மஹர பள்ளிவாசல் உடன் மீள திறக்கப்பட வேண்டும்

0 1,087

மஹர தேர்தல் தொகு­தியில் ராக­மையில் அமைந்­துள்ள மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதுடன், கடந்த 5 ஆம் திகதி அங்கு புத்தர் சிலை­யொன்றும் நிறு­வப்­பட்­டுள்­ள சம்பவம் முஸ்லிம்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பதிவாகியுள்ள மிகவும் பாரதூரமானதொரு சம்பவம் இதுவாகும். அதுவும் சட்டத்தை நிலைநாட்டி மக்களின் மத சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.

குறித்த பள்ளிவாசல் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள போதிலும் அதனை இப்­ப­கு­தியில் வாழும் சுமார் 250 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்களே பயன்படுத்தி வந்துள்ளன. வாராந்தம் ஜும்ஆ தொழுகையும் தினசரி ஐவேளை தொழுகையும் அங்கு நடந்து வந்துள்ளன. ஜனாஸா தொழுகை, நோன்பு மற்றும் பெருநாள் போன்ற விசேட தருணங்களிலும் பிரதேச மக்கள் இப்பள்ளிவாசலையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இப் பள்ளிவாசல் முறையான பதிவுகளுடனேயே இயங்கி வந்துள்ளது.1967 ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ளதாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­வித்துள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பள்ளிவாசல்களும் தொழுகையறைகளும் மூடப்பட்டன. இதில் மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலும் ஒன்றாகும்.
மஹர சிறைச்சாலை அதி­கா­ரிகளே மக்­க­ளுக்கு இப்­பள்­ளி­வா­சலைத் தடை செய்­தனர். பாது­காப்பு காரணம் கருதி பள்­ளி­வா­சலைப் பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டதாக அறிவிக்கப்பட்டது.

பள்­ளி­வா­சலை சுத்தம் செய்­வ­தற்கோ அங்­கி­ருக்கும் பொருட்­களை உப­யோ­கப்­ப­டுத்­து­வ­தற்கோ சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தொழுகை மற்றும் ஜனாஸா நல்லடக்கம் போன்றவற்றுக்காக தூரத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கே இப்பகுதி முஸ்லிம்கள் செல்ல வேண்டியுள்ளமை துரதிஷ்டமானதாகும்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு அப்­போ­தைய அர­சாங்க காலத்தில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் குறித்து அப்­போ­தைய அமைச்சர் ஹலீம், வக்­பு­சபைத் தலைவர், நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தபோதிலும் பள்ளிவாசலை திறக்க எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இந்­நி­லையிலேயே இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்பு பள்­ளி­வாசல் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டு புத்தர் சிலையும் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எது எப்படியிருப்பினும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பள்ளிவாசலாக இயங்கி வந்த ஓரிடத்தை திடீரென ஓய்வு விடுதியாக மாற்றுவதும் அங்கு புத்தர் சிலை வைத்து வழிபடுவதும் நியாயமற்ற நடவடிக்கையாகும். ஒரு சிறு குழுவுடன் சம்பந்தப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலை காரணமாக காட்டி முழு முஸ்லிம் சமூகத்தினதும் சமய உரிமைகளை மறுதலிப்பதையும் அதற்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளே முன்னிற்பதும் கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.

தனது சுதந்திர தின உரையின்போது, நாட்டிலுள்ள சகல மக்களினதும் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் துரதிஷ்டவசமாக அவரது உரை இடம்பெற்ற மறுநாளே மஹர பள்ளிவாசலினுள் புத்தர் சிலை வைத்து அதனை விடுதியாகவும் மாற்றிய அநீதி நடந்தேறியிருக்கிறது.

பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறது. அமைச்சர் சுமுக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்திருக்கின்றமை ஆறுதலளிக்கிறது.

இந்த விவகாரம் தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குள்ளாக்காது உடனடித் தீர்வை எட்டுவதே சமயோசிதமானதாகும்.

புத்தர் சிலையை அகற்றி அதனை மீண்டும் பள்ளிவாசலாக இயங்கச் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்புகள் வழங்க வேண்டும். குறிப்பாக தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கமான முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகள் இதுவிடயத்தில் தமது பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.