‘முப்பாய்ச்சலில் தேசிய சாதனையை விரைவில் முறியடிப்பேன்’

தேசிய மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம் பெற்ற சப்ரீன் அஹ்மத்

0 1,245

கேள்வி:உங்­க­ளைப்­பற்றி விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்கு கூறுங்கள்?

பதில்: நான் ஸப்ரீன் அஹ்மத். வெலி­கா­மத்தைச் சேர்ந்­தவன். எனது உம்மா பஃக்­ரியா, கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். வாப்பா நஜி­முதீன் வெலி­கா­மத்தைச் சேர்ந்­தவர். எமது குடும்­பத்தில் எனக்கு மூத்த சகோ­தரி ஒரு­வரும், சகோ­தரர் ஒரு­வரும், இளைய சகோ­தரர் ஒரு­வரும் உள்­ளனர்.
தந்தை சிறிய வியா­பா­ர­மொன்றை மேற்­கொள்­கிறார். தாயாரும், மூத்த சகோ­த­ரியும் வீட்டுத் தலை­வி­க­ளாக உள்­ளனர். நானா ஸதாம் விஞ்­ஞா­னத்­து­றையில் கற்று தற்­போது மருந்து உற்­பத்தி நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரி­கிறார். இளைய சகோ­தரர் சிபான் உண­வியல் கலை தொடர்­பான கற்­கை­யொன்றை முடித்­து­விட்டு அண்­மையில் கத்­தாரில் பணி­பு­ரியத் தொடங்­கி­யி­ருக்­கிறார். நான் மட்­டுமே விளை­யாட்டுத் துறையைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கிறேன்.

கேள்வி: படித்­தது மற்றும் பாட­சாலைக் காலங்­களைக் குறித்துக் கூறுங்கள்?

பதில்: நாம் குடும்­பத்­தோடு குறிப்­பிட்ட காலப்­ப­குதி வரைக்கும் மல்­வா­னையில் வசித்து வந்தோம். எனக்கு சுமார் பத்து வய­தாகும் வரைக்கும் அங்கே இருந்தோம். எனவே ஆரம்பக் கல்­வியை ஐந்தாம் தரம் வரை மல்­வானை அல்­மு­பாரக் தேசிய பாட­சா­லையில் கற்றேன்.

பின்பு எம­தூ­ரான வெலி­கா­மத்­துக்கு வந்­ததன் பின் இங்கு அறபா தேசிய பாட­சா­லையில் உயர்­தரம் வரைக்கும் கற்றேன். படிப்பில் பெரி­ய­ளவு ஈர்ப்பு இருக்­கா­விட்­டாலும் உயர்­த­ரத்தில் கலைப்­பி­ரிவில் படிப்பை நிறைவு செய்ய முடிந்­தது.

கேள்வி: விளை­யாட்டுத் துறையில் நுழைந்­தது எப்­படி?

பதில்: விளை­யாட்டில் நுழைந்­தது விளை­யாட்­டா­கத்தான். என்னால் விளை­யாட்­டுக்­களில் சாதிக்க முடியும் என அவ்­வ­ள­வாக எனக்கு தெரிந்­தி­ருக்­க­வில்லை. சாதா­ர­ண­மாக நான்காம் ஆண்டு படிக்­கும்­போதே எமது பாட­சா­லையில் இல்ல விளை­யாட்டுப் போட்­டி­களில் மாண­வர்கள் தம் திற­மைகளைக் காட்­டத்­ து­வங்­குவர். என்­றாலும் நான் ஏழாம் வகுப்­பு­வ­ரைக்கும் வந்த பின்பே இல்ல விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் பங்­கெ­டுத்தேன்.

