முதல் முஸ்லிம் ஆளுநர், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார்

0 268

முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 22ஆவது நினைவு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

1917 மே மாதம் 12 ஆம் திகதி, நூற்­றி­ரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அவர் பிறந்தார். அவ­ரது பிறப்பு சம்­ப­வ­மல்ல – சரித்­தி­ர­மாகும். பிறப்­பிற்கு பத்து மாதங்­க­ளுக்கு முன்னர் அன்னார் தாய் வயிற்றில் கரு­வா­னது கூட புனி­த­மான ஒரு தினத்தில் என்று தன் தாய் கூறிய விட­யத்தை தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளிடம் அவர் கூறி மகிழ்வார். அதற்­காக அடிக்­கடி அல்­லாஹ்வைப் புகழ்வார். அந்தத் தினம் புனித லைலத்துல் கதிர் இரவு என்று சொல்­லப்­படும் ரமழான் 27 ஆம் நாளாகும். இந்தச் செய்­தியை அவர் உளப்­பூ­ரிப்­போடு கூறுவார். இத்­த­கைய சிறப்­பு­மிகு ஆத்­மீகத் தோன்­றலே தேச­மான்ய முன்னாள் சபா­நா­யகர், முதல் முஸ்லிம் ஆளுநர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். அப்துல் பாக்கிர் மாக்கார்.

ஒரு­வ­ரது பிறப்பு சம்­ப­வ­மல்ல, சரித்­திரம் என்று இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி மர்ஹூம் அப்­துல்­கலாம் சொல்லிச் சென்றார். அதேபோல் அவரும் சரித்­திர நாய­க­ரானார். மர்ஹூம் பாக்கிர் மாக்­காரும் சபா­நா­ய­க­ராகி சரித்­திரம் படைத்­தவர். எத்­தனை பேருக்கு அந்தப் பாக்­கியம் கிடைக்கும்? 1981 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன, பிர­தமர் ஆர்.பிரே­ம­தாஸ இரு தலை­வர்­களும் இள­வ­­ரசர் சார்ள்ஸ் – டயானா திரு­ம­ணத்­திற்கு ஐக்­கிய இராச்­சியம் சென்­றனர். அப்­பொ­ழுது நாட்டின் மூன்­றா­வது பிரஜை நமது சபா­நா­யகர் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் முதல் பிர­ஜை­யானார். நாட்டின் ஆட்சி அதி­காரம் அவர் கையில் வந்­தது.

மர்ஹூம் அப்துல் பாக்கிர் மாக்காரின் அகன்ற நெற்­றியும் தெளிந்த பார்­வையும் தூய உள்­ளமும் துணிந்து செய்த பணி­களும் அவரைப் புனி­த­ராக புடம் போட்­டது. அவ­ரது 40 ஆண்டு கால அர­சியல் பய­ணத்­தை­யொட்டி எனது நெறி­யாள்­கையில் களுத்­துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளன துணை­யோடு 25 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்ட சிறப்பு மலர் சிறந்த எடுத்­துக்­காட்­டாகும். அவ­ரது கை தஸ்பீஹ் மணிக்­கோ­வையை தவ­ற­வி­டாமல் ஏந்தி நிற்கும் திக்ர், அவ்றாத் முத­லி­ய­வற்றை அவர் உச்­ச­ரித்துக் கொண்டே இருப்பார்.

ஷாது­லிய்யா தரீக்­காவின் முரீ­தாக அவர் அங்­கீ­காரம் பெற்­றவர். ஆனாலும் அனைத்து தரீக்­காக்­க­ளு­டனும் நெருங்­கிய தொடர்பு வைத்­தி­ருந்தார். எப்­பொ­ழுதும் எந்தக் கூட்­டத்­திலும் முஸ்­லிம்கள் மத்­தியில் அவர் உரை­யாற்றும் பொழு­தெல்லாம் ஏக அல்­லாஹ்வைப் புகழ்ந்து நபியே கரீம் (ஸல்) திரு­நா­மத்தை தப்­பாமல் சொல்லித் தொடங்­குவார். அவ­ரது ஆத்­மீக ஈடு­பாட்டை அன்­னாரின் இளம்­ப­ராயம் முதல் பார்த்த பலரும் எதிர்­கா­ல அவ­ரது உயர்ந்த வாழ்க்­கையை புகழ்ந்து கூறு­வார்கள்.

