காசிம் சுலைமானியின் மீதான தாக்குதலின் பின்னணி என்ன?

0 138

ஈரா­னிய புரட்­சிக்­கா­வலர் படையின் ‘குத்ஸ்’ விஷேட படைப் பிரிவின் கட்­டளைத் தள­பதி காசிம் சுலை­மா­னியின் மர­ணத்­திற்கு முதல் கட்ட பதி­ல­டி­யாக ஈரான், ஈராக்கில் அமெ­ரிக்கப் படை நிலைகள் மீது அதி­ர­டி­யாக ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களைத் தொடுத்­தமை வளைகுடாப் பிர­தே­சத்தில் பதற்­றத்தை அதி­க­ரிக்கச் செய்­தி­ருந்­தது. ஈராக்கில் அமெ­ரிக்கப் படை நிலைகள் இரண்டின் மீது ஏவிய தரைக்குத் தரை தாவும் சுமார் 22 ஏவு­க­ணை­களில் 17 மேற்கு ஈராக்கின் ‘அயின் அல் அசாத்’ படைத் தளத்­தையும் மற்­றைய ஐந்து வட ஈராக்கின் குர்­திஸ்தான் பிராந்­திய எர்பில் படைத் தளத்­தையும் இலக்கு வைத்­துள்­ளன.

எனினும், மேற்குப் பகு­திக்கு ஏவிய ஏவு­க­ணை­களில் இரண்டும் வடக்கு பகு­திக்கு ஏவி­யதில் நான்கும் அவற்றின் இலக்­கு­களைத் தொட­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. ஈரான் புரட்சிக் காவலர் படையின் கூற்­றின்­படி, தாம் சுமார் முப்­ப­துக்கு மேற்­பட்ட ஏவு­க­ணை­களை ஏவி­ய­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்தத் தாக்குதல்களால் எந்தவொரு உயிரழப்புகளும் பதிவாகவில்லை.

ஈரா­னிய பிர­தான தள­ப­தி­யாக செயற்­பட்ட மேஜர் ஜெனரல் காசிம் சுலை­மானி, ஈராக் பக்தாத் விமான நிலை­யத்தில் வைத்து கடந்த வெள்ளி (03.01.2020) அதி­காலை அமெ­ரிக்க வான் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்டார். மேற்­படி தாக்­கு­தலில் ஈராக்கில் இயங்கும் மக்கள் அணித்­தி­ரள்வுப் படையில் (PMF) அங்கம் வகிக்கும் பிர­தான ஈரான் சார்பு ஷியா ஆயுதக் குழு­வான கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயுதக் குழுவின் கட்­டளைத் தள­பதி அபூ மஹ்தி அல் முஹத்திஸ் உட்­பட மேலும் சில ஹிஸ்­புல்லாஹ் அமைப்­பினர் உள்­ள­டங்­க­லாக இன்னும் ஏழு பேராக மொத்தம் ஒன்­பது பேர் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதனைத் தொடர்ந்து, மேற்­படி தாக்­கு­த­லுக்குப் பழி­தீர்க்­கப்­ப­டு­மென ஈரான் தரப்­பி­லி­ருந்து சூளு­ரைக்­கப்­பட்­டது. எனினும், முன்­னைய சந்­தர்ப்­பங்­களில் குறிப்­பாக லெபனான் ஹிஸ்­புல்­லாஹ்வின் முக்­கி­யஸ்தர் இமாத் முக்­னி­யாஹ்வின் படு­கொ­லையின் போதும் இவ்­வா­றுதான் கோஷம் போட்­டு­விட்டு ஈரான் தரப்பு வாளா­வி­ருந்­த­தான கருத்து, சமூக ஊட­கங்­களில் குறிப்­பி­டப்­பட்­டன. எனினும், ஈரா­னுக்கும் அமெ­ரிக்க அணிக்கும் ஈரா­னுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­படும் விட­யத்தில் 2ஆவது ‘டேங்கர்’ யுத்தம் மற்றும் நாம் கடந்த வாரம் எழு­தி­யி­ருந்­த­தனைப் போல், அமெ­ரிக்கப் படை நிலைகள் மீது கடந்த பல மாதங்­க­ளாக ஏவப்­படும் ‘ரொக்கட்’ தாக்­கு­தல்கள் உட்­பட சுலை­மா­னியின் கொலை வரை­யி­லான விட­யங்­களில் சம்­பந்­தப்­படும் போரியல், அதன் மூலோ­பாயத் தன்மை, அதற்­கான காரணம் மற்றும் மூலோ­பாயக் கலா­சாரம் என்­பன பற்­றிய புரி­தலே மேற்­ப­டி­யான ஊகங்­க­ளுக்­கான கார­ண­மாகும். இனி நாம் விரி­வான விட­யங்­க­ளுக்குச் செல்வோம்.