அதற்கு முன்­னோடி எனது நானா தான். அவர் அப்­போ­தி­லி­ருந்து நீளம் பாய்தல், முப்­பாய்ச்சல், உயரம் பாய்தல் மற்றும் ஓட்­டப்­போட்டி நிகழ்ச்­சிகள் எனப் பல மெய்­வல்­லுநர் நிகழ்ச்­சி­களில் முத­லி­டங்­களைக் குவித்துக் கொண்­டி­ருந்தார். அப்­போது நான் அவ­ருக்குப் போட்­டி­யாக வீட்­டிலும் பாட­சாலை மைதா­னத்­திலும் பாய்ச்சல் நிகழ்ச்­சி­களில் விளை­யாட்­டாக ஈடு­ப­டுவேன்.

அப்­போ­துதான் என்­னாலும் விளை­யாட்­டுக்­களில் சாதிக்க முடி­யு­மென பாட­சாலைக் கால விளை­யாட்டு இல்­லங்­களின் மூத்த மாண­வர்கள் என்­னையும் போட்­டி­களில் ஈடு­ப­டுத்­தினர். எனக்கும் எனது நானா­வுக்கும் ஒரு வயது வித்­தி­யா­சமே இருந்­த­தனால் பெரும்­பாலும் இரு­வரும் ஒரே பிரி­வி­லேயே போட்­டி­யி­டுவோம். அக்­கா­லங்­களில் நானாதான் எப்­போதும் முத­லிடம் பெறுவார். நான் இரண்­டா­வது அல்­லது மூன்­றா­வது இடத்தைத் தான் பெற்றுக் கொள்வேன்.

கேள்வி:முப்­பாய்ச்சல் என்ற துறையை எப்­படி தேர்ந்­தெ­டுத்­தீர்கள்?

பதில்: உண்­மையில் நான் விளை­யாட்­டுத்­து­றைக்குள் சாதா­ர­ண­மாகத் தான் நுழைந்தேன். எனினும் திற­மை­களைக் காட்­டி­யதன் கார­ணத்­தினால் பாட­சாலை இல்ல விளை­யாட்டு மட்­டத்­தி­லி­ருந்து வலய, மாகாண மட்டப் போட்­டி­களில் பங்­கேற்கும் வாய்ப்புக் கிடைத்­தது. உயர்­தரம் கற்­கும்­போது ஒரு தடவை வலய மட்ட போட்­டிக்­கென சென்­ற­போது அன்றும் இன்றும் எனது பயிற்­சி­யா­ள­ராகத் திகழும் வை.கே. குல­ரத்ன தன்­னிடம் நீளம் பாய்­தலில் பயிற்சி பெற்று வந்த சத்­து­ரங்க அய்யா மூலம் என்னை அணுகி எனது பாய்ச்சல் நன்­றாக உள்­ள­தா­கவும் உரி­ய­மு­றைப்­படி பயிற்­சி­பெற்றால் சாதிக்க முடி­யு­மெனக் கூறி பயிற்சிக் குழாமில் இணைய வற்­பு­றுத்­தினார். என்­றாலும் விளை­யாட்­டுத்­து­றையில் சென்றால் என்ன பெரி­தாக சாதிக்க முடியும் என்­றெண்ணி நான் அதனைக் கணக்­கில்­கொள்­ளாது சும்மா இருந்­து­விட்டேன்.

பின்பு மீண்­டு­மொ­ரு­த­டவை மாகாண மட்ட நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தற்­கென சென்­றி­ருந்­த­போதும் மீண்டும் எனது பயிற்­சி­யாளர் வை.கே. குல­ரத்ன அப்­போது எமது பிர­தே­சத்தில் வலைப்­பந்து பயிற்­சி­யா­ள­ராக இருந்­து­வந்த லஹிரு அய்யா மூலம், பயிற்­சி­பெற வரு­மாறு அழைத்­தி­ருந்தார். லஹிரு அய்­யாவை ஏற்­க­னவே தெரிந்­தி­ருந்­ததால் கொஞ்சம் நம்­பிக்­கை­யோடு வந்து வீட்­டிலும் எனக்குப் பொறுப்­பான ஆசி­ரி­யர்­க­ளி­டமும் தெரி­வித்தேன். அதன் பின்பு நடந்­த­வைதான் இன்று தேசிய மட்ட சாம்­பி­ய­னாக உங்­க­ளது முன்­னி­லையில் வெளிப்­பட வைத்­தி­ருக்­கி­றது.

