இலங்கை முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத வரலாற்றை விட்டுச் செல்லும் 2019

0 540

இன்னும் சில தினங்­களில் 2019 ஆம் ஆண்டு எம்­மி­ட­மி­ருந்து விடை பெற்றுச் செல்­ல­வுள்­ளது. நாம் 2020 ஆம் ஆண்டை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கிறோம்.
இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் நூற்­றாண்டு கால­மாக பெரும்­பான்மைச் சமூ­கத்­து­டனும், ஏனைய சகோ­தர இனங்­க­ளு­டனும் ஒற்­று­மை­யாக, நல்­லி­ணக்­கத்­து­டனும் உற­வா­டி­யி­ருக்­கிறோம். ஒன்­றாக வாழ்ந்­தி­ருக்­கிறோம். வர­லாறு இதற்­குச்­சான்­றாகும்.

ஆனால் எம்மை விட்டு விடை­பெற்றுச் செல்­ல­வுள்ள 2019 ஆம் ஆண்டு எமது வர­லாற்றில் கறை­ப­டிந்த ஓர் ஆண்­டாகும். இலங்கை முஸ்லிம் சமூகம் என்­றுமே எதிர்­பார்த்­தி­ராத அவ­லங்கள் அரங்­கே­றிய ஆண்­டாகும்.

ஏப்ரல் 21 இல் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் இலங்கை முஸ்­லிம்­களின் நற்­பெ­ய­ருக்கு இங்கு மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சத்­திலும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இத்­தாக்­குதல் இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­ப­டா­தது எமது சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இத்­தாக்­கு­தலின் அவ­லங்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை.

250 க்கும் மேற்­பட்ட அப்­பா­வி­க­ளான எமது சகோ­தர இனத்­த­வர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­டார்கள். நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் காயங்­க­ளுக்­குள்ளானார்கள். சிலர் நிரந்­தர உடல் உபா­தை­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள்.

இத்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்கள் ஒரு சிறிய குழு­வினர் என்­றாலும் முழு முஸ்லிம் சமூ­கமும் இதனால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சந்­தே­கத்­துக்குரிய சமூ­க­மாக நாம் மாற்­றப்­பட்­டுள்ளோம். எமது இளை­ஞர்கள் பலர் இன்றும் சிறைக்­கம்­பி­களை எண்­ணிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் மீதான விசா­ர­ணைகள் தொடர்ந்த வண்­ண­முள்­ளன.

முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் கூட இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுகள் இன­வா­தி­களால் சுமத்­தப்­பட்­டுள்­ளன. குண்டுத் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும், உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும் முஸ்லிம் சமூகம் கோடிக்­க­ணக்­கான நிதி­யு­த­வி­களைச் செய்­துள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­களும் நிதி­யு­த­விகள் வழங்­கி­யுள்­ளன. என்­றாலும் இன­வா­தி­களின் தொட­ராக குற்­றச்­சாட்­டு­களால் அனைத்தும் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான சூழலில் முஸ்லிம் சமூகம் பாதிக்­கப்­பட்­டுள்ள சமூ­கத்­தி­னதும், பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­னதும் நல்­லெண்­ணத்தைக் கவ­ர­வேண்டும். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, சமூ­கத்தின் புத்தி ஜீவிகள், சிவில் சமூக அமைப்­புகள் இதற்­காக களத்தில் இறங்­க­வேண்டும்.
பெரும்­பான்மைச் சமூகம் எம்­மீது கொண்­டுள்ள சந்­தே­கங்­களைக் களை­வதன் மூலமே இந்­நாட்டில் எம்மால் சக­வாழ்வு வாழ­மு­டியும். சந்­தே­கங்கள் எமது அய­ல­வர்­க­ளைக்­கூட அப்­பு­றப்­ப­டுத்­தி­விடும் என்­பதை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தி­களால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­செ­யல்கள் எமது வர்த்­த­கத்தைப் பாதிக்­கச்­செய்­தது. சுமார் 30 பள்­ளி­வா­சல்கள் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டன. குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டன. இவற்றை நாம் மறந்­து­வி­ட­வில்லை. இவ்­வா­றான சோத­னை­களின் போதெல்லாம் நாம் பொறுமை காத்­தி­ருக்­கிறோம். இறை­வ­னிடம் கையேந்­தி­யி­ருக்­கிறோம்.

நாம் தீவி­ர­வா­தி­க­ளல்ல, நாம் வன்­மு­றை­யா­ளர்கள் அல்ல, இஸ்லாம் வன்­மு­றை­களை எதிர்க்­கி­றது என்­பதை மாற்றுச் சமூ­கங்­க­ளுக்கு நிரூ­பிக்க வேண்டும். இதனை எமது செயல்கள், எமது நண்­பர்கள், எமது உற­வா­டல்­களே நிரூ­பிக்க முடியும்.

எமது வர­லாற்றில் படிந்த கறை­களை 2019 ஆம் ஆண்­டுடன் திருப்பி யனுப்பி மல­ர­வுள்ள புத்­தாண்டை இஸ்லாம் போதித்துள்ள கருணை, அன்பு, சகோதரத்துவத்துடன் வரவேற்கவேண்டும்.

எமது ஒவ்வோர் குடும்பமும், எம்மை அண்மித்து வாழும் மாற்றுமத குடும்பங்களுடன் சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்பதன் மூலம் புத்தாண்டில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நாட்டில் எமது சமூகத்தின் மீதான சந்தேகங்களைக் களைந்து அனைத்து மக்களுடனும் இணைந்து வாழ்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் திடசங்கற்பம் பூணுவோமாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.