காசிம் சுலை­மா­னியின் முக்­கி­யத்­துவம் என்ன?

ஈரா­னிய அதி­யுயர் ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி காமை­னிக்கு அடுத்­த­ப­டி­யாக மிகவும் பலம் வாய்ந்­த­வ­ராக கரு­தப்­பட்ட காசிம் சுலை­மானி, ஈரா­னிய வலு எரி­யத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாவார். ஈரா­னிய புரட்சிக் காவலர் படை (IRGC), ஈரா­னு­டைய உள்­ளக வெளி­யக இயந்­தி­ரத்தின் கணி­ச­மான கட்­டுப்­பாட்டைத் தம்­வசம் கொண்­டுள்­ளது. ஈரானின் பொது­வான இராணு­வத்­திற்கு அப்பால் IRGC தமக்­கெனத் தரைப் படை­ய­ணி­க­ளையும் கடற்­படைப் பிரி­வுகள் மற்றும் வான் படை­யையும் கொண்­டுள்­ளது. எனினும் IRGCயின் வான் படை­யா­னது போர் விமா­னங்­களைக் கொண்­டி­ராத போதிலும் வளை­குடா பிராந்­தி­யத்தின் பெரி­ய­தான ஈரா­னிய ஏவு­கணைப் படை­ய­ணி­யினை அது தம்­வசம் கொண்­டுள்­ள­தென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. IRGCயின் விசேட படைப்­பி­ரி­வான ‘குத்ஸின்’ கட்­டளைத் தள­பதியான சுலை­மானி, ஈரா­னு­டைய பிராந்­திய மேலோங்­குகை மற்றும் வெளி­யு­றவுக் கொள்­கை­யினை அமுல்­ப­டுத்­து­வதின் பிர­தான மூலோ­பாயி! பாதாளப் போர் மற்றும் மரபு வழி­யற்ற போரியல் என்­ப­வற்­றி­னூ­டாக ஈரா­னிய பிராந்­திய அபி­லா­சை­களை நிச்­ச­யிக்கும் பொருட்டு வெளி­நா­டு­களில் இர­க­சிய நட­வ­டிக்­கை­களை வடி­வ­மைப்­பதில் வல்­ல­வ­ராக செயற்­பட்டார். கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக மேற்­கத்­தேய, இஸ்­ரே­லிய மற்றும் அரே­பிய உளவு நிறு­வ­னங்­க­ளினால் இலக்கு வைக்கப்பட்டு இவர் பல­முறை உயிர்­தப்­பி­யுள்ளார்.

தாக்­கு­த­லுக்கு முன்னர்  நில­விய சூழல் என்ன?

