சிரியாவில் கார் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி

0 514

சிரியாவின் கரையோர நகரான லடாகியாவின் அதிக சன நடமாட்டமிக்க சந்தியொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானதோடு 14 பேர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச படையினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதலில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் ஒப்பீட்டு ரீதியில் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்ட இப் பிரதேசம் தற்போது அமைதியை இழந்துள்ளது.

நகரத்தின் அல்-ஹம்மாம் சதுக்கத்தில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அரசாங்க ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குண்டு, வெடிப்பிற்கு முன்னதாக விசேட பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக ஒரு பொதுமகன் பலியானதோடு மேலும் 14 பேர் காயமடைந்ததாக மாகாணத்தின் உயர்மட்ட சுகாதார அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

காயமடைந்த பெரும்பாலானோர் சிதறல்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக நகரத்தின் டிஷ்ரின் வைத்தியசாலையின் லோஆய் நடாப் அரச தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். எரிந்துகொண்டிருந்த காரை மக்கள் சூழ்ந்துநின்று வேடிக்கை பார்ப்பதை அரச தொலைக்காட்சி காணொலியாகக் காண்பித்தது.

2011 ஆம் ஆண்டு சிரிய நெருக்கடி ஆரம்பமானதிலிருந்து லடாக்கியா, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகக் காணப்படுகிறது.

எனினும், இந்த மாகாணத்தில் கிளர்ச்சிக் குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளன என்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட யுத்த மேற்பார்வை அமைப்பான மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.