போலி வேட்பாளர்களுக்கு இனிமேல் இடமளிக்கக்கூடாது

0 1,002

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது ஒரு நாட்டின் முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இந்தப் பிர­தான தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்கள் மாத்­திரம் போட்­டி­யிடு­வதே நன்மை பயக்கும். பொது மக்­களின் நம்­பிக்­கையைத் தன்­ன­கத்தே ஈர்த்­துள்ள, அவர்­களின் விருப்­பத்­துக்­கு­ரிய சிலர் மாத்­தி­ரமே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்டும். அபி­வி­ருத்தியடைந்­துள்ள நாடு­களில் இந்­நி­லை­மை­யினை எம்மால் நோக்­க­மு­டி­கி­றது.

எதிர்­வரும் 16 ஆம் திகதி எமது நாட்டில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், வேட்­பா­ள­ர்களின் எண்­ணிக்­கையில் வர­லாறு படைத்­துள்­ளது. இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கி­றார்கள். தேர்தல் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்­கு­ல­மாக நீண்­டுள்­ளது.

இந்த 35 வேட்­பா­ளர்­களில் 13 வேட்­பா­ளர்கள் இரு பிரதான அபேட்­ச­கர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காகக் கள­மி­றங்­கி­யுள்­ளார்கள். அவர்கள் உண்­மை­யான வேட்­பா­ளர்கள் அல்ல என கடந்த வாரம் தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக அவர்­க­ளது அடி­யா­ளர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யுள்ள 13 அபேட்­ச­கர்­க­ளையும் தேர்தல் ஆணைக்­குழு இனங்­கண்­டுள்ளதாகவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு இந்த 13 வேட்­பா­ளர்­களில் 7 பேர் ஒரு வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்கி வரு­வ­தா­கவும் ஏனைய ஆறு பேரும் மற்­றைய வேட்பாளருக்கு ஆத­ரவு வழங்கி வரு­வ­தா­கவும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் இதனை தங்­க­ளது கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­ளின்­போது அடை­யாளம் கண்­டுள்­ளார்கள். அவர்கள் சார்ந்­துள்ள கட்­சி­களின் செய­லா­ளர்கள் பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் இரு­வ­ரது தேர்தல் பிர­சார மேடை­களில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்கள். இச்­செ­யற்­பா­டுகள் குறிப்­பிட்ட 13 ஜனா­தி­பதி வேட்­பாளர்­களும் பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வ­ரதும் ஆத­ர­வா­ளர்கள் அவர்­க­ளது வெற்­றிக்­காக உழைப்­ப­வர்கள் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான போலி வேட்­பா­ளர்­களால் தேர்தல் ஆணைக்­கு­ழுவும் வாக்­கா­ளர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்றே கூற­வேண்டும். இவ்­வா­றான வேட்­பா­ளர்­க­ளி­னாலே தேர்தல் ஆணைக்­கு­ழுவின் செல­வினங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்த அதி­க­ரித்த செல­வுகள் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­க­ளி­னாலோ அல்­லது வேட்­பாளர்களி­னாலோ செல­வ­ழிக்­கப்­ப­டு­வ­தில்லை. நாட்டு மக்­களின் பணமே இதற்குச் செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான வீணான அதி­க­ரித்த செல­வுகள் கார­ண­மா­கவே எமது நாட்டின் பொரு­ளா­தா­ரமும் ஸ்திர­மற்ற நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது.

தேர்­தலின் பின்பு இவ்­வா­றான வேட்­பா­ளர்­களைக் தேடிக்­கண்­டு­பி­டிக்க முடி­யாமற் கூட போகலாம். அவர்­க­ளினால் நாட்­டுக்கு ஏற்­பட்ட நஷ்­டங்­களை மீட்­டிக்­கொள்­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் கூட எமது நாட்டில் இல்லை.

ஜன­நா­யகம் என்­பது எந்­த­வொரு மோச­டிக்­கா­ர­ருக்கும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகும் சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தாக இருக்­கக்­கூ­டாது. இன்­னொ­ரு­வரின் நன்­மைக்­காக வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­வது நாட்டு மக்­களின் ஜன­நா­ய­கத்தை சவா­லுக்குட்படுத்தும் முயற்­சி­யாகும்.

இவ்­வா­றான போலி வேட்­பா­ளர்­களின் உள்­வாங்­கலைத் தவிர்ப்­ப­தற்­காக எதிர்­கா­லத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குச் செலுத்­தப்­படும் கட்­டுப்­பணத் தொகையை அதி­க­ரிக்க முடியும். அத்­தோடு இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் இறங்கும் அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டு­வது நிரா­க­ரிக்­கப்­படும் என தேர்தல் ஆணை­யாளர் கூறி­யுள்ளார்.

எதிர்­வரும் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலையடுத்து அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு 5 வருட கால இடை­வெளி இருக்­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பின்பு பொதுத்­தேர்தல் நடாத்­தப்­படும். புதிய அர­சாங்கம் பத­வியில் அமரும். எனவே ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்­க­ளுக்கு மாத்­திரம் போட்­டி­யிடும் வகையில் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான சட்டம் இந்தக் கால எல்லையில் இயற்றிக் கொள்­ளப்­ப­ட­ வேண்டும்.

இந்தப் பொறுப்­பினை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் மீது சுமத்திவிட்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மெளனமாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இது விடயத்தில் பொது மக்களுக்கும் பொறுப்பிருக்கிறது. அதிகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கையினால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், மேலதிக செலவினங்கள், வாக்களிக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் சட்ட ரீதியான தீர்வுகள் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றிணையவேண்டும். இதற்கான சட்ட தீர்வுகளை அவர்கள் வேண்டி நிற்கலாம்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.