கடந்த மாத இறுதி வெள்­ளி­யன்று (27.12.2019) ஈராக்­கிய குர்­திஸ்தான் பிராந்­திய கிர்குக் பகு­தியில் அமெ­ரிக்க – ஈராக்­கியப் படை­யினர் கூட்­டாக நிலை­கொண்­டுள்ள ஈராக்­கிய படைத்­த­ள­மொன்றின் மீது சுமார் 30 ரொக்­கெட்­களின் மூலம் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. மேற்­படி தாக்­கு­தல்­க­ளினால், அமெ­ரிக்க சிவி­லியன் ‘கொன்ட்­ரக்டர்’ ஒருவர் கொல்­லப்­பட்­ட­துடன், நான்கு அமெ­ரிக்க இராணு­வத்­தினர் மற்றும் இரண்டு ஈராக்­கியப் படை­யினர் காய­ம­டைந்­தி­ருந்­தனர். மேற்­படி தாக்­கு­தலை ஈராக்கில் இயங்கும் மக்கள் அணித்­தி­ரள்வுப் படையில் (PMF) அங்கம் வகிக்கும் பிர­தான ஈரான் சார்பு ஷியா ஆயுதக் குழு­வான கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயு­தக்­குழு நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யது. அதனை அவ்­வா­யு­தக்­குழு மறுத்­தி­ருந்த போதிலும், இதற்குப் பதி­ல­டி­யாக, அமெ­ரிக்கா கடந்த மாத இறுதி ஞாயி­றன்று (29.12.2019 ) ஆயுதக் குழு­வி­னு­டைய சிரியா மற்றும் ஈராக்கில் அமைந்­துள்ள ஐந்து தளங்கள் மீது F-15 போர் விமா­னங்­களின் மூலம் வான் தாக்­கு­தல்­களைத் தொடுத்­தது. அதில் குறைந்­தது நான்கு கள­நிலைத் தள­ப­திகள் உட்­பட 25 உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­ட­துடன், சுமார் ஐம்­பது வரை­யான உறுப்­பி­னர்கள் காய­ம­டைந்­தி­ருந்­தனர். இந்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்­தியே கடந்த வரு­டத்தின் இறுதி நாளான செவ்­வா­யன்று அமெ­ரிக்கத் தூத­ரகம் மீது ஆயு­தக்­குழு ஆத­ர­வா­ளர்கள், தூத­ரக வளா­கத்தின் மதி­லுக்கு வெளியே முற்­று­கை­யிட்டுத் தாக்­குதல் தொடுத்­தி­ருந்­தனர்! தமது உறுப்­பி­னர்­களின் மர­ணத்­திற்கு அமெ­ரிக்கா மீது பழி தீர்க்­கப்­படும் எனவும் சூளு­ரைக்­கப்­பட்­டது!! ஈராக்கில் தமது பிர­ஜை­களின் மீதும் பிற இராஜ­தந்­தி­ரி­களின் மீதும் ஈரா­னிய பின்­புல ஆயுதக் குழுக்­களின் மூலம் ஈரான் தாக்­குதல் தொடுக்­கலாம் என்­கின்ற அச்சம் நில­வி­யது. ஏனெனில், ஈரான் புரட்­சி­யின்­போது ஈரா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தின் 52 பேர் பணயக் கைதி­க­ளாக 444 நாட்கள் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்­த­துடன், அமெ­ரிக்கத் தரப்­பிற்கு அவர்­களைப் (ஈரான் தாமாக அவர்­களை விடு­விக்கும் வரை) பாது­காப்­பாகத் திருப்பிப் பெறு­வது சிம்­ம­சொப்­ப­ன­மாக இருந்­தது. ஆக, இதனைத் தொடர்ந்தே தூத­ரக அமெ­ரிக்கப் பிர­ஜை­களைப் பாது­காக்கும் பொருட்­டாக குவைட்­டி­லி­ருந்து அமெ­ரிக்க மத்­திய கட்­டளைத் தளத்தின் நெருக்­கடி பதில் நட­வ­டிக்­கைக்­கான (Crisis Response) மெரின் கொமாண்­டோக்­களின் பிரி­வொன்று துரி­த­மாக அமெ­ரிக்­காவின் பக்தாத் தூத­ர­கத்­திற்கு அதே நாள் நகர்த்­தப்­பட்­டது. மேலும் 82ஆவது துரித பதில் நட­வ­டிக்­கைக்­கான வான்­வழித் தரை­யி­றங்­கல்கள் படைப்­பி­ரி­வி­னது சுமார் எழு­நூற்றி ஐம்­பது சிப்­பாய்­களை பிராந்­தி­யத்தில் நிலைப்­ப­டுத்­து­வ­தற்­கான முஸ்­தீ­பு­களை அமெ­ரிக்கத் தரப்பு முடுக்­கி­விட்­டது. தமது இழப்­பிற்கு கடும் பதி­லடி கொடுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் கதாயிப் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் ஈரான் இருந்­தமை வெளிப்­படை. ஆக, அமெ­ரிக்க F-15 போர் விமா­னங்­களின் மூலம் வான் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயுதக் குழுவின் கட்­டளைத் தள­ப­தியே, அபூ மஹ்தி அல் முஹத்திஸ். காசிம் சுலை­மானி, ஈராக்கில் அபூ மஹ்தி அல் முஹத்­தி­ஸினால் வர­வேற்­கப்­பட்­டது இந்தப் பின்­னணி நிலவும் ஒரு சூழலில் ஆகும். இவ்­வா­றாக காசிம் சுலை­மா­னியை பக்தாத் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து அதி­காலை சுமார் 1.00 மணி­ய­ளவில் பெற்றுக் கொண்டு திரும்­பிய இரண்டு கார்­களின் மீதே ‘தாக்­குதல் ட்ரோன்’ மூலம் அமெ­ரிக்கா ஏவு­கணை வீச்­சினைத் தொடுத்­தது என்­ப­துடன், தாக்­கு­தலில் சுலை­மானி உட்­பட அனை­வரும் கொல்­லப்­பட்­டனர்.

