விடிவை நோக்கி நகரத் தயாரா?

0 1,168

சூழ­லுக்­கேற்பத் தன்­ன­ளவில் மாறி/மாற்­றிக்­கொள்­ளாத உயி­ரிகள் அழியும். இது இயற்­கையின் தேர்வு – Nature’s Selection எனப்­ப­டு­கி­றது. இது ஒவ்­வொரு தனி­ம­னி­த­னுக்கு மட்­டு­மல்­லாது சமூ­கங்­க­ளுக்கும் பொருந்தும்.

இன்று எரி­பற்று நிலை­யி­லுள்ள சிங்­கள பெளத்த பேரி­ன­வாதம் தன்­ன­ளவில் தோல்வி மனப்­பான்மை, பொறாமை, காழ்ப்­பு­ணர்ச்சி, ஒத்­தி­சைய முடி­யாமை, சிறு­பான்மை எனும் அச்சம், அத­னூ­டாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள பாரிய சந்­தேகம் என்­ப­வற்றால் மண்டை குழம்பிப் போயுள்­ளது.

இந்­நி­லையில் தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் அள­வுக்­க­தி­க­மாக சிங்­கள பெளத்த பேரி­ன­வாதம் குறித்து அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை. ஆனால் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

பல­வீ­ன­மா­ன­வன்தான் அதி­க­மாக அடுத்­த­வரைப் பயங்­காட்­டுவான். தன்­னைப்­பற்றி அடுத்­த­வ­ரிடம் பயத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூல­மா­கவே தன்னைக் காத்­துக்­கொள்ள முயற்சி எடுக்­கிறான்..

இந்­நாட்டில் சிங்­கள பெளத்­தர்கள் 70% மாக இருந்த போதிலும் உல­க­ளா­விய ரீதியில் அவர்கள் மிக மிகச் சொற்­ப­மா­ன­வர்­களே என்­பதும் சிங்­கள மொழியைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்ட இன்­னொரு நாடு உலகப் படத்தில் வேறெங்­குமே இல்­லை­யென்­பதும், போதாக்­கு­றைக்கு அவர்கள் மிக­வுமே அஞ்சி நடுங்கும் தமிழ் மக்கள் உல­க­ளா­விய ஒரு பெரும் சமூ­க­மென்­பதும் வெறும் 25 கிலோ­மீட்டர் தொலைவில் கட­லுக்­கப்பால் இலங்­கையைச் சப்பித் துப்­பி­விடக் கூடிய அளவில் பாரி­ய­தொரு தமிழ்ச் சமூகம் இருப்­பதும் சிங்­க­ள­வரின் உள்­ளங்­களில் எப்­போ­துமே தீராத ஒரு பேரச்­சத்தை விதைத்­துள்­ளது.

அவர்­களை, அவர்­க­ளது இந்த உள்­ளார்ந்த மன­நோய்­களே காலப்­போக்கில் பல­வீ­னப்­ப­டுத்­தி­விடும். நாம் இயல்­பாக இருப்போம். ஆனால் கொஞ்சம் விழிப்­பாக செயற்­ப­டுவோம்.

சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம்­வரை இலங்­கையில் சமூ­கங்­க­ளி­டையே சிறு சிறு முறு­கல்கள், சிக்­கல்கள் காணப்­பட்ட போதிலும் அவை ஓரி­னத்தை இன்­னோ­ரினம் அடக்­கி­ய­ழிக்கும் அள­வுக்கு வலுப் பெற்­றி­ருக்­க­வில்லை. காரணம், எல்லா இனங்­க­ளுமே பொது­வாக ஏதோ­வொரு வெளிச்­சக்­தியின் ஆதிக்­கத்துள் இருந்­த­மை­யாகும்.

சுதந்­திரம் கிடைக்­கும்­வரை இந்­நாட்டில் சிங்­கள மொழிக்கோ பெளத்த கலா­சா­ரத்­துக்கோ முக்­கி­யத்­து­வமோ செல்­வாக்கோ இருக்­க­வில்லை. எனவே ஒப்­பீட்­ட­ளவில் நாட்­டுக்குள் அமை­தியே நில­வி­யது.