கேள்வி: முப்­பாய்ச்­சலின் நுணுக்கம் என்ன? ஏன் அந்த நிகழ்ச்­சியை மட்டும் தேர்வு செய்­தீர்கள்?

பதில்: முப்­பாய்ச்­சலில் குறு­கிய செக்­கன்­க­ளுக்குள் எமது உடம்பின் முழு சக்­தி­யையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். எமது முழுச்­சக்­தியும் 200% அள­வுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும் போதுதான் எம்மால் சிறந்த பாய்ச்­ச­லொன்றை நிகழ்த்த முடியும்.

தற்­போது என்­னு­டைய சிறந்த பாய்ச்சல் 16.33 மீற்றர். இலங்­கையின் அதி­கூ­டிய பாய்ச்சல் 16.71 மீற்றர். அதனைப் பாய்ந்­த­வரும் எமது குழுவில் தற்­போது இருக்­கிறார். என்­றாலும் அவ­ரது பாய்ச்சல் தூரம் குன்­றி­யி­ருப்­பதால் என்னால் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைக்க முடிந்­துள்­ளது. எனினும் தொடர் பயிற்­சி­களைப் பெறு­வதன் மூலம் என்னால் இலங்கை சாத­னை­யான 16.71 ஐ முறி­ய­டிக்­கலாம் என நம்­பு­கிறேன். குறிப்­பாக இவ்­வ­ரு­டத்­துக்குள் அதனை நிகழ்த்தத் திட்­ட­மிட்­டுள்ளேன். அவ்­வாறு செய்ய முடிந்தால் சர்­வ­தேச பதக்­க­மொன்­றையும் இல­கு­வாக ஈட்ட முடியும்.

முப்­பாய்ச்­சலைத் தவிர என்னால் நீளம் பாய்­த­லிலும் குறுந்­தூர ஓட்­டத்­திலும் தேசிய மட்­டத்தில் பதக்கம் பெறும் அளவு சாதிக்க முடியும். என்­றாலும் உடல் உபா­தை­களைக் கருத்தில் கொண்டும் என்னால் அதி­கூ­டு­த­லாக சாதிக்க முடி­யு­மான துறையைக் கவ­னத்­தி­லெ­டுத்தும் இத்­து­றையில் மட்டும் இருக்­கிறேன்.
இதற்­கென ஒவ்­வொரு நாளும் காலையில் 7.00 –-10.30 மணி வரைக்கும், மாலையில் 3.30-–-6.00 மணி வரைக்கும் பயிற்­சி­களில் ஈடு­ப­டுவோம். ஒவ்­வொரு நாளும் 15 பாய்ச்­சல்­களைப் பாய்­வ­தற்­கான பயிற்சி உள்­ள­டங்­கி­யி­ருக்கும். இதற்­கென நாம் அதி­க­மாக களைப்­ப­டைந்து பயிற்­சி­களை மேற்­கொள்வோம்.

கேள்வி:இந்தத் துறையில் எதிர்­கொண்ட தடங்­கல்கள் என்ன? சமூ­கத்­தி­ட­மி­ருந்­தான ஒத்­து­ழைப்­புகள் எப்­ப­டி­யி­ருந்­தன?

பதில்: தடங்­கல்கள் என சொல்­லும்­போது உடல் உபா­தை­களைத் தான் கூற வேண்டும். 2015 மற்றும் 2017 இல் கெண்டைக் காலில் எனக்கு நிகழ்ந்த உபா­தை­களால் எனது பயிற்­சி­களை நிறுத்­தி­விட்டு தொடர்ந்து சிகிச்­சை­களில் ஈடு­பட வேண்­டி­யி­ருந்­தது. சில தட­வை­களில் சிகிச்­சைகள் உரிய பயனை முழு­மை­யாகத் தரா­த­போது ஊசி, மருந்து வகைகள் மூல­மா­கவும் சில வலி நிவா­ர­ணி­களைப் பெற வேண்­டி­யி­ருந்­தது.

