஆண்டு தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்­தோடு தேர்தல் பொலிஸ், நீதி, அரச ஊழியர் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரங்­க­ளையும் 18 ஆம் திருத்தம் மூலம் தன் வசப்­ப­டுத்­திய மஹிந்த ராஜபக் ஷவை 2018 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எப்­படி பிர­த­ம­ராக்­கினார். அவ­ரோடு ஏற்­பட்ட கொள்கை முரண்­பாட்டால் தானே இவர் அவ­ரி­ட­மி­ருந்து விலகி அவ­ரையே எதிர்த்துப் போட்­டி­யிட்டு வென்­றி­ருந்தார்.

19 ஆம் திருத்தத்தின்­படி பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யுள்ள கட்சித் தலை­வ­ருக்கே பிர­தமர் பதவி வழங்­கி­யாக வேண்டும். அதை மீறி மைத்­தி­ரி­பால பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பெற்­றி­ருந்த ரணிலை பிர­தமர் பத­வியை விட்டும் நீக்­கி­விட்டு குறைந்த ஆச­ன­மி­ருந்த மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கி­யதும் உயர்­நீ­தி­மன்றம் அதை இரத்துச் செய்­தது. அதன்­படி மீண்டும் ரணில் பிர­த­ம­ரானார்.

எனினும் கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும் பாரா­ளு­மன்­றத்தில் தனக்குப் பெரும்­பான்மை இருந்தும் கூட ரணில் பிர­தமர் பத­வியை மகிந்­த­விடம் கைய­ளித்­து­விட்டார். ஆக இதில் 19 ஆம் திருத்தம் மீறப்­பட்­டுள்­ளது. எனவே 19 ஆம் திருத்தம் மூலம் தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் நிறை­வேற்று அதி­காரம் பகி­ரப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­பட்­ட­போதும் இரண்டும் ஒன்­றோ­டொன்று மாட்டி சிக்­கி­யி­ருக்­கின்­றன எனவும் இதை விளக்­கப்­ப­டுத்­தலாம்.

தற்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவி­டமும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் பாது­காப்பு அமைச்சு இல்லை. 19 ஆம் திருத்தத்தின்­படி ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு அதை வகிக்க முடி­யா­தி­ருப்பின் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் அதை வழங்­கி­யி­ருக்க வேண்டும். பாது­காப்பை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தியே கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தார். எனினும் அவ­ரிடம் பாது­காப்பு அமைச்சு இல்லை அதனால் அவ­ருக்குக் கிடைத்த மக்­க­ளா­ணையை நிறை­வேற்­ற­மு­டி­யாத நிலையில் அவர் இருக்­கிறார்.

உண்­மையில் அதி­காரக் கட்­ட­மைப்­புக்கு பாது­காப்பு அமைச்சு அடிப்­ப­டை­யாகும். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் அதுவும் இல்லை. 19 ஆம் திருத்தத்தின்படி பிர­தமர் அதை வகிக்­கலாம். அதை அவர் பொறுப்­பேற்றால் அதி­காரக் கட்­ட­மைப்பு பாரா­ளு­மன்­றத்­துக்கு மட்­டுமே என்­றா­கி­விடும். ஜனா­தி­பதி கோத்­த­ாபய ராஜபக் ஷ தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்­கி­ய­தா­கவும் ஆகி­விடும்.

தேசத்தின் தலைவர், ஆட்­சியின் தலைவர், முப்­ப­டை­களின் தலைவர் என்னும் வகையில் பாது­காப்பு அமைச்சு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்குக் கட்­டா­ய­மா­ன­தாகும். ஜே.ஆர்.பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை சுவீ­க­ரித்­தி­ருந்­ததால் முப்­ப­டை­களின் தலைவர் என்னும் வகையில் லலித் அதுலத் முத­லி­யிடம் பாது­காப்பு அமைச்சை வழங்­கி­யி­ருந்தார். பிரே­ம­தாச, ரஞ்சன் விஜே­ரத்­னவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மித்தார். சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க அனு­ருத்த ரத்­வத்­தையை பாதுகாப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மித்தார். மஹிந்த ராஜபக் ஷ தம்பி கோத்­தா­பய ராஜபக் ஷவைப் பாது­காப்பு செய­லா­ள­ராக நிய­மித்துக் கொண்டார். தற்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது அண்­ணன்­மாரில் ஒரு­வ­ரான சமல் ராஜபக் ஷவை பாதுகாப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்கிப் படைப்­பி­ரி­வு­களில் ஒரு முன்னாள் தள­ப­தி­யான கமல் குண­ரட்­ணவைப் பாது­காப்பு செய­லா­ள­ராக்­கி­யி­ருக்­கிறார்.
பாது­காப்பு விட­யத்­துக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் இதன் மூலம் ஜனா­தி­ப­தி­யி­டமும் அமைச்­ச­ர­வை­யி­டமும் அது இல்லை என்­பதும் இப்­போது சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றமும் ஜன­நா­ய­கப்­படி மக்­களின் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கையில் மக்­களின் வாக்­கு­களைப் பெறா­த­வ­ரிடம் மக்­களின் பாது­காப்பு விடயம் இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

