சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம்

பைஸர் முஸ்தபா காட்டம்

0 471

சிறுபான்மைக்  கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே,  நாட்டில் இனவாதம் ஏற்படுகின்றதென, முன்னாள் அமைச்சர்  பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தேர்தல்களின்போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால் நின்று,  ‘இலங்கையர்’  என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது,  எம்மனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

பணம், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இதனாலேயே, நாட்டில் இவ்வளவு தூரம்  பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றே, நாம் 2017 ஆம் ஆண்டு தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். இதற்கிணங்கவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடம்பெற்றது.

இலங்கை வாழ் மக்கள், தமது இன, மதத்தைப்  பிரதி நிதித்துவப்படுத்தும் ஒருவருக்கே வாக்களித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்பில் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் வாக்களிக்கின்றார்கள். இத்தகைய  கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை முன்னேற்றகரமான பாதையில் செல்ல வேண்டுமென்றால், சரியான பிரதிநிதிக்கு நாம் வாக்களிக்க வேண்டும். இந்த விடயத்தில் ‘நாம் இலங்கையர்’   என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

சில சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்காரர்கள், பெரிய கட்சிகளின் பங்காளியாக மாறி, தமது பங்கைக்  கேட்டுவருகிறார்கள்.

இதனாலேயே, தேவையில்லாத இனவாதம் என்ற விஷம் பரவுகிறது. தொகுதிவாரி முறைமையின் ஊடாக அந்தத் தொகுதிக்கு பொறுப்புக்கூறும் பிரதிநிதியைக் கொண்டுவர வேண்டும் என்று நாம் முயற்சித்தோம்.

அத்தோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் நாம் பலப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தோம். இதன் பிரதிபலனாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக நாம் அதிகரித்தோம்.

பாராளுமன்றில் தற்போது இருக்கும் பெண் பிரதிநிதிகள், அவர்களது கணவன் உள்ளிட்ட உறவினர்களின் தொடர்ச்சியாகவே இருக்கின்றார்கள். சுயாதீனமான பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கின்றது. இவற்றை மாற்றியமைக்க நாம் முயற்சித்தோம். இதற்காக புதிதாக எல்லை நிர்ணயத்தையும் மேற்கொண்டோம்.

எனினும், எல்லை நிர்ணயத்தை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அதனை எதிர்த்து, நடைமுறையில் இருக்கும் முறையிலேயே தேர்தலை நடத்துவோம் எனக்  கூறினார்கள். சில சிறுபான்மையினக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில்தான் இருந்தன.

இந்த விடயத்தில் இன, மதங்களை விடுத்து இலங்கையராக நாம் சிந்திக்க வேண்டும். 30 வருடங்களாக நாம் யுத்தத்தால் பிரிந்திருந்தோம். இனிமேலேனும் ‘இலங்கையர்’   என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

மேலும், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 வீத பிரதிநிதித்துவம் எந்தக் காரணம் கொண்டும் குறைக்கப்படக்கூடாது.

எந்த முறையில் தேர்தல் நடைபெற்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு எப்பொழுதும்  தயாராகவே இருக்கிறது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.