தாக்­குதல் எவ்­வாறு நடத்­தப்­பட்­டது?

காசிம் சுலை­மானி, சிரி­யாவின் டமஸ்கஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து தனி­யா­ருக்கு சொந்­த­மான ஏர்பஸ் ரக A–320 விமா­ன­மான ‘சம் விங்ஸ்’ 6Q501 மூல­மாக ஈராக்கின் பக்­தாத்தை நோக்கி கடந்த வியாழன் (02.01.2020) இரவு பய­ணித்­துள்ளார். உண்­மையில் இந்த விமானம் இரவு 8:20 இற்கு சிரி­யா­வி­லி­ருந்து புறப்­பட்­டி­ருக்க வேண்­டி­யி­ருப்­பினும் தாம­த­மாக இரவு 10:30 மணி­ய­ள­வி­லே­யேதான் அங்­கி­ருந்து கிளம்­பி­யுள்­ளது. பக்­தாதை அதே இரவு 10:50இற்கு அவ்­வி­மானம் அடைய வேண்­டி­யி­ருப்­பினும் மேற்­படி 130 நிமிடம் தாம­த­மாகப் புறப்­பட்­டதால், அடுத்த நாள் அதா­வது, சம்­பவம் நடந்த தின­மான வெள்­ளி­யன்று அதி­காலை சுமார் 1:00 மணி­ய­ள­வி­லேயே ஈராக்கின் பக்தாத் சர்­வ­தேச விமான நிலை­யத்தை அடைந்­துள்­ளது. பின்னர், விமான நிலை­யத்­தி­லி­ருந்து சுலை­மா­னியை, அபூ மஹ்தி அல் முஹத்திஸ் பெற்றுக் கொள்­ளவே, இரண்டு கார்­களின் மூல­மாக அவர்கள் விமான நிலை­யத்தை விட்டு புறப்­பட்டுச் சென்­றனர். எனினும், விமான நிலை­யத்தின் Cargo பகு­திக்கு அண்­மை­யாக அக்­கார்கள் நகர்ந்து கொண்­டி­ருக்கும் போது, அவ்­வி­லக்­கு­களை நோக்கி அமெ­ரிக்க ட்ரோன் விமானம் வானி­லி­ருந்து தரைக்குப் பாயும் நான்கு ஏவு­க­ணை­களை ஏவி­யது. மேற்­படி தாக்­கு­தல்­களில் சுலை­மா­னி­யுட்­பட அனை­வரும் கொல்­லப்­பட்­டனர். மேற்­படி நுட்­ப­மான தாக்­கு­த­லா­னது, அமெ­ரிக்க ஆயுத உற்­பத்தி நிறு­வ­ன­மான ‘ஜெனரல் எட்­டமிக்’ நிறு­வ­னத்தின் ஆளில்லா (UAV) தாக்­குதல் (Predator) ரக MQ-9 Reaper ‘ட்ரோன்’ விமா­னத்தின் மூலம் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பொருத்­தப்­பட்­டுள்ள Hellfire R9X வானி­லி­ருந்து தரைக்­கான (ATG) ஏவு­க­ணை­களின் மூலமே சுலை­மா­னியின் வாகனத் தொட­ரணி தாக்­கப்­பட்­டுள்­ளது. மிக நுட்­ப­மான மற்றும் குறு­கிய நேரத்தில் சடு­தி­யாக தப்­பி­விடும் அதி முக்­கி­ய­மான (High Profile) இலக்­கு­களைத் தாக்­கு­வ­தற்கு மிகத் துல்­லி­ய­மாக இலக்­கு­வைக்க முடி­யு­மான அதி­மீத்­திர ஆயு­தங்­களை இராணு­வங்கள் பயன்­ப­டுத்­து­கின்­றன. இந்த வகையில், MQ-9 Reaper ‘ட்ரோன்’ விமா­ன­மா­னது, மேற்­படி தேவை­யினைப் பூர்த்தி செய்­வதில் சிறப்­பாகச் செயற்­ப­டக்­கூ­டி­யது என்­ப­துடன் அமெ­ரிக்கா, ஏற்­க­னவே அல் கைதா அமைப்பின் முக்­கிய இரண்டு தள­ப­தி­களை மேற்­படி ‘ட்ரோன்’ மூல­மாக முன்னர் வெற்­றி­க­ர­மாகத் தாக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நாம் இக்­கட்­டு­ரையின் இறுதிப் பகு­திக்கு வருவோம்.