சமூ­கத்­தி­ட­மி­ருந்து என்று சொல்­லும்­போது எனது சூழ­லி­லி­ருந்து குறிப்­பி­டத்­தக்க ஒத்­து­ழைப்பு கிடைத்­தது. என்­றாலும் அங்­கீ­காரம் என்று பெரி­தாக எத­னையும் நான் எதிர்­பார்த்­துக்­கொண்டு ஈடு­ப­ட­வில்லை. ஏனெனில் இது எனது துறை. நான்தான் முயற்­சித்து அடைந்­து­கொள்ள வேண்­டு­மென்ற எண்­ணத்­துடன் தான் தொடர்ந்து பயிற்சி பெறு­கிறேன். “முயற்­சித்தால் அல்லாஹ் தருவான்” என்ற இறை­வாக்கு அதைத்­தானே சொல்­கி­றது.

தவிர, ஆரம்­பத்தில் அனு­ச­ர­ணைக்­கென எமது பிராந்­தி­யத்தில் விளை­யாட்­டுத்­து­றைக்கு உதவும் ஒரு தன­வந்­தரை உதவி பெறு­வ­தற்­கென நான் சந்­திக்க சென்றேன். எனினும் அவ­ரது உத­வி­யா­ள­ரையே சந்­திக்க முடிந்­தது. எல்லா விப­ரங்­க­ளையும் பெற்று பின்னர் தொடர்பு கொள்­வ­தா­கவும் தன­வந்­த­ருடன் பேச­வ­ரு­மாறு அழைப்­ப­தா­கவும் சொல்லி இறு­தி­வரை எந்­த­ப் ப­திலும் சொல்­ல­வில்லை. இதனை குறை­யாக சொல்­ல­வில்லை. படிப்­பி­னை­யாகத் தான் சொல்­கிறேன்.

கேள்வி:தேசிய மட்­டத்தில் சாதித்­துள்­ளீர்கள். அடுத்த கட்டம் எவ்­வாறு அமையும்?

பதில்: அடுத்து தேசிய மட்­டத்­தி­லான இரா­ணுவ விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கேற்­ப­தற்­காக தயா­ரா­கிறோம். அடுத்த டிசம்­பரில் நேபாளம், கத்­மண்டு நகரில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டிகள் எனது முத­லா­வது சர்­வ­தேச நிகழ்ச்சி. இவற்றில் பதக்கம் வெல்­வ­தற்­கென கடு­மை­யாக உழைத்­துக்­கொண்­டி­ருக்­கிறேன். சாதிப்பேன் என்ற முழு­மை­யான நம்­பிக்கை எனக்­குள்­ளது. இன்ஷா அல்லாஹ்.

கேள்வி:பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து தேசிய மட்­டத்தில் இன்று சாதிக்கும் வரைக்கும் உங்­க­ளுக்கு உந்து சக்­தி­யாக இருந்­த­வர்­களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: எனக்கு இந்­த­ளவு உடல் பலத்­தி­னையும் அரு­ளையும் சொரிந்­தவன் அல்லாஹ் தான். அடுத்­த­தாக எனது உம்மா, வாப்­பாவை நினை­வு­ப­டுத்த வேண்டும். அவர்­களே எனது நல­னுக்­காக அதிகம் பிரார்த்­தனை செய்­ப­வர்கள். உயர்­தரம் படிக்கும் காலத்­தில் மேல் மட்ட பயிற்­சி­க­ளுக்கு செல்லும் போது அவர்­கள்தான் அன்­றாடம் என­தூ­ரி­லி­ருந்து மாத்­தறை வரைக்கும் செல்­வ­தற்கு, அனைத்­து­விதக் கஷ்­டங்­க­ளுக்கும் மத்­தியில் பயண, உணவுச் செல­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்து தரு­வார்கள். வெற்றி பெற்று வரும்­போது என்­னுடன் இருப்­பது போலவே தோல்­வி­ய­டைந்து வரும்­போதும் என்­னு­ட­னேயே இருந்து ஆறுதல் சொல்­வோரும் அவர்­களே.

