ஷண்முகா அபாயா விவகாரத்தில் கிழக்கு ஆளுநர் தலையிட வேண்டும்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை

0 552

‘கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கத்தையும் பல்லின சகவாழ்வையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை  தொடர்பான சர்ச்சையினை  நீதியாகத் தீர்த்து  வைப்பதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கிழக்கு மாகாண ஆளுநரிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலை ஸ்ரீ ஷண்முகா  இந்துக்கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள்  தொடர்பிலேயே இந்தக் கோரிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு  அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘கிழக்கு மாகாண ஆளுநராகத்  தாங்கள் பதவியேற்றிருக்கும் நிலையில் மிக முக்கிய ஒரு விடயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.  மூன்று சமூகங்களும் பின்னிப்பிணைந்து வாழ்கின்ற பிரதேசமான  கிழக்கு மாகாணத்தில் சகவாழ்வை மேம்படுத்தி சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதே எல்லோரதும் தலையாய விருப்பமும் இலக்குமாகும். அந்த வகையில் சமூக நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்கும்  பெரும் சவாலாக நீண்ட காலமாக  இருந்துவருகின்ற காணி  விவகாரங்கள்,  வளப்பங்கீடுகள், அரசாங்க நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தாங்கள் அறிந்ததே.  அவற்றுக்கு நீதியான  தீர்வுகளை காண்பதன் மூலம் மாத்திரமே அர்த்தபூர்வமான  சகவாழ்வினையும் கிழக்குப் பிரதேசத்தின்  நிலையான அபிவிருத்தியினையும் காணமுடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் ஏற்கனவே கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம்.

இந்நிலையில் முக்கியமான இன்னுமொரு விடயத்தினையும் உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். அதாவது, திருகோணமலை ஸ்ரீஷண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பில் கடந்த பல மாதங்களாக எழுந்துள்ள சர்ச்சைகளை தாங்கள் அறிவீர்கள்.  நமது நாட்டின் யாப்பின் பிரகாரம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆடை உரிமை அடிப்படையிலும், பாடசாலை ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆடை ஒழுங்கின் அடிப்படையிலும் இந்த விடயத்தை நோக்கவேண்டியுள்ளது. அந்த வகையில் எந்தவொரு ஆசிரியரும் கல்வித் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆடை ஒழுங்கில் எந்தவொரு பாடசாலையிலும் கடமையாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கலாசாரம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது என்ற காரணத்தின் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொருவரினால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக பின்பற்றப்படும்  கலாசார ஆடை ஒழுங்குகளை எவரும் மறுக்க  முடியாது. இதற்கிணங்க முஸ்லிம் ஆசிரியைகள் தமது மார்க்க, கலாசார வரையறைகளின்படி ஆடையணிந்து பாடசாலைகளில்  கற்பிப்பதற்கான உரிமை மறுக்கப்பட முடியாதது.

பரஸ்பரம் கலாசாரங்களை மதித்து, அனுசரித்து நடக்கின்ற மனோநிலை சகவாழ்வின் அத்திவாரமாகும். இந்த அத்திவாரத்தை இடுவதற்கு பாடசாலைகளே மிகப்பொருத்தமான இடங்களுமாகும். முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  மிகப் பெரும்பான்மையாக இருக்கும் எந்தவொரு பாடசாலையிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் முஸ்லிம் கலாசாரத்துக்கு அமைவாக ஆடை அணிந்து வரவேண்டுமென வற்புறுத்தப்படுவதில்லை. இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். இதுபோன்ற முன்மாதிரி ஏனைய பல முன்னணிப் பாடசாலைகளிலும் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும் இந்த சகவாழ்வு  முன்மாதிரி குறித்த திருகோணமலை பாடசாலையில் பின்பற்றப்படவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த பிரச்சினை  வெடித்தபோது,  இதனை உடனடியாக சுமுகமாகத் தீர்க்கும் வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தலையீடு செய்ய வேண்டுமென நாம் கோரிக்கை விடுத்திருந்தோம்.  குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாகச் சந்தித்து நாம் இதிலுள்ள நியாயங்களையும் பாரதூரங்களையும்  எடுத்துக் கூறி இதனை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அவசியமான  உடனடித் தலையீடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.  அந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதிலெதுவும் கிடைக்கவில்லை என்பது  வேதனைக்குரியது.

தமிழ் – முஸ்லிம்  சமூகங்களுக்கிடையில்  மேலும்  மனக்கசப்புகளை உருவாக்கக்கூடிய மற்றுமொரு சம்பவமாக இதுவும் மாறியது.  இடைக்காலத் தீர்வு எனக்கூறி குறித்த ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  ஒரு மாதத்துக்குள் நிரந்தர தீர்வு தரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்த  போதிலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. வேறுவழியின்றி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து பாதிக்கப்பட்ட இந்த ஆசிரியைகள்  நீதி கோரினர்.

அவர்களின் மனு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீண்டும் ஸ்ரீஷண்முகா  கல்லூரிக்கு இம்மாதம் 2ஆம் திகதி  இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இருப்பினும் பாடசாலை நிர்வாகம் அவர்களுக்கான நேரசூசிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கவில்லை. தமது கலாசார ஆடைகளை கைவிட்டால்  மாத்திரமே கற்பிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்ற மறைமுகமான நிர்ப்பந்தமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இவர்கள் அதிரடியாகத் தூர  இடங்களிலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு தற்போது  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலுள்ள பாடசாலைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டியவர்களே அதற்குப் பதிலாக இப்போது அவர்களுக்கு  தண்டனை வழங்கி இருப்பதாகத் தெரிகிறது.

குறித்த சர்ச்சை ஆரம்பமாகி ஏறத்தாழ ஒன்பது  மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த விடயம் இவ்வாறு இழுத்தடிக்கபடுவதனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக ‘தண்டனை’  வழங்கும் நடவடிக்கைகளையும்  எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மட்டுமன்றி, இந்த விடயமானது குறித்த இரண்டு ஆசிரியைகளின் நலன்களோடு மாத்திரம்  சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.  இது சிறுபான்மை சமூகத்தின் கலாசார அடிப்படை  உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும்.  இதுபோன்ற சர்ச்சைகள்  நாட்டில் சகவாழ்வை, சமூக நல்லிணக்கத்தை  கட்டியெழுப்புகின்ற தேசியக் கடமைக்கு  பெரும் அச்சுறுத்தலான விடயங்களாகும் . இதனை நீதியாகவும் உடனடியாகவும் தீர்க்காவிட்டால் இது ஒரு மிகப்பெரிய தவறான  முன்னுதாரணமாக மாறிவிடும்.  ஒரு சமூகத்தின் கலாசாரம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் இடங்களில் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் கலாசார அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வரலாற்று ஆதாரமாக இது  மாறிவிடக் கூடிய அபாயம் இங்கு இருக்கிறது.

எனவே, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாக – கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள  நீங்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தமது கலாசார ஆடை உரிமைக்காக நீண்ட காலமாகப் போராடும் இந்த ஆசிரியைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதோடு  கிழக்கு மாகாணத்தில் அர்த்தமுள்ள சக வாழ்வினையும்  சமூக நல்லிணக்கத்தினையும் உத்தரவாதப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.