தற்­போ­தைய முறு­க­லான சூழ்­நி­லை­யுடன் காசிம் சுலை­மானி, ஈராக் மற்றும் பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­காவின் நலன்­களின் மீது உட­ன­டி­யாகப் பெரும் தாக்­கு­தல்­களை நடத்த திட்டம் தீட்­டி­யுள்­ளமை வெளிப்­பட்­ட­மையின் கார­ண­மா­கவே தாம் இத்­தாக்­கு­த­லினை ஆணை­யிட்­ட­தாக ட்ரம்ப் அறி­வித்­தி­ருந்தார்.

எனினும், இது­கு­றித்து விரி­வான தக­வல்­களை அமெ­ரிக்கத் தரப்பு வழங்­க­வில்லை. மேற்­படி நிகழ்வு மற்றும் ஈரானின் ஏவு­கணைத் தாக்­குதல் ஆகி­ய­வற்றின் மூலம் தமது இறைமை மீறப்­பட்­டுள்­ள­தாக ஈராக் சாடி­யி­ருந்­தது.

மேலும், ஒரு­த­லைப்­பட்­ச­மாக ட்ரம்பின் முடி­வு­ட­னான மேற்­படி தாக்­கு­த­லா­னது, அமெ­ரிக்­காவின் தற்­பா­து­காப்பு சரத்­திற்கு உட்­ப­டுமா என்­கின்ற விவா­தமும் ஈரானை மேலும் சீண்டும் நிகழ்­வு­களை தவிர்க்க வேண்­டு­மென ட்ரம்ப் மீதான அழுத்­தத்­தி­னையும் அமெ­ரிக்­காவில் தோற்­று­வித்­துள்­ளது. எது எவ்­வா­றி­ருப்­பினும், இரண்டாம் உலக யுத்­தத்தின் போதான ஜப்­பா­னிய ஏகா­தி­பத்­தி­யத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான மார்ஷல் எட்­மிரல் இசோ­ரொகு யம்­ம­மோட்டோ, ஜப்­பா­னிய வல்­லா­திக்க அபி­லா­ஷை­களை அடையும் நகர்வில் அமெ­ரிக்கத் தரப்­பிற்கு சிம்­ம­சொப்­ப­ன­மாகத் திகழ்ந்­தவர். பசுபிக் யுத்தம் மற்றும் ‘பேர்ல் ஹாபர்’ மீதான தாக்­கு­தல்­களின் பிர­தான கட்­டளைத் தள­ப­தி­யான இவர், 1943 ஏப்ரல் 18 இல் சொலமன் தீவுக் கூட்­டத்தின் போகன்­விலா தீவினை நோக்கி ரக­சி­ய­மாக விமா­னத்தில் பறந்­த­போது அமெ­ரிக்க இராணு­வத்தின் விமானப் படைப்­பி­ரிவின் போர் விமா­ன­மா­னது, கச்­சி­த­மாக இடை­ம­றித்து அவரைத் தாக்­கி­யதால் அவர் கொல்­லப்­பட்டார். இவரின் மர­ண­மா­னது, ஜப்­பானின் போரிடும் மன­உ­று­தியை ஆட்­டங்­காண வைத்­தது. எட்­மிரல் யம்­ம­மோட்­டோவின் இந்­தப்­ப­யணம் குறித்து ஜப்­பா­னிய பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டையே இரக­சி­ய­மாகப் பரி­மா­றப்­பட்ட தக­வல்கள், அமெ­ரிக்க சமிக்ஞை உள­வுப்­பி­ரி­வி­னரின் மூலம் இடை­ம­றிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், மேற்­படி தாக்­குதல் ஏற்­க­னவே நேர்த்­தி­யாகத் திட்­ட­மி­டப்­பட்­ட­படி அது