தனது ஆரம்பக் கல்­வியை தொடர்­வ­தற்­காக 1924 ஆம் ஆண்டில் கொழும்பு சென். செபஸ்­தியன் வித்­தி­யா­ல­யத்தில் சேர்ந்தார். அங்­கி­ருந்து மரு­தானை ஸாஹிறாக் கல்­லூ­ரியில் நுழைந்த அவர் தனது உயர் கல்­வியைத் தொடர்ந்தார். ஸாஹி­றா­வி­லி­ருந்து 1939 ஆம் ஆண்டு சட்டக் கல்­லூ­ரியில் சேர்ந்த அவர் 2 ஆவது உலக மகா யுத்தம் ஆரம்­ப­மா­கவே 1940 இல் நாட்டின் பாது­காப்­பிற்­காக தேசிய விமானப் பாது­காப்புப் படையில் சேர்ந்தார். அவ­ரது துணி­வையும் திற­மை­யையும் கண்ட அன்­றைய ஆட்­சி­யினர் அவரைப் பயிற்­சிக்­காக இந்­தி­யா­வுக்கு அனுப்­பினர். பயிற்­சியை முடித்து வந்த அவர் களுத்­துறை, கொழும்பு ஆகிய இடங்­களில் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­பட்டார்.
2 ஆவது உல­க­மகா யுத்தம் முடிய 1945 ஆம் ஆண்டு மீண்டும் சட்டக் கல்­வியைத் தொடர்ந்தார். சட்டக் கல்­லூரி மாண­வ­னாக இருந்து கொண்டே 1947 ஆம் ஆண்டு பேரு­வளை நக­ர­சபைத் தேர்­தலில் மரு­தானை வட்­டா­ரத்தில் தேர்­தலில் குதித்­ததன் மூலம் தனது அர­சியல் வாழ்வை ஆரம்­பித்தார். அத்­தேர்­தலில் மிகச்­சொற்ப வாக்­கு­களால் தோல்விகண்ட அவர் தளர்ந்து விட­வில்லை.
1949 ஆம் ஆண்டு ஜம்­இய்­யத்துல் முஸ்­லிமீன் என்ற இயக்­கத்தை அமைத்து அதன் தலை­வ­ரானார். அவ்­வி­யக்­கத்தின் மூலம் பொது­வாக சகல முஸ்­லிம்­க­ளதும் குறிப்­பாக, பேரு­வளை முஸ்­லிம்­க­ளது சமூக, பொரு­ளா­தார, கல்வி மேம்­பாட்­டிற்­காக உழைத்தார். அவரின் துணிவும் சமூகப்பற்றும் சேவை மனப்­பான்­மையும் மரு­தானை மக்­க­ளது மனதில் நீங்கா இடம் பிடிக்கக் கார­ண­மா­யிற்று. மீண்டும் 1949 ஆம் ஆண்டு அதே வட்­டா­ரத்தில் போட்­டி­யின்றி தெரிவு செய்­யப்­பட்டார். 1950 இல் பேரு­வளை நகர சபைத் தலை­வ­ரானார்.

தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் ஆற்­றல்­மிக்க பாக்கிர் மாக்கார் மும்­மொழிப் புலமை மிக்­கவர். அர­சியல், சமூக வாழ்வில் தனக்­கென தனி­வ­ழியை அமைத்துக் கொண்­டவர். பணத்­திற்கு அதன் பலத்­திற்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­வில்லை. சன்­மார்க்கக் கோட்­பா­டு­களை அர­சியல் இலா­பத்­திற்­காக விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை. இந்த நாட்டில் அர­புக்கள், முஸ்­லிம்கள் முதல் கால்­ப­தித்த பகு­தி­யான பேரு­வளை நகரின் தனித்­துவம் காத்­தவர். பௌத்த, இந்து, கத்­தோ­லிக்க மத வழி­பாட்டு இடங்­க­ளுக்குச் சென்­றாலும் அந்­தந்த மதங்­க­ளுக்கு உரிய மரி­யா­தையைக் கொடுக்கத் தவ­ற­வில்லை.

