சவூதி கோடீஸ்வரர் அல் -அமௌதி தடுப்புக்காவலில் இருந்து விடுதலை

0 466

சவூதி அரேபியாவின் சர்ச்சைக்குரிய ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியாவில் பிறந்த சவூதி கோடீஸ்வரரான மொஹமட் அல்-அமௌதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

எத்தியோப்பிய பிரதமர் அபியி அஹ்மெட் தனது டுவிட்டரில் கடந்த சனிக்கிழமை அமௌதி விடுவிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் தான் றியாதிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானிடம் இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஜித்தாவின் மேற்கு நகரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அமௌதி வந்து சேர்ந்துள்ளதாக குடும்ப அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் அமௌதி, பல இளவரசர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுடன் றியாதில் அமைந்துள்ள றிட்ஸ் – கால்ட்டன் ஹோட்டலில் 2017 நவம்பரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்தோர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், ஊழல் மற்றும் அதிகாரிகைளை கட்டாயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

முறைகேடாகப் பணத்தை சேர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் நலனைவிட சொந்த நலனை முதன்மைப்படுத்திய பலவீனமான ஆத்மாக்கள் சிலவற்றின் துஷ்பியோகத்திற்கு எதிரான நடவடிக்கை என அந்நேரத்தில் வெளியிடப்பட்ட அரச பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக சவூதி அரேபிய வர்த்தகரும் கோடீஸ்வர இளவரசருமான அல்வலீத் பின் தலால் உள்ளிட்ட பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

அமௌதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பல வர்த்தகர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிப்புக்களின் பின்னணியில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை மற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக வெளியான தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் சர்வதேச அழுத்தங்கள் காணப்படுகின்றன.

யெமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் எத்தியோப்பிய தாய்க்கும் பிறந்த அமௌதி கட்டடத்துறை, சக்திவளத்துறை, விவசாயம், கனிப்பொருள் அகழ்வு, ஹோட்டல்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் பரந்தளவான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.