பொதுத் தேர்தலில் புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை களமிறக்குவோம்

பொதுஜன பெரமுன

0 1,380

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரு பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை இணைத்துக் கொள்வதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் இத்தேர்தலில் பல புதிய முஸ்லிம் பிரமுகர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

“பல புதிய முஸ்லிம் பிரதிநிதிகளை பொதுத் தேர்தலுக்கு முன்னர் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்புவிடுக்கத் தீர்மானித்துள்ளோம். இதற்கமைய அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அமைச்சரவையில் போதியளவு சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம்களை உள்ளீர்க்க முடியாது போனமைக்கு காரணம், சகல முஸ்லிம் கட்சிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் பக்கம் இருந்தமையே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த முன்னணி முஸ்லிம் பிரமுகர்களை பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்புவிடுக்கவுள்ளோம். அதன் மூலம் அடுத்த அமைச்சரவையில் பலமான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனையோ அணுகமாட்டோம். அவர்களை எம்முடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கமாட்டோம். அவர்கள் இருவர் மீதும், இஸ்லாமிய தீவிரப்போக்குள்ள குழுக்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே அதுவரை எம்முடன் அவர்களை இணைக்க முடியாது.

எம்மால் பல புதிய முஸ்லிம் பிரமுகர்களை அணுக முடியும். மேற்படி முஸ்லிம் கட்சிகள் கடந்த தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவளிக்காதுவிடினும், அவருக்கு ஆதரவளித்த கணிசமான முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் அவர்கள் மூலமாக புதிய பிரதிநிதிகளை உருவாக்குவோம் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளுடன் இணைந்த கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணியில் களமிறங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.