களுத்­துறை மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை வலி­யு­றுத்தி பேரு­வளை தொகு­திக்கு முஸ்லிம் பிர­தி­நி­தி­யொ­ருவர் தெரிவு செய்­யப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை 1957 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட தல்­கொ­ட­பி­டிய தேர்தல் தொகுதி நிர்­ணய ஆணைக்­கு­ழுமுன் எடுத்துக் கூறினார். இதன் மூலம் அவரின் முயற்சி வெற்­றி­பெற்­றது. 1960 ஆம் ஆண்டு தொடக்கம் பேரு­வ­ளைக்­கான முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­கப்­பெற்­றது. தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் அமைக்­கப்­பட்ட தித்­த­வெல தேர்தல் தொகுதி ஆணைக்­கு­ழுவில் பேசி பேரு­வளைத் தொகு­தியில் சிங்­கள, முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றெ­டுத்தார்.

தன்­னு­டைய நேரடிக் கண்­கா­ணிப்பின் கீழ் மஸ்­ஜிதுல் அப்­ராரை அவர் விஸ்­த­ரிப்புச் செய்தார். அதே போல் அழ­கான முறையில் அதனை திறந்தும் வைத்தார். இப்­பள்ளித் திறப்பு விழா முதல் குத்பா பிர­சங்­கத்தை மர்ஹூம் மெள­லவி கிண்­ணியா எஸ்.எல்.எம்.ஹஸன் அஸ்­ஹரியைக் கொண்டு நிகழ்த்தச் செய்தார்.

1986 ஜூலை 11 ஆம் திகதி இதன் திறப்பு விழா நடந்­தே­றி­யது. தந்தை வழியே தன­யனும் தப்­பாது இதே மஸ்­ஜிதின் முன்­னேற்­றத்­திற்­காக தன் உடல், பொருள், உழைப்பு அனைத்­தையும் அர்ப்­ப­ணித்து செய்யும் பணிகள் கண்­கூடு. இன்று அதே மஸ்­ஜிதின் மைய­வாடி பூந்­தோட்­டமாய் காட்­சி­ய­ளிப்­பது மகனார் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர் தம் பணி­களின் சிறு­து­ளி­யாகும். இதே மஸ்­ஜிதுல் அப்ரார் ஆதி முஸ்­லிம்­களின் ஆரம்ப மஸ்ஜித் என்ற வர­லாற்றை மைய­மாக வைத்து நினைவு முத்­திரை வெளி­யிட்­ட­தையும் சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மாகும். தபால், தொலை தொடர்­புகள் அமைச்­ச­ராக 2003 ஜுன் 8 இல் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் கட­மை­யாற்­றி­ய­போது இக்­கைங்­க­ரியம் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்­வு­களை அதே மஸ்­ஜிதுல் அப்ரார் முன்­ற­லி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு மத்­தியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை­யூ­டாக என்னால் இலட்­சக்­க­ணக்­கான நேயர்கள் கேட்­கக்­கூ­டி­ய­தாக அஞ்சல் செய்­யக்­கி­டைத்த அரிய நிகழ்­வையும் நன்­றி­யோடு என்றும் நினை­வு­கூ­ருவேன்.
இத்­த­கைய சிறப்­பான நினை­வு­க­ளைக்­கூட வேண்­டு­மென்றோ என்­னவோ ஒரு சிலர் ஊட­கத்தில் இருட்­ட­டிப்புச் செய்­தாலும் இறைவன் மத்­தியில் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அவர்­க­ளுக்கு உரிய நன்மை ஸத­கத்துல் ஜாரி­யா­வாகக் கிடைக்­கத்தான் செய்யும்.

“மனி­த­னுக்கு நன்றி செய்­யா­தவன் அல்­லாஹ்­வுக்கு நன்றி செய்­ய­மாட்டான்” (அல் ஹதீஸ்) இந்தக் கூற்­றுக்கு ஏற்ப அன்­னா­ருடன் கூடப் பழ­கி­ய­வர்­களுள் குறைந்த அறிவும் ஆற்­றலும் பெற்ற நானும் (கட்­டு­ரை­யா­சி­ரியர்) நண்பர் என்.எம். அமீனும் என்றும் எமது அர­சியல் தலை­வ­ரா­கவும் வழி­காட்­டி­யா­கவும் வாழ்வின் முன்­னோ­டி­யா­கவும் கொண்­டோ­மென்­பதை நன்­றி­யோடு அவ்­வப்­போது நினை­வு­ப­டுத்­துவோம்.