அரங்­கேற்­றப்­பட்­டது. ஆக, பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் அமெ­ரிக்கத் தரப்­பிற்கு இசோ­ரொகு யம்­ம­மோட்டோ போன்ற பல­மான ஓர் இலக்­கினை வேட்­டை­யா­டு­வ­தற்கு காசிம் சுலை­மா­னியை கொன்­ற­தி­னூ­டாக அடைய முடிந்­துள்­ளது. நாம் முன்னர் கூறி­யது போன்று, ஈரா­னிய வலு எரி­யத்தின் முக்­கிய மையப்­புள்­ளி­யான காசிம் சுலை­மா­னியின் நகர்­வுகளை மிக ரக­சி­ய­மாகப் பேண வேண்­டி­யது ஈரானின் மூலோ­பாயத் தேவை­யாகும். ஆக, மேற்­படி துல்­லி­ய­மான தாக்­குதல் அமெ­ரிக்கத் தரப்­பிற்கு எவ்­வாறு சாத்­தி­ய­மா­னது என்­கின்ற கேள்­விக்கு இரண்டு பதில்கள் உள்­ளன. முத­லா­வது, அமெ­ரிக்கத் தரப்பு தொழி­நுட்ப ரீதி­யாகப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மான சாதகத் தன்மை. இரண்­டா­வது, ஈரா­னிய தரப்பின் எடுகோள் மூல­மாக அமெ­ரிக்கத் தரப்பு பெற்றுக் கொண்ட சாதகத் தன்மை. அதா­வது முத­லா­வ­தாக, ஜப்­பா­னிய எட்­மிரல் யம­மொட்­டோவின் பயணம் குறித்த தகவல் பரி­மா­ற­லினை அமெ­ரிக்க சமிக்ஞைப் புல­னாய்வுப் பிரிவு இடை­ம­றித்து திட்டம் தீட்­டி­யது போன்று, கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயு­தக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் அமெ­ரிக்க வான் தாக்­கு­தல்­களின் மூலம் கொல்­லப்­பட்­டதன் பின்னர் இடம்­பெற்ற காஸிம் சுலை­மா­னியின் தொலை­பேசி உரை­யாடல் ஒன்­றினை இஸ்ரேல் அல்­லது அமெ­ரிக்க உள­வுப்­பி­ரி­வினர் இடை­ம­றித்­தி­ருந்­த­தாக இஸ்­ரே­லியத் தரப்புச் செய்தி வழி­யாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது!. இரண்­டா­வ­தாக, கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயுதக் குழுவின் உறுப்­பி­னர்கள் அமெ­ரிக்க வான் தாக்­கு­தல்­களின் மூலம் கொல்­லப்­பட்­டதன் மூல­மா­கவும் பின்னர் ஈராக்கில் அமைந்­துள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் தாக்­கப்­பட்­டது போன்ற நிகழ்­வு­களின் மூலம் ஈரா­னியத் தரப்­பா­னது மிக அதி­க­ளவில் சீண்­டப்­பட்­டி­ருந்­த­தினால், காசிம் சுலை­மானி போன்ற அதி­முக்­கிய மூலோ­பாய இலக்­கொன்­றினைத் தற்­போது தாக்கி, ஈரா­னு­ட­னான சீண்­ட­லினை அமெ­ரிக்கா மேலும் அதி­கப்­ப­டுத்­து­வ­தற்குத் துணி­யா­தென ஈரான் தரப்பு எண்­ணு­வ­தற்கு முற்­பட்­டி­ருக்கக் கூடும்.

