கருவறையில் நிகழும் கொலை

0 1,299

‘பின்னர் ஆண் பெண் கலப்­பான இந்­தி­ரியத் துளியில் இருந்து நிச்­ச­ய­மாக மனி­தனை நாமே படைத்தோம், அவனை சோதிப்­ப­தற்­காக அவனை கேட்­ப­வ­னா­கவும், பார்ப்­ப­வ­னா­கவும் ஆக்­கினோம்’: ஸூரத்துத் தஹ்ர் (வசனம் 2)

‘யாழி­னி­தென்பார், குழ­லி­னி­தென்பார் மழலை மொழி கேளாதார்’ என்ற வரி­யினை பிற்­ப­டுத்தி, மேற்­போந்த புனித அல் குர்ஆன் வச­னத்­தோடு இணங்கி சிந்­திக்­கையில், குழந்தைச் செல்­வத்தின் பெறு­ம­தி­யி­னையும், நானே உண­வ­ளிக்­கிறேன் என இறைவன் பொறுப்­பேற்­ப­த­னூ­டாக அவன் மனி­தனை படைத்து போஷிப்­பதன் முக்­கி­யத்­து­வத்­தையும் உள்­ளங்கை நெல்லிக் கனி­யாக அறி­வு­டை­யோரும் சிந்­தி­யா­தோரும் தெளிவு பெறலாம்.

பாதைகள் தோறும் சாக்­க­டைகள் முழுதும் குப்பைத் தொட்­டி­க­ளிலும் குழந்­தைகள் எறி­யப்­ப­டு­வது என்­னவோ அறி­வி­ருந்தும் சிந்­திக்க மறந்த மூடர்­களின் செயல் தான் எனலாம். பழிக்குப் பயந்தும், வறு­மைக்­கா­கவும், கௌர­வத்­திற்­கா­கவும் செய்­யப்­படும் சிசுக் கொலைகள் ஒரு விதம் எனில், சிசுவாய் பரி­ண­மித்து இந்த பூமியின் சுக துக்­கங்­களை கண்­டிட முன்பே இருட்­ட­றையில் செய்­யப்­படும் கொலை­க­ளுக்கு ‘கருக்­க­லைப்பு‘ என நாக­ரி­க­மாகப் பெயர் சூட்­டப்­ப­டு­கின்­றது. தற்­ச­மயம் கருக்­க­லைப்பு நாக­ரிக போதையின் விளை­வென்றால் அதுவும் மிகை­யல்ல.

ஏன் கருக்கள் கலைக்­கப்­ப­டு­கின்­றன?

தனக்குள் இருக்கும் உயி­ரினை வதம் செய்­வ­தற்கு பல்­வேறு தரப்­பினர் பல்­வேறு கார­ணி­களை முன் வைக்­கின்­றனர். பாலியல் வல்­லு­றவின் மூலம் பெறப்­பட்ட சிசு, குறைந்த வயதில் கர்ப்பம், தாயின் உயிரை காக்கும் பொருட்­டான பாது­காப்புக் கார­ணிகள் என்­பவை குறிப்­பி­டத்­தக்­கவை. ஆனால் இன்­றைய மனி­தா­பி­மா­ன­மற்ற உல­கிலே அத்­த­கைய அவ­சி­யங்­க­ளையும் தாண்டி வறுமை, பகட்டு, இடை­வெ­ளி­யில்­லாது கரு­வுற்­றமை, அதிக எண்­ணிக்­கை­யி­லான பிள்­ளைகள் காணப்­ப­டு­கின்­றமை மற்றும் அழகு குறைந்து விடும் போன்ற ஏற்றுக் கொள்­ளப்­பட முடி­யாத கார­ணி­களும் கருக்­க­லைப்­பினை நியா­யப்­ப­டுத்த சமூ­கத்தில் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கொழும்பில் காணப்­படும் இரண்டு கருக்­க­லைப்பு நிலை­யங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் அடிப்­ப­டையில் கருக்­க­லைப்­பினை விரும்பும் 90 சத­வீ­த­மானோர் திரு­ம­ண­மா­ன­வர்­க­ளாக இருப்­ப­துடன், தாமே விரும்பி கருக்­க­லைப்­பினை நாடிச் செல்­கின்­றனர். இவர்­க­ளது சிசு வதைக்­கான கார­ணங்­க­ளாக முன்­னரே குறிப்­பி­டப்­பட்ட அதி­முக்­கி­ய­மான தேவைகள் காணப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றியே.

