நமது அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அளவுக்கதிகமான சலுகைகள்

0 1,327

இலங்கையை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் செல்வந்தனாக மாற வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி ஒரு அரசியல்வாதியாகுவதுதான் என்று கூறினால் அது மிகையான வார்த்தை கிடையாது. அந்த அளவிற்கு அரசியல்வாதிகளுடைய சொத்தின்மதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சாதாரண பொருளாதார நிலையில் இருந்த பல்வேறு உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதய சொத்தின் பெறுமதி பல மில்லியன்களாகவும், கோடிகளாகவும் உயர்ந்த வண்ணமுள்ளது.

இலங்கை நாட்டின் இரண்டு கோடி மக்களுடைய தலைவிதி அரசியல்வாதிகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அப்பேர்ப்பட்ட அரசியல் தலைவர்களுடைய கல்வித் தகைமைகள் எத்தனை உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 என்பது எவ்வளவு வெட்ககரமானது?

எந்தவிதமான நிதி மோசடிகளிலும் ஈடுபடாமல் மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட கல்வியில் சிறந்த அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியது என்பதுதான் இங்கு கவலையானது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் ஊதியம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் வாகனம் , வாகனத்துக்கான எரிபொருள், அலுவலக புனர் நிர்மாணம், முத்திரைச் செலவு போன்ற பல விடயங்கள் உள்ளடங்கும். சலுகைகளும், சம்பளமும் கனமாக வழங்கப்பட்டாலும் கூட அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய சொத்தை விட பன்மடங்கு அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சேமிக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன?

அரசியல் நிதி மோசடி நடைபெறுவதற்கு கூடுதலான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கு மேற்சொன்ன அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பூதாகரமான சலுகைகளும் ஒரு வகையில் காரணம்தான். பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்பதைப் போல மக்களுக்கு சேவை செய்யும் நல்லெண்ணத்தில் வருகின்ற அரசியல்வாதிகள் கூட பண வலையில் விழுந்து விடுகிறார்கள்.

அடிப்படைச் சம்பளமாக

அரசியல்வாதிகளுடைய சம்பள அளவுத்திட்டத்தை எடுத்து நோக்கினால் இலங்கையின் ஒரு சராசரி குடிமகனுக்கு வழங்கப்படுகின்ற அதே சம்பள அளவே நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பளத்தொகை ரூபா 54, 285 ஆகும்.  பிரதி அமைச்சருக்கு ரூபா 63, 500  உம் அமைச்சரவை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு தலா 65, 000 ரூபாவும் மாதாந்த சம்பளமாக வழங்கப்படுகின்றன. மேலும் சபாநாயகருக்கு ரூபா. 68, 500 உம், பிரதமருக்கு ரூபா 71,500 உம் சம்பளமாக வழங்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் பல்வேறு தேவைகளுக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் பொது மக்களின் நிதியைச் செலவிடுகிறது. அந்த வகையில் இலங்கை அரசாங்கம் அரசியல்வாதிகளின் தேவை கருதி எந்தெந்த வகையில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பது தொடர்பாக பார்ப்போம்.

தபால் செலவாக

ஒவ்வொரு வருடமும்  தபால்  செலவுகளுக்காக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 175, 000 ரூபா வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை வருடத்தின்  நான்கு கட்டங்களில் படிப்படியாக வழங்கப்படுகின்றது. இதில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ரூபா. 24000 வழங்கப்படுகிறது. எனினும் இந்தத் தொகை போதாது எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் 2018 ஜனவரி முதல் இரட்டிப்பாக்கி வழங்கப்படுகிறது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தபால் செலவாக ரூபா. 350, 000 உம் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தபால் செலவாக  ரூபா. 48,000 உம் வழங்கப்படுகிறது.

வாசஸ்தலங்களை புனர்நிர்மாணிக்க

இதற்கப்பால் அவ்வப்போது அமைச்சர்கள், ஆளுநர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் பெருந்தொகை நிதி செலவிடப்படுகிறது. அற்கமைய இந்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளுநர் இல்லத்தினதும் 3 அமைச்சர்களினதும் வாசஸ்தலங்களை திருத்தியமைக்க 171,002,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

வாகன கொள்வனவுக்காக

அமைச்சர்கள் பயணிப்பதற்கான வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 361 மில்லியன் ரூபா தொடக்கம் 494 மில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவு மதிப்பீட்டு அறிக்கையின் படி நிதி அமைச்சுக்கும் மேலும் 3 அமைச்சர்களுக்குமான வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக  24,165,500   ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பிரத்தியேக அலுவலர்களின் அலுவலக போக்குவரத்துக் கொடுப்பனவாக 4 பேருக்கு தலா 2500 ரூபா வீதம் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்படுகிறது.