ஆனால், சுதந்­தி­ரத்தைத் தொடர்ந்­துதான் ஒவ்வோர் இனத்துக்கும் தனது இருப்பு, பாது­காப்பு, தனித்­துவம், எதிர்­காலம் குறித்த சிந்­த­னையும் அச்­சமும் எழத் தொடங்­கின.

சுதந்­தி­ரத்­திற்கு மிகக்­கிட்­டிய காலப்­ப­குதி வரை­யிலும் நில­விய ஆங்­கி­லேயர் ஆட்­சியில் ஏனைய இனங்­களை விடவும் தமி­ழர்கள் நல்ல நிலையில் இருந்­தனர்.

அவர்­க­ளுக்­கி­ருந்த ஆங்­கில மொழி­ய­றிவும் ஏனைய கல்­வித்­தேர்ச்­சி­களும் அந்த நிலைக்கு ஏது­வாக இருந்­தன. அரச பணி­க­ளிலும் வர்த்­த­கத்­திலும் சிங்­க­ள­வரை விடவும் தமி­ழர்­களும் ஓர­ளவு முஸ்­லிம்­களும் நல்ல நிலையில் இருந்­தனர்.

இந்­நி­லைமை சிங்­கள பெளத்­தரின் உள்­ளங்­களில் அப்­போ­தி­ருந்தே ஏனைய சமூ­கங்கள் மீதான வெறுப்­பு­ணர்­வையும் பொறா­மை­யையும் விதைத்­தி­ருந்­தது.

முஸ்­லிம்கள் இயல்­பா­கவே தங்கள் மார்க்க விட­யத்தில் அதிக ஈடு­பாடும் பிடிப்பும் கொண்­டி­ருந்­ததால் அக்­கா­லத்தில் ஆங்­கி­லேயர் தொடங்­கி­யி­ருந்த மிஷ­னரிப் பாட­சா­லை­களில் பெரு­ம­ளவில் சேர்ந்து படிக்கத் துணி­ய­வில்லை.

அங்கு படிக்கச் சென்­றோரில் கணி­ச­மானோர் கத்­தோ­லிக்க மதத்தைத் தழுவும் போக்­கொன்று நில­வி­யதும் உண்­மைதான். தமி­ழர்கள் மிகப் பெரு­ம­ள­விலும் சிங்­க­ள­வர்கள் கணி­ச­மா­கவும் ஆங்­கி­லே­யரின் மிஷ­னரிப் பாட­சா­லை­களில் சேர்ந்து ஆங்­கி­லத்தில் கற்­று­வந்த போதிலும் முஸ்­லிம்கள் மிகச் சொற்­ப­மா­னோரே இவ்­வாறு மிஷ­னரிப் பாட­சா­லை­களில் சேர்ந்­தி­ருந்­தனர். “ஆங்­கிலம் கற்­பது ஹறா­மா­னது” எனும் மனப்­போக்­குக்­கூட அக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளி­டையே நில­வி­யுள்­ளது. இவ்­வாறு அக்­காலப் பகு­தியில் முஸ்­லிம்கள் கல்­வித்­து­றையில் விட்ட கவ­னக்­கு­றைவின் விளைவை இன்­று­வ­ரைக்கும் முஸ்லிம் சமூகம் அனு­ப­வித்து வரு­கி­றது.

ஒவ்­வொரு சமூ­கமும் அத­னதன் தனித்­துவம், வாழும் சூழலின் அடிப்­ப­டை­யி­லேயே கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக, வட மாகாணத் தமி­ழர்­களின் வாழிடம் மிகப்­பெ­ரும்­பாலும் பசு­மை­கு­றைந்த, வறண்ட நிலப் பகு­தி­யா­லா­னது. மழையும் செழு­மையும் குறைவு. சிறு சிறு தோட்­டங்­களில் விவ­சா­யத்தின் மூல­மா­கவே ஜீவ­னோ­பாயம் நடத்­தி­ய­வர்கள்.