1978 ஆம் ஆண்டு 140 எம்.பிக்­களின் திக­தி­யி­டப்­ப­டாத இரா­ஜி­னாமாக் கடி­தங்­களை வலிந்து பெற்று நிறை­வேற்று அதி­கார முறையை உரு­வாக்­கிய ஜே.ஆர் என்ன கூறினார் தெரி­யுமா? இது எல்லாம் செய்யும் ஆணைப் பெண்­ணா­கவும் பெண்ணை ஆணா­கவும் ஆக்க மட்டும் முடி­யாது. இதை எல்­லோரும் எதிர்க்­கி­றார்கள். இந்த பத­விக்கு வந்தால் தான் இதன் சுகம் தெரியும். இதை விட்டுப் போகவே மாட்­டார்கள் என்றார். அவர் சொன்ன மாதி­ரியே அவ­ருக்குப் பின்னால் வந்த எந்த ஜனா­தி­ப­தியும் இதைக் கைவிட விரும்­ப­வில்லை.

ஜனா­தி­ப­தி­யாகும் முன் எல்­லோரும் வென்றால் அதை துறந்து விடுவோம் என்றே வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். எனினும் பதவி காலம் முழுதும் அதில் தொங்­கியே இருந்­தார்கள். மஹிந்த ராஜபக் ஷ 18 ஆம் திருத்தம் மூலம் மூன்றாம் முறையும் பதவி வகிக்க முயன்­ற­தோடு தேர்தல், பொலிஸ், நீதி, அரச ஊழியர், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரங்­க­ளையும் பெற்றுக் கொண்டார். நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­தோடு பகிர்ந்து கொள்வேன் என்று வந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ன செய்தார்? முதலில் இவர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை தான் ஒழிக்­கவே போட்­டி­யி­டு­வ­தாகக் கூறி­விட்டு இனி ஜனா­தி­பதி முறை வேண்டாம். கடைசி ஜனா­தி­ப­தி­யான எனக்கு மட்டும் சில அமைச்­சுக்­க­ளையும் சில நிறு­வ­னங்­க­ளையும் தாருங்கள் எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரும் கூட மறுமுறையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே ஆசைப்பட்டார். 2015 ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருந்தால் 2019 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட நேர்ந்திருக்காது. சஜித்தும் போட்டியிட நேர்ந்திருக்காது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு விடயத்துக்கே மக்களாணை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாச அபிவிருத்திக்கே மக்களாணையைப் பெற்றிருந்தார். இருவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது பற்றி எதுவும் பேசவில்லை.

19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கே நிர்வாகம் என்றிருக்கையில் ரணில் ஏன் குறைந்த ஆசனங்கள் இருந்த மஹிந்தவிடம் நிர்வாகத்தைக் கையளித்தார். எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களே மக்களால் விமர்சிக்கப்படுவர் என்பது ரணிலுக்குத் தெரியும். எனினும் இது யாப்புக்கு முரணானதாகும் அல்லவா?

தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நிரந்தரமாக வைத்திருப்பதற்கே 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் விகிதாசார தேர்தல் முறையையும் சர்வஜன வாக்கின் அனுமதியையும் வைத்திருந்தார்.

பிரேமதாச வெற்றி பெறவே 12.5 வெட்டுப்புள்ளியை 5 ஆகக் குறைத்து சிறு கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கினார்.

விகிதாசார தேர்தல் முறைப்படி இதுவரை எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றதில்லை. வெட்டுப்புள்ளிக் குறைப்பால் சிறுபான்மைக் கட்சிகளினதும் சிறு கட்சிகளினதும் ஆளுமையும் உள்ளது.

எனவே அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தொங்கு பாராளுமன்றமே அமையும் தனித்தனி எம்பிக்களின் தயவை நாடவோ வரப்பிரசாதங்களை வழங்கவோ வேண்டி வரும். இந்நிலையில் வேறு வேறு கட்சிகளோடு ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்தால் அதிகாரக் கட்டமைப்புகள் இரண்டாகிவிடும்.-Vidivelli

  • ஏ.ஜே.எம்.நிழாம்

Leave A Reply

Your email address will not be published.