2018 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி இவ்வருடத்தில்  அரசாங்க உத்தியோகத்தர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களின் எண்ணிக்கை 7000 ஆகும். இவை ஒவ்வொன்றுக்குமான சராசரி செலவு 3.6 மில்லியன் ரூபாவாகும்.

மேலும் பல்வேறு  பிரிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராஜதந்திரிகள், ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர்கள், இராணுவ உயரதிகாரிகளுக்காகவும் வாகனங்கள் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை முழுமையான வரி விலக்கு சலுகையைக் கொண்டவையாகும். இந்த வரி விலக்கு அனுமதிப்பத்திரங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 23 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இது நாட்டிற்கு பாரிய நஷ்டத்தைக் கொடுக்கும் செயற்பாடாகும்.

எரிபொருள் செலவுக்காக

வாகனங்களுக்காக எரிபொருள் செலவானது ஒவ்வொரு மாதத்தினதும் முதல் நாளில் வழங்கப்படுகிறது. குறித்த செலவுத் தொகை பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குள்ள தூரத்தை பொறுத்து வித்தியாசப்படும்.

உதாரணமாக கொழும்பைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு 283.94 லீற்றரும் கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த அமைச்சருக்கு 355.58 லீற்றம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அமைச்சர் ஒருவரின் பெற்றோல் வாகனம் ஒன்றிற்காக ரூபா 50,000 உம் டீசல் வாகனம் ஒன்றிற்காக ரூபா 20,000 உம் வழங்கப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் உள்ள அமைச்சர்களுக்கு பெற்றோல் வாகனத்துக்கு ரூபா 75,000 உம் டீசல் வாகனத்துக்கு ரூபா 30,000 வழங்கப்படுகிறது.

பிரதியமைச்சர் ஒருவருக்கு பெற்றோல் வாகனத்துக்கு 40,000 ரூபாவும் டீசல் வாகனத்துக்கு 20, 000 ரூபாவும் வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற சபை அமர்வுக்கான செலவுகள்

ஒருநாள் பாராளுமன்றம் கூடுவதற்கான செலவு 8 மில்லியன் ரூபாவாகும்.  அக்டோபர் 26 ஐத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காலத்தில் கூட்டப்பட்ட ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுக்கும் ரூபா 8 மில்லியன் வரை செலவிடப்பட்டது. இவற்றில் பல நாட்கள் வன்முறைகளால் சபையில் களேபரம் வெடித்தது. ஏனைய நாட்கள் வெறுமனே ஒரு சில நிமிடங்கள் மாத்திரம் சபை கூடின.  அந்த வகையில் சுமார் 8 அமர்வுகளுக்கு ரூபா 64 மில்லியன் வரை அநியாயமாக செலவிடப்பட்டது

ஓய்வூதியம்

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் படி 1931 ஜூலைக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றனர். அத்துடன்அவரது துணை மற்றும் அவரது பிள்ளைகளும் குறித்த ஓய்வூதியத் தொகையை பெறுவதற்கு உரித்துடையவர்களாகின்றனர்.

1977 இன் பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் 1982 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவருடைய துணை ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவராகின்றார்.

உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் துணை மறுமணம் செய்து கொள்ளாத வரை அவர் ஓய்வூதியச் சலுகையை பெறும் தகுதியினைப் பெறுகிறார்.

இந்த சட்டம் 1990இல் மீண்டுமொரு முறை மீள்திருத்தம் செய்யப்பட்டதன் படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவருடைய  பிள்ளைகளும் குறித்த ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவராகின்றனர்.