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் கிராமப் புறங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்பின் படி ஒவ்­வொரு 1000 சனத்­தொகைப் பரம்­ப­லுக்கும் 54 கருக்­க­லைப்பு சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தாக அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. கருக்­க­லைப்­பிற்கு ஏற்றுக் கொள்­ளக்க கூடிய கார­ணங்கள் ஒரு­பு­ற­மி­ருக்க கருக்­க­லைப்­பிற்கு கார­ணி­களை தேடித் திரி­ப­வர்கள் கண்­டிக்­கவும் தண்­டிக்­க­வும்­படக் கூடி­ய­வர்கள்.

கருக்­க­லைப்பு தொடர்­பாக இலங்கை சட்டம் என்ன கூறு­கி­றது?

வெள்­ளையன் அன்று விட்டுச் சென்ற குற்­ற­வியல் சட்­ட­மா­னது தற்­போது வரைக்கும் சில மாற்­றங்­க­ளுடன் நடை­மு­றையில் இருக்கும் பட்­சத்தில், 1883 ஆம் ஆண்டின் இலங்கை குற்­ற­வியல் சட்­ட­மா­னது கருக்­க­லைப்புச் செய்­வ­தனை தண்­டிக்­கப்­படக் கூடிய குற்­ற­மாக இனங்­கா­ணு­கின்­றது. ஆகவே, இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் கரு­வா­னது தனது வளர் நிலையில் கலைக்­கப்­ப­டுதல் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­ப­துடன் இலங்­கையின் நீதவான் நீதி­மன்றில் அது தொடர்பில் வழக்­கு­களை தொடர முடியும்.

இலங்­கையில் காணப்­படும் குற்­ற­வியல் சட்­டத்தின் படி, தாயின் உயிரைப் பாது­காக்கும் நன்­னோக்கம் இல்­லாது வேண்­டு­மென்றே கருக்­க­லைப்­பினை மேற்­கொண்­டமை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்டால் 3 வரு­டங்­க­ளுக்கு மேற்­ப­டாத சிறை அல்­லது தண்­டப்­பணம் அல்­லது இரண்டும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­படும். குறித்த தண்­ட­னை­யா­னது தனக்குத் தானே கருக்­க­லைப்பு செய்து கொள்ளும் தாய்க்கும் பொருந்தக் கூடி­ய­தாகும். மேற் சொன்ன சட்­டத்தின் பிரிவு 303 இன் ஏற்­பா­டாகும். அதனைத் தவிர பிரிவு 304 இன் பிர­காரம் தாயின் சம்­மதம் இல்­லாது மூன்றாம் நபர் குறித்த தாய்க்கு கருக்­க­லைப்புச் செய்­வா­ரானால் 20 வரு­டங்­க­ளுக்கு குறை­யாத சிறைத் தண்­ட­னைக்கும் தண்­டப்­பண செலுத்­து­கைக்கும் ஆளாக நேரிடும். அத்­தோடு கருக்­க­லைப்பின் போது தாய் இறக்கும் நிலை ஏற்­ப­டு­மா­னாலும் கூட 20 வரு­டங்கள் சிறை தண்­டனை விதிக்­கப்­பட முடியும் என்­ப­துடன் குறித்த கருக்­க­லைப்பு செயற்­பா­டா­னது இறப்பை ஏற்­ப­டுத்தும் என கருக்­க­லைப்பை மேற்­கொண்­டவர் அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மில்லை என்­பது பிரிவு 305 நமக்கு அளிக்கும் விளக்­க­மாகும்.

இந்த ஏற்­பா­டுகள் வழி­யாக நாங்கள் கவ­னிக்க வேண்­டிய முக்­கிய விடயம் என்­ன­வெனில், தாயின் உயிரை பாது­காக்கும் நன்­னோக்கம் இல்­லாது வேண்­டு­மென்றே தேவை­யற்ற கார­ணங்­க­ளுக்­காக செய்­யப்­படும் கருக்­க­லைப்­பிற்கு தகுந்த தண்­டனை காணப்­ப­டு­கின்­றது என்­பதே.