எனது நானா எனக்கு எப்­போதும் ஆலோ­சனை வழங்­கு­வோரில் முதன்­மை­யா­ன­வ­ராக இருப்பார். பயிற்சி முறை­களில் புதிய முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­களைக் கடைப்­பி­டித்து வர வழி­காட்டல் வழங்­கு­வதும் அவர்தான். ஏதும் கஷ்­டங்கள், பயிற்­சி­களில் தடங்­கல்­களை எதிர்­நோக்கும் போது சகோ­த­ரர்கள் என்னை ஆறு­தல்­ப­டுத்­துவர்.

மற்­றது நான் பாட­சா­லைக்கு வெளியில் பயிற்­சி­க­ளுக்­கென அழைக்­கப்­பட்ட போது உடனே நான் எனது பொறுப்­பா­சி­ரி­ய­ரான முஸ்னி ஆசி­ரி­ய­ரிடம் கூறினேன். அவர்தான் எனக்­கென முதன் முதலில் விளை­யாட்டு பயிற்­சி­க­ளுக்கு ஏற்ற ஆயிரக் கணக்கில் பெறு­ம­தி­யான நவீன கால­ணி­யொன்றை கொள்­வ­னவு செய்து தந்­தது என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­யது. அவ­ரது ஆரம்­ப­கால வழி­காட்­டல்­களும் ஊக்­க­மூட்­டல்­களும் இல்­லா­விட்டால் நான் இப்­போ­துள்ள நிலையை அடைந்­தி­ருக்­க­மாட்டேன். அவ்­வா­றுதான் உயர்­தரம் கற்கும் காலத்தில் மாத்­த­றையில் பயிற்­சி­க­ளுக்­கென செல்­வ­தற்கு காலை­நேர பாட­சாலை வர­வுக்கு சலு­கை­யினைப் பெற்றுத் தந்து எனது விளை­யாட்டுத் துறைக்கு அங்­கீ­காரம் தந்­தவர் எமது அறபா தேசிய பாட­சா­லையின் அப்­போ­தைய அதிபர் வாரிஸ் அலி மௌலானா சேர். மேலும் எமது ஊரி­லி­ருந்து வந்த சர்­வ­தேச ஓட்ட வீர­ரான ஸப்ரான் எனக்கு பல வழி­காட்­டல்­க­ளையும், பல்­லின சூழலில் நல்ல பண்­பாட்­டோடு நடந்­து­கொள்­ளவும் வழி­காட்­டி­யவர்.

மற்­றது எனது நண்­பர்கள் பலரும் எனக்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கி­றார்கள். குறிப்­பாக முதன்­மு­த­லாக தேசிய மட்ட போட்­டி­க­ளுக்கு சென்­ற­போது ஈட்­டி­யெ­றிதல் போட்­டிக்­கென என்­னோடு வந்த நண்பர் ரிமாஸ் இப்­போது வரைக்கும் நல்ல நட்­போடு எனது வெற்­றி­க­ளிலும் தோல்­வி­க­ளிலும் உறு­து­ணை­யாக இருக்­கிறார். எல்லா நண்­பர்­க­ளி­னதும் வாழ்த்­துக்கள் நல்ல உற்­சா­கத்­தையும் மோட்­டி­வே­ஷ­னையும் தரும்.