அன்னார் இலாகா இல்லா அமைச்சர் பதவி வழங்­கப்­பெற்ற 1983 ஜுலை கல­வர காலத்­தி­லி­ருந்து அன்­னா­ருடன் மிக நெருக்­க­மா­கவும் அன்­னி­யோன்­ய­மா­கவும் எம்­மி­ரு­வ­ருக்­கும்தான் பழகக் கிடைத்­தது. அமைச்சர் பாக்கிர் மாக்­காரின் அந்­த­ரங்கச் செய­லாளர் மர்ஹும் ஹாஜி ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் உத்­தி­யோ­க­பூர்வ கட­மை­களில் கண்­ணா­யி­ருப்பார். மாறாக நானும் நண்பர் அமீனும் அன்­னாரின் வலதும் இட­மு­மாக தினமும் அவ­ரது அர­சியல் பாச­றையில் அர­சியல் படித்தோம், பய­ணித்தோம்.

இன்று கொழும்பு பிர­தான வீதிப்­பக்கம் கம்­பீ­ர­மாக காட்­சி­ய­ளிக்கும் சம்­மாங்­கோட்டை பள்­ளி­வாசல் அன்று ஹாஜி ஒமர் நம்­பிக்கை நிதியக் கட்­ட­ட­மாகும். நிதி­யத்தின் தலை­வ­ரான மர்ஹூம் பாக்கிர் மாக்கார் அதே கட்­ட­டத்தில் 2 ஆம் மாடியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ள­னத்­தையும் இயக்­கினார். காலப்­போக்கில் அவ­ரோடு கடை­சி­வரை இருந்த ஒரு சிலரை வைத்­துக்­கொண்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ள­ன­மென்ற சமு­தாய அமைச்­சுக்கு மர்ஹூம் பாக்கிர் மாக்கார் தலை­மைத்­துவம் கொடுத்தார். 1983 ஜூலை 23 கல­வரம் தலை­ந­கரை சுட்­டெ­ரித்த காலத்தில் பாக்கிர் மாக்கார் என்ற தனி மனிதன் சம்­மே­ளனத் தலை­மை­யகம் வருவார். தினமும் சமூக, சமய, கல்வி, பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை வைத்து நாடெங்­கிலும் இருந்து வரும் கடி­தங்­க­ளையும் தொலை­பேசி அழைப்­புக்­க­ளையும் கேட்­ட­றிவார்.

நண்பர் என்.எம்.அமீன் உதயம் பத்­தி­ரிகை செய்­தி­களை தொகுத்து பத்­தி­ரிகையை தயார்­ப­டுத்­துவார். தினமும் வரும் கடி­தங்­களைப் படித்து பரி­காரம் பெற வழி­கூ­றுவார். குறிப்­பிட்ட ஒரு சிலர் அந்திப் பொழுதில் அவரைச் சந்­திப்­ப­தற்கு சம்­மே­ளனத் தலை­மை­ய­கத்­திற்கு வரு­வது சக­ஜ­மாகும்.

மர்ஹூம் பாக்கிர் மாக்காரு­டைய நாட­ளா­விய ரீதி­யான பய­ணங்­க­ளையும் அவற்றால் சமூகம் பெற்ற நற்­ப­யன்­க­ளையும் நன்­றி­யோடு நான் இங்கு பதியக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்றேன். இதன் மூலம் இன்­றுள்ள சமூக அர­சி­யல்­வா­திகள் பாடம்­பெற வேண்­டு­மென விழை­கிறேன்.

1978 ஆம் ஆண்டு கிழக்­கி­லங்­கையில் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களில் சூறா­வளி கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பல தினங்கள் தங்­கி­யி­ருந்து நிவா­ரணம் வழங்­கிய நினை­வுகள் இன்றும் பேசப்­ப­டு­கின்­றன.

1979 ஆம் ஆண்டு இந்­தோ­னே­சிய ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளது விமானம் நீர்­கொ­ழும்பு ஆண்­டி­யம்­பலம் எனும் இடத்தில் விழுந்த போது சபா­நா­யகர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் முன்­னின்று நிவா­ர­ணப்­ப­ணி­களை நிறை­வேற்­றினார். இன்றும் கட்­டு­நா­யக்­கவில் அவர் விடுத்த வேண்­டு­கோளில் இந்­தோ­னே­சிய அரசு அமைத்துக் கொடுத்த நினைவு மண்­டபம் தக்க சான்­றாகும்.