ஓய்வூதியத்தை  பெறுவதில் அரசியல்வாதிகளுக்கு  கிடைக்கின்ற சலுகைகளில் துளியளவு கூட அரசாங்க  அலுவலர்களுக்கு கிடையாது. ஒரு அரசாங்க  அதிகாரி ஓய்வூதியத்தை  பெற வேண்டும் என்றால் குறைந்தது 20 வருடம்  அரசாங்கத்துக்கு சேவையாற்றியிருக்க  வேண்டும்.  அதிலும் அரசாங்க அதிகாரிகள்  ஒழுக்கவியல் விசாரணைகளுக்கு  உட்படுத்தப்பட்டால்  அவர்களுடைய  ஓய்வூதியம் தற்காலிகமாக துண்டிக்கப்படும்.

பிரதமரின் சொத்து விபரம்

தகவல் அறியும்  உரிமை ஆணைக்குழு  கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  2015 / 2016 ஆம் ஆண்டுகளுக்கான சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கோரிக்கையை ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.

அதேபோன்று ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் 2015 – 2016 வரையான  காலப்பகுதியின் சொத்து  விபரங்களை திரட்டித் தருமாறு  கோரியிருந்த  போதும்  அதற்கான வாய்ப்பு நடைமுறையில்  இல்லை. இலங்கை சட்டக்கோவையின் படி   ஜனாதிபதி  ஒருவரின்  சொத்து விபரங்களை வெளிப்படுத்தும் உரிமை  தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு கிடையாது. இது  ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று  அதிகாரங்களை  பிரதிபலிக்கிறது.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகள் 

பொது மக்களால் பாராளுமன்றத்திற்கும் ஏனைய சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மக்களின் நலன்களுக்காகவே செயற்பட வேண்டும். மாறாக பொதுப் பணத்தைச் சுரண்டி வாழ்பவர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க முனையக் கூடாது.

கடந்த ஒக்டோபர் 26 க்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளை வைத்து நோக்கும்போது 225 எம்.பி.க்களும் எந்தளவு தூரம் மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பது நன்கு புலப்படும். ஆக இவர்களுக்காக வருடாந்தம் செலவிடப்படும் மில்லியன் கணக்கான நிதி விழலுக்கிறைத்த நீரே அன்றி வேறில்லை எனலாம்.

அமைச்சர்கள் பதவியேற்கும்போது அவர்களது அலுவலகத்திற்கான முழு ஊழியர்களையும் தமது குடும்பத்திலிருந்தே நியமிக்கிறார்கள். இதன்மூலம் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள், எரிபொருள் கொடுப்பனவுகள், வரி விலக்குகள் அனைத்தையும் முழுக் குடும்பமுமே பெற்றுக் கொள்கிறது.

வரி விலக்கு  செய்யப்பட்ட வாகனங்களை  துஷ்பிரயோகம்  செய்வதோடு நிறுத்தி விடாமல் அதனை  விற்பனை  செய்து பணம்  பார்க்கும்  அரசியல்வாதிகளும்  இருக்கின்றார்கள். சலுகையாக வழங்கப்பட்ட இந்த வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் பல மில்லியன்களுக்கு  விற்கப்படுகின்றன. இதனைக் கேட்கவோ பார்க்கவோ யாரும்  முன் வருவதில்லை. பல அரசியல்வாதிகளுக்கு  இந்த செயற்பாடு சட்டத்துக்கு  முரணானது என்பதே  தெரியாமல்  இருப்பதுதான்  வேடிக்கை.

2020 ஆம் ஆண்டிற்குள்  ஒரு புதிய  யாப்பினைக் கொண்டு வந்து அரசியல்வாதிகளுக்கு  வழங்கப்படும் மிகைப்பலன், சலுகைகள்  மற்றும் ஓய்வூதியம்  போன்றவற்றை  இல்லாமல் செய்வத அவசியமாகும்.