அடுத்து, கடை­சி­யாக குறிப்­பிட்­டாலும் முக்­கி­ய­மாக குறிப்­பி­ட­வேண்­டி­யது எனது பயிற்­சி­யாளர் வை.கே. குல­ரத்ன ஆரம்ப காலம் முதலே எனது முன்­னேற்­றத்தில் என்­னை­வி­டவும் அதிக கரி­ச­னை­யுடன் இருப்­பவர். அவர் இல்­லா­விட்டால் இந்த இடத்­துக்கு வந்­தி­ருக்க முடி­யாது. எனக்கு இலங்கை தேசிய குழாமில் இடம்­பெ­று­வ­தற்கும், இரா­ணுவ அணியில் இடம்­பெ­று­வ­தற்கும் அதிக பங்­க­ளிப்பு செய்­தவர். நான் பெரி­ய­ளவு வெற்­றி­களை ஆரம்­பத்தில் பெறா­விட்­டாலும், அவர்தான் என்னால் ஓர் உயர்ந்த இடத்தை அடைய முடி­யு­மென இனங்­கண்டு வழி­காட்­டி­யவர். மற்­றது எமது விளை­யாட்டுக் குழாமில் உள்ள ஏனைய தேசிய வீரர்கள் பலரும் எனக்கு இன, மத பேதங்­க­ளுக்கு அப்பால் உந்து சக்­தி­யாக இருந்து வரு­கின்­றனர். நான் தங்­கி­யி­ருப்­பதும் பல்­லின சூழ­லில்தான். அங்கும் இன மதங்­களைக் கடந்து நட்­போடு செயற்­ப­டு­கிறோம்.

கேள்வி:தற்­போ­தைய சூழலில் உங்­களால் இந்த சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் எத்­த­கைய பங்­க­ளிப்பை வழங்க முடியும்?

பதில்: நாம் ஒரு முஸ்­லி­மாக இருந்து நாட்­டுக்கு பதக்கங்­களைக் கொண்­டு­
வ­ரு­வது பெரு­மைக்­கு­ரி­யது. எமது சமூ­கத்­துக்கும் நற்­பெ­யரை பெற்­றுக்­கொ­டுக்கும்.

அடுத்­த­தாக எமது சூழலில் விளை­யாட்டுத்துறையில் சாதிப்­போரை இனங் கண்டு எதிர்காலத்தில் வழிகாட்டவும் பயிற்சியளிக்கவும் வேண்டுமென எண்ணியுள்ளேன்.

எமது சூழலில் பல திற­மை­யான வீரர்கள் உள்­ளனர். அவர்­க­ளுக்கும் இவ்­வா­றான வாய்ப்­புக்கள் அமைய வேண்­டு­மென எண்­ணு­கிறேன். பெற்றோர், பாட­சாலை என எல்லா சூழ­லிலும் அவர்­களை ஊக்­கு­விப்­பதன் மூலம் சர்­வ­தேச தர­முள்­ள­வர்­களை இனங்­கா­ணலாம்.

இங்கே பயிற்­சியில் ஈடு­ப­டு­வோரைப் பாருங்கள். அதி­க­மானோர் கிரா­மப்­பு­றங்­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­களே. அதே­நேரம் கொழும்பு பணக்­கார பெற்றோர் பலரும் விளை­யாட்­டுத்­து­றையில் தம் பிள்­ளை­களை வளர்த்­தெ­டுக்­க­வென காலை­யிலும் மாலை­யிலும் இங்கு காத்­தி­ருப்­பது வழக்கம்.

விளை­யாட்­டுத்­து­றையும் நல்ல துறைதான் என்­பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். மேலும் சரி­யான வழி­காட்­டலால் நல்­லொ­ழுக்­க­மான வீரர்­களை உரு­வாக்­கலாம். விளை­யாட்டுப் பயிற்­சி­க­ளது அடிப்­படை நோக்­கங்­களில் நல்­லொ­ழுக்கம் முத­லி­டத்தைப் பெறும்.

விளை­யாட்டுத் துறையில் ஈடு­ப­டு­வ­தனால் கல்­வியில் சாதிக்க முடி­யாது என நினைக்க தேவை­யில்லை. எமது துறை­யிலே நிறைய மேலே செல்­லலாம். உதா­ர­ணத்­துக்கு என்னால் இரா­ணுவ உயர் பத­வி­க­ளுக்கு முன்­னேற முடியும். உரிய சம்­ப­ளமும் எமக்குக் கிடைக்கும். அனைத்தும் எமது முயற்சியிலும், எம் சூழலில் இருந்தும் கிடைக்கும் ஒத்துழைப்பிலுமே இருக்கிறது.

நேர்கண்டவர்: எம்.எஸ். ஸியாப் முஹம்மத்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.