மருத்துவ அலட்சியங்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்

0 1,054

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் புற்று நோய்க்­காக சிகிச்சை பெற்று வந்த காங்­கே­ய­னோடை பிர­தே­சத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பாத்­திமா ஜப்­ராவின் மரணம் அப் பகுதி மக்­களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. மருத்­துவர் மற்றும் தாதி­யர்­களின் கவ­னக்­கு­றை­வினால் உரிய அளவை விடவும் 10 மடங்கு அதி­க­மான செறி­வு­டைய மருந்து ஏற்­றப்­பட்ட கார­ணத்­தி­னா­லேயே குறித்த சிறுமி உயி­ரி­ழக்க நேரிட்­டது. இந்தத் தவறை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நிர்­வா­கமும் ஏற்றுக் கொண்­டுள்­ளது. இந்த தவறு தொடர்பில் சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­களும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள அதே­நேரம், தமது மகளின் மரணம் தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொண்ட முறைப்­பாட்­டுக்­க­மைய பொலி­சாரும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

தனக்கு வழ­மைக்­கு­மா­றான முறையில் மருந்து வழங்­கப்­ப­டு­வது தொடர்பில் சிறுமி ஜப்ரா தாதி­யர்­க­ளிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே குறித்த தவறு இடம்­பெற்­றுள்­ளமை இந்த இடத்தில் கவ­னிக்­கத்­தக்­க­தாகும். என­வேதான் இதனை ‘அறி­யாமல் இடம்­பெற்ற மனித தவறு‘ என வகைப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. மாறாக இது அலட்சியமாகும்.

வைத்­தி­யர்­களும் தாதி­யர்­களும் மனித உயிர்­களைப் பாது­காக்­கவே தம்மை இரவு பக­லாக அர்ப்­ப­ணித்துப் பணி­யாற்­று­கின்­றனர் என்­பதை அவ­ராலும் மறுக்க முடி­யாது. அவர்கள் மனித உயிர்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்­பதால் அவர்­க­ளது தொழில் ஏனை­யோரைப் பார்க்­கிலும் அதிக பொறுப்­பு­ணர்வை வேண்டி நிற்­கி­றது. இந்தப் பொறுப்பை தாம் சரி­வர நிறை­வேற்­றுவோம் என சத்­திய வாக்­கு­று­தி­ய­ளித்த பின்­னரே மருத்­து­வத்­துறைசார் ஊழி­யர்கள் தமது கட­மை­களைப் பொறுப்­பேற்­கின்­றனர். இருப்­பினும் அவ்­வப்­போது நிகழும் தவ­றுகள் நோயா­ளி­களின் உயி­ருக்கே உலை­வைப்­ப­தாக அமைந்­து­வி­டு­கின்­றன.

மருத்­துவ தவ­றுகள் கார­ண­மாக உல­க­ளவில் வரு­டாந்தம் இலட்சக் கணக்­கானோர் மர­ணத்தைத் தழு­வு­கின்­றனர். மருத்­துவ அறிவும் தொழில்­நுட்­பமும் வளர்ந்த அமெ­ரிக்­கா­வில்­கூட, இத் தவ­று­களால் வருடாந்தம் சராசரியாக 195,000 பேர் உயி­ரி­ழப்­ப­தாக அந்­நாட்டு வைத்­தி­ய­சா­லை­களில் 2000 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. மருத்­துவ தவ­றுகள் கார­ண­மாக நோய்­வாய்ப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டு­ப­வர்­களில் ஆகக் குறைந்­தது 10 பேரில் ஒரு­வ­ரா­வது உயி­ரி­ழக்­கின்­றனர் அமெ­ரிக்க தேசிய வானொ­லியின் அறிக்கை ஒன்று குறிப்­பி­டு­கி­றது. அந்த வகையில் உல­க­ளா­விய ரீதியில் பெரும் பிரச்சினையாகக் கருதப்படும் மருத்­துவ தவ­று­களால் ஏற்­படும் உயி­ரி­ழப்­புகள் மற்றும் பாதிப்­பு­களை 2022 ஆம் ஆண்டில் 50 வீதத்­தினால் குறைப்­ப­தற்­கான முயற்­சி­களை தாம் மேற்­கொண்­டுள்­ள­தாக நோயா­ளர்­களின் பாது­காப்­பிற்­கான உல­க­ளா­விய ஒன்­றியம் குறிப்­பிட்­டுள்­ளது.

இலங்கை சுகா­தாரத் துறையில் ஒப்­பீட்­ட­ளவில் தனது தரத்தைப் பேணு­கின்ற போதிலும் இவ்­வா­றான மருத்­துவ தவ­றுகள் அவ்­வப்­போது நிக­ழவே செய்­கின்­றன. சரியான உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்படாவிடினும்  பெரும்­பா­லான தவ­றுகள் மூடி­ம­றைக்­கப்­பட்டு விடு­கின்­றன. ஒரு­சி­லவே வெளியில் பேசப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றா­ன­தொரு சம்­ப­வமே சிறுமி ஜப்­ரா­வுக்கு நடந்­துள்­ளது.

அந்த வகையில் இதனை வெறு­மனே மருத்­துவ தவறு (Medical Error) என்று மாத்­திரம் நாம் கடந்து போய்­விட முடி­யாது. இதனை மருத்­துவ அலட்­சியம் (Medical Negligence) என்ற அடிப்­ப­டை­யி­லேயே நோக்க வேண்டும். அந்த வகையில் மருத்­துவர், தாதியர் மற்றும் மருந்­தா­ளர்­களின் இந்த அலட்­சியம் குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு சிறுமி ஜப்­ராவின் குடும்­பத்­திற்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

இதே­வேளை இந்த சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளும் அலட்சியங்களும் இடம்பெறாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த விசாரணைகளின் பின்னர் எட்டப்படும் தீர்மானமும் நீதிமன்றத் தீர்ப்பும் ஏனைய மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

உயிரிழந்த சிறுமிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதியை அருள்வானாக.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.