மக்களையும் மக்களுடைய  நிதியையும்  பாதுகாப்பவர்களே  பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமே தவிர  பொதுமக்களுடைய சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அல்லர். சட்டத்துக்கு  முரணான  இந்த விடயங்கள்  அம்பலப்படுத்தப்படுவதில்லை.  குடி மக்களாகிய நாம் எமது சொந்த உரிமைகள்  தொடர்பாக  கரிசனை  காட்டாமல் இருப்பதே  அதற்குக் காரணமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை  பெற்றுக்  கொள்ள மறுத்த, ஐக்கிய  தேசியக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன்  ராமநாயக்க அனைவருக்கும்  முன்னுதாரணமாக  இருந்து வருகிறார்.   எம்.பி.க்களுக்கு சலுகையாக  வழங்கப்படும்  உத்தியோபூர்வ  இல்லம், வாகனம் போன்றவற்றையும்  இவர் ஏறக மறுத்துள்ளார்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும்  அளவுக்கு மீறிய சலுகைகளும்  பொது மக்களின்  நிதியை  துஷ்பிரயோகம்  செய்வதிலேயே அடங்கும்.   அரசியல்வாதிகள்  சொந்தமாக பல்வேறு  வியாபாரங்களில்  முதலீடு  செய்கிறார்கள்.  ஒரு சிலருக்கு  ஹெலிகொப்டர்,  கப்பல்கள் மற்றும் கடல் கடந்த நாடுகளில் வீடுகளும் உள்ளன. இதில்  அதிகமானவர்கள் அரசியலுக்கு  வரும் போது  மிகவும் பின்தங்கிய நிலையிலேயே  இருந்தார்கள். சர்வதேச  மட்டத்தில்  சொத்து அறிவிப்பு தொடர்பான நிபந்தனைகளை  எடுத்து  நோக்கினால்  அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய  பிரமுகர்கள்  தமது  மக்களுக்கு சொத்து விபரத்தை வெ ளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தமது சொத்துக்களை மறைத்த துமிந்த சில்வா  மற்றும் ஸரன குணவர்தன ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  அவர்கள் இருவரும் முறையே  ரூபா 2000 மற்றும் ரூபா 3000 பணத்தை  அபராதமாக  செலுத்திவிட்டு நலமாக  வாழ்கிறார்கள். இந்த  ஒரு சம்பவம் இவற்றையெல்லாம் எவரும் கண்டு கொள்வதில்லை என்பதை  உறுதிப்படுத்துகிறது.

நிதி மோசடியில்  ஈடுபடும்  அரசியல் வாதிகளுக்கு  சட்டத்தில்  உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி  எவ்வாறு  தப்பிக்கலாம் என்பது தெரியும்.  இந்த நடைமுறையை  இல்லாதொழிக்க வேண்டும் என்றால் பொதுமக்கள்  விழிப்படைய வேண்டும்.  இலங்கைக்கு  எந்த  ஒரு நாடும்  கடனாளி  இல்லை.  ஆனால்  இலங்கை  சர்வதேசத்தில்  10.5 ட்ரில்லியன் கடன் பெற்றுள்ளது. இலங்கையின்  இந்தப் பெரும் கடன் சுமைக்கு ஊழல் நிறைந்த  அரசியல்வாதிகளே காரணம்.

2004 – 2006 வரையான காலத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவென இலங்கைக்கு நிதி உதவிகள் மிக ஏராளமாக கிடைக்கப் பெற்றன. இந்தப் பணம் எமது கடனைத் திருப்பிச் செலுத்த போதுமானதாகவிருந்தது. ஆனால் அந்தப் பெருந் தொகைப் பணத்தினால்  கடன் அடைக்கப்படவோ  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவோ இல்லை. ஆனால் குறித்த நிதிகளுக்கு  என்னவானது என்பது  யாருக்கும் தெரியாது.

இவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும்  மக்களால் தான்  இந்த நாடு அழிவடையப் போகிறது.  நாட்டின் குடி மக்கள்  மிக வேகமாக விழிப்படைய வேண்டும்.

இன்று நாட்டு  மக்களால்  ஊழலுக்கு  எதிராக  குரல் கொடுக்க  விரல் நுனியில்  பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப்  பயன்படுத்தலாம்.  மக்கள் ஒன்றிணைந்தால்  அமைச்சர்களுடைய  சொத்து  விபரங்களைத் திரட்டி  அதனைப் பகிரங்கப்படுத்த முடியும்.  அரசாங்கத்துக்கு  வரி செலுத்தும் ஒவ்வொரு  குடிமகனுக்கும்  குறித்த  நிதிகளுக்கு என்ன நடந்தது என கேள்வி  கேட்கும் உரிமை  உண்டு. சீனா போன்ற  நாடுகளில் மக்கள்  மிக விழிப்பாக  உள்ளார்கள். அங்கு  நாட்டை அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க  இடமளிக்கப்படுவதில்லை.

இலங்கையிலும் அரசியல்வாதிகளின் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் இது விடயத்தில் பொது மக்கள் விழிப்படைய வேண்டும். சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைச் சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலமே இந்த துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.