மட்­டக்­க­ளப்பில் சூறா­வ­ளியால் பாதிக்­கப்­பட்ட ஏறாவூர் மக்­க­ளுக்கு அன்­னாரின் வேண்­டு­கோளின் பிர­காரம் அப்­போ­தைய ஈராக் தூதுவர் அலி அல் தைரி அமைத்துக் கொடுத்த 100 வீடு­களை உள்­ள­டக்­கிய சதாம் ஹுஸைன் கிராமம் அன்­னாரின் சேவைக்கு இன்­னொரு சான்­றாகும்.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீ­ரென்று கந்­தளாய் குளம் உடைப்­பெ­டுத்­தது பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் இதன் மூலம் வீட்­டையும், வயல் நிலங்­க­ளையும் இழந்து பெரும் பாதிப்­புக்­குள்­ளா­னார்கள். உட­ன­டி­யாக வாலிப முன்­ன­ணி­களின் தலை­வர்­க­ளையும் மற்­ற­வர்­க­ளையும் அங்கே வரச்­செய்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பேரு­தவி புரிந்­தார். இன்றும் இதனை கந்­தளாய், பேராற்­று­வெளி பகுதி மக்கள் நன்­றி­யோடு நினை­வு­கூ­ரு­வார்கள்.

1978 ஆம் ஆண்டு தமிழ்­நாடு காயல்­பட்­ட­ணத்தில் நடை­பெற்ற 3 ஆவது உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநாட்டில் இலக்­கிய தூதுக்­கு­ழுவின் இலங்கைத் தலைவர், அப்­போ­தைய கல்வி அமைச்சர் நிஸங்க விஜே­ரத்ன, மூதூர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஹம்மத் மஹ்றூப், கொழும்பு செட்­டியார் தெரு மீலாத் கமிட்டித் தலைவர் மர்ஹூம் எம்.எம்.ஸஹாப்தீன், அறிஞர் அல்­லாமா எம்.எம்.உவைஸ், கல்­விமான் எஸ்.எம். கமால்தீன் உட்­பட ஏ.எச்.எம்.அஸ்வர், பத்­தி­ரி­கை­யாளர் மர்ஹூம் எம்.பீ.எம். அஸ்ஹர் முத­லியோர் மாநாட்­டிற்­காக சென்று வந்­ததை பதிய விழை­கிறேன். அப்­பொ­ழுது சுமார் ஐம்­பது பேர் அன்னார் தலை­மையில் மாநாட்டில் கலந்து கொண்­டனர். காயல்­பட்­டண மக்கள் மகத்­தான வர­வேற்­ப­ளித்­தார்கள். இலங்கை வானொ­லிக்­காக முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்­பாளர் மர்ஹூம் வீ.ஏ.கபூர் தலை­மையில் சென்ற குழுவில் என்­னையும் அன்­புடன் மர்ஹும் பாக்கிர் மாக்கார் இணைத்து வைத்­தார்.

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் முதல் பத்துப் பேர்களுக்குள் அடங்குவார். அத்துடன் அரசியல் செய்த ஆத்மீகத் தலைவராக அவர் முதல்வராவார்.

அவரது பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பல பக்கங்களாக எழுதலாம். அவர் தன் சொந்தப் பணத்தில் நடத்திய உதயம் பத்திரிகை மற்றும் DAWN எனும் ஆங்கில இதழ் வரை பாக்கிர் மாக்கார் சமூக, சமய முன்னேற்றத்திற்காகவே வெளியிட்டு வந்தார்.

தனது பதவி, பட்டம்,பணம், பொருள் உட்பட நேரம் அத்தனையையும் சமூக எழுச்சிக்காகவே செலவழித்தார். இதன் மூலம் தன் வாழ்நாளில் வெற்றியை கண்டு மனநிறைவோடு அவர் மறைந்தார். இதனால் அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.

மர்ஹூம் பாக்கிர் மாக்கார் வாழ்வு மற்றையோர்க்கு எடுத்துக்காட்டாகும். அல்லாஹ் அன்னாரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க பிரார்த்திப்போமாக. ஆமீன்.

எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.