மற்றும் சட்ட பிரி­வு­க­ளுக்கு இணங்க இலங்கை, கருக்­க­லைப்பு தொடர்பில் மிகக் கடு­மை­யான சட்டப் போக்­கினை கொண்­டுள்­ளமை தெளி­வா­வ­துடன், கருக்­க­லைக்­கப்­பட்­ட­மை­யா­னது நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுப்­பதன் ஊடாக நிரூ­பிக்­கப்­படும் போது குற்­ற­வாளி சட்­டத்­தி­ட­மி­ருந்து தப்­பிக்க முடி­யாது.

தாயின் உயிரை பாது­காக்கும் நன்­னோக்கம் என்ற அங்­க­மா­னது எவ்­வா­றான அடிப்­ப­டை­களைக் கொண்­டது என்­ப­தற்கு எந்த வித­மான பொருள் கோடலோ விளக்­கங்­களோ கொடுக்­கப்­ப­டாத நிலையில் மருத்­துவ சான்­ற­றிக்கை மூலம் கரு மேலும் வளர்­வது தாயின் உயி­ருக்கு ஆபத்து என உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது போது­மா­ன­தாகக் கரு­தப்­பட்டு பர­வ­லாக அரச வைத்­தி­ய­சா­லை­களில் கருக் கலைப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

கருக்­க­லைப்பு ஏன் அவ­சியம்?

நாக­ரிகப் பகட்டில் கருக்­க­லைப்­பினை நாடும் கய­வர்­க­ளுக்கு மத்­தியில் கருக்­க­லைப்­பிற்கு அனு­மதி அவ­சியம் எனவும் அதன் வழி இலங்­கையில் காணப்­படும் இறுக்­க­மான கருக்­க­லைப்பு சட்­டத்­தினை நெகிழ்­வுப்­ப­டுத்தி அதனை சற்றே சட்ட ரீதி­யாக்க வேண்டும் எனவும் ஒரு தரப்­பினர் கோஷம் எழுப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

கற்­ப­ழிப்பு மற்றும் குடும்ப உற­வு­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட தகாத உற­வு­க­ளினால் உரு­வான கருக்­களை சட்ட ரீதி­யாக கலைப்­ப­தற்கு அனு­மதி பெற்றுத் தரும் படியும் அல்­லது சட்­டத்தை இல­கு­வாக்கி வைக்கும் படியும் இந்த சாரார் கோஷ­மி­டு­கின்­றனர்.

1995, 2011 மற்றும் 2013 என தொடர்ச்­சி­யாக எடுத்­தி­யம்­பப்­பட்ட சட்­டத்தில் திருத்தம் கொண்டு வரு­வ­தற்­கான கோரிக்­கை­யா­னது 2017 ஆம் ஆண்டு நீதி­பதி அலு­வி­கா­ரே­வினால் எழுத்து மூல­மான பரிந்­து­ரை­யா­கவே முன்­வைக்­கப்­பட்­டது. அவ­ரது கோரிக்கை, ‘‘கற்­ப­ழிப்பு, குடும்ப உற­வு­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட தகாத உற­வு­க­ளினால் உண்­டான கரு, 16 வய­திற்கு கீழ்­பட்ட பிள்­ளைகள் கரு­வுற்றால் மற்றும் தீவி­ர­மான கருச்­சி­தைவின் கார­ண­மாக தாயின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் எனில் கருக்­க­லைப்பு செய்து கொள்ள முடியும்’‘ என்­ற­வாறு அமைந்­த­துடன், குறித்த பரிந்­து­ரை­க­ளுக்கு நியா­யங்­க­ளாக இலங்­கையில் 12.5 வீதத்­திற்கு மேற்­பட்ட தாய் வழி மர­ணங்கள் நிகழ்­வ­துடன் அந்த மர­ணங்­க­ளுக்கு அஸ்­பிரின் பாவனை, பாரம்­ப­ரிய கருக்­க­லைப்பு முறைகள் போன்ற சட்­டத்­திற்கு முர­ணான கருக்­க­லைப்பு முறை­களே கார­ணங்கள் என்ற அம்சம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. எனவே, சட்­டத்தை நெகிழ்­வாக்­கு­வதன் மூலம் அல்­லது பாது­காப்­பான கருக்­க­லைப்பு முறை­களை சட்­டத்­திற்கு உட்­பட்டு பயன்­ப­டுத்­து­வதன் மூலம் உயி­ரி­ழப்பை தடுக்க முடியும்.