அவர்­க­ளுக்­கி­ருந்த ஒரே தெரிவு கல்­வி­யி­னூ­டாக வாழ்வை வளப்­ப­டுத்­திக்­கொள்­வதே. எனவே, அவர்கள் தமது தனித்­துவ அடை­யா­ளங்­களை அதிகம் அலட்டிக் கொள்­ளாமல் மிஷ­ன­ரி­களில் இணைந்து ஆங்­கி­லமும் ஏனைய துறை­க­ளையும் கற்றுத் தேறினர். இன்று வரைக்கும் மருத்­துவம், பொறி­யியல், நிர்­வாகம் உட்­பட ஏனைய எல்லா அரச பணி­க­ளிலும் அவர்கள் முன்­னிலை வகிப்­ப­தற்கு இந்தப் பின்­ன­ணியே கார­ண­மா­யிற்று.

ஆரிய தொடர்­பு­கொண்ட, இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்கை வந்த ஒரு­சில சிங்­களக் குடும்­பங்கள் தவிர்ந்த ஏனைய சிங்­க­ள­வர்கள் பொது­வாக கூட்டம் கூட்­ட­மாக உள்­நாட்­டுக்குள் நிலை­யாக வசித்து வந்­தனர். அவர்கள் பெரும்­பாலும் நெல் முத­லிய விவ­சா­யத்­தையே பிர­தான ஜீவ­னோ­பா­ய­மாகக் கொண்­டி­ருந்­தனர். ஏனைய சமூ­கங்­க­ளோடு பெரி­தாகத் தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. ஆங்­கி­லேய ஆளும் தரப்­போடு தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த மிகச் சில சிங்­களக் குடும்­பங்­களே சிங்­கள சமூ­கத்தில் மேலா­திக்கம் கொண்­டி­ருந்­தன. பண்­டா­ர­நா­யக்கா, விக்­ர­ம­சிங்க, ராஜபக் ஷ போன்ற குடும்­பங்­களின் அர­சியல் ஆதிக்கம் இவ்­வா­றுதான் அன்­று­முதல் இன்­று­வரை தொடர்ந்து வரு­கின்­றன.

பொது­வாக சிங்­க­ள­வரின் பெள­தீக ரீதி­யான வளர்ச்சிக் குறை­வுக்கு அவர்­க­ளது பெளத்த சமய சிந்­தனைப் போக்கும் ஒரு கார­ண­மாகும். “சர்வம் துக்க மயம்”, நிலை­யாமை, துறவு மனப்­பான்மை என்­பன இயல்­பா­கவே அவர்­க­ளது பெள­தீக வாழ்வின் முன்­னேற்­றத்தின் தொய்வு நிலைக்கு வழி­வ­குத்­தன.

அன்று முதல் இன்று வரை சிங்­கள பெளத்த மேலா­திக்கக் குடும்­பங்­க­ளுக்கு உண்­மை­யி­லேயே பெளத்த சம­யத்தின் மீது பற்றோ ஈடு­பாடோ இல்லை. அவர்கள் பெளத்த சம­யத்தை வெறு­மனே தமது அதி­கா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ஆயு­த­மாக மட்­டுமே பயன்­ப­டுத்திக் கொண்­டனர். அவர்கள் உள்­ள­ப­டிக்கு கத்­தோ­லிக்க சிந்­த­னை­யையே உள்­ம­னதில் ஆரா­தித்து வந்­தனர்; வரு­கின்­றனர்.

இந்­நாட்டு முஸ்­லிம்கள் முற்­று­மு­ழு­தாக அரபு நாடு­க­ளி­லி­ருந்தோ அல்­லது வேறி­டங்­க­ளி­லி­ருந்தோ குடி­யே­றி­ய­வர்கள் அல்லர். முஸ்­லிம்கள் ஆரம்­ப­காலம் முதலே இந்த மண்ணின் மைந்­தர்­களே. அவர்கள் யவனர், யோனகர் என அடை­யாளப் படுத்­தப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளது ஆரம்­ப­கால மொழி­யாகத் தமிழே இருந்­துள்­ளது. காலப்­போக்கில் உல­க­ளா­விய ரீதியில் அரே­பி­ய­ரது கடல் பய­ணங்­களின் தொடரில் அரே­பியர் இலங்­கை­யிலும் குடி­யேறி உள்­ளனர்.

