சஜித் தலைமையிலான கூட்டணியில்: பங்காளி கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று

சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மத்தும பண்டார

0 690

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் பொதுத் தேர்­தலை முன்­னிட்டு உரு­வாக்­கப்­பட்­டுள்ள ‘ஐக்­கிய மக்கள் சக்தி’ கூட்­ட­ணியின் பங்­காளி கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இன்று கைசாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. எனினும், புதிய கூட்­ட­ணிக்­கான சின்னம் தொடர்பில் தேர்தல் காலத்­தி­லேயே அறி­விக்­கப்­படும் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

சஜித் பிரே­ம­தாச தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பங்­கு­பற்­ற­லுடன் இன்று காலை 10.00 மணிக்கு தாமரை தடாக அரங்கில் ஒப்­பந்தம் கைசாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் சகல கட்­சி­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யிலும் அங்கம் வகிக்கும் என்று அதன் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். அதற்­க­மைய மனோ கணேஷன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், சம்­பிக ரண­வக்க தலை­மை­யி­லான ஜாதிக ஹெல உரு­மய , ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட கட்­சி­க­ளுடன் மற்றும் சிவில் அமைப்­புக்­க­ளு­டனும் இன்­றைய தினம் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­விக்­கையில்,

புதிய கூட்­ட­ணிக்­கான சின்னம் தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுப்­ப­தற்கு கால அவ­காசம் இருக்­கி­றது. எனவே, அது­கு­றித்து கல­வ­ர­ம­டையத் தேவை­யில்லை. பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு தேர்­த­லுக்கு முன்னர் சின்னம் தொடர்பில் அறி­விக்­கப்­படும்.

பொதுத் தேர்­தலில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்­தியில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஐ.தே.க. செயற்­கு­ழுவில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. கூட்­ட­ணியின் யாப்பை செயற்­குழு ஏற்றுக் கொண்­டுள்­ளது. யாப்பில் சிறு சிறு திருத்­தங்கள் செய்­யப்­பட்­டன. எவ்­வா­றி­ருப்­பினும் இப்­பு­திய கூட்­ட­ணியின் ஊடாக பொதுத் தேர்­தலில் வெற்றி பெறுவோம்.

இந்நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.