இவ்­வாறு கூறு­வ­தற்குக் காரணம் இருக்­கின்­றது. சுலை­மா­னியின் மரணம், ஈரா­னிய உள­வுப்­பி­ரி­விற்கும் விழுந்த பலத்த அடி­யாகும். ஏனெனில், இறுக்­க­மா­ன­தொரு சூழலில் தமது பிர­தான கட்­டளைத் தள­ப­தியின் வரு­கை­யின்­போது, ஈரா­னிய அதி­மீத்­திற வான் கண்­கா­ணிப்புப் பிரி­வுகள், ட்ரோன்­களின் நட­மாட்டம் குறித்தோ அல்­லது பிற­வி­ட­யங்கள் குறித்தோ விழிப்­பாக இல்­லா­மை­யினை இது வெளிப்­ப­டுத்­து­கின்­றது. மறு­த­லை­யாக, மேற்­படி அஜாக்­கி­ர­தை­யான சூழ­லினை அமெ­ரிக்கத் தரப்பு பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது. கத்­தாயிப் ஹிஸ்­புல்லாஹ் ஆயு­தக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் மீது அமெ­ரிக்­காவின் மூல­மான பலத்த அடிக்குப் பழி­வாங்கும் முக­மாக, அக்­கு­ழுவின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் மற்றும் திட்­டங்கள் குறித்து அமெ­ரிக்க அணியின் உள­வுத்­த­ரப்பு அதி உச்­ச­பட்ச அவ­தா­னத்தைக் குவித்­தி­ருக்கும் என்­ப­துடன், அதன் தலை­வர்­க­ளு­டைய உரை­யா­டல்கள், நகர்­வுகள் என்­பன நுணுக்­க­மாகக் கண்­கா­ணிக்­கப்­பட்டே இருக்கும். இதன் பொருட்டு ஏற்­க­னவே ஈராக்கின் மீதான அதீத ஈரா­னிய அழுத்­தத்­தினை விரும்­பாத தேசி­ய­வா­திகள் சார்­பான இராணுவ உளவுத் தரப்­பி­ன­ரது உத­வி­க­ளையும் அமெ­ரிக்கத் தரப்பு பெற்­றி­ருக்க முடியும். விட­யங்கள் இத்­துடன் முடி­ய­வில்லை!!