இறுதித் தூதர் முஹம்­மது நபி (ஸல்) அவர்கள் தோன்றி வளர்ந்த அரே­பிய தீப­கற்பம் பெரும்­பாலும் பாலை­வ­ன­மா­கவே இருந்­தது. விவ­சாயம், வேறு உற்­பத்­திகள் எது­வுமே பெரு­ம­ளவில் இருக்­க­வில்லை. அவர்­க­ளது ஜீவ­னோ­பாயம் முழுக்க முழுக்க வியா­பா­ரத்­தோடு சம்­பந்­தப்­பட்­டது. அயல் பிர­தே­சங்­க­ளுக்கும் கடல் தாண்­டியும் பய­ணித்து வியா­பார நட­வ­டிக்­கை­க­ளையே மேற்­கொள்ள வேண்­டிய தேவை அவர்­க­ளுக்­கி­ருந்­தன.

வர்த்­த­க­மென்­பது சில விஷேட குணாம்­சங்­களைக் கொண்­டது. நல்­ல­தொரு வர்த்­தகர் பல மொழி­களில் தேர்ச்சி, நல்ல மக்கள் தொடர்­பாடல், எப்­போதும் விழிப்பு நிலை­யி­லி­ருப்­பது, நன்­ன­டத்தை, நம்­பிக்கை, நாணயம், வாய்மை, நேர்மை, கவர்ச்­சி­யான தோற்றம், ஒரே இடத்தில் ஒடுங்கிக் கிடக்­காமை, சதா பய­ணித்தல், இன மத மொழி பேதங்­க­ளுக்கு அப்பால் எல்­லோ­ரு­டனும் சக­ஜ­மான உற­வு­களை வளர்த்துக் கொள்ளல் போன்ற பண்­பு­களைக் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

இவ்­வத்­தனை பண்­பு­களும் அரே­பி­ய­ரி­டையே நிறைந்து காணப்­பட்­டன. கடல் பய­ணங்­களின் தேவை கார­ண­மாக திசை­களை அறிந்­து­கொள்­ளவும் கால­நிலை மாற்­றங்­களைக் கணித்துக் கொள்­ளவும் வான­சாஸ்­திரம், எண்­க­ணிதம், மருத்­துவம், பன்­மொழிப் புலமை, நாடு­களின் ராஜாக்­க­ளு­ட­னான தொடர்­பு­களைப் பேணு­வ­தற்­கான ராஜ­தந்­திரம் எனப் பல்­வேறு துறை­களில் அக்­கால அரே­பியர் உல­க­ளவில் புகழ்­பெற்­றி­ருந்­தனர்.

எல்­லாமே பொய், உலக வாழ்வின் சுகங்கள், உல்­லா­சங்­க­ளி­லி­ருந்து எவ்­வ­ளவு விடு­பட்டு வாழ­மு­டி­யுமோ அவ்­வ­ளவு விரை­வாக மோட்­சத்தை – பிற­வாமைப் பேற்றை அடை­ய­மு­டியும் எனும் வாழ்க்கை மீதான அவ­நம்­பிக்­கையை, வெறுப்பைப் போதிக்கும் பெளத்த சம­யத்­துக்கும் இஸ்­லா­மிய சிந்­த­னைக்கும் இடையில் மிகப்­பா­ரிய வேறு­பா­டுகள் உள்­ளன.

வணக்க வழி­பா­டு­களைப் போலவே இவ்­வு­லகை வளப்­ப­டுத்­து­வ­தையும் ஒரு வணக்­க­மா­கவே இஸ்லாம் வலி­யு­றுத்தி நிற்­கி­றது. மனி­தனின் இயற்­கை­யான எல்லா உணர்­வு­க­ளையும் ஏற்று, மதிப்­ப­ளிக்கும் இஸ்லாம் மனிதன் நியா­ய­மான வழி­களில் வாழ்வின் சகல உல்­லா­சங்­க­ளையும் அனு­ப­வித்து இன்­பு­று­மாறு தூண்டி நிற்­கி­றது. நபி­க­ளா­ருக்கு மிகவும் பிடித்­த­மான விட­யங்­க­ளாகப் பெண் சுகம், நறு­மணம் மற்றும் தொழுகை என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஓர் ஆன்­மீகத் தலை­வ­ருக்குப் பிடித்­த­மான விட­யங்­க­ளாகப் பெண் சுகமும் நறு­ம­ணமும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