சட்டத் திருத்த மசோதா ஏற்றுக் கொள்­ளப்­பட்ட போதிலும் குறித்த மசோதா சட்­ட­மாக்­கப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­ட­துடன் மதத் தலை­வர்­க­ளது எதிர்ப்பு தான் குறித்த மசோதா, மசோ­தா­வா­கவே காணப்­ப­டு­வ­தற்கு காரணம் என நம்­பப்­ப­டு­கின்­றது.

கருக்­க­லைப்பு பற்றி இஸ்லாம் பேசு­கி­றதா?

ஸூறத்துல் அன்­ஆமின் 151 ஆவது வசனம், ‘வறு­மைக்குப் பயந்து உங்கள் குழந்­தை­களை கொல்­லா­தீர்கள், ஏனெனில் அவர்­க­ளுக்கும் உங்­க­ளுக்கும் நாமே உண­வ­ளிக்­கின்றோம்’ என்­பது வல்ல இறை­வனின் கட்­ட­ளை­யாகும்.

இஸ்லாம் ஓர் அழ­கிய மார்க்கம். எல்லாக் காலத்­திற்­கு­மான சன்­மார்க்­க­மு­மாகும். ஆகவே, சிசுக் கொலை என்­பது எவ்­வ­ழி­யிலும் இஸ்­லாத்தில் தடுக்­கப்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. எத்­த­னையோ குர்ஆன் வச­னங்­களும், ஹதீஸ்­களும் அதற்கு சான்று பகர்­கின்ற அதே­வேளை, நிர்ப்­பந்த சூழ்­நி­லை­களில் கருக்­க­லைப்­பிற்கு அனு­மதி வழங்­கு­கின்ற தற்­கால பத்­வாக்­களும் காணப்­ப­டு­கின்­றன.

அந்த வகையில் சவூதி அரே­பிய நாட்டின் மக்கா நகரில் அமைந்­துள்ள உலக முஸ்லிம் லீக்கின் இஸ்­லா­மிய பிக்ஹு சபை­யா­னது, ‘120 நாட்­களை எட்­டிய கரு­வினை கலைத்தல் அனு­ம­திக்­கப்­ப­டாது என்­ப­துடன், அவ்­வாறு கரு­வினை தொடர்ந்து வளரச் செய்­வ­தா­னது தாயின் உயிரை பாதிக்கும் என கண்­ட­றி­யப்­ப­டு­மானால் கருக்­க­லைப்­பினை செய்து கொள்­ளலாம்’ என அனு­ம­திக்­கி­றது.

மேலும் இஸ்­லாத்தின் சில அறி­ஞர்கள் கற்­ப­ழிப்பு, குடும்ப உற­வு­க­ளுக்­கி­டை­யி­லான தகாத உறவின் மூலம் உண்­டான சிசு, முறை­கே­டான உற­வு­மு­றையால் உரு­வான கரு என்­ப­வற்றை கலைப்­ப­தற்கு அனு­மதிக் கொடுத்­தாலும் சிலர் அதனை ஏற்றுக் கொள்­ள­வில்லை. இஸ்­லாத்தைப் பொறுத்­த­வ­ரையில் தேவை­யற்ற விதத்தில் உரு­வான கரு­வாக இருப்­பினும் தாயின் உயி­ருக்கு பாதிப்­பில்­லாத போது அதனை கலைக்க முடி­யாது என்­பதே நிதர்­ச­ன­மான உண்மை.