2008ஆம் ஆண்டு லெபனான் ஹிஸ்­புல்­லாவின் முக்­கிய (புல­னாய்வு மற்றும் பாது­காப்பு) தலை­வர்­களில் ஒரு­வ­ரான இமாத் முக்­னியாஹ், கார்க்­குண்டுத் தாக்­கு­தலின் மூலம் கொல்­லப்­பட்­ட­போது, தொடர்ந்த நாட்­களில் காசிம் சுலை­மா­னியை இலக்கு வைக்கும் மொஸாடின் திட்­ட­மொன்று அமெ­ரிக்கா அதனைத் தள்ளிப் போட்­டதால் கைவி­டப்­பட்­ட­தாக தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன. ஆக, தற்­போது காசிம் சுலை­மானி கொல்­லப்­பட்­டது, மேற் சொன்­னதை போன்ற எடு­கோளின் மூல­மாகும். ஈராக்கில் நில­விய சூழ­லுடன் காசிம் சுலை­மானி, ஈராக்­கிற்கு வரு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூறு அதிகம். ஆக, அதனைச் சுற்றி தாக்­குதல் திட்­டத்­தினை அமெ­ரிக்கத் தரப்­பிற்கு கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முடி­யு­மாகும்! ஏனெனில், சுலை­மானி மீதான தாக்­கு­த­லுக்கு முன்னர், எற்­க­னவே 82ஆவது துரித பதில் நட­வ­டிக்­கைக்­கான வான் வழித் தரை­யி­றங்­கல்கள் படைப்­பி­ரி­வி­னது சுமார் எழு­நூற்றி ஐம்­பது சிப்­பாய்­க­ளுக்குப் பிரத்­தி­யே­க­மாக, அவ­சர நிலை­மை­களின் போது கள­மி­றக்­கு­வ­தற்கு, ஒரு தொகை­யான விசேட படை கொமாண்­டோக்­களை ரக­சி­ய­மாக ஜோர்­தானில் அமெ­ரிக்கா தரை­யி­றக்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் எந்த தளத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கத் தரப்பு மேற்­படி ட்ரோன் தாக்­கு­த­லினைத் தொடுத்­தது என்­பது பற்றி அமெ­ரிக்கா விலா­வா­ரி­யாக அறி­விக்­காத நிலையில், மேற்­படி சூட்­சு­ம­மான ட்ரோன் தாக்­கு­த­லினை குறிப்­பாக கண்­சி­மிட்டும் நேர இடை­வெ­ளிக்குள் நடத்தி முடிக்க வேண்­டிய தாக்­கு­த­லினை நடத்தும் விசேட படை­ய­ணி­யொன்­றுள்­ளது. ஆக, MQ-9 ன் பறப்பு தூரத்­திற்குள் பிராந்­தி­யத்தில் பொது­வாக அனைத்து அமெ­ரிக்கத் தளங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. மேலும் ஈரா­னா­னது எவ்வாறு பதில் தாக்குதல் நடத்தும் என்ற கேள்விக்கான பதிலினை ஈரான் வழங்கியுள்ளது. ஈரானின் தாக்குதல் சுலைமானியின் தாக்குதலுக்கு அதன் இயல்பில் நேர் விகித சமமாகாத போதிலும் ஈரான், மூலோபாய ரீதியாகவும் தமது குறிக்கோள்களை மையப்படுத்திய விதமாகவும் பதிலடி கொடுத்துள்ளது. சுலைமானியின் மரணத்திற்கு ஒத்த ஈரானின் பதிலடி என்பது, அமெரிக்காவின் மத்திய உளவுப்பிரிவினது இயக்குநர் அல்லது உயர் இராணுவ அதிகாரிகளின் தலைவர் ஆகிய ஒருவரை இலக்கு வைத்ததாக இயல்பில் இருத்தல் வேண்டும். எனினும் ஈரான் நேரடிப் போரினை விரும்பவில்லை என்பதுடன், நேரடிப் போரின் மூலம் ஈரான் அதிக இழப்பினையும் குறைந்த அடைவினையே பெற்றுக் கொள்ளும். ஆக, ஈராக்கில் அமெரிக்க படைத்தளங்களை இலக்கு வைத்து பதிலடி கொடுத்ததன் மூலம் ஈரான், நாம் பலமுறை எழுதியதைப் போன்று அதன் துணிவு தளர்ப்பு மூலோபாயத்தையும் தனது மேலோங்குகைக்கு சவாலாகவுள்ள அமெரிக்கப் பிரசன்னத்தையும் எதிர்க்கின்றது.

ஏற்கனவே, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைவிலகல் குறித்த மசோதா பாராளுமன்றத்தில் சூடுபிடித்துள்ளமை ஈரான் அடையும் மூலோபாய வெற்றியாகும். மேலும், மரபுவழியற்ற விதத்தில் சமச்சீரற்ற போரியலின் மூலமாக ஈரான், எதிர்கால பாதாளத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். ஏனெனில் இதுவே ஈரானின் பொதுவான மூலோபாயக் கலாசாரமாகும்.

பிராந்திய மேலாதிக்கத்தினை நோக்கி நகரும் ஈரானைப் பொறுத்தவரையில், அது சார்பான ஆயுதக்குழுக்களைப் போஷிப்பதுடன் அவற்றின் மூலமாக அழுத்தம் கொடுத்து ஈராக்கிய அரசியலினைக் கட்டுப்படுத்துவது அதனது பிரதான வியூகங்களில் ஒன்றாகும். ஆக, ஈரான் தனது மிக முக்கிய மூலோபாய புவிப் பிரதேசத்தில் தற்போது மரபுவழியான மற்றும் மரபு வழியற்ற பிரதான தலைவர்களை இழந்துள்ளமையானது, ஈரான் அண்மைக்காலத்தில் அடைந்த பாரிய பின்னடைவாகும். மேலும் ஈரானிய இராணுவ வலு மூலகமும் ஈரானிய மத்திய புலம் சந்தித்த முக்கிய மூலோபாயப் பின்னடைவுமாகும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.