உலகில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய புகழ்­பெற்ற நூறு மனி­தர்­களின் வாழ்க்கை வர­லாற்றை எழு­திய கத்­தோ­லிக்­கரும் வர­லாற்று ஆய்­வா­ள­ரு­மான மைக்கல் எச். ஹார்ட், தனது “The 100” நூலில் முஹம்­மது நபி அவர்­க­ளுக்கு முதலாம் இடத்தைக் கொடுத்­தி­ருப்­ப­தற்கு அவரே சொல்­லி­யுள்ள கார­ணங்­களுள் இதுவும் ஒன்­றாகும்.

தனது சொத்­துக்கள் சூறை­யா­டப்­ப­டும்­போது அவற்றைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கான முயற்­சியில் ஒருவர் மர­ணத்தைத் தழு­வு­தலும் ஒரு புனிதப் போரி­லான உயிர்­து­றப்­புக்கு ஒப்­பா­ன­தாக இஸ்லாம் கரு­து­கி­றது. அநி­யா­ய­மாகத் தாக்­கப்­பட்டால் அதற்குப் பழிக்­குப்­பழி வாங்­கு­வதில் உங்­க­ளுக்கு வாழ்­வி­ருக்­கி­றது எனச் சொல்லி மனி­தனைத் துணிச்சல் மிக்­க­வ­னாக மாற்­று­கி­றது இஸ்லாம். ஒரு முஸ்லிம் கோழை­யாக இருக்க முடி­யாது எனப் போதிக்­கி­றது இஸ்லாம். தொழு­கையை நிறை­வேற்றி முடித்­ததும் பூமியில் பரந்து சென்று உங்கள் வாழ்வைத் தேடிக் கொள்­ளுங்கள் என்­கி­றது இஸ்லாம்.

இத்­த­கைய உயிர்ப்­பு­மிக்க பண்­பு­களைக் கொண்ட அரே­பி­யரே இலங்­கை­யிலும் சிறிது சிறி­தாகக் குடி­யே­றினர். அவர்கள் நாடு­பி­டிக்கும் நோக்கில் இங்கு வர­வில்லை. இந்த நாட்டைக் கைப்­பற்றி ஆட்சி செய்ய அவர்கள் வர­வில்லை. அத்­த­கைய எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் வர­லாற்றில் ஒரு­போதும் முஸ்­லிம்கள் இந்த நாட்டில் முன்­னெ­டுக்­க­வில்லை. கிறிஸ்­தவ மிஷ­ன­ரி­களைப் போல மத­மாற்றம் செய்­வது முஸ்­லிம்­களின் நோக்­க­மாக ஒரு­போ­துமே இருந்­த­தில்லை. “உங்­க­ளுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்” என்­பதே இஸ்­லாத்தின் கோட்­பா­டாகும்.

எண்­ணூறு ஆண்­டுகள் இந்­தி­யாவை முஸ்­லிம்கள் ஆட்சி செய்­தி­ருந்த போதிலும் அந்த நாட்டில் இன்­றும்­கூட முஸ்­லிம்­களின் சத­வீதம் வெறும் 20% மட்­டுமே உள்­ளது. ஆட்சி அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி மத­மாற்றம் செய்ய நினைத்­தி­ருந்தால் இன்று முஸ்­லிம்கள் தான் இந்­தி­யாவில் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்­தி­ருக்க வேண்டும்.

ஆரம்­ப­கால அரே­பி­யர்கள் இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­க­ளில்தான் குடி­யே­றினர். ஏற்­று­மதி இறக்­கு­மதி வர்த்­தக நட­வ­டிக்­கை­களின் தேவை கார­ண­மாக அவர்கள் அவ்­வாறு கரை­யோரப் பகு­தி­களில் வசிக்கத் தொடங்­கினர். இலங்­கையின் கிழக்கு, மேற்கு, வடமேல், தென் மாகா­ணங்­களில் முஸ்­லிம்கள் செறி­வாக வாழ்­வதன் பின்­னணி இதுதான்.