ஆனால், அதற்கு மாறாக பொஸ்­னி­யாவில், இரா­ணு­வத்­தி­னரால் பெண்கள் கற்­ப­ழிக்­கப்­பட்ட போது கரு­வா­னது 120 நாட்கள் வளர்ச்­சியை எட்ட முன்னர் கலைக்­கப்­பட முடியும் என பத்வா வழங்­கப்­பட்­டது. இதே­போன்ற அனு­மதி அல்­ஜீ­ரி­யா­விலும் வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

2009 இல், மாலை­தீ­விலும் கற்­ப­ழிப்­பிற்கு உள்­ளான பெண்கள் கருக்­க­லைப்பு செய்து கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டது. அத்­துடன், 1998 ஆம் ஆண்டு அல்-­அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஷெய்க் முகம்மத் செய்யத் தன்­தாவி, கற்­ப­ழிப்பின் மூலம் கரு­வுற்ற பெண்கள் கருக்­க­லைப்பு செய்து கொள்ள அனு­மதி அளித்து சட்­டத்­தி­னையும் வரைந் தார். ஆனால், அவ­ரது தீர்­மானம் பல­ராலும் விமர்­சிக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு உயிரும் வாழும் உரி­மையை கொண்­டுள்­ளது.

உலகை காணாத இளங்­க­ரு­வினை இருட்­ட­றை­யி­லேயே கொலை செய்­வது சர்வ சாதா­ர­ண­மாக தற்­கா­லத்தில் நடந்­தே­று­கி­றது. அதன் பார­தூ­ரமோ, பாவ கணக்கோ யாராலும் எண்ணிப் பார்க்­கப்­ப­டு­வ­தில்லை. நான் உரு­வாக்­கிய சிசு தான் என்ற மமதை கருக்­க­லைப்­பிற்கு வழி­வ­குக்­கு­மே­யானால் அது அவ்­வா­றில்லை. அல்­லாஹ்வே படைக்­கிறான், அவனே பரி­பா­லிக்­கிறான், அவனே உண­வ­ளிக்­கிறான். அவனே கேள்வி கேட்­ப­வ­னா­கவும் இருக்­கிறான். நிச்­ச­ய­மாக நாங்கள் வெளிப்­ப­டை­யா­கவும் மறை­மு­க­மா­கவும் செய்­தவை தொடர்பில் கட்­டா­ய­மாக விசா­ரிக்­கப்­ப­டுவோம். சட்ட ஏற்­பா­டு­களும் விதி­வ­லக்­கா­னவை அல்ல, ஏற்­றுக்­கொள்­ளப்­படக் கூடிய காரணங்கள் இல்லாது கருக் கலைப்பினை செய்து கொள்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படக் கூடியவர்கள். பச்சிளங் கருவின் உயிர் வாழும் உரிமையினை பறித்து அதி உயர் உரிமை மீறலினை மேற்கொள்பவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாகக் கூடியவர்கள். அது கருக்கலைப்பினை விரும்பி ஏற்கும் தாயாயினும் சரியே.

இருப்பினும் விதிவிலக்கான சூழலில் உண்டான கரு தொடர்பில் சற்றே சிந்திக்க வேண்டியவர்களாய் நாம் காணப்படுகின்றோம். பரவலாக இஸ்லாமிய உலக நாடுகளில் காணப்படும் அசாதாரண போர் சூழலின் காரணமாக கற்பழிக்கப்படும் பெண்கள் சுமக்கும் கரு நமக்கு கண்ணீரை தரவல்லது தான். மேலும் சாதாரண நிலையிலும் கூட்டு வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களின் கரு தொடர்பிலும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

இவ்வாறான நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் எல்லாமே எதிர்பாராத நிகழ்வுகளாய் காணப்படும். குறித்த சம்பவம் தடுக்கப்பட முடியாததாகவும் அப் பெண்களின் சக்திக்கு அப்பால்பட்டதாகவும் இருந்திருக்கும். அந்த வகையில் விதி ஒன்றிருந்தால் விதி விலக்கொன்று கட்டாயமாக காணப்பட வேண்டும். இருப்பினும் சட்டங்கள் உருவாக்கப்படும் போது அதன் ஓட்டைகளை மாத்திரமே தேடி அனுபவிக்கும் கயவர்கள் தொடர்பில் தான் எனது சிந்தனை நீள்கிறது.-Vidivelli

  • சட்­டத்­த­ரணி கிப்­சியா செய்னுல் ஆப்தீன் LLB

Leave A Reply

Your email address will not be published.