கரை­யோரப் பகு­தி­களில் வாழ்ந்­து­வந்த அரே­பிய முஸ்­லிம்கள் தாம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கொண்­டு­வந்­தி­ருந்த பொருட்­களை உள்­நாட்டுப் பிர­தே­சங்­களில் விற்­பனை செய்­வ­தற்­கா­கவும் உள்­நாட்டுப் பிர­தே­சங்­களில் கிடைத்த பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­கா­கவும் முஸ்­லிம்கள் தொடர்ந்து பய­ணங்­களை மேற்­கொண்­டனர்.

முஸ்­லிம்கள் தமது வாழ்வில் ஐவே­ளையும் தொழு­கையைத் தவ­றாது நிறை­வேற்றும் பழக்கம் கொண்­ட­வர்கள். எனவே தமது பய­ணங்­க­ளின்­போதும் இடை­யி­டையே தரித்து நின்று தொழு­கை­களை நிறை­வேற்றிக் கொள்­ளவும் தமது பண்­டங்­களை சுமந்­து­செல்லும் குதிரை, கழு­தை­களை மேய்ச்சல் செய்­யவும் ஓய்­வெ­டுக்­கவும் சில இடங்­களைத் தயார்­செய்து கொண்­டனர். இத்­த­கைய தேவை­களின் நிமித்­த­மா­கவே நாடு முழுதும் பயணத் தடங்­களும் பள்­ளி­வா­சல்­களும் சிறு சிறு குடி­யி­ருப்­பு­களும் ஏற்­ப­ட­லா­யின.

சிங்­க­ள­வரும் தமி­ழரும் நாட்டில் சிற்­சில பகு­தி­களில் மட்டும் செறி­வாக வாழும்­போது முஸ்­லிம்கள் நாடு முழுதும் ஐதாகப் பரந்து வாழ்­கின்­றனர். எந்தப் பிர­தான நக­ரத்­திலும் முஸ்­லிம்கள் வாழ்­வதும் பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­வதும் இத­னா­லே­யாகும்.

புத்த கோயில்­களும் இந்து, கத்­தோ­லிக்க ஆல­யங்­களும் ஒப்­பீட்­ட­ளவில் குறை­வா­கவும் குடி­யி­ருப்புப் பகு­தி­க­ளுக்கு வெளியில் அமைந்­தி­ருப்­ப­தற்கும் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­லங்கள் பிர­தான பாதை ஓரங்­க­ளிலும் நக­ரங்­களின் மத்­தி­யிலும் அமைந்­தி­ருப்­ப­தற்கும் பின்­னணி இதுதான்.

எந்­த­வொரு முஸ்­லிமும் எங்­கா­வது ஓரி­டத்தில் வசிக்கத் தொடங்­கி­யதும் அடுத்து அவர் செய்­வது தனக்­கான ஒரு வழி­பாட்­டி­டத்தை அமைத்துக் கொள்­வ­தாகும். தனது வீட்­டை­வி­டவும் பள்­ளி­வாசல் சிறப்­பாக அமைய வேண்­டு­மென ஒவ்­வொரு முஸ்­லிமும் உள்­ளூர ஆசைப்­ப­டுவார். என­வேதான் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் எப்­போ­துமே எடுப்­பா­கவும் அழ­கா­கவும் கம்­பீ­ர­மா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றன.

இன்று முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீது மாற்றுச் சமூ­கத்தார் ஒரு­வித வெறுப்பும் காழ்ப்­பு­ணர்வும் கொண்­டி­ருப்­ப­தற்குப் பள்­ளி­வா­சல்­களின் இத்­த­கைய மகோன்­னதத் தோற்­றங்­களும் ஒரு கார­ண­மாகும். ஆனால், இனியும் இவ்­வாறு பள்­ளி­வா­சல்­களைப் படா­டோ­ப­மாக நிர்­மா­ணிப்­பது குறித்து நாம் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய தேவை உரு­வா­கி­யுள்­ளது.

முஸ்­லிம்கள் அடிப்­ப­டையில் வர்த்­தக சமூ­கத்தார் என்­ப­த­னாலும் இந்­நாட்டில் அவர்கள் எண்­ணிக்­கையில் குறைந்த சமூ­கத்தார் என்­ப­தாலும் அவர்­க­ளி­டையே பல சிறப்­பி­யல்­புகள் காணப்­பட்­டன.

எண்­ணிக்­கையில் குறை­வா­ன­வர்கள் என்­பதால் எப்­போ­துமே அடுத்த சமூ­கங்­க­ளுக்கு எவ்­வ­கை­யிலும் இடை­யூ­றுகள் ஏற்­பட்­டு­வி­டாமல் கவ­ன­மாக நடந்­து­கொண்­டனர்.

தமக்கு ஏதா­யினும் அநீ­திகள், இடை­யூ­றுகள் ஏற்­பட்­டா­லும்­கூட மிகுந்த பொறுமை, விட்­டுக்­கொ­டுப்பு, சகிப்­புத்­தன்­மை­யோடு நடந்­து­கொண்­டனர். ஏனைய சமூ­கங்­க­ளோடு எப்­ப­டியும் இசைந்தே வாழ­வேண்­டு­மென்­ப­தாலும், அவர்­க­ளுடன் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டிய தேவை இருந்­த­தாலும் அவர்­க­ளது சிங்­கள, ஆங்­கில, தமிழ் மொழி­களைக் கற்றுத் தேர்ச்­சி­யுற்­றனர். ஒப்­பீட்­ட­ளவில் தமிழர், சிங்­க­ள­வரை விடவும் முஸ்­லிம்­களின் மும்­மொழி அறிவு இலங்­கையில் சிறப்­பாகக் காணப்­ப­டு­வதன் பின்­னணி இதுதான். தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை விருத்தி செய்­து­கொள்­வ­தற்­காக முஸ்­லிம்கள் பிற சமூ­கத்­தா­ரோடு மிகுந்த மரி­யா­தை­யோடும் கண்­ணி­யத்­தோடும் நடந்­து­கொண்­டனர். பிற சமூ­கங்­களின் உள்­ளங்­களை வெல்­லக்­கூ­டிய எல்­லா­வி­த­மான முயற்­சி­க­ளையும் அவர்கள் மேற்­கொண்­டனர். பிற­ருக்குத் தாரா­ள­மாக உத­வினர்.

அரே­பிய, சிவந்த, எடுப்­பான அழ­கிய தோற்­றத்­திலும் ஒப்­பீட்­ட­ளவில் உள்­நாட்டு ஆண்­களை விடவும் முஸ்லிம் ஆண்கள் இந்­நாட்டுப் பெண்­களின் உள்­ளங்­களை ஈர்த்­தனர். வெளி­நாட்டுப் பொருள்கள், நறு­ம­ணங்கள், புதுப்­புது ஆடை அலங்­கா­ரங்கள், நவீன சாத­னங்கள், பெண்­க­ளுக்­கான ஆடை அணிகள், நகைகள், பட்டுப் புட­வைகள், அனைத்­துக்கும் மேலாக திட­காத்­தி­ர­மான ஆண்மைத் தோற்றம் என மொத்­தத்தில் அரே­பிய வர்த்­தக சமூ­கத்தார் இந்­நாட்டுப் பெண்­களின் உள்­ளங்­களைக் கொள்ளை கொண்­டனர். இத்­த­கைய கார­ணி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு இந்­நாட்டில் சுதேசப் பெண்கள் வாழ்க்கைத் துணை­வியர் ஆயினர்.

ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­த­வர்­க­ளோடும் அதி­கா­ரி­க­ளோடும் முஸ்­லிம்கள் நல்ல தொடர்­பு­களை வளர்த்துக் கொண்­டனர். மன்­னர்­களின் நம்­பிக்­கையைப் பெற்றுக் கொண்­டனர். அரே­பிய யூனா­னிய வைத்­தியக் கலை­யிலும் போர் கலை­க­ளிலும், பல மொழி­க­ளிலும், நாடுகள் பற்­றிய அறி­விலும், பல்­வேறு சமையல் முறை­க­ளிலும் தேர்ச்­சி­யுற்­றி­ருந்த அரே­பிய முஸ்­லிம்கள் மன்­னர்­க­ளிடம் பெரு­ம­திப்பைப் பெற்றுக் கொண்­டனர். அமைச்­ச­ர­வை­யிலும் வெளி­நாட்டு வர்த்­தகம் மற்றும் ராஜ­தந்­திர உற­வு­க­ளிலும் மன்­னனின் தனிப்­பட்ட சமையல், மருத்­துவம் மற்றும் பாது­காப்புத் துறை­யிலும் முஸ்­லிம்கள் முக்­கிய இடங்­களைப் பெற்றுக் கொண்­டனர்.

முஸ்­லிம்­களின் சேவை­களைக் கெள­ர­வித்து, மன்­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்குக் காணி­களை அன்­ப­ளிப்பு செய்து மதிப்­போடு வாழச் செய்­தனர். இவை­யெல்லாம் சேர்ந்து இதர சமூ­கத்தார் மத்­தியில் முஸ்­லிம்கள் மீது மெல்ல மெல்லப் பொறா­மை­யையும் காழ்ப்­பு­ணர்­வையும் வெறுப்­பையும் உரு­வாக்கத் தொடங்­கின.

வர்த்­தக ரீதி­யாக ஓர­ளவு நல்ல நிலைக்கு வந்த முஸ்­லிம்கள் படிப்­ப­டி­யாகத் தமக்­கான பாட­சா­லைகள், மத்­ர­ஸாக்­களை அமைத்துக் கல்வித் துறை­யிலும் ஈடு­பாடு காட்டத் தொடங்­கினர். அடிப்­ப­டை­யி­லேயே முஸ்­லிம்கள் தமது மத நம்­பிக்­கைகள் தொடர்பில் மிகுந்த பிடிப்­போடு இருந்­ததன் பின்­ன­ணியில் முஸ்­லிம்கள் தமது பெண்­களின் கல்வித் துறையில் ஆரம்ப கட்­டத்தில் போதிய அக்­கறை காட்­ட­வில்லை. அதன் விளைவை இன்­று­வரை நமது சமூகம் அனு­ப­விக்­கி­றது. ஆயினும் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் பெண்கள் கல்­வித்­து­றையில் பிர­கா­சிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

வளர்ச்சி, முன்­னேற்றம், நாக­ரிகம் எனும் பெயர்­களில் சிங்­கள, தமிழ்ச் சமூ­கங்கள் தமது பாரம்­ப­ரிய சமய, கலா­சாரத் தனித்­து­வங்­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யாக விடு­பட்டுக் கரைந்தும் கலந்தும் போயி­ருந்­தாலும் முஸ்­லிம்கள் அவ்­வா­றான வேக­மான கலா­சார மாற்­றங்­களை உள்­வாங்கிக் கொள்­ள­வில்லை.

இந்­நாட்டுச் சிங்­க­ள­வரும் தமி­ழரும் தத்­த­மது பெளத்த, இந்து, சைவ சமய – கலா­சாரப் பின்­ன­ணி­க­ளி­லி­ருந்து கொஞ்சம் கொஞ்­ச­மாக விடு­பட்டு, ஆங்­கி­லேயக் கல்வி விதைத்துச் சென்­றுள்ள கத்­தோ­லிக்க மத – மேலைத்­தேயக் கலா­சா­ரத்தின் தாக்­கத்­துக்­குள்­ளாகி விட்­டுள்­ளனர். ஆனால் முஸ்­லிம்கள் இத்­த­கைய தாக்­கங்­க­ளுக்குப் பெரி­ய­ளவில் உள்­ளா­க­வில்லை. இன்­று­வரை முஸ்­லிம்­களின் கலா­சாரக் கூறு­களும் அடை­யா­ளங்­களும் தெளி­வாக வெளிப்­ப­டு­வ­தையும் அவை மாற்றுச் சமூ­கத்­தாரின் கண்­களை உறுத்­து­வ­தையும் நாம் காண்­கிறோம்.-Vidivelli

  • அஜாஸ் முஹம்மத்

Leave A